96- உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு(த் தொழுவிக்கும்) இமாமாக இருக்க மர்யமின் மைந்தர் உங்களிடையே இறங்குவாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-3449: அபூஹூரைரா (ரலி)
பின் தொடரும் மஃமூமாக ஈஸா (அலை)!
சூடான பானங்கள் அருந்துவதனால்…..
கேள்வி எண்: 3. ‘அதிக சூடான பானங்களை அருந்துவதன் மூலம் மனிதனின் குடலில் உட்புறம் உள்ள அடுக்குகள் (Layers) சேதமுறுவதால் மனிதனுக்கு குடலில் (வயிற்றில்) வலி ஏற்படுகிறது’ என்பதை விளக்கும் திருமறை வசனமாகிய “……நரகத்தில் எவன் என்றென்றும் தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?” என்று முடியும் வசனம் எது?
பதில்: அத்தியாயம் 47 வசனம் 17.
சிறு விளக்கம்: நமது குடலின் உட்புறத்தில் மெல்லிய வழவழப்பான ஒரு அடுக்கு இருக்கிறது. இது உணவுப் பொருட்கள் குடல்களின் வழியே எளிதாக செல்வதற்கும், செரிமானம் போன்ற இன்னும் பல காரணங்களுக்காகவும் பயன்படுகின்றது. நாம் அதிக சூடான பானங்களை அருந்துவதினால் குடலின் உட்புறம் உள்ள இந்த அடுக்குகள் சேதமுறுகின்றன. அதனால் நமக்கு வயிற்றுவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மிக அதிக சூடான பானங்கள் உட்கொள்வதன் மூலம் குடல்கள் அறுந்து விடும் அபாயம் கூட உண்டு என்கின்றனர்.
செவிதாழ்த்திக் கேட்பவருக்கான படிப்பினை பற்றி..
எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ, அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் (குர்ஆனில்) நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது. (அல்குர்ஆன்: 50:37)
சட்டமியற்றும் அதிகாரம்!
அல்லாஹ், உலகத்தார்கள் அனைவரையும் தனக்கு வழிபடுவதற்காகவே படைத்தான்; அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே அவர்களிடம் ரஸூல்மார்களை அனுப்பினான்; மனிதர்களுக்கு மத்தியில் உண்மையைக் கொண்டும் நீதத்தைக் கொண்டும் தீர்ப்பு வழங்குவதற்காக ரஸூல்மார்களுடன் வேதத்தையும் அனுப்பினான். இச்சட்டங்கள் அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களிலும் அவனது ரஸூலுடைய போதனைகளிலும் அமைந்துள்ளன.
சட்டமென்பது, வணக்கவழிபாடுகள், அன்றாட நடைமுறைகள், கொள்கைக் கோட்பாடுகள், வாழ்க்கை நெறிகள், அரசியல் போன்றவற்றையும், மனிதனுடைய வாழ்க்கையில் அமைகின்ற இவையல்லாத ஏனையவற்றையும் உள்ளடக்குகின்றதாகவே இருக்கின்றது.
ரஸூல்மார்கள் மனிதர்களைத் தௌஹீதின் பக்கம் அழைத்து, அடிப்படைக் கொள்கைகளைச் சரி செய்கின்றவர்களாகவே இருந்தனர். யூஸுப் (அலை) அவர்களுடன் சிறையிலிருந்த இரண்டு கைதிகள் தாம் கண்ட இரு கனவுகளுக்கு நபியவர்களிடம் விளக்கம் கேட்டபோது, அவற்றுக்குப் பதிலளிக்குமுன்னர் அவ்விருவரையும் தௌஹீதின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள். (கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுமுன், கேளாத ஒன்றைக் கூறுமளவு முக்கியத்துவமானதுக்கே முதலிடம் அளித்துள்ளார்கள்.
“சிறைக் கூடத்திலிருக்கும் என்னிரு தோழர்களே! (யாதொரு சக்தியுமற்ற) வெவ்வேறு தெய்வங்கள் மேலா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற (ஒரே நாயனாகிய) அல்லாஹ் ஒருவனே மேலா? அவனையன்றி நீங்கள் வணங்குபவை யாவும், நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர (உண்மையில் அவை எதுவுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு யாதோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை. சகல அதிகாரங்களும், அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (வேறெவருக்கும்) இல்லை. அவனைத்தவிர, (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கின்றான். இதுதான் நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை. (என்று யூஸுப் (அலை) அவ்விருவருக்கும் நல்லுபதேசம் செய்துவிட்டு, அவர்களின் கனவுகளுக்கு விளக்கம் அளித்தார்கள்” (12:39,40)
‘நான் தொழுவதை நீங்கள் பார்த்தது போன்று தொழுங்கள்’ (புகாரி, முஸ்லிம்) ‘என்னிலிருந்தே நீங்கள் வணக்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ (முஸ்லிம்) என்று நபியவர்கள் கூறுவதற்கமைவாகவும், ‘ஹதீஸ் ‘ஸஹீஹாக’ இருக்குமானால் அதுவே எனது மத்ஹப்’ என்று முஜ்தஹிதுகளான இமாம்கள் ஒவ்வொருவரும் சொன்னதற்கு அமைவாகவும் தொழுகை, ஸகாத், ஹஜ் போன்ற வணக்கங்களுக்கும் இவையல்லாத இதர வணக்கங்களுக்கும் குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸைகளையுமே ஆதாரமாகக் கொள்ளல் நம்மில் ஒவ்வொருவர் மீதும் கடமையாகின்றது.
இமாம்கள், ஏதாவதொரு விஷயத்தில் கருத்து வேறுபட்டால், அவர்களில் ஒருவருடைய சொல்லில் மட்டுமே நாங்கள் பிடிவாதமாக இருக்கக் கூடாது. சரியான ஆதாரம் எவரிடம் உண்டோ அதனையே எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே குர்ஆன் ஸுன்னாவைக் கொண்டுள்ள அடிப்படைச் சட்டமாகும்.
“(நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில், உம்மை நீதிபதியாக அங்கீகரித்து, நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிபடாத வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக ஆகமாட்டார்கள்” (4:65)
இவ்வசனம் அருளப்பட்ட காரணத்தை முபஸ்ஸிரீன்கள் (விரிவுரையாளர்கள்) பின்வருமாறு கூறுகின்றார்கள்.
இரண்டு நபித்தோழர்கள் (அருகருகே உள்ள தத்தமது தோட்டங்களுக்கு) நீர் பாய்ச்சுவதில் கருத்து வேறுபட்டுக் கொண்டனர். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் (அவர்கள் இருவருக்கும் மத்தியில் நீதியாக) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு நீர் பாய்ச்சுமாறு தீர்ப்பளித்தார்கள். இதில் சம்பந்தபட்ட அடுத்தவர் ‘நபியே! உங்களது சாச்சாவின் மகனுக்காக நீங்கள் இவ்வாறு தீர்ப்பளித்து விட்டீர்கள்’ என்று சொல்லி விட்டார். அப்பொழுது தான் இவ்வசனம் அருளப்பட்டது. ஆதாரம்: புகாரி
“அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் விதித்திருந்தோம்: ‘உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும் காயங்களுக்கும் பழிவாங்கப்படும் என்பதாக. (விதித்திருந்தோம்) எனினும் எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) தானமாக விட்டுவிட்டால், அது அவரு(டைய தீவினை)க்குப் பரிகாரமாகி விடும். எவர்கள் அல்லாஹ் அருளிய (வேதக்கட்டளைப்) பிரகாரம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள், நிச்சயமாக அக்கிரமக்காரர்கள் தாம்” (5:45)
ஷரீஅத் சட்டம் பற்றி பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகின்றது.
“(மூமின்களே!) நூஹுவுக்கு அவன் (அல்லாஹ்) எதனை உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததும் என்னவென்றால், (நீங்கள் ஒருமித்து ஏகதெய்வக் கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலையாக கைக்கொள்ளுங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிந்து விடாதீர்கள் என்றுதான்” (42:13)
மார்க்க விதிகளை ஏற்படுத்தும் உரிமையை அல்லாஹ் அல்லாதவர்களுக்குக் கொடுக்கும் இணைவைப்போரை அல்லாஹ் மறுத்துரைத்துப் பின்வருமாறு கூறுகின்றான்.
“அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை (தெய்வங்)களும் அவர்களுக்கு இருக்கின்றனவா?” (42:21)
முஹம்மது (ஸல்) அவர்கள் மார்க்கத்தில் ஈஸா (அலை)!
கப்றுகளில் பள்ளி கட்டலாமா?
கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள்.
நூஹ் நபியவர்கள் மக்கள் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட முதல் தூதராவார்கள். நூஹ் (அலை) அவர்களின் ‘சமூகத்தார் (ஒருவருக்கொருவர்) நீங்கள் உங்கள் தெய்வங்களை (வணங்காது) ஒதுக்கி விட்டீர்கள். வத்து, ஸுவாஉ, எகூஸ், யவூக், நஸ்ர் (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டு விடாதீர்கள் என்று கூறிக் கொண்டனர்’ (71:23) இந்த ஆயத்தின் கருத்தைப் பற்றி ஸலபுஸ்ஸாலிஹீன்களின் கருத்தாவது: இந்த ஆயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சாமிகள் அனைவருமே நபி நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தில் தோன்றிய நன்மக்கள் ஆவார். இவர்கள் இறந்ததன் பின்னர் மக்கள் இவர்களின் கப்றுகளில் மண்டியிட்டு விழுந்தனர். அதற்குப் பின்னர் மக்கள் அவற்றை வணங்கினார்கள். இவை அரபிகளின் கரங்களில் வந்து சேர்ந்தன. பிறகு அரபிகள் தம் குடும்பங்களுக்கு இந்த சிலைகளின் பெயர்களைச் சூட்டினர் என்பதாகும்.
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் வாயிலாக வந்த கீழ்காணும் ஹதீஸை தந்துள்ளார்கள்: ‘கப்றுகளை பள்ளிகளாக அமைப்பதைத் தடுத்து அதனால் ஷிர்க்கை ஒழித்துக் கட்ட பெருமானார் (ஸல்) அவர்கள் நாடினார்கள். ஏக இறைவனுக்குத் தொழுதாலும் அத்தொழுகையை கப்றுகளில் பள்ளிவாசல்களை அமைத்து தொழக் கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்கிறார்கள். இதை அறிந்த ஸஹாபாக்கள் தம் வாழ்க்கையில் இதை தவிர்த்துக் கொண்டார்கள்.
இதனால் தான் சூரியன் உதயமாகும் நேரத்தில் தொழக் கூடாது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்திருந்தனர். ஏனெனில் இந்நேரத்தில் இறைவனுக்கென்றே கருதி தொழுதாலும் சூரியனுக்காகப் பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனைக்கு ஒப்பாகி விடுகிறது. கப்றில் நின்று அல்லாஹ்வுக்காக தொழுதாலும் கப்றாளியைக் கொண்டு உதவி தேடுகின்ற ஷிர்க்கான வணக்கத்தோடு ஒப்பாகி விடுகிறது. இதையெல்லாம் அறிந்த ஸஹாபிகள் தாமாக விலகிக் கொண்டனர்.
வஸீலா விஷயத்திலும் ஸஹாபிகள் நல்ல விளக்கம் பெற்றிருந்தார்கள். நபிகளை ஈமான் கொண்டு, அவர்களுக்கு வழிபட்டு, அவர்கள் மீது நேசம் வைத்து நடப்பதைக் கொண்டு வஸீலா தேடலாம் என்றும், நபிகளின் துஆ, ஷபாஅத் இவற்றைப் பெற்று வஸீலா தேடலாம் என்றும் நன்கு அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் நபி (ஸல்) அவர்களை மட்டும் கொண்டு வஸீலா தேடவில்லை. மேன்மைதாங்கிய பெருமானாரின் துஆவைக் கொண்டும், ஷபாஅத்தைக் கொண்டும் வஸீலா தேடும் வாய்ப்பு அவர்கள் மரணமடைந்து விட்டதின் காரணமாக முடியாமல் போய் விட்டது. இதனால் மேன்மையில் நபியை விட குறைந்த ஒரு மனிதரை வஸீலாவுக்கு அமைத்துக் கொண்டனர். ஸஹாபிகள் நம்மை விட எல்லா வகையிலும் சிறந்தவர்கள். மார்க்கச் சட்டங்களை பின்பற்றுவதில் அவர்களைவிட பேராவல் கொண்டவர்கள் எவருமில்லை. அல்லாஹ், ரஸூலுடைய விருப்புகள் யாவை, வெறுப்புகள் யாவை என்பதை நன்றாக அறிந்திருந்தார்கள். அல்லாஹ், ரஸூலின் ஏவல்களுக்கு தகுந்த துஆக்களையும் அறிந்திருந்தார்கள். அத்தகைய துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு மிக அருகதையுடைவையாகும்.*
கண்பார்வை இழந்த ஸஹாபியின் ஹதீஸை நபி (ஸல்) அவர்களின் துஆவால் வஸீலா தேடுவதற்கு சான்றாக கொள்ளப்படும். ஆனால் சில மக்கள் இந்த ஹதீஸ் நபிகள் வாழ்ந்திருக்கும் போதும், அவர்களின் மரணத்திற்கு பிறகும் பொதுவாக அவர்களைக் கொண்டு வஸீலா தேடுதல் ஜாயிஸ் என்பதைக் காட்டுகிறது என்று கூறினார்கள். மேலும் கண்பார்வை இழந்த ஸஹாபியும், இதர ஸஹாபாக்களும் நபியவர்கள் உயிருடனிருக்கையில் வஸீலா தேடுவதின் காரணத்தைப் பற்றி நபிகளைக் கொண்டு அல்லாஹ்வின் மீது ஆணையிட்டும், நபியைப் பொருட்டாகக் கொண்டும் அல்லாஹ்விடம் தமது தேவைகளை வேண்டுவதற்குச் சமம் என்று இவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.
நபியைக் கொண்டு வஸீலா தேடுவதற்கு இவர்கள் நபிக்கு வழிபடுவதோ, அல்லது நபிகள் இவர்களுக்கு பிரார்த்திப்பதோ தேவையில்லை என்று கருதிக் கொள்கிறார்கள். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்காக பிரார்த்திப்பதும், பிரார்த்திக்காமல் இருப்பதும் சமமே. ஏனெனில் தங்கள் எண்ணத்தில் கண்பார்வை இழந்த ஸஹாபி நபியைக் கொண்டு வஸீலா தேடியபோது அவரின் தேவை நிறைவேறியதாம். அவருக்காக நபிகள் பிரார்த்திக்கவில்லையாம். இது இவர்களின் கருத்து. இவர்களின் சொல் ஷரீஅத்தில் முழுக்க விரும்பப்படாத ஒன்றாகும். அல்லாஹ்வின் ஷரீஅத்திற்கு இவர்கள் ஒத்தவர்களே அல்லர்.
அல்லாஹ்வுடைய படைப்பின் அமைப்பிற்கும் இவர்களின் கூற்று பொருந்தாது. ஏனெனில் நபிகளின் பிரார்த்தனை பெற்றவரும், பெறாதவரும் சமமானவர் அல்லவே. கண்பார்வை இழந்த அம்மனிதருக்கு நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். எனவேதான் அம்மனிதர் நபி (ஸல்) அவர்கள் சொல்லிக் கொடுத்த ‘ என் விஷயத்தில் நபிகளின் பிரார்த்தனையை ஏற்றருள்வாயாக இறைவா!’ என்னும் வாக்கியத்தைக் கூறினார்கள். இச்சொல் அவர் விஷயத்தில் நபியவர்கள் ‘ஷஃபீஉ’ ஷபாஅத் செய்கிறவர்களாக இருந்தார்கள் என்பதைக் காட்டுகிறதல்லவா!
நீர் விரும்பினால் கொஞ்சம் பொறும். இல்லையேல் நான் உமக்காகப் பிரார்த்திக்கிறேன்’ என்ற நபியுரையைக் கேட்ட அம்மனிதர் தமக்காகப் பிரார்த்திக்கும்படி நபியவர்களிடம் வேண்டிக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் ‘தொழ வேண்டும். தமக்காகவும் பிராத்திக்க வேண்டும்’ என்றும் சொன்னார்கள்.
இந்த ஆதாரங்களைக் கொண்டு நபிகளின் துஆவினாலும், சிபாரிசினாலும் தான் வஸீலா தேடப்படும் என்பதை விளங்கப்படும்.
மழை தேடும் விஷயத்தில் உமர் (ரலி) அவர்களுடைய ஹதீஸும் இப்படித்தான் அமைந்துள்ளது. இந்த ஸஹாபிகளெல்லாம் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த பின்னர் நாயகத்திற்குப் பகரமாக இன்னொருவரைக் கொண்டு வஸீலா தேடினார்கள். நபியவர்கள் உயிருடனிருக்கும் போதும், மரணமடைந்த பின்னரும் ஒன்றுபோல் வித்தியாசமின்றி அவர்களைக் கொண்டு வஸீலா தேடப்படுமானால், அதற்கு அனுமதியும் இருக்குமானால் படைப்புகளில் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த கண்ணியம் வாய்ந்த ஒரு படைப்பை (நபியை) ஒதுக்கி விட்டு அவர்களைவிட தரத்தில் குறைந்த இன்னொரு படைப்பைக் கொண்டு வஸீலா தேட அவர்கள் முனைந்திருக்க மாட்டார்கள். வேறெந்த அந்தகரேனும் நபியைக் கொண்டு வஸீலா தேடினால் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு துஆச் செய்யவும் இல்லையென்றால் முன்னர் நாம் குறிப்பிட்டுள்ள கண்பார்வை இழந்த ஸஹாபி குணமடைந்தது போல் ஒருபோதும் அந்த அந்தகர் குணமடைய மாட்டார்.
அது மட்டுமல்ல. மேற்சொன்ன கண்பார்வையிழந்த ஸஹாபியின் சம்பவத்திற்குப் பிறகு ஸஹாபாக்களில் கண்பார்வையிழந்த வேறொருவரும் அப்படிச் செய்ததாக இல்லை. அவர்களோ இஸ்லாத்தில் முந்தி ஈமான் கொண்ட அன்ஸாரிகளாகவும், முஹாஜிரீன்களாகவும், அல்லாஹ், ரஸூலைப் பற்றி நம்மைக் காட்டிலும் நன்கறிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் ஹக்குகள் யாவை, ரஸூலின் ஹக்குகள் யாவை, துஆவில் அனுமதிக்கப்பட்டது யாது, பலனளிக்காதது யாது என்றெல்லாம் நன்கறிந்திருந்தார்கள்.
அது மட்டுமல்ல. அவர்கள் மழை பெய்வதற்கும், வறட்சி நீங்கி செழிப்பு வருவதற்கும் பெரிதும் தேவைப் பட்டிருந்தார்கள். இப்படியிருந்தும் ஸஹாபாக்கள் காட்டித் தந்த வழியைத்தான் பின்பற்றினார்களேயொழிய அவர்கள் புறக்கணித்தொதுக்கிய வழிகளைப் பின்பற்றவில்லை.
மார்க்க மேதைகளான மாபெரும் புகஹாக்கள் தம் நூல்களில் மழை தேடுவதைப் பற்றிக் குறிப்பிடும் போது ஸஹாபிகள் காட்டிச் சென்ற வழிமுறைகளைத் தான் கூறியிருக்கிறார்கள். ஸஹாபிகள் செய்யாது புறக்கணித்த அமல்களைக் குறிப்பிடவில்லை. நபியவர்கள் வாழ்ந்திருக்கையில் அவர்களைக் கொண்டு வஸீலா தேடுவதின் தாத்பரியமே அவர்களின் துஆவைப் பெற வேண்டும் என்பதுதான். எனவே நாம் நபியிடம் நமக்காக பிரார்த்திக்கும்படி கூறுவதும், அவர்களைக் கொண்டு வஸீலா தேடுவதும் சமமே.
அன்று ஸஹாபாக்கள் உயிருடனிருக்கையில் நபியிடம் தமக்காக துஆச் செய்ய சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த பிறகு யாரும் துஆக் கேட்கும்படி நபியிடம் வேண்டிக் கொள்ளவில்லை. இன்று பலர் செய்வதுபோல அன்று அவர்களின் கப்றில் வந்தும் வேண்டவும் இல்லை. எங்கு வைத்தும் கேட்கவில்லை. அப்படியென்றால் ஸாலிஹீன்களின் (நன்மக்களின்) கப்றில் மக்கள் தமக்காக துஆ வேண்டும்படி எப்படி அவர்களிடம் கேட்க முடியும்? இதற்கு சில சான்றாக ஏதோ சில பிற்கால மக்களின் கதைகளையும் காட்டுகிறார்கள்.
வாழ்க்கையில் மூமின்கள் ஒருவருக்கொருவர் தமக்கிடையில் பிரார்த்திக்கும்படி மற்றவர்களை வேண்டிக் கொள்ளலாம். அதற்கு ஷரீஅத்தில் அனுமதியுண்டு. பெருமானார் (ஸல்) அவர்கள் கூட கலீஃபா உமரிடம் தமக்காக துஆச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது நினைவிருக்கும் தானே. ஒரு ஹதீஸில் வருகிறது: ‘உம்ராச் செய்வதற்கு நாயகத்திடம் அனுமதி கேட்ட உமர் (ரலி) அவர்களிடம் (லா தன்ஸானா யா அகீ மின் துஆயிக) சகோதரரே! உமது பிரார்த்தனையில் எங்களை மறந்து விடாதீர்’ என்றாகும்.
மேலும் நபியவர்கள் தேவைப்பட்டவருக்காக பாவமன்னிப்புத் தேடவேண்டுமென்று உவைஸ் அல் – கர்னியிடம் ஏவினார்கள். ஆனால் தேவைப்பட்டவர் உவைஸை விட மிகச் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
சுருங்கக் கூறின் பெருமானார் (ஸல்) அவர்கள் தம் சமூகத்தாரிடம் தமக்காக துஆச் செய்யவும், ஸலவாத்துக் கூறவும், வஸீலா தேடவும் வேண்டினார்களென்றால் அதன் கருத்து தம் உம்மத்துகளிடம் தேவைப்படுவதல்ல. மாறாக சிருஷ்டிகளுக்கு பயன்தரும் வழிகளை கற்றுக் கொடுத்தலாகும். இதனால் சிருஷ்டிகள் மார்க்க விஷயங்களில் பெரும் பலாபலன்களை அடைகின்றனர். நபியின் போதனையைக் கேட்டு அதற்கொப்ப செயல்படும் போது அதன் காரணத்தினால் நபிக்குரிய கூலியும் அல்லாஹ்விடம் அதிகரிக்கிறது. நபிக்காக நாம் ஒரு ஸலவாத்துக் கூறினால் அதற்காக அல்லாஹ் நம்மீது பத்து ஸலவாத்துக் கூறுகிறான். நபிக்காக வஸீலாவை (சுவனத்திலுள்ள பெரியதொரு பதவியை) வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் பெருமானாரின் மாபெரும் ஷபாஅத்தே மறுமையில் நமக்காக கிடைக்கிறது. நாம் செய்யும் நற்கருமங்களுக்குரிய கூலியை எவ்வளவு அதிகமாக அல்லாஹ்விடமிருந்து பெறுகிறோமோ, அதே கூலிகள் கொஞ்சமும் குறையாமல் நபிகளுக்கும் உண்டு.
நபி (ஸல்) அவர்கள் ‘நேரான பாதையில் (ஹிதாயத்தில்) ஒருவன் மற்றவனை அழைத்தால் அழைப்புக்குப் பதில் கொடுத்தவனுக்கு வழங்கப்படும் கூலிகளுக்கொப்ப சிறிதும் குறையாமல் அழைத்தவனுக்கும் உண்டு’ என்று கூறினார்கள்.
இதன் அடிப்படையில் நோக்கினால் அனைத்து நலன்களின் வழிகாட்டியாக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். தம் சமூக மக்கள் நலவுகள் புரியும் போதெல்லாம் அந்த நலன்களுக்குரிய அதே கூலிகளைக் குறையாமல் நபிகளும் பெறுகிறார்கள். எனவேதான் அன்று ஸஹாபிகள், ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் இவர்களெல்லாம் ஏதேனும் நற்கருமங்கள் செய்து விட்டு அவற்றின் பலாபலன்களை பெருமானாருக்குச் செலுத்தவில்லை. நபிகளுக்காக திருக்குர்ஆனும் ஓதவில்லை. அவர்களுக்காக தர்மங்கள் செய்யவில்லை. இப்படியெல்லாம் செய்து இவற்றின் பலாபலன்களை நபியவர்களுக்காக ஹதியாச் செய்யவுமில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் புரிகின்ற தொழுகை, நோன்பு, ஹஜ், தர்மம், திருமறை ஓதுதல் போன்ற எந்த அமலாயினும் சரியே. அதன் பலாபலன்கள் அனைத்தும் பெருமானாருக்கும் குறையாமல் சேர்ந்து விடுகிறது.
ஆனால் பிள்ளைகள் புரிகின்ற நற்கருமங்களின் பலாபலன்கள் பெற்றோருக்குத் தானாகச் சேர்ந்து விடுவதில்லை. எனவே பிள்ளைகள் பெற்றோர்களுக்காகவும், ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காகவும் நற்கருமங்கள் புரிந்து அவற்ரின் நற்பலன்களை ஹதியாச் செய்து சேர்த்து விட (ஈஸாலுஸ் ஸவாப்) அனுமதிக்கப்பட்டுள்ளது.
பெருமானார் அவர்கள் அல்லாஹ்வுக்கு எப்படி வழிபட்டிருந்தார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும். “நீர் ஓய்வு பெற்றால் வணக்கத்துக்காக சிரத்தை எடுத்துக் கொள்ளும். மேலும் (இன்பத்திலும், துன்பத்திலும்) உம் இறைவனையே நேசத்துடன் சார்ந்திருப்பீராக’ (94:7-8) என்று அவர்களைப் பற்றி திருமறை கூறுகிறது.
படைத்த அல்லாஹ்வைத் தவிர வேறெந்தச் சிருஷ்டியையும் அவர்கள் ஆசிக்கவில்லை. ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ‘என் உம்மத்தைச் சார்ந்த எழுபதினாயிரம் மக்கள் கேள்வி கணக்கின்றி சுவனத்தில் பிரவேசிப்பார்கள். அவர்கள் வாழ்ந்திருக்கையில் பிறரிடம் ஓதிப்பார்க்கச் சொல்லாதவர்கள். நற்குறி, துர்க்குறி பார்க்காதவர்கள். சூடு போடாதவர்கள். தம் இறைவன் மீது காரியங்களை பாரம் சாட்டி ஒப்படைப்பவர்கள்’ இப்படியாக அவர்களின் இலட்சணங்களை குறிப்பிட்டார்கள். ஓதிப்பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தும் அதைப் புரியாதவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். ஓதிப்பார்த்தல் என்பது ‘இஸ்திர்கா’ என்பதின் வினைச்சொல் இங்கே வந்திருக்கிறது. இது ஒருவகைப் பிரார்த்தனையைக் குறிக்கும். நபியவர்கள் தமக்குத்தாமே ஓதிப் பார்த்திருக்கிறார்கள். பிறருக்கும் ஓதிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் யாரிடமும் தமக்கு ஓதிப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளவில்லை. இதிலிருந்து மனிதனிடம் எதனையுமே கேட்காமல் (அது அனுமதிக்கப்பட்டதாயினும் சரியே) அல்லாஹ்விடம் மட்டும் கேட்பவன் மனிதரிடம் கேட்பவனை விட மேலானவனாகிறான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் அனைத்து சிருஷ்டிகளிலும் மேலானவர்கள் ஆவார்கள். எனவேதான் நபியவர்கள் கலீஃபா உமரிடம் தமக்காக துஆ செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள் என்ற ஹதீஸ் குறித்துப் பற்பல அபிப்பிராய பேதங்கள் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நமது செயல்கள், நுணுக்கமாக கண்கானிக்கப்படுவது பற்றி..
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன்: 50:16)
அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா?
27:60. அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
27:61. இந்த பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும், இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை!) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்து பார்ப்பது மிகக் குறைவேயாகும்.
27:63. கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய ‘ரஹ்மத்’ என்னும் அருள்மாரிக்கு (மழைக்கு) முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? – அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
27:64. முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.
27:65. (இன்னும்) நீர் கூறுவீராக: அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப் படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.
27:66. ஆனால் மறுமையைப் (இறுதி நாளைப்) பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது; அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.
தேவையின்றி யாசகம் கேட்பது
‘தனக்கு போதுமான அளவு வசதி இருந்தும் யாசகம் கேட்பவன் மறுமையில், முகத்தில் சதை பிராண்டப்பட்டவனாக வருவான்’ என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: அஹ்மத்.
யாசிப்போர்களில் சிலர் பள்ளிகளில் மக்களுக்கு முன்னால் நின்று கொண்டு தங்களின் பிரச்சனைகளைக் கூறி திக்ரு, தஸ்பீஹ் செய்வதற்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றனர். இன்னும் சிலர் போலி ஆவணங்களைத் தயாரித்து வைத்துக் கொண்டு, பொய்களையும், கட்டுகதைகளையும் அவிழ்த்து விடுகின்றனர். சிலபோது யாசகம் கேட்பதற்கு தம் குடும்பத்தவர்களையும் அழைத்து வந்து பல பள்ளிகளில் நிறுத்தி விடுகின்றனர். பின்னர் எல்லோரையும் ஓரிடத்தில் ஒன்று கூட்டி வசூலானதைச் சேகரித்து பிறகு வேறு வேறு பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். இவர்கள் எந்த அளவு வசதியாக இருக்கிறார்கள் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. அவர்கள் இறந்த பின்னரே அவர்களுடைய சொத்து எவ்வளவு என்று தெரிய வரும்.
இவர்களைத் தவிர உண்மையிலேயே தேவையுள்ளவர்களும் உள்ளனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில் அவர்களின் நிலையை அறியாதவர் அவர்களின் சுயமரியாதையைக் கண்டு அவர்கள் தன்னிறைவு பெற்றவர்கள் என எண்ணிக் கொள்வர். அவர்கள் மக்களிடத்தில் வற்புறுத்திக் கேட்கவும் மாட்டார்கள். அவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு தர்மம் கொடுக்கப்படுவதும் இல்லை.
பூமியின் நீரூற்றுக்களில் ஓடுவது மழை நீரே!
கேள்வி எண்: 2. பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே என்ற உண்மையை பிரதிபலிக்கும் வசனம் எது?
பதில்: “நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்கி, அதனை பூமியின் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான். அதன்பின், அதனைக்கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர். பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல்குர்ஆன்: 39:21)
சிறு விளக்கம்: நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (Principle of Water Cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடுகிறது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும் ஆவியாகி, மேகங்களாகி மழை பெய்கின்றது என்றும் படித்திருக்கின்றோம். இந்த வகையான நீன் சுழற்சிக்கு Water Cycle என்று பெயர்.
இதைப்பற்றி ‘The Bible, The Qura’n and Science’ என்ற உலகப் புகழ்பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் ‘விஞ்ஞான ஒளியில் பைபிலும், குர்ஆனும்’) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (Dr Maurice Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, ‘The Qura’n and Modern Science’ (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
‘Water Cycle’ என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. குர்ஆனில் கூறப்படுகின்ற நீரின் சுழற்சி பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது. நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர். உதரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம்.
“நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியின் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்…” (அல்குர்ஆன்: 39:21)
இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாகத் தெரிகின்றது. என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது. இந்த ‘Water Cycle’ கோட்பாட்டை Bernard Palissy என்பவர் 16-ம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார். இதற்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவவாதியின் கருத்துக்களான ‘கடல் நீர், காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுகளாக மாறுகின்றது’ என்று நம்பினர்.
17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த Descartes போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர்.
19-ம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவமேதை எனப் போற்றப்படுகின்ற அரிஸ்டாட்டிலின் கோட்பாடான ‘மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள நீர் ஊற்றுகளில் தண்ணீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது’ என்று நம்பினார்கள்.
ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, ‘வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுகளாக ஓடுகின்றது’ என்பதைக் கூறுகின்றது. இன்றைய காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நவீன விஞ்ஞானக் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டது’ என டாக்டர் மாரிஸ் புகைல் கூறினார்.
இதுபோல் இன்னும் பல திருமறையின் வசனங்களை ஆய்வு செய்த டாக்டர் மாரிஸ் புகைல், தமது நூலின் இறுதியில் பின்வருமாறு கூறுகிறார். ‘…..நாம் எடுத்து விளக்கிய அறிவியல் உண்மைகளிலிருந்து, மனித முயற்சிகளுக்கு சவாலாக இருந்து கொண்டிருக்கும் இந்த குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்ற முடிவைத் தவிர வேறெதுவுக்கும் நம்மால் வரமுடியவில்லை.
அல்லாஹ்வும் மேற்கூறிய வசனத்தின் இறுதியில் கூறுகிறான்: “நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல்குர்ஆன்: 39:21)