103:1,2,3. காலத்தின் மீது ஆணையாக மனிதன் (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக நஷ்டத்தி(ன் வழியி)லிருக்கின்றான். ஆயினும், எவர்கள் விசுவாசம் கொண்டு நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும், நன்மைகளை செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, இவர்களைத் தவிர (மற்றவர்கள் நஷ்டவாளிகளாவார்கள்)
விற்பனைப் பொருளின் குறைகளை மறைத்தல்
‘ஒரு உணவுக் குவியலின் பக்கம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அதில் அவர்கள் தம் கையை நுழைத்தபோது அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. உணவு வியாபாரியே! என்ன இது? என்று வினவினார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் பட்டு விட்டது என்று பதிலளித்தார். மக்கள் பார்க்கும் விதமாக உணவுப் பொருளின் மேற்பகுதியில் அதைப் போட்டிருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.
இறையச்சமில்லாத பெரும்பாலான வியாபாரிகள், பொருளின் குறையை மறைக்க பல விதத்திலும் முயலுகின்றனர். அதன் மீது டேப் ஒட்டி விடுகின்றனர். அல்லது அதைப் பெட்டியின் அடியில் போட்டு விடுகின்றனர். அல்லது ஏதாவது ரசாயனத்தைப் பயன்படுத்தி அழகுபடுத்தி விடுகின்றனர். வாகனத்தில் இஞ்சினின் ஆரம்ப சத்தத்தில் எழக்கூடிய குறையை மறைத்து விடுகின்றனர். குறைகளுடையப் பொருளை ஒருவன் வாங்கிச் சென்றால் அது சீக்கிரம் பழுதாகி விடுகிறது. இன்னும் சிலர் பொருள் காலாவதி ஆகக்கூடிய தேதியை மாற்றி விடுகின்றனர். அல்லது பொருளைப் பார்ப்பதற்கோ பரிசோதிப்பதற்கோ அனுமதிப்பதில்லை. வாகனங்களை அல்லது கருவிகளை விற்பவர்களில் பெரும்பாலோர் அவற்றின் குறைகளைத் தெளிவு படுத்துவதில்லை. இவை யாவும் விலக்கப்பட்டவையாகும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்குச் சகோதரனாவான். தன் சகோதரனுக்கு குறையுள்ள பொருளை விற்கின்ற எந்த முஸ்லிமுக்கும் அதைத் தெளிவு படுத்தாமலிருப்பது ஹலால் இல்லை’ அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: இப்னுமாஜா.
சிலர் கருதுகின்றனர். வாகனங்களை ஏலம் விடும்போது நான் இரும்புகளை விற்கப் போகிறேன் என்று மக்களிடம் கூறி விட்டால் தம்முடைய பொறுப்பு நீங்கி விடும் என்று. (பழுதான வாகனங்களை வீற்ற குற்றம் வராது என்று) இப்படிப்பட்ட வியாபாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது போல அபிவிருத்தியை – பரக்கத்தை அழித்து விடக் கூடியதாகும்.
‘விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத்தை விட்டும்) பிரிந்து செல்லாத வரை வியாபாரத்தை ரத்து செய்ய உரிமை பெற்றவராவர். அவ்விருவரும் உண்மை கூறி (எதையும் மறைக்காது) தெளிவு படுத்தினால் அவர்களுடைய வியாபாரத்தில் அவர்களுக்கு அபிவிருத்தி அளிக்கப்படும். அவ்விருவரும் பொய் கூறி எதையேனும் மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் அபிவிருத்தி அழிக்கப்படும் (நபிமொழி) அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) நூல்: புகாரி.
இஸ்தஇன் பில்லாஹி வஹ்தஹூ
1. ‘நீ கேட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே கேள்! உதவி கோரினால் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கோரு!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)
இமாம் நவவி (ரஹ்) அவர்களும், இப்னுஹஜர் ஹைதமி (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘இவ்வுலக தேவையாயினும் மறு உலக தேவையாயினும் உனக்குத் தேவையேற்படும் போது, அல்லாஹ்விடம் மட்டுமே கேள்! குறிப்பாக அல்லாஹ் அல்லாத எவராலும் நிறைவேற்ற முடியாதவற்றை அவனிடம் மட்டுமே கேள். உதாரணத்திற்கு நோயைக் குணப்படுத்தல், உணவு தேடல், நேர்வழிப் படுத்துமாறு வேண்டுதல் போன்றவை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானவை ஆகும்’ இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
“அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைத்தால் அதனை நீக்குவோர் அவனையன்றி வேறெவருமில்லை. (அவ்வாறே) உமக்கு யாதொரு நன்மை நேரிடினும் (அதைத் தடுத்து விடக் கூடியவன் எவனுமில்லை) அவன் யாவற்றின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்” (6:17).
2. எவன் அத்தாட்சியை விரும்புகிறானோ, அவனுக்கு அல்குர்ஆன் அத்தாட்சிக்குப் போதுமானதாகும். எவன் தன்னை இரட்சிக்கும் ஒருவனைப் பெற விரும்புகிறானோ, அவனுக்கு அல்லாஹ் போதுமானவன். எவன் தனக்கு நல்லுபதேசம் புரிகின்ற ஒருவனைப் பெற விரும்புகிறானோ, அவனுக்கு மௌத்து போதுமானதாகும். இவற்றிலிருந்து எதுவும் அவனுக்குப் போதுமென்ற நிலை ஏற்படவில்லையோ அவனுக்கு நரகமே போதுமானதாகும். இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுவதைக் காணலாம்.
“தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனல்லவா?” (39:36)
3. ‘அல்லாஹ்விடம் மட்டுமே தம் தேவைகளைக் கேட்டுப் பெற வேண்டும்’ என்பது பற்றி அப்துல் காதிருல் ஜீலானிய்யி (ரஹ்) அவர்கள் தமது பத்ஹுர்ரப்பானியில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
‘நீங்கள் அல்லாஹ்விடமே கேளுங்கள்; அவனல்லாதவனிடம் கேளாதீர்கள்; அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கோருங்கள்; அவனல்லாத எவரிடமும் உதவி கோராதீர்கள். உனக்கென்ன கேடு பிடித்து விட்டது? (அவனல்லாதவரிடம் கேட்டு விட்டு) நாளை எந்த முகத்துடன் அவனைச் சந்திக்கப் போகிறாய்? இம்மையில் நீ அவனு(அல்லாஹ்வு)டன் போட்டி போடுகிறாய். அவனைப் புறக்கணித்து விட்டு அவனுடைய படைப்புகளிடம் முன்னோக்குகிறாய்; அவனுக்கு இணை கற்பிக்கிறாய். உனது தேவைகளைப் படைப்புகளிடம் முன்வைத்து உனது பொறுப்புகளை அவர்களிடம் காட்டுகிறாய்.
உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் தரகர்களை அகற்றுங்கள். உங்களிடத்தில் அந்தத் தரகர்களை வைத்திருப்பது ஒரு பைத்தியகாரத்தனமாகும். ஆட்சியோ, அரசுரிமையோ, செல்வமோ, கண்ணியமோ அல்லாஹ்வுக்கன்றி வேறெவருக்குமில்லை. படைப்புகளைக் கைவிட்டு விட்டு அல்லாஹ்வுடன் இருந்து கொள்ளுங்கள். அதாவது படைப்புகளின் (உண்மைக்கு முரண்பட்ட) வார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்காது அல்லாஹ்வுடனேயே இருந்து கொள்ளுங்கள்.
4. மார்க்கம் அனுமதிக்கின்ற உதவிகோரல்: உனது கஷ்டங்களை, தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அல்லாஹ்விடம் உதவிகோரல் என்பதற்கு மார்க்கம் அனுமதிக்கின்ற உதவிகோரல் எனப்படும். அல்லாஹ் அல்லாத நபிமார்கள், மரணித்த நல்லடியார்கள், (சத்தத்தைக் கேட்க முடியாத தூரத்தில்) மறைவிலுள்ள உயிருள்ளவர்கள் போன்றவர்களிடம் உதவிகோரல் என்பது இணை கற்பிக்கக்கூடிய உதவிகோரலாகும்.
அல்லாஹ் அல்லாத இவர்கள் நன்மையோ, தீமையோ செய்வதற்குச் சக்திபெற மாட்டார்கள். துஆவையும் செவிதாழ்த்த மாட்டார்கள். அவர்கள் செவிதாழ்த்தினால் கூட எமக்குப் பதிலளிக்க மாட்டார்கள்.
பள்ளிவாசலொன்றைக் கட்டுவது, அல்லது பொருளினால் ஒரு உதவியைச் செய்வது போன்ற உயிருள்ளவர்கள் செய்யச் சக்தியுள்ளவற்றை அவர்களிடம் கேட்பது அனுமதிக்கப்பட்டதாகும். மரணித்தவர்களிடம் கேட்பது இதுவும் சமமாக மாட்டாது. உயிருள்ளவர்கள் தங்களுக்குள் உதவி உபகாரங்கள் செய்து கொள்வது பற்றி அல்லாஹ்வும் அவனுடைய ரஸுலும் பின்வருமாறு கூறுகின்றனர்.
“நன்மை செய்வதிலும் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாயிருங்கள்” (5:2)
‘ஓர் அடியான் தனது சகோதர அடியானுக்கு உதவும் காலமெல்லாம், அவனுக்கு அல்லாஹ் உதவுகின்றவனாகவே இருக்கின்றான்’ ஆதாரம்: முஸ்லிம்
உயிருள்ளவர்களிடம் உதவி பெற்றுக்கொள்ள அனுமதியுள்ள வழிகளின் உதாரணங்களிற் சிலவற்றைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
“(மூஸா (அலை) அவர்கள் ஒரு நாளன்று,) ஜனங்கள் அயர்ந்து இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அங்கு அவர் கண்டார். ஒருவன் அவரது இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவருடைய விரோதிகளைச் சார்ந்தவன். விரோதிக்கு எதிராக உதவி செய்யுமாறு அவருடைய இனத்தைச் சேர்ந்தவன் அவரிடத்தில் வேண்டிக் கொண்டான்” (28:15)
“(உங்கள்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கும் (யஃஜூஜ் மஃஜூஜ் என்னும்) அவர்களுக்கு இடையில் உறுதியான ஒரு (மதிற் சுவரைத்) தடுப்பாக எழுப்பி விடுகிறேன். (என்று துல்கர்னைன் (அலை) அவர்கள் தனது ஜனங்களை நோக்கிக் கூறினார்கள்.) (18:95)
நிராகரிப்பின் கூலி!
35:15. மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.
35:16. அவன் நாடினால், உங்களைப் போக்கி விட்டு, (வேறொரு) புதிய படைப்பைக் கொண்டு வருவான்.
35:17. இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
35:18. (மறுமை – நாளில் தன்) சுமையைச் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் – அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்துக் கொள்ளப்படாது; எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்ல வேண்டியுள்ளது.
35:19. குருடனும், பார்வையுடையவனும் சமமாகமாட்டார்கள்.
35;20. (அவ்வாறே) இருளும், ஒளியும் (சமமாகா).
35:21. (அவ்வாறே) நிழலும், வெயிலும் (சமமாகா).
35:22. அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் (மண்ணறைகளில்) உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
35:23. நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.
35:24. நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
35:25. இன்னும் அவர்கள் உம்மை பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாக பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளி வீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.
35:26. பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.
வட்டி வாங்குதல்
திருக்குர்ஆனில் அல்லாஹ், வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் போர்ப் பிரகடனம் செய்வதாக அறிவிக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் (உங்களுக்கு வர வேண்டிய) வட்டிப் பாக்கியை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள்” (2:278,279)
அல்லாஹ்விடம் இக்குற்றம் எந்த அளவுக்கு மோசமானது என்பதை விளக்குவதற்கு இவ்விரு வசனங்களே போதும்.
தனி நபர்கள் மற்றும் அரசாங்கங்களின் நிலையை சிந்தித்துப் பார்த்தால் வட்டியின் அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். திவால், நஷ்டம், சந்தையில் தேக்கநிலை, கடனை நிறைவேற்ற முடியாமை, பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டத்தின் சதவிகிதம் அதிகரிப்பு, பல நிறுவனங்கள், கம்பெனிகள் இழுத்து மூடப்படுதல், நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி நாள் முழுதும் உழைத்துப் பெற்ற ஊதியத்தை வட்டிக் கடையில் வட்டியை அடைப்பதற்காக கொட்டுவது, ஒரு சிலரிடத்தில் மட்டும் பெரும் செல்வம் குவிவதால் மனித சமுதாயதில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் (பெருமளவில்) உருவாகுதல். இவையெல்லாம் வட்டியினால் ஏற்பட்ட மோசமான விளைவுகளாகும். வட்டி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்களை அல்லாஹ் எத்தகைய போர் அறிவிப்பைக் கொண்டு எச்சரிக்கை செய்துள்ளானோ அத்தகைய போர் அறிவிப்பின் சில வடிவங்களாகக் கூட இவை இருக்கலாம்.
வட்டியில் ஈடுபடும் பிரதான நபர்கள், இடைத்தரகர்கள், உதவி செய்பவர்கள் ஆகிய அனைவருமே முஹம்மத் (ஸல்) அவர்களின் நாவால் சபிக்கப்பட்டவர்களாவர். ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘வட்டி வாங்குபவனையும், கொடுப்பவனையும், அதற்கு கணக்கு எழுதுபவனையும், சாட்சியாக இருப்பவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அக்குற்றத்தில் அவர்கள் அனைவரும் சமம் என்று கூறியுள்ளார்கள்’ (முஸ்லிம்)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டிக் கணக்கு எழுதுவது, அதை சரி பார்ப்பது, ஒப்படைப்பது, கொடுத்து வைப்பது, பாதுகாப்பது ஆக எந்த விதத்திலும் வட்டிக்கு உதவுவதும் அதில் கூட்டு சேர்வதும் ஹராம் ஆகும். இப்பெரும் பாவம் எத்துணை மோசமானது என்பதை விளக்குவதில் நபி (ஸல்) அவர்கள் உண்மையில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘வட்டி எழுபத்து மூன்று வகைகளைக் கொண்டது. அதில் மிகக் குறைந்த பாவம் ஒருவன் தன் தாயிடம் விபச்சாரம் செய்வதற்குச் சமமாகும். வட்டியில் மிகக் கொடியது ஒரு முஸ்லிமின் மானம் மரியாதைக்கு பங்கம் விளைவிப்பதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (ஹாகிம்)
மேலும் கூறினார்கள்: ‘ஒருவன் அறிந்து கொண்டே ஒரு திர்ஹம் வட்டியை உண்பது அறுபத்து மூன்று தடவை விபச்சாரம் செய்வதை விடக் கொடியது’ அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) நூல்: அஹ்மத்.
பொதுவாக வட்டி எல்லோருக்கிடையிலும் எல்லா நிலையிலும் ஹராமாகும். சிலர் எண்ணுவது போல் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் மத்தியில் தான் ஹராமாகும் என்பதல்ல. எத்தனையோ செல்வந்தர்கள், பெரும் பெரும் வியாபாரிகள் வட்டியினால் அனைத்தையும் இழந்து ஆண்டியானதுண்டு. யதார்த்தம் இதற்கு சான்று பகர்கின்றது.
வட்டியினால் விளையும் குறைந்த பட்ச தீங்கு யாதெனில், அது செல்வத்திலுள்ள பரக்கத்தை – அபிவிருத்தியை அழித்து விடும். என்னதான் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் சரியே. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘வட்டிப் பொருள் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதன் முடிவு நஷ்டமாகவே அமையும்’ அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: ஹாகிம்.
அதுபோல வட்டி அது கூடுதலாக இருந்தால் தான் ஹராம் என்றல்ல, கூடுதலாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி அனைத்துமே ஹராமாகும். வட்டி உண்டவன் மறுமையில் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங் கொண்டவன் எழுவது போல் மண்ணறையிலிருந்து எழுவான். இவ்வளவு மோசமான பாவமாக இது இருந்தும் இதற்கு தவ்பா – பாவமீட்சி உண்டு என அல்லாஹ் அறிவித்துள்ளான். அதன் முறையை அவன் விளக்கியுமுள்ளான்.
வட்டி வாங்குபவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் பாவமன்னிப்புக் கோரி (வட்டியைக் கை) விட்டால் உங்களுடைய மூலதனம் உங்களுக்கே உரியது. நீங்கள் அநீதி இழைக்கக் கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது” (2:279). இதுவே அசல் நீதியாகும்.
ஒரு முஃமினின் உள்ளம் இப்பெரும் பாவத்தை வெறுக்க வேண்டும். அது எத்துணை மோசமானது என்பதை உணர வேண்டும். எந்த அளவுக்கென்றால் நிர்பந்தமாக, பொருள் வீணாகி விடும் அல்லது திருடு போய்விடும் என்ற அச்சத்தில், வட்டியின் அடிப்படையில் இயங்கும் வங்கியில் பணம் வைத்திருப்பவர்கள் நிர்பந்தமாகத்தான் இவ்வாறு செய்கிறோம் என்று சொல்கிறார்கள். இது செத்த பிண்டத்தை அல்லது அதை விட மோசமானதை உண்பதைப் போன்றது என்றும் நாம் அவசியம் உணர வேண்டும். அத்துடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். மேலும் முடிந்தவரை இதற்கு மாற்றுப் பரிகாரம் காண முயல வேண்டும்.
வங்கிகளில் வட்டியை அவர்கள் கேட்டு வாங்கக் கூடாது. மாறாக அவர்களின் கணக்குகளில் வட்டி ஏற்றப்பட்டு விட்டால் ஏதேனும் ஆகுமான காரியத்தில் – தர்மமாக அல்லாமல் அதிலிருந்து விடுபட்டால் போதும் என்று – அதைச் செலவு செய்திட வேண்டும். ஏனெனில் அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மட்டுமல்ல எந்த விதத்திலும் அந்த வட்டித் தொகையைப் பயன்படுத்துவது அவர்களுக்கு ஆகுமானதல்ல. உண்பதற்கோ, பருகுவதற்கோ, உடுத்துவதற்கோ, வாகனத்திற்கோ, வீட்டிற்கோ அல்லது பெற்றோர், மனைவி, மக்கள் ஆகியோருக்குச் செய்ய வேண்டிய கடமையான செலவுகளுக்கோ அல்லது ஜகாத் கொடுப்பதற்கோ, வரி செலுத்துவதற்கோ அல்லது தனக்கு நேரவிருந்த ஒரு அநீதியைத் தடுப்பதற்கோ எதற்கும் பயன்படுத்தக் கூடாது. அல்லாஹ்வின் தண்டனைக்கஞ்சி வட்டியிலிருந்து அவன் விலகிக் கொள்ள வேண்டும்.
‘இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்’
(வழிபடுவதும் கொண்டும், பிரார்த்தனை புரிவது கொண்டும், உதவி தேடுவது கொண்டும் உன்னை மட்டுமே சொந்தமாக்குகின்றோம்.)
1. முஸ்லிம்கள் இந்த வசனத்தை ஒரு நாளைக்குப் பல விடுத்தங்கள் தொழுகையினுள்ளும் வெளியிலும் ஓதி வருகின்றனர். இதுதான் ஸூரத்துல் பாத்திஹாவின் சாரமாகும். ஸூரா பாத்திஹா குர்ஆனின் சாரமாகும்.
2. இவ்வசனம், தொழுகை, நேர்ச்சை, அறுத்துப் பலியிடல் போன்ற அனைத்து வணக்கங்களையும் உள்ளடக்குகின்றது. குறிப்பாக ‘அத்துஆஉ ஹுவல் இபாதஃ’ (துஆ என்றால் வணக்கமாகும்) என்று கூறும் நபி (ஸல்) அவர்களுடைய சொல்லையும் இது உள்ளடக்குகின்றது.
தொழுகை என்ற வணக்கத்தை ஒரு ரஸூலுக்காகவோ, அல்லது ஒரு வலிக்காகவோ செய்வதற்கு எவ்வாறு அனுமதி இல்லையோ, அவ்வாறே ‘துஆ’ என்ற வணக்கத்தையும் எவருக்காகவும் செய்ய முடியாது. இது அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டிய வணக்கமாகும். இந்த வணக்கம் பற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.
“(அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கக்கூடிய அவர்களுக்கு நபியே!) நீர் கூறும்! நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இறைவனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்” (72:20)
3. “லாஇலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக்க இன்னீ குன்து மினள்ளாலிமீன்” (அல்லாஹ்வே! உன்னைத்தவிர வேறெந்த நாயனுமில்லை; நீ மிக்கப் பரிசுத்தமானவன்; நானோ அக்கிரமக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்) (21:87) என்று யூனுஸ் நபி (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்கள். ‘இந்த துஆவைக் கொண்டு எந்த ஒரு முஸ்லிம் பிரார்த்தனைப் புரிகிறாரோ, அது நிறைவேற்றப்பட்டே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: ஹாகிம் (ஸஹீஹ்)
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
கற்பனையில் மூழ்கிக் கிடக்கும் பெரும்பான்மை!
6:116. பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.
6:117. நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத்தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் – அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான்.
7:187. அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வருமென்று வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது – அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.
9:69. (நயவஞ்சகர்களே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்கு கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன – அவர்கள் தான் நஷ்டவாளிகள்.
12:40. “அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவருக்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
17:89. நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்கு சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.
25:50. அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.
30:6. இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.
வம்ச உறவை மாற்றுதல்
ஒரு முஸ்லிம் தன்னுடைய தந்தையை விடுத்து வேறொருவருடன் தன்னை இணைத்து நான் அவருடைய மகன் என்று சொல்வதோ இதுபோல தன்னுடைய குடும்பத்தை விடுத்து வேறொரு குடும்பத்துடன் தன்னை இணைத்துச் சொல்வதோ மார்க்கத்தில் கூடாததாகும். சிலர் உலக இலாபங்களுக்காக இப்படிச் செய்கின்றனர். பொய்யான இந்த உறவை அரசு ஆவணங்களில் கூட பதிவு செய்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களுடைய தந்தை அவர்களை சிறு வயதிலேயே புறக்கணித்து, கவனிக்காமல் விட்டதற்காக தம் தந்தையின் மீதுள்ள வெறுப்பில் குரோதத்தில் இப்படிச் செய்யலாம். இவையனைத்தும் விலக்கப்பட்டவையாகும். இதனால் திருமணம், வாரிசுரிமை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் பெரும் குழப்பங்கள் ஏற்படும். ஆதாரபூர்வமான நபிமொழியில் வந்திருப்பதாவது:
‘யார் தன்னுடைய தந்தையை விடுத்து வேறொருவருடன் தன்னை இணைத்துச் சொல்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), (புகாரி)
வம்ச உறவுகளை மாற்றக்கூடிய அல்லது அதில் பொய்யை இணைக்கக் கூடிய அனைத்து செயல்களும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவையாகும். சிலர் மனைவியுடன் தகறாறு ஏற்படும் போது அவளைத் தேவிடியாத்தனம் செய்பவள் என்று திட்டி விடுகின்றனர். தம்முடைய குழந்தையைக் கூட தம்முடையதல்ல என எந்த ஆதாரமும் இன்றிக் கூறி விடுகின்றனர். இன்னும் சில பெண்கள் கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு தவறான உறவால் அடுத்தவனின் கருவைச் சுமந்து தனது கணவனின் வம்ச உறவில் சேர்த்து விடுகின்றனர். நபிமொழியில் இது குறித்து கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘லிஆன் (ஒருவரையொருவர் சபித்தல்) சம்பந்தமான வசனம் (24:6-9) இறங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஒரு பெண் ஒரு குடும்பத்துக்குச் சம்பந்தமில்லாத (விபச்சாரத்தின் மூலம் உருவான கருவை அல்லது) குழந்தையை அக்குடும்பத்துடன் சேர்த்தால் அவளுக்கு இறைவனிடம் எந்த மதிப்பும் கிடையாது. மேலும் தனது சுவனத்தில் அல்லாஹ் அவளை சேர்க்க மாட்டான். (அதுபோல) ஒரு மனிதன் தன்னுடைய குழந்தை – அது அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் – அது எனக்கு பிறந்ததல்ல என மறுத்தால் அவனை விட்டும் அல்லாஹ் தூரமாகி விடுகிறான். மேலும் (மறுமையில்) மனிதர்களில் முன்னோர் பின்னோர் அனைவரின் முன்னிலையில் அவனைக் கேவலப்படுத்துவான்’ (அபூதாவூத்).
நேசகுமார் என்ற நெருஞ்சி முள்
நெருஞ்சி முள்! தன்னுடைய உடலின் அனைத்துப்
பகுதிகளையும் மனிதனை வதைக்கும் முள்ளால் நிரப்பி,
அந்த முள்ளையே காரணகாரியமாக வைத்து இடம்விட்டு
இடம்மாறி தன் விஷமுள் களைந்து வேறூன்றி மீண்டும்
ஓராயிரம் முள்ளுடன் தன் கிளை பரப்பும் இந்த
நெருஞ்சி முள்ளுக்கும் நேசகுமாருக்கும் ஏதேனும்
வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
நாமக்கல் சிபிக்கு தெரிந்த புரிந்த இந்த “மார்க்க ரீதியான
தக்க காரணம்”, அதிகம் படித்த மேதாவியான இந்த
நெருஞ்சிக்குத் தெரியாமல் போனது அறிவு குறைச்சலால்
அல்ல. ஆணவமும் அது சார்ந்த கயமைத்தனமும் தான்.
ஆறு இல்லை ஏழு தமிழ் குர்ஆனை தன்னிடம்
வைத்துக் கொண்டு அது அத்தனையையும் குற்றம்
கண்டுபிடிப்பதற்காகவே நோட்டமிடும் இவருக்கு
பதிலளிக்க நான் இந்த பதிவை எழுதவில்லை. அது
எனது வேலையும் அல்ல. இந்த விஷமுள் தன்
கிளைபரப்பி நல்ல சில செடிகளையும், நாற்றாங்காலையும்
நாசம் பண்ணாமல் இருப்பதற்காக எச்சரிக்கை
வலைப்பதிவில் அதை எடுத்து எழுதியவன் என்ற
முறையில் விளக்கம் தருவது என்மீது கடமையாகின்றது.
மேலும் இந்த எச்சரிக்கை தளத்தை தமிழ்மணத்திலோ
அல்லது தேன்கூட்டிலோ நான் பதிவு செய்யவில்லை.
காரணம், அதில் எச்சரிக்கை செய்யப்படும் விஷயங்கள்
ஈமான் (நம்பிக்கை) தலைக்கேறிய உண்மை
முஸ்லிம்களுக்கு மட்டுமே என்பதால் தான். ஆனால்
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழிந்துரைப்பதையே
தன்னுடைய வலைப்பதிவின் நோக்கமாக கொண்டவர்
நம்பிக்கை கொண்டவர்களுக்கு சொல்லப்பட்டதையும்
தன்னுடைய கோணல்பார்வையாலேயே அலசுகிறார்.
தான் ஏற்றுக்கொண்ட மார்க்கக் கொள்கைக்கு
உட்பட்டவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படும் ஒரு
செய்தியில் பெண்ணுரிமையை திணிப்பதும், கணவன்
மனைவி உடல்சார்ந்த பிரச்சினையில் பெண்ணுரிமைப்
பேசுவதும் அறிவுஜீவிகளெனெ பீற்றிக் கொள்வோருக்கு
ஆகுமானதோ?
பெண்ணுரிமைக்கு எந்த வகையில் முரண்படுகிறது
எச்சரிக்கை தளத்தின் பதிவு என்பதை மீண்டும் ஒரு
முறை பார்வையிடுவோம்.
//”ஒரு பெண் தன் கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது மார்க்க ரீதியான தக்ககாரணம் இல்லாமல் வராமலிருப்பது ஹராமாகும். ‘ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் வர மறுத்தால் அவள் மீது அவன் கோபம்கொண்ட நிலையில் அந்த இரவை அவன் கழித்தால் விடியும் வரை வானவர்கள் அவளை சபிக்கின்றனர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்’ அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), (புகாரி)
தனக்கும் தன் கணவனுக்குமிடையே பிரச்சனை ஏற்படும்போது பெரும்பாலானபெண்கள் அவனைத் தண்டிப்பதாக எண்ணிக் கொண்டு அவனுக்கு இல்லற சுகத்தைமறுத்து விடுகின்றனர். சில வேளை இதனால பெரும் தீங்குகள் ஏற்படும்.அவற்றில் ஒன்று கணவன் தவறான வழிக்குச் செல்வது. சிலவேளை விவகாரம்அவளுக்கு எதிராகத் திரும்பி, கணவன் அவளுக்கு மேல் இன்னொருத்தியைமணப்பதைப் பற்றி வினயமாகச் சிந்திக்கத் தலைப்படலாம்.
எனவே கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்குகீழ்படிந்து, விரைந்து அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது மனைவியின் கடமையாகும். ‘ஒரு மனிதன் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்தால் அவள் (பயணம் புறப்படுவதற்காக) ஒட்டகத்தின் சேணத்தின் மேல் அமர்ந்திருந்தாலும் செல்லட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்’ அறிவிப்பவர்: ஸைத்பின் அர்க்கம். (பஸ்ஸார்)
அதே நேரத்தில் தன்னுடைய மனைவி நோயாளியாகவோ, கர்ப்பிணியாகவோ அல்லது வேறுஏதேனும் துன்பத்தில் இருந்தால் அது போன்ற சமயங்களில் அவளை இல்லறத்திற்கு நிர்பந்திக்காதிருப்பது கணவன் மீது கடமையாகும். காரணம் அவ்விருவருக்கும் இடையே பிணக்கு ஏற்படாமல் கருத்தொற்றுமை நீடிக்க வேண்டும் என்பதற்காக.”//
இஸ்லாத்தில் கல்யாண (நிக்காஹ்) ஒப்பந்த ஷரத்தில்
மிக முக்கியமானது, இல்லறசுகம், நல்ல சந்ததிகளை
உருவாக்குதல். இவை இரண்டிற்காகவே திருமணம்
கடமையாக்கப்பட்டுள்ளது. இதில் இல்லறசுகம் மனித
தேவையில் முதன்மையானது. மிக அவசியமானதும் கூட.
ஏனென்றால் இது மறுக்கப்படும் பொழுது மனிதன்
சிலவேளை புத்திபேதலித்து போகவும் கூடும். அதுவும்
கல்யாணம் ஆகி மனைவி அதை தக்க காரணமின்றி
மறுத்தால் அந்த நேரத்தில் வரும் கோபம் நேசகுமாருக்கு
தெரியாததல்ல. தாம்பத்தியத்தில் சுகம் அனுபவித்தல்
கணவன், மனைவி இருசாராருக்கும் பொதுவானதும் சில
உரிமைகளை உள்ளடக்கியதுமாகும். இதில்
பெண்ணுரிமை பேசினால் சிரிப்புதான் வருகிறது. இந்த
விஷயத்தில் மேலோட்டமாகப் பார்த்தால் பெண்ணுரிமை
பாதிக்கப்படுவதுபோல் தெரியலாம். ஆழ்ந்து
சிந்திப்பவர்களுக்குப் புரியும் அதனால் சமூகத்தில்
ஏற்படும் தீமைகள் என்னவென்று. சமூகம் என்பது அந்த
பெண்ணுரிமையையும் உள்ளடக்கியதுதான்.
பெண்ணுரிமைக்கு மட்டும் வக்காலத்து வாங்கும் நீசர்கள்
சமூக அக்கறையை சமாதிகட்டி விடுகிறார்கள்.
ஆசையாய் கணவன் மனைவியை நெருங்கும்போது
இதுதான் சந்தர்ப்பம் என்று அந்த சுகத்தை கணவனுக்கு
மறுத்து விடும்போது, கணவனின் அப்போதைய
நிலையை சற்று எண்ணிப் பாருங்கள். ஏதோ ஒருநாள்
இல்லை ஒருசில வேளை அல்லது உடல்கூறு
பிரச்சனைகளால் என்றால் கணவன் பொறுத்துபோக
வாய்ப்புண்டு. இதே தொடர்கதையாகி விட்டால்
பாதிக்கப்பட்டவன் வேறுவழி தேட அதிக வாய்ப்புண்டு
என்பதை அறிவுடையோர் அறிவர். என்ன வேறுவழி?
எச்சரிக்கை பதிவிலேயே விளக்கமாக சொல்லப்பட்ட
விஷயம்தான். அதில் ‘கணவன் தவறான வழிக்கு
செல்வது’ என்ற சொல் மிக முக்கியமானது. இங்கு தான்
சமூக அக்கறையற்ற, விபச்சார வழியைத் திறக்கக் கூடிய,
அதன் மூலம் கேடுகெட்ட அப்பன் பெயர் தெரியாத ஒரு
சந்ததி உருவாக அவளின் இந்த செயல் காரணமாகி
விடுகிறது. மேலே சொல்லப்பட்ட தீமைகள் பெரிதா?
இல்லை பெண்ணுரிமை பெரிதா? சிந்தித்து சீர்பெறுவோம்.
இன்னும் ஆணைப் பொறுத்தவரையில் பார்க்கும்
பார்வையிலேயே உடன் உணச்சிவசப்படக் கூடியவன்.
பெண் என்பவளோ அப்படி அல்ல. அவள் ஆணின்
தீண்டுதலிலேயே உணர்ச்சி அடைகிறாள். கணவன்
வெளிஉலக புழக்கத்தில் அதாவது அலுவலகத்தில்,
தெருவில், வியாபார ஸ்தலத்தில் இதுபோன்று இன்னும்
பல வகைகளில் இன்று கொடிகட்டிப் பறக்கும் கவர்ச்சி
என்ற காம சூழலில் தன் பார்வையை பேணிக் கொண்டு
உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடி தன் மனைவியிடம்
வரும் நல்ல கணவனுக்கு அந்த சுகம் மறுக்கப்படுவது
பெண்ணுரிமையா?
என்னுடைய அனைத்து வலைதளங்களிலும்
பின்னூட்டம் முற்றிலுமாக மறுக்கப்படுகிறது. காரணம்
என்னவெனில், அனானிஸ் என்ற போர்வையில் வந்து
முகம் தெரியாமல் முகாரி பாடும் நெஞ்சுரமற்றவர்கள்
என்னைப் பொறுத்தவரையில் கோழைகள் என்பதாலும்,
(சொல்வதை தெளிவாய் சொல் உன்னுடைய உண்மை
முகத்துடனும் உன் தாய் தந்தையர் வைத்த அழகிய
பெயருடனும்) இன்னும் பதிவுக்கு இடப்படும்
பின்னூட்டங்கள் படிப்பவர்களின் பார்வை படுவது
குறைவு. எவ்வாறெனில் பதிவை படித்து விட்டு மீண்டும்
மீண்டும் அதே வலைதளத்திற்கு பின்னூட்டத்தை படிக்க
வருவோர் மிகவும் குறைவு. இதனால் சொல்லப்படும்
செய்தி அதிகமானோரைப் பொய்ச் சேர்வதில்லை
என்பதாலும் பின்னூட்டத்தைத் தவிர்த்திருக்கிறேன்.
பின்னூட்டமிட நினைக்கும் வலைப்பதிவர்கள்
தங்களுடைய தளத்திலேயே அதை பதிவாக போட்டு
சொல்ல வருவதை தெளிவாக சொல்வது நலம். தவிர்த்து
வெறுமனே படிப்பவர்கள் ஏதேனும் சொல்ல நினைத்தால்
என்னுடைய மின்னஞ்சல் அனைத்து வலைபதிவுகளிலும்
திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது. அதை பயன்படுத்தி
எனக்கு மின்னஞ்சல் செய்யவும். தங்களுடைய
மின்னஞ்சல் செய்தி நான் அவசியம் என்று கருதினால் என்னுடைய வலையில் சேர்க்கப்படும்.
என்றும் அன்புடன்
Jafar (safamarva) Kuwait
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்பதின் அர்த்தம்
‘முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் ரஸூலாக அனுப்பப்பட்டார்கள்’ என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்கள் அறிவித்ததை உண்மைப் படுத்துவோம்; ஏவியதற்கு வழிப்படுவோம்; தடுத்ததை விட்டு விடுவோம்; அவர்கள் மார்க்கமாக்கியுள்ளதைக் கொண்டு அல்லாஹ்வுக்கு வழிபடுவோம்.
1. அபுல்ஹஸன் அலி-அந்நத்வி அவர்கள் தனது ‘கிதாபுன் நுபுவ்வா’ என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். ‘நபிமார்களின் ஆரம்பகால தஃவாவு (இறை பணி) யும், எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைகளிலும் அவர்களது மகத்தான குறிக்கோளும் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையைச் சரிசெய்வதும் அடியானுக்கும் இரட்சகனுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதும், அல்லாஹ்வுடைய தூய்மையான மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுப்பதும் இபாதத்தை (வழிபடுவதை) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமாக்கி வைப்பதுமாக இருந்தது.
நாங்கள் வழிபடுவதற்கும், பிரார்த்தனை புரிவதற்கும், ஒதுங்குவதற்கும், அறுத்துப் பலியிட்டு வணக்கம் புரிவதற்கும் தகுதியுடையவன் அவன் மட்டுமேயாவான்.
2. நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது ரப்பான அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
“நீர் கூறும்: அல்லாஹ் நாடினாலன்றி எனக்கு யாதொரு நன்மையோ, தீமையோ செய்து கொள்ள நான் சக்தி பெற மாட்டேன். நான் மறைவானவற்றை அறிய முடியுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன், யாதொரு தீங்கும் என்னை அணுகியிராது. நான் பாவிகளுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், மூமின்களுக்கு நன்மாராயங் கூறுபவனுமேயன்றி வேறில்லை” (7:188)
‘மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களைக் கிறிஸ்தவர்கள் அளவுகடந்து புகழ்ந்தது போன்று நீங்களும் என்னைப் புகழாதீர்கள். நானோ அல்லாஹ்வுடைய ஓர் அடியானாவேன். என்னை அல்லாஹ்வுடைய அடியான் என்றும், அவனுடைய ரஸூல் என்றுமே கூறுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி.
ஈஸா (அலை) அவர்களுடைய விஷயத்தில் கிறிஸ்தவர்கள் செய்தது போன்று, நாமும் நபி (ஸல்) அவர்களை உதவிக்கழைத்து வணக்கம் செலுத்துபவர்களாக இருக்கக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் ஷிர்க்கிலேயே ஆழ்ந்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள், தன்னை அல்லாஹ்வுடைய அடிமை என்றும், அவனுடைய ரஸூல் என்றும் அழைக்குமாறு தான் எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
3. நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் மீது விருப்பம் கொள்வதென்றால், அல்லாஹ்வை மட்டும் அழைத்துப் பிரார்த்திப்பதில் நபியவர்களுக்கு வழிபடுவதும், அவனல்லாத வேறு எவரிடமேனும் பிரார்த்திப்பதைத் தவிர்ப்பதுமாகும். அழைக்கப்படுகின்றவர், ரஸூலாகவோ, அல்லது நெருக்கமாக வலியாகவோ இருப்பினும் சரியே! பிரார்த்தனைப் பற்றிப் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள். ‘நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! உதவி கோரினால் அல்லாஹ்விடமே உதவி கோரு! ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு கவலையோ, துன்பமோ வருமென்றால் பின்வருமாறு ஓதிக்கொள்வதை வழமையாக்கிக் கொண்டவர்களாக இருந்தார்கள்.
‘யாஹய்யு யாகய்யூம் பிரஹ்மதிக அஸ்தகீஸு’ (உயிருள்ளவனே! என்றும் நிலையானவனே! உன்னுடைய அருளைக் கொண்டு உன்னிடம் இரட்சிப்புக் கோருகிறேன்.) ஆதாரம்: திர்மிதி (ஹஸன்)
எமது துன்பங்களைத் துடைக்குமாறு, அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு வழி காட்டியுள்ளார்கள். அவனையன்றி வேறெவரும் எமது துன்பங்களைத் துடைக்க மாட்டார்.