தேவையின்றி யாசகம் கேட்பது

‘ஒருவன் தனக்குப் போதுமான அளவு வசதி இருந்தும் யாசகம் கேட்டால் அவன் நரகத்தின் கங்குகளையே அதிகப்படுத்திக் கொள்கிறான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘யாசகம் கேட்காத அளவுக்கு போதுமான வசதி என்றால் என்ன?’ எனத் தோழர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஒரு பகல், ஓர் இரவு உண்பதற்குப் போதுமான அளவு’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹன்ழலா (ரலி), நூல்: அபூதாவூத்.

‘தனக்கு போதுமான அளவு வசதி இருந்தும் யாசகம் கேட்பவன் மறுமையில், முகத்தில் சதை பிராண்டப்பட்டவனாக வருவான்’ என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: அஹ்மத்.

யாசிப்போர்களில் சிலர் பள்ளிகளில் மக்களுக்கு முன்னால் நின்று கொண்டு தங்களின் பிரச்சனைகளைக் கூறி திக்ரு, தஸ்பீஹ் செய்வதற்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றனர். இன்னும் சிலர் போலி ஆவணங்களைத் தயாரித்து வைத்துக் கொண்டு, பொய்களையும், கட்டுகதைகளையும் அவிழ்த்து விடுகின்றனர். சிலபோது யாசகம் கேட்பதற்கு தம் குடும்பத்தவர்களையும் அழைத்து வந்து பல பள்ளிகளில் நிறுத்தி விடுகின்றனர். பின்னர் எல்லோரையும் ஓரிடத்தில் ஒன்று கூட்டி வசூலானதைச் சேகரித்து பிறகு வேறு வேறு பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். இவர்கள் எந்த அளவு வசதியாக இருக்கிறார்கள் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. அவர்கள் இறந்த பின்னரே அவர்களுடைய சொத்து எவ்வளவு என்று தெரிய வரும்.

இவர்களைத் தவிர உண்மையிலேயே தேவையுள்ளவர்களும் உள்ளனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில் அவர்களின் நிலையை அறியாதவர் அவர்களின் சுயமரியாதையைக் கண்டு அவர்கள் தன்னிறைவு பெற்றவர்கள் என எண்ணிக் கொள்வர். அவர்கள் மக்களிடத்தில் வற்புறுத்திக் கேட்கவும் மாட்டார்கள். அவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு தர்மம் கொடுக்கப்படுவதும் இல்லை.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
This entry was posted in எச்சரிக்கை. Bookmark the permalink.