அல்லாஹ் இந்த (30:47) வசனத்தில் முஃமின்களுக்கு உதவி செய்வதாகவும், அவர்களது பகைவர்களுக்குத் தோல்வியை ஏற்படுத்துவதாகவும் உறுதிமொழி கூறுகின்றான். அல்லாஹ் தனது ரஸூலுக்கு பத்ரு, அஹ்ஸாப் போன்ற யுத்தங்களில் உதவி செய்துள்ளான். நபியவர்களது மௌத்துக்குப் பின்னால் அவர்களது தோழர்களுக்கும் உதவி செய்துள்ளான். எதிரிகள் தோல்விக்குமேல் தோல்வி கண்டார்கள்.
இஸ்லாம் பரவியது; பல நாடுகள் வெற்றிக் கொள்ளப்பட்டன; முஸ்லிம்கள் வெற்றிப் பெற்றார்கள். முஸ்லிம்களுக்குப் பல சோதனைகளும் துன்பங்களும் ஏற்பட்டாலும் முடிவு அவர்களுக்குச் சாதகமாகவே இருந்தது. கஷ்டத்திலும், துன்பத்திலும் தங்களது இறைவனாகிய அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி அவனுக்கு வணக்கம் செலுத்தி, அவனிடத்திலேயே துஆக் கேட்பவர்களாக இருந்தனர்.
நாம் ஓதுகின்ற அல்குர்ஆன் ‘பத்ரு’ யுத்தத்தின் போது முஃமின்கள் இருந்த நிலையையும், எண்ணிக்கையில் அவர்கள் குறைந்தவர்களாக இருந்து தங்களது இறைவனிடம் பிரார்த்தனை புரிந்ததையும் கூறிக் கொண்டிருக்கின்றது.
“(உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது, அணிஅணியாக (உங்களைப் பின்பற்றி வரக்கூடிய) ஆயிரம் மலக்குகளைக் கொண்டு, நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்” (8:9)
அல்லாஹ் அவர்களுடைய துஆவை ஒப்புக் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து போராடி நிராகரிப்பவர்களுடைய தலைகளைத் துண்டிப்பதற்கு உதவியாக அவர்களிடத்தில் மலக்குகளை அனுப்பி வைத்தான். அதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
“(நபியே!) உமது இறைவன் மலக்குகளை நோக்கி நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள். (என்று கட்டளையிட்டு) ‘நிராகரிப்போரின் இருதயங்களில் நாம் திகிலை உண்டுபண்ணுவோம்’ (என்று கூறி முஃமின்களை நோக்கி) ‘நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்’ என்று அறிவித்ததை நினைத்துப் பார்ப்பீர்களாக!” (8:12)
ஏகத்துவவாதிகளான முஃமின்களுக்குப் பூரணமான உதவி கிடைத்தது. இதுபற்றிப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
“பத்ரில் (நடந்த யுத்தத்தில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும் தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (வழிபட்டு) நடங்கள்” (3:123)
பதிரின்போது நபி (ஸல்) அவர்களுடைய துஆ எவ்வாறிருந்தது? என்பது ஸஹீஹ் முஸ்லிமில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
‘அல்லாஹ்வே! நீ எனக்கு வாக்களித்ததைத் தந்துவிடு. அல்லாஹ்வே! (என்னுடனிருக்கும்) இக்கூட்டத்தை நீ அழித்து விடுவாயென்றால், உன்னை வணங்கக்கூடிய எவரும் இப்பூமியில் இருக்க மாட்டார்கள்’ ஆதாரம்: முஸ்லிம்
இன்று இதற்கு மாறாக நாம் காண முடிகிறது. அதிகமான நாடுகளில், காஃபிர்களுக்கு முன்னால் முஸ்லிம்கள் தோல்வியடைகிறார்கள். இதன் காரணம்தான் என்ன? முஃமின்களைப் பொறுத்தமட்டில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பானா? நிலைமை அவ்வாறில்லை. மேற்கூறப்பட்ட வசனத்தில் உள்ளபடி வெற்றி கிட்டக்கூடியவாறு இன்றைய முஃமின்களின் நிலை இருக்கின்றதா? யுத்தங்களில் ஈடுபடுபவர்களிடம் கேட்போம்.
1. நபி (ஸல்) அவர்கள், யுத்தத்துக்கு முன்னர் ஈமானைக் கொண்டும், தௌஹீதைக் கொண்டும் தனது பிரசாரத்தை மக்காவில் ஆரம்பித்தது போலவே இவர்களும் தம்மைத் தயார் செய்துக் கொண்டனரா?
2. “அவர்களை எதிர்ப்பதற்காக, உங்களுக்குச் சாத்தியமான அளவு (ஆயுத) பலத்தைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்” (8:60) என்று அல்லாஹ் கட்டளையிட்டதற்கிணங்க அவர்கள் தம்மைத் தயார்படுத்திக் கொண்டனரா? இவ்வசனத்துக்கு ‘யுத்தப்பயிற்சியை மேற்கொள்ளல்’ என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
3. யுத்தத்தின் போது தங்களது இறைவனை மட்டுமே அழைத்து துஆக் கேட்பதிலே, இவர்கள் அவனைத் தனிமைப் படுத்தினார்களா? அல்லது அவனல்லாதவர்களின் உதவியை நாடினார்களா? இவர்களோ அவனல்லாதவர்களின் உதவியை வேண்டி, அவர்களுடைய பாதுகாப்பிலேயே நம்பிக்கையும் வைத்தனர்.
அவர்கள், எவர்களுடைய பாதுகாப்பை நாடினார்களோ, அவர்கள் அல்லாஹ்வுடைய அடிமைகளாகவும், தமக்கே யாதொரு நன்மையோ தீமையோ செய்துகொள்ள முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். “தன் அடியாருக்கு (வேண்டிய உதவியைச் செய்ய) அல்லாஹ் ஒருவனே போதுமானவனல்லவா?” என்று குர்ஆன் கூறுவதற்கமைய, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உதவியை மட்டுமே நம்பி, அவனிடம் துஆக் கேட்டார்கள். இதனை அவர்கள் பின்பற்றாதிருக்கக் காரணமென்ன?
4. “உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள்; அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் வலிமை குன்றிவிடும்” (8:46) என்று இவர்களுடைய இறைவன் இவர்களது அடையாளத்தைப் பற்றிக் கூறுவதற்கமைய, இறுதியாக இவர்கள் தமக்கிடையே நேசத்துடன் ஒன்று படுகின்றனரா?
“முஃமின்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாக இருக்கின்றது” (30:47) என்று அல்லாஹ் கூறுவதற்கமைய, நீங்கள் உங்களது ஈமானை முறையாகச் சரிசெய்து கொள்வீர்களென்றால், உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட உதவி உங்களிடம் வந்தே தீரும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.