கிப்லா மாற்றம் பற்றி….

302– நபி (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் கஃபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது நீர் வானத்தை நோக்கி உமது முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம் (2:144) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான். உடனே கஃபாவை முன்னோக்கி தொழலானார்கள். (யஹுதிகளிலுள்ள சில அறிவீனர்கள்) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பி விட்டது எது? என்று கேட்கின்றனர். (நபியே!) நீர் கூறும்: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான் என்று (2:142) இந்த வசனம் இறங்கியதும் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது விட்டு வெளியே வந்து அன்ஸாரிக் கூட்டத்தாரிடம் சென்றார். அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அஸர் தொழுது கொண்டிருந்தனர். அவர்களிடம் நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன்: அவர்கள் கஃபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன், என்று கூறினார். உடனே தொழுதுக் கொண்டிருந்தவர்கள் கஃபாவை முன்னோக்கித் திரும்பினார்கள்.

புகாரி-399: பராஉ பின் ஆஸிப் (ரலி)

303– நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி ‘பதினாறு’ அல்லது ‘பதினேழு’ மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.

புகாரி- 4492. பராஉ (ரலி)

304– கூபா பள்ளிவாசலில் மக்கள் ஸுபுஹ் தொழுது கொண்டிருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, சென்ற இரவில் கஃபாவை முன்னோக்கித் தொழுமாறு நபி (ஸல்) அவர்களுக்கு இறை வசனம் அருளப்பட்டது, என்று கூறினார். (பைத்துல் முகத்தஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கித் தொழுதுக் கொண்டிருந்த அவர்கள் அப்படியே கஃபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள்.

புகாரி-403:இப்னு உமர் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.