கல்லறை மீது பள்ளி கட்டக்கூடாது.

305– உம்மு ஹபீபா (ரலி)வும் உம்மு ஸலமா (ரலி)வும் தாங்கள் அபீஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்க தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் மிகவும் கெட்டவர்களாவர் என்று கூறினார்கள்.

புகாரி-427: ஆயிஷா (ரலி)

306– நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்” என்று கூறினார்கள். இந்தப் பயம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

புகாரி- 1330. ஆயிஷா (ரலி)


307– ”தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூதர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி:437 அபுஹூரைரா (ரலி)


308– நபி (ஸல்) அவர்கள் மரணவேளை நெருங்கிய போது தமது போர்வையைத் தமது முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும் போது அதைத் தம் முகத்தை விட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும் போது தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.

புகாரி-435: ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கல்லறை மீது பள்ளி கட்டக்கூடாது.

நடை, உடை, பாவனையில் ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் ஒப்பாகுதல்.

அல்லாஹ் மனிதர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்ற இயற்கை சுபாவம் என்னவெனில் ஒரு ஆண், எந்த ஆண்மையின் மீது அல்லாஹ் அவனைப் படைத்தானோ அந்த ஆண்மையையும் ஒரு பெண், எந்தப் பெண்மையின் மீது அல்லாஹ் அவளைப் படைத்தானோ அந்தப் பெண்மையையும் பேணி பாதுகாப்பதாகும். இது, மனிதர்களின் வாழ்க்கை எந்தக் காரண காரியங்களைக் கொண்டல்லாமல் சீர் பெற முடியாதோ அந்தக் காரண காரியங்களில் ஒன்றாகும். Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on நடை, உடை, பாவனையில் ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் ஒப்பாகுதல்.

கிப்லா மாற்றம் பற்றி….

302– நபி (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் கஃபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது நீர் வானத்தை நோக்கி உமது முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம் (2:144) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான். உடனே கஃபாவை முன்னோக்கி தொழலானார்கள். (யஹுதிகளிலுள்ள சில அறிவீனர்கள்) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பி விட்டது எது? என்று கேட்கின்றனர். (நபியே!) நீர் கூறும்: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான் என்று (2:142) இந்த வசனம் இறங்கியதும் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது விட்டு வெளியே வந்து அன்ஸாரிக் கூட்டத்தாரிடம் சென்றார். அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அஸர் தொழுது கொண்டிருந்தனர். அவர்களிடம் நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன்: அவர்கள் கஃபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன், என்று கூறினார். உடனே தொழுதுக் கொண்டிருந்தவர்கள் கஃபாவை முன்னோக்கித் திரும்பினார்கள்.

புகாரி-399: பராஉ பின் ஆஸிப் (ரலி)

303– நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி ‘பதினாறு’ அல்லது ‘பதினேழு’ மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.

புகாரி- 4492. பராஉ (ரலி)

304– கூபா பள்ளிவாசலில் மக்கள் ஸுபுஹ் தொழுது கொண்டிருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, சென்ற இரவில் கஃபாவை முன்னோக்கித் தொழுமாறு நபி (ஸல்) அவர்களுக்கு இறை வசனம் அருளப்பட்டது, என்று கூறினார். (பைத்துல் முகத்தஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கித் தொழுதுக் கொண்டிருந்த அவர்கள் அப்படியே கஃபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள்.

புகாரி-403:இப்னு உமர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கிப்லா மாற்றம் பற்றி….

மஸ்ஜிதுன் நபவி நிர்மாணம்!

301– நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவின் மேற்புறத்தில் வசித்த வந்த பனூ அம்ரு பின் அவ்ஃபு எனும் கோத்திரத்தினருடன் பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பின்னர் பனூநஜ்ஜார் கூட்டத்தினரை அழைத்து வருமாறு கூறினார்கள். (தங்கள்) வாள்களைத் தொங்க விட்டவர்களாக அவர்கள் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் வாகனத்தின் மீது அமர்ந்திருந்ததும் வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) அமர்ந்திருந்ததும் அவர்களைச் சுற்றி பனூநஜ்ஜார் கூட்டத்தினர் நின்றதும் இன்றும் என் கண் முன்னே நிழலாடுகிறது. நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் அபூ அய்யூப் (ரலி) வீட்டுக்கு முன்னால் உள்ள பகுதியில் அவர்களை இறக்கியது. தொழுகையின் நேரத்தை (எப்பொழுது) எங்கே அடைகிறார்களோ, அங்கே தொழுவது நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. ஆடுகள் கட்டும் இடங்களில் கூடத் தொழக் கூடியவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தனர். அவர்கள் பள்ளிவாசல் கட்டும் படி ஏவினார்கள்.

பனூநஜ்ஜார் கூட்டத்தினரை அழைத்து வரச்சொல்லி அவர்களிடம் உங்களின் இந்தத் தோட்டத்தை எனக்கு விலைக்குத் தாருங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் இதற்கான விலையை அல்லாஹ்விடம் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றனர். (அவ்விடத்தில்) பள்ளிவாசல் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்விடத்தில் இணைவைப்பவர்களின் சமாதிகள் இருந்தன. அங்கு சில உபயோகமற்றப் பொருட்களும் சில பேரீச்ச மரங்களும் இருந்தன. அங்குள்ள கப்ருகளைத் தோண்டி அப்புறப்படுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அப்பூமியைச் சமப்படுத்துமாறு கட்டளையிட அதுவும் சமப்படுத்தப்பட்டது. பேரீச்சமரங்களை வெட்டுமாறு கட்டளையிட அவையும் வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். அதன் இரண்டு ஓரங்களிலும் கற்களை வைத்தனர். பாடிக்கொண்டே(அங்கிருந்த)பாறைகளை அப்புறப்படுத்தினர். இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மையில்லை! அன்ஸார்களுக்கு, முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! என்று கூறியவர்களாக நபி (ஸல்) அவர்களும் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர்களாக) அவர்களுடன் இருந்தனர்.

புகாரி-428: அனஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மஸ்ஜிதுன் நபவி நிர்மாணம்!

பூமியின் கருவூலங்களுடைய சாவிகள்

300– நான் ஒருங்கிணைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் விதைக்கப்பட்டு எனக்கு உதவப்பட்டுள்ளது. (ஒருமுறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய சாவிகள் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூ ஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு, ‘நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தோண்டி) வெளியே எடுத்து (அனுபவித்துக்) கொண்டிருக்கிறீர்கள்” என்றார்கள்.

புஹாரி: 2977: அபுஹூரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பூமியின் கருவூலங்களுடைய சாவிகள்

முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும். 30:47

அல்லாஹ் இந்த (30:47) வசனத்தில் முஃமின்களுக்கு உதவி செய்வதாகவும், அவர்களது பகைவர்களுக்குத் தோல்வியை ஏற்படுத்துவதாகவும் உறுதிமொழி கூறுகின்றான். அல்லாஹ் தனது ரஸூலுக்கு பத்ரு, அஹ்ஸாப் போன்ற யுத்தங்களில் உதவி செய்துள்ளான். நபியவர்களது மௌத்துக்குப் பின்னால் அவர்களது தோழர்களுக்கும் உதவி செய்துள்ளான். எதிரிகள் தோல்விக்குமேல் தோல்வி கண்டார்கள். Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும். 30:47

பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்

298-அபூதர் (ரலி) அறிவித்தார்: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், ‘அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது” என்று கேட்டேன். அவர்கள், ‘நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு, ‘நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது” என்று கூறினார்கள்.

புஹாரி: 3366 அபூதர் (ரலி)

299– எனக்கு முன்னர் (நபிமார்கள்) யாருக்கும் கொடுக்கப்படாத ஜந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களுடைய உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவி செய்யப் பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய உம்மத்தில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் அவர் (எந்த இடத்திலிருக்கிறாரோ அந்த இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! போரில் கிடைக்கின்ற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு நபியும் தமது சமூகத்திற்க்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பபட்டுள்ளேன். (மறுமையில் எனது உம்மத்துக்காக) சிபாரிசு செய்யும் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-438: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்

ஒரே ஆடையுடன் தொழுதல்….

294– ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடத்தில் ஒரே ஆடை அணிந்து கொண்டு தொழுவதைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா? என்று கேட்டார்கள்.

புகாரி-358: அபூஹூரைரா (ரலி)

295– உங்களில் யாரும் தமது தோள் மீது எதுவும் இல்லாதிருக்க ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழ வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-359: அபூஹூரைரா (ரலி)

296– உம்மு ஸலமா (ரலி)வின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு அதன் இரு ஓரத்தையும் இரு தோள்களின் மீது மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுவதை நான் பார்த்தேன்.

புகாரி-355: உமர் பின் அபீஸலமா (ரலி)

297– ஜாபிர் (ரலி) ஒரே வேட்டியை அணிந்து கொண்டு அதைத் தமது பிடரியில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களது இதர ஆடைகளோ துணி தொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடத்தில் ஒருவர், ஒரே வேஸ்டியிலா தொழுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு உன்னைப் போன்ற மடையர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு நான் செய்தேன். நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரு ஆடைகள் இருந்தன? என்று கேட்டார்கள்.

புகாரி-352: முஹம்மது பின் அல் முன்கதீர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஒரே ஆடையுடன் தொழுதல்….

அல்லாஹ்வின் அடையாளமான குர்பானிக்கான ஒட்டகங்கள்!

22:28. தங்களுக்குறிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரை சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள். Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வின் அடையாளமான குர்பானிக்கான ஒட்டகங்கள்!

தொழுபவரின் முன்பாக படுத்தல்..

288– நபி (ஸல்) அவர்கள் எனது படுக்கை விரிப்பில் தொழும் போது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் குறுக்கே ஜனாஸா கிடப்பது போல் நான் கிடப்பேன்.

புகாரி-383:ஆயிஷா (ரலி)

289– நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களின் விரிப்பில் அவர்களுக்குக் குறுக்கே உறங்கிக் கொண்டிருப்பேன்.அவர்கள் வித்ருத் தொழ எண்ணும் போது என்னை எழச் செய்வார்கள். அதன் பின் நான் வித்ருத் தொழுவேன்.

புகாரி-512:ஆயிஷா (ரலி)

290– ஆயிஷா (ரலி)யிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் பற்றிப் பேசப்பட்டது. சிலர் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவர்களுக்குக் குறுக்கே சென்றால்) தொழுகையை முறிப்பர் என்று கூறினர். அதை கேட்ட ஆயிஷா (ரலி) எங்களை கழுதைகளுடனும் நாய்களுடனும் ஒப்பிட்டு விட்டீர்களே! நிச்சயமாக கிப்லாவுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையே கட்டிலில் நான் படுத்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்ப்பட்டால் எழுந்து அமர்ந்து நபி (ஸல்) அவர்களுக்குத் தொல்லை தராமல் அவர்களின் கால் வழியாக நழுவி விடுவேன் என்று கூறினார்கள்.

புகாரி-514: மஸ்ரூக் (ரலி)

291– ஆயிஷா (ரலி)யிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் பற்றி பேசப்பட்டது. சிலர் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே சென்றால்) தொழுகையை முறிப்பர் என்று கூறினர். அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) எங்களை நாய்களோடு ஒப்பிட்டு விட்டீர்களே! நிச்சயமாக கிப்லாவுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே கட்டிலில் நான் படுத்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களை (நேருக்கு நேர்) எதிர் கொள்வதை விரும்பாமல் நழுவி விடுவேன் என்றார்கள்.

புகாரி-511: மஸ்ரூக் (ரலி)

292– நான் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். என் கால்களிரண்டும் அவர்களின் முகத்துக்கு நேராக இருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது (விரலால் என் காலில்) குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன். அன்றைய காலத்தில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் கிடையாது.

புகாரி-513:ஆயிஷா (ரலி)

293– நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களுக்கு எதிரில் படுத்திருந்தேன். அப்போது நான் மாதவிடாயுடன் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஸுஜுது செய்யும் போது, சில வேளை அவர்களுடைய ஆடை என் மீதுபடும். அவர்கள் ஒரு விரிப்பின் மீது தொழுதார்கள்.

புகாரி-379: மைமூனா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுபவரின் முன்பாக படுத்தல்..