பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்

298-அபூதர் (ரலி) அறிவித்தார்: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், ‘அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது” என்று கேட்டேன். அவர்கள், ‘நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு, ‘நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது” என்று கூறினார்கள்.

புஹாரி: 3366 அபூதர் (ரலி)

299– எனக்கு முன்னர் (நபிமார்கள்) யாருக்கும் கொடுக்கப்படாத ஜந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களுடைய உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவி செய்யப் பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய உம்மத்தில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் அவர் (எந்த இடத்திலிருக்கிறாரோ அந்த இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! போரில் கிடைக்கின்ற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு நபியும் தமது சமூகத்திற்க்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பபட்டுள்ளேன். (மறுமையில் எனது உம்மத்துக்காக) சிபாரிசு செய்யும் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-438: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.