முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்பதின் அர்த்தம்

‘முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் ரஸூலாக அனுப்பப்பட்டார்கள்’ என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்கள் அறிவித்ததை உண்மைப் படுத்துவோம்; ஏவியதற்கு வழிப்படுவோம்; தடுத்ததை விட்டு விடுவோம்; அவர்கள் மார்க்கமாக்கியுள்ளதைக் கொண்டு அல்லாஹ்வுக்கு வழிபடுவோம்.

1. அபுல்ஹஸன் அலி-அந்நத்வி அவர்கள் தனது ‘கிதாபுன் நுபுவ்வா’ என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். ‘நபிமார்களின் ஆரம்பகால தஃவாவு (இறை பணி) யும், எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைகளிலும் அவர்களது மகத்தான குறிக்கோளும் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையைச் சரிசெய்வதும் அடியானுக்கும் இரட்சகனுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதும், அல்லாஹ்வுடைய தூய்மையான மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுப்பதும் இபாதத்தை (வழிபடுவதை) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமாக்கி வைப்பதுமாக இருந்தது.

நாங்கள் வழிபடுவதற்கும், பிரார்த்தனை புரிவதற்கும், ஒதுங்குவதற்கும், அறுத்துப் பலியிட்டு வணக்கம் புரிவதற்கும் தகுதியுடையவன் அவன் மட்டுமேயாவான்.

2. நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது ரப்பான அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

“நீர் கூறும்: அல்லாஹ் நாடினாலன்றி எனக்கு யாதொரு நன்மையோ, தீமையோ செய்து கொள்ள நான் சக்தி பெற மாட்டேன். நான் மறைவானவற்றை அறிய முடியுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன், யாதொரு தீங்கும் என்னை அணுகியிராது. நான் பாவிகளுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், மூமின்களுக்கு நன்மாராயங் கூறுபவனுமேயன்றி வேறில்லை” (7:188)

‘மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களைக் கிறிஸ்தவர்கள் அளவுகடந்து புகழ்ந்தது போன்று நீங்களும் என்னைப் புகழாதீர்கள். நானோ அல்லாஹ்வுடைய ஓர் அடியானாவேன். என்னை அல்லாஹ்வுடைய அடியான் என்றும், அவனுடைய ரஸூல் என்றுமே கூறுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி.

ஈஸா (அலை) அவர்களுடைய விஷயத்தில் கிறிஸ்தவர்கள் செய்தது போன்று, நாமும் நபி (ஸல்) அவர்களை உதவிக்கழைத்து வணக்கம் செலுத்துபவர்களாக இருக்கக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் ஷிர்க்கிலேயே ஆழ்ந்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள், தன்னை அல்லாஹ்வுடைய அடிமை என்றும், அவனுடைய ரஸூல் என்றும் அழைக்குமாறு தான் எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

3. நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் மீது விருப்பம் கொள்வதென்றால், அல்லாஹ்வை மட்டும் அழைத்துப் பிரார்த்திப்பதில் நபியவர்களுக்கு வழிபடுவதும், அவனல்லாத வேறு எவரிடமேனும் பிரார்த்திப்பதைத் தவிர்ப்பதுமாகும். அழைக்கப்படுகின்றவர், ரஸூலாகவோ, அல்லது நெருக்கமாக வலியாகவோ இருப்பினும் சரியே! பிரார்த்தனைப் பற்றிப் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள். ‘நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! உதவி கோரினால் அல்லாஹ்விடமே உதவி கோரு! ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு கவலையோ, துன்பமோ வருமென்றால் பின்வருமாறு ஓதிக்கொள்வதை வழமையாக்கிக் கொண்டவர்களாக இருந்தார்கள்.

‘யாஹய்யு யாகய்யூம் பிரஹ்மதிக அஸ்தகீஸு’ (உயிருள்ளவனே! என்றும் நிலையானவனே! உன்னுடைய அருளைக் கொண்டு உன்னிடம் இரட்சிப்புக் கோருகிறேன்.) ஆதாரம்: திர்மிதி (ஹஸன்)

எமது துன்பங்களைத் துடைக்குமாறு, அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு வழி காட்டியுள்ளார்கள். அவனையன்றி வேறெவரும் எமது துன்பங்களைத் துடைக்க மாட்டார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.