ஒரே ஆடையுடன் தொழுதல்….

294– ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடத்தில் ஒரே ஆடை அணிந்து கொண்டு தொழுவதைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா? என்று கேட்டார்கள்.

புகாரி-358: அபூஹூரைரா (ரலி)

295– உங்களில் யாரும் தமது தோள் மீது எதுவும் இல்லாதிருக்க ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழ வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-359: அபூஹூரைரா (ரலி)

296– உம்மு ஸலமா (ரலி)வின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு அதன் இரு ஓரத்தையும் இரு தோள்களின் மீது மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுவதை நான் பார்த்தேன்.

புகாரி-355: உமர் பின் அபீஸலமா (ரலி)

297– ஜாபிர் (ரலி) ஒரே வேட்டியை அணிந்து கொண்டு அதைத் தமது பிடரியில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களது இதர ஆடைகளோ துணி தொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடத்தில் ஒருவர், ஒரே வேஸ்டியிலா தொழுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு உன்னைப் போன்ற மடையர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு நான் செய்தேன். நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரு ஆடைகள் இருந்தன? என்று கேட்டார்கள்.

புகாரி-352: முஹம்மது பின் அல் முன்கதீர் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.