288– நபி (ஸல்) அவர்கள் எனது படுக்கை விரிப்பில் தொழும் போது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் குறுக்கே ஜனாஸா கிடப்பது போல் நான் கிடப்பேன்.
289– நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களின் விரிப்பில் அவர்களுக்குக் குறுக்கே உறங்கிக் கொண்டிருப்பேன்.அவர்கள் வித்ருத் தொழ எண்ணும் போது என்னை எழச் செய்வார்கள். அதன் பின் நான் வித்ருத் தொழுவேன்.
290– ஆயிஷா (ரலி)யிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் பற்றிப் பேசப்பட்டது. சிலர் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவர்களுக்குக் குறுக்கே சென்றால்) தொழுகையை முறிப்பர் என்று கூறினர். அதை கேட்ட ஆயிஷா (ரலி) எங்களை கழுதைகளுடனும் நாய்களுடனும் ஒப்பிட்டு விட்டீர்களே! நிச்சயமாக கிப்லாவுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையே கட்டிலில் நான் படுத்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்ப்பட்டால் எழுந்து அமர்ந்து நபி (ஸல்) அவர்களுக்குத் தொல்லை தராமல் அவர்களின் கால் வழியாக நழுவி விடுவேன் என்று கூறினார்கள்.
291– ஆயிஷா (ரலி)யிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் பற்றி பேசப்பட்டது. சிலர் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே சென்றால்) தொழுகையை முறிப்பர் என்று கூறினர். அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) எங்களை நாய்களோடு ஒப்பிட்டு விட்டீர்களே! நிச்சயமாக கிப்லாவுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே கட்டிலில் நான் படுத்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களை (நேருக்கு நேர்) எதிர் கொள்வதை விரும்பாமல் நழுவி விடுவேன் என்றார்கள்.
292– நான் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். என் கால்களிரண்டும் அவர்களின் முகத்துக்கு நேராக இருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது (விரலால் என் காலில்) குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன். அன்றைய காலத்தில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் கிடையாது.
293– நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களுக்கு எதிரில் படுத்திருந்தேன். அப்போது நான் மாதவிடாயுடன் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஸுஜுது செய்யும் போது, சில வேளை அவர்களுடைய ஆடை என் மீதுபடும். அவர்கள் ஒரு விரிப்பின் மீது தொழுதார்கள்.