சட்டமியற்றும் அதிகாரம்!

சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கன்றி வேறெவருக்குமில்லை

அல்லாஹ், உலகத்தார்கள் அனைவரையும் தனக்கு வழிபடுவதற்காகவே படைத்தான்; அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே அவர்களிடம் ரஸூல்மார்களை அனுப்பினான்; மனிதர்களுக்கு மத்தியில் உண்மையைக் கொண்டும் நீதத்தைக் கொண்டும் தீர்ப்பு வழங்குவதற்காக ரஸூல்மார்களுடன் வேதத்தையும் அனுப்பினான். இச்சட்டங்கள் அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களிலும் அவனது ரஸூலுடைய போதனைகளிலும் அமைந்துள்ளன.

சட்டமென்பது, வணக்கவழிபாடுகள், அன்றாட நடைமுறைகள், கொள்கைக் கோட்பாடுகள், வாழ்க்கை நெறிகள், அரசியல் போன்றவற்றையும், மனிதனுடைய வாழ்க்கையில் அமைகின்ற இவையல்லாத ஏனையவற்றையும் உள்ளடக்குகின்றதாகவே இருக்கின்றது.

கொள்கையில் சட்டமென்பது:-

ரஸூல்மார்கள் மனிதர்களைத் தௌஹீதின் பக்கம் அழைத்து, அடிப்படைக் கொள்கைகளைச் சரி செய்கின்றவர்களாகவே இருந்தனர். யூஸுப் (அலை) அவர்களுடன் சிறையிலிருந்த இரண்டு கைதிகள் தாம் கண்ட இரு கனவுகளுக்கு நபியவர்களிடம் விளக்கம் கேட்டபோது, அவற்றுக்குப் பதிலளிக்குமுன்னர் அவ்விருவரையும் தௌஹீதின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள். (கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுமுன், கேளாத ஒன்றைக் கூறுமளவு முக்கியத்துவமானதுக்கே முதலிடம் அளித்துள்ளார்கள்.

“சிறைக் கூடத்திலிருக்கும் என்னிரு தோழர்களே! (யாதொரு சக்தியுமற்ற) வெவ்வேறு தெய்வங்கள் மேலா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற (ஒரே நாயனாகிய) அல்லாஹ் ஒருவனே மேலா? அவனையன்றி நீங்கள் வணங்குபவை யாவும், நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர (உண்மையில் அவை எதுவுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு யாதோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை. சகல அதிகாரங்களும், அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (வேறெவருக்கும்) இல்லை. அவனைத்தவிர, (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கின்றான். இதுதான் நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை. (என்று யூஸுப் (அலை) அவ்விருவருக்கும் நல்லுபதேசம் செய்துவிட்டு, அவர்களின் கனவுகளுக்கு விளக்கம் அளித்தார்கள்” (12:39,40)

வணக்கங்களில் சட்டமென்பது:-

‘நான் தொழுவதை நீங்கள் பார்த்தது போன்று தொழுங்கள்’ (புகாரி, முஸ்லிம்) ‘என்னிலிருந்தே நீங்கள் வணக்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ (முஸ்லிம்) என்று நபியவர்கள் கூறுவதற்கமைவாகவும், ‘ஹதீஸ் ‘ஸஹீஹாக’ இருக்குமானால் அதுவே எனது மத்ஹப்’ என்று முஜ்தஹிதுகளான இமாம்கள் ஒவ்வொருவரும் சொன்னதற்கு அமைவாகவும் தொழுகை, ஸகாத், ஹஜ் போன்ற வணக்கங்களுக்கும் இவையல்லாத இதர வணக்கங்களுக்கும் குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸைகளையுமே ஆதாரமாகக் கொள்ளல் நம்மில் ஒவ்வொருவர் மீதும் கடமையாகின்றது.

இமாம்கள், ஏதாவதொரு விஷயத்தில் கருத்து வேறுபட்டால், அவர்களில் ஒருவருடைய சொல்லில் மட்டுமே நாங்கள் பிடிவாதமாக இருக்கக் கூடாது. சரியான ஆதாரம் எவரிடம் உண்டோ அதனையே எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே குர்ஆன் ஸுன்னாவைக் கொண்டுள்ள அடிப்படைச் சட்டமாகும்.

வியாபாரம், கொடுக்கல் வாங்கல், கடன் போன்றவற்றின் சட்டம்
அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் உரியதாகும். இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:-

“(நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில், உம்மை நீதிபதியாக அங்கீகரித்து, நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிபடாத வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக ஆகமாட்டார்கள்” (4:65)

இவ்வசனம் அருளப்பட்ட காரணத்தை முபஸ்ஸிரீன்கள் (விரிவுரையாளர்கள்) பின்வருமாறு கூறுகின்றார்கள்.

இரண்டு நபித்தோழர்கள் (அருகருகே உள்ள தத்தமது தோட்டங்களுக்கு) நீர் பாய்ச்சுவதில் கருத்து வேறுபட்டுக் கொண்டனர். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் (அவர்கள் இருவருக்கும் மத்தியில் நீதியாக) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு நீர் பாய்ச்சுமாறு தீர்ப்பளித்தார்கள். இதில் சம்பந்தபட்ட அடுத்தவர் ‘நபியே! உங்களது சாச்சாவின் மகனுக்காக நீங்கள் இவ்வாறு தீர்ப்பளித்து விட்டீர்கள்’ என்று சொல்லி விட்டார். அப்பொழுது தான் இவ்வசனம் அருளப்பட்டது. ஆதாரம்: புகாரி

தண்டனை வழங்குவதிலும் பழிவாங்குவதிலும் உள்ள சட்டங்களைப் பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகின்றது:-

“அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் விதித்திருந்தோம்: ‘உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும் காயங்களுக்கும் பழிவாங்கப்படும் என்பதாக. (விதித்திருந்தோம்) எனினும் எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) தானமாக விட்டுவிட்டால், அது அவரு(டைய தீவினை)க்குப் பரிகாரமாகி விடும். எவர்கள் அல்லாஹ் அருளிய (வேதக்கட்டளைப்) பிரகாரம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள், நிச்சயமாக அக்கிரமக்காரர்கள் தாம்” (5:45)

மார்க்க விதிபற்றிய சட்டம்:-

ஷரீஅத் சட்டம் பற்றி பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகின்றது.

“(மூமின்களே!) நூஹுவுக்கு அவன் (அல்லாஹ்) எதனை உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததும் என்னவென்றால், (நீங்கள் ஒருமித்து ஏகதெய்வக் கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலையாக கைக்கொள்ளுங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிந்து விடாதீர்கள் என்றுதான்” (42:13)

மார்க்க விதிகளை ஏற்படுத்தும் உரிமையை அல்லாஹ் அல்லாதவர்களுக்குக் கொடுக்கும் இணைவைப்போரை அல்லாஹ் மறுத்துரைத்துப் பின்வருமாறு கூறுகின்றான்.

“அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை (தெய்வங்)களும் அவர்களுக்கு இருக்கின்றனவா?” (42:21)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.