சூதாட்டம்

அல்லாஹ் கூறுகிறான்: “ஈமான் கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலி பீடங்கள், குறி பார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்” (5:90)

அறியாமைக் காலத்து மக்களிடம் சூதாட்டம் பல விதங்களில் இருந்திருக்கிறது. அவர்களிடம் இருந்த பிரபலமான ஒரு விதம் வருமாறு: ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் சம அளவில் பங்கு போட்டு கொள்வர். பிறகு அம்புகள் மூலம் சீட்டுக் குலுக்கிப் போட்டு ஏழு பேர்கள் மட்டும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பங்குகளை எடுத்துக் கொள்வர். எஞ்சியுள்ள மூன்று பேர்களுக்கு ஒன்றும் கிடைக்காது.

நமது காலத்தில் சூதாட்டம் பல விதத்தில் நடக்கின்றது. அவற்றுல் சில:

1. லாட்டரி: இதில் பல வகைகள் உள்ளன. சாதாரணமாக நடைமுறையில் உள்ளது இதுதான். அதாவது பணம் கொடுத்துப் பரிசு சீட்டுகளை வாங்கிக் கொள்வார்கள். குறிப்பிட்ட தேதியில் அந்தப் பரிசுச் சீட்டுகளின் பேரில் குலுக்கல்கள் நடைபெறும். முடிவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என (ஆயிரங்கள் முதல் கோடிகள் வரை) பரிசுத் தொகை கிடைக்கும். இதற்கு அவர்கள் என்ன பெயரை வைத்துக் கொண்டாலும் இது ஹராம் தான்.

2. ஏதேனும் ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்குவது. அதனுள் என்ன இருக்கிறதென்றே தெரியாது. அல்லது ஒரு பொருளை வாங்கும் போது அதற்கு ஒரு நம்பர் அல்லது ஒரு சீட்டுக் கொடுக்கப்படும். பிறகு அதன் பேரில் குலுக்கல் நடைபெறும் அதிர்ஷ்டசாலிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

3. நமது காலத்திலுள்ள சூதாட்ட வகைகளில் வணிக இன்சூரன்சும் ஒன்றாகும். ஆயுள் இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ், சரக்குகளுக்கு இன்சூரன்ஸ், நெருப்பினால் ஏற்படக்கூடிய இழப்புகளின் ஈட்டுக்கு இன்சூரன்ஸ், பொது இன்சூரன்ஸ், பிறரின் தீங்கிலிருந்து பாதுகாக்க இன்சூரன்ஸ் இப்படி பலவகையான இன்சூரன்ஸ்கள் உள்ளன. எந்த அளவுக்கெனில் சில பாடகர்கள் தங்களின் குரலுக்கும், சில விளையாட்டு வீரர்கள், நடிகைகள் தங்களின் சில உறுப்புகளுக்கும் இன்சூரன்ஸ் செய்துக் கொள்கின்றனர்.

மேற்கூறப்பட்ட முறைகளைத் தவிர இன்னும் பல முறைகளும் உள்ளன. அவையனைத்தும் சூதாட்டத்தில் அடங்கும். இன்று சூதாட்டத்திற்கென தனிப்பட்ட கிளப்கள், சங்கங்கள் இருக்கின்றன. அங்கு இப்பெரும் பாவத்தைச் செய்வதற்குத் தனிப்பட்ட பச்சை நிற மேசைகள் உள்ளன. அதுப்பொல கிரிக்கெட், கால் பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளில் பந்தயம் கட்டுவதும் ஒருவகை சூதாட்டமே! அதுபோல சில விளையாட்டு அரங்கங்களிலும் பொழுது போக்கு மையங்களிலும் சூதாட்டத்தின் அடிப்படையிலான பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. போட்டிகள் மூன்று வகைப்படும்:

1. மார்க்க அடிப்படையிலான போட்டிகள். இத்தகைய போட்டிகள் பரிசுகளுடனோ அல்லது பரிசுகள் இல்லாமலோ நடத்தப்படுவது ஆகுமானதாகும். உதாரணமாக ஒட்டகப் பந்தயங்கள், குதிரைப் பந்தயங்கள், துப்பாக்கி சுடும் போட்டிகள், குறிபார்(த்து இலக்கைத் தா)க்கும் போட்டிகள், போன்றவையாகும். (இத்தகைய போட்டிகள் அறப்போருக்கு உதவும்) இத்தகைய போட்டிகளில் – அரிஞர்களின் சரியான சொல்லின் பிரகாரம் – திருக் குர்ஆனை மனனம் செய்தல் போன்ற கல்விப் போட்டிகளும் அடங்கும்.

2. தன் அளவில் ஆகுமான போட்டிகள்: எடுத்துக்காட்டாக: கால்பந்து போட்டிகள், ஓட்டப்பந்தயங்கள். ஆனால் தொழுகையை வீணாக்குதல், மறைக்க வேண்டிய பகுதியை மறைக்காத வகையில் அறைகுறை ஆடை அணிதல் போன்ற ஹராமான காரியங்களை விட்டும் இவை நீங்கியிருக்க வேண்டும். பந்தயம் கட்டாமல் இத்தகைய போட்டிகள் நடத்தப்பட்டால் அவை கூடும்.

3. தன் அளவில் ஹராமான அல்லது ஹராமின் பக்கம் சேர்க்கக்கூடிய போட்டிகள்: உதாரணம்: அழகிப் போட்டிகள், முகத்தைக் காயப்படுத்தக் கூடிய குத்து சண்டைப் போட்டிகள், அதுபோல கொம்புள்ள கால்நடைகளை மோத விடுதல், சேவல்களை மோத விடுதல் போன்ற போட்டிகள் அனைத்தும் விலக்கப்பட்டவையாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on சூதாட்டம்

முடிவேயில்லாத புகழுக்குரியவன்!

18:109. சமுத்திரத்திலுள்ள நீர் யாவும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை (எழுத) ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தச் சமுத்திரம் யாவும் செலவாகி விடும். அதைப்போல் இன்னொரு பங்கும் (சமுத்திரத்தைச்) சேர்த்துக்கொண்ட போதிலும் கூட என்று (நபியே!) நீர் கூறும்.

31:27. மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்”

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on முடிவேயில்லாத புகழுக்குரியவன்!

தௌஹீதுடைய சிறப்புகளிற் சில…..

“எவர்கள் விசுவாசம் கொண்டு, தங்கள் விசுவாசத்துடன் யாதொரு அக்கிரமத்தை (ஷிர்க்கை)யும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக அபயமுண்டு; அவர்கள் தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்” (6:82)

மேற்கண்ட வசனம் அருளப்பட்ட போது ஸஹாபாக்களின் நிலைபற்றி இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

‘ஸஹாபாக்கள் நபியவர்களை நோக்கி, அல்லாஹ்வின் ரஸூலே! எங்களில் எவர்தான் அநியாயம் செய்யாதவர்கள் இருப்பார்கள் என்று வினவினார்கள். அப்பொழுது நபியவர்கள் இதன் அர்த்தம் நீங்கள் கருதுவதன்று. இணைவைத்தலையே இது குறிக்கின்றது என்று கூறிவிட்டு, “லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனை நோக்கி, எனதருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைக்காதே! நிச்சயமாக ஷிர்க் மாபெரும் அக்கிரமமாகும்” (31:13) என்று செய்த உபதேசத்தை (குர்ஆனில்) நீங்கள் செவி தாழ்த்தவில்லையா? என்று கேட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

மேற்கண்ட வசனம் ஷிர்க்கில் தமது ஈமானைக் கலந்து கொள்ளாமல் அதனைவிட்டுத் தூர விலகக்கூடிய மூமின்களுக்கு நன்மாராயம் கூறுகின்றது. மறுமையில் அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து இவர்களுக்குப் பூரண பாதுகாப்புண்டு; இவர்கள் தான் இவ்வுலகில் நேரான வழியில் இருப்போராவர்.

‘ஈமான் அறுபதுக்கும், எழுபதுக்கும் இடைப்பட்ட கிளைகள் கொண்டதாகும்; அவற்றில் மிகவரிசை மிக்கது, லாஇலாஹ இல்லல்லாஹ் என்று மொழிவதாகும்; மிகத் தாழ்ந்தது, பாதையில் (பிறருக்குத்) தீங்கு ஏற்படுத்தக்கூடியதை நீக்குவதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஹையாத் அவர்கள் ‘தலீலுல் முஸ்லிம் பில்-இஃதிகாத் வத்-தத்ஹீர்’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘தௌஹீத் என்பது நற்பாக்கியத்தை ஏற்படுத்தி, பாவங்களை அகற்றக் காரணமாய் அமைகின்றது. மனித சட்டத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்குவதாலும் கவனயீனத்தினாலும் மனிதன் சில வேளைகளில் கால் சறுகி, அல்லாஹ்வுக்கு மாறு செய்பவனாக மாறி விடுகின்றான். அவன் ஷிர்க்கென்னும் அழுக்கிலிருந்து நீங்கி, பரிசுத்தமான தௌஹீதுடையவர்களில் இருப்பானென்றால், அவனுடைய தௌஹீத் அல்லாஹ்வுக்காகவே இருக்கும்.

லாஇலாஹ இல்லல்லாஹ்வை அவன் தூய உள்ளத்துடன் மொழிவதானது, நற்பாக்கியத்தியதிலே அவனை ஓர் உயர்ந்த நிலைக்கு அது ஏற்படுத்தி, அவனுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அமைந்து, தீமைகள் அழிக்கப்பட இடமுண்டாகிறது. பின்வரும் ஹதீஸ் இதற்குப் பொருத்தமாக அமைவதைக் காணலாம்.

‘எவனொருவன், அல்லாஹ்வைத்தவிர வேறெந்த நாயனுமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும், அவனுடைய ரஸூலுமாவார்கள் என்றும், ஈஸா (அலை) அவர்கள், அல்லாஹ்வுடைய அடியாரும், அவனுடைய ரஸூலும், மர்யம் (அலை) அவர்கள் பால் ‘ஆகு’ என்று சொன்ன சொல்லும், அவனிடமிருந்துள்ள ரூஹூ (ஆவியு) மாவார்கள் என்றும் சான்று கூறி உரைக்கிறானோ அவனை அவன் செய்திருந்த செயலுக்குத் தக்கவாறு அல்லாஹ் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

மேற்காட்டிய ஹதீஸில் அமைந்துள்ள ஷஹாதாக்கள் அனைத்தைக் கொண்டும், ‘ஷஹாதா’ உரைக்கக்கூடிய முஸ்லிமுக்கு, ‘தாருன்நஈம்’ (அருட்பாக்கியம் நிறைந்த வீடு) என்னும் சுவர்க்கம் வாஜிபாகின்றது. பின்வரும் ஹதீஸுல் குதுஸியில் அல்லாஹ் சொல்லுகின்றவாறு அவனுடைய வணக்க வழிபாடுகளில் சில குறைகள் பிழைகள் இருப்பினும் கூட அவன்மீது அது குற்றமாகக் காணப்பட மாட்டாது.

‘மனிதனே! நீ எனக்கு எதனையும் இணையாக்காத நிலையில் பூமியின் நிறையளவு பாவத்துடன் (மறுமையில்) என்னைச் சந்தித்தாலும், நான் அதே அளவு மன்னிப்புடன் உன்னிடம் வருவேன்’ ஆதாரம்: திர்மிதி (ஹஸன்)

மேற்காட்டிய ஹதீஸின் அர்த்தம் யாதெனில், பூமி நிறைந்து விடுமளவு பாவங்கள் செய்த நிலையில் நீ என்னிடம் வந்தாலும் தௌஹீதுடைய நிலையில் நீ மௌத்தாகியிருந்தால், உனது பாவங்கள் அனைத்தையும் நான் மன்னிப்பேன் என்பதாகும்.

‘அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காமல் (மறுமையில்) அவனைச் சந்திக்கின்றவன் சுவர்க்கம் பிரவேசிப்பான்; அவனுக்கு எதனையும் இணையாக்கினவனாக அவனைச் சந்திக்கின்றவன் நரகம் பிரவேசிப்பான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் தௌஹீதுடைய சிறப்புக்களைத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு மனிதனுடைய நற்பாக்கியத்துக்கு, இது மிக மேலானதோர் அமலாக (செயலாக)வும், அவனுடைய பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவதற்கும் குற்றங்கள் மன்னிக்கப்படுவதற்கும் மாபெரியதொரு வஸீலாவாக (வழியாக)வும் இருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதுடைய சிறப்புகளிற் சில…..

ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்தல்

அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்” (62:9)

சிலர் இரண்டாம் பாங்கு கூறப்பட்ட பிறகும் கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். அல்லது பள்ளிகளுக்கு முன்னால் தொடர்ந்து பொருட்களை விற்கிறார்கள். அவர்களிடம் வாங்குபவர்களும் பாவத்தில் கூட்டாகின்றனர். மிஸ்வாக் குச்சியை வாங்கினாலும் சரியே. அறிஞர்களின் சரியான கூற்றின்படி இத்தகைய வியாபாரம் தவறானதாகும். ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் சிலர் தங்கள் பணியாளர்களை ஜும்ஆ தொழுகையின் நேரத்தில் வேலை செய்தாக வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். வெளிப்படையில் இத்தகையோரின் இலாபம் அதிகரித்தாலும் உண்மையில் அவர்களுக்கு நஷ்டம் தான் அதிகரிக்கின்றது. ஆனால் பணிபுரியக் கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியின் தேட்டத்திற்கேற்ப செயல்படுவது அவசியமாகும். ஏனெனில், ‘அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்தில் மனிதனுக்குக் கட்டுப்படக் கூடாது’ என்பது நபிமொழி. (அஹ்மத்)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்தல்

தௌஹீதின் முக்கியத்துவம்

அல்லாஹ் உலகோர்களைத் தனக்கு வழிபடுவதற்காவே படைத்துள்ளான். அல்குர்ஆன் தனது அதிகமான அத்தியாயங்களில் ஏகத்துவக் கொள்கையையே வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. தனிமனிதனுக்கும், சமூகத்துக்கும் ஷிர்க்குடைய தீய விளைவுகளைப் பற்றி வலியுறுத்திக் கூறிக் கொண்டிருக்கின்றது. இது, இம்மையில் அழிவுக்கும், மறுமையில் நிரந்தர நரக வாழ்க்கைக்கும் காரணமாய் அமைகின்றது.

ரஸுல்மார்கள் அனைவரும் தமக்கு அல்லாஹ் கட்டளையிட்டபடி, தௌஹீதைக் கொண்டே பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறியுள்ளான்.

“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், நிச்சயமாக என்னைத் தவிர வேறு நாயனில்லை; எனவே என்னையே நீங்கள் வணங்குங்கள் என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை” (21:25)

எங்கள் பால் அனுப்பப்பட்ட ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த 13 வருடகாலங்களில் 12 வருடங்களாகத் தௌஹீதையே போதித்துக் கொண்டிருந்தார்கள். அக்காலங்களில் அல்லாஹ் அருளியவற்றில் பின்வரும் வசனமும் இடம் பெற்றுள்ளது.

“(நபியே! ஜனங்களுக்கு) நீர் கூறும்: நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் எனது இறைவனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்” (72:20)

நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பின்பற்றியோரைச் சிறுபிராயம் முதலே தௌஹீதுடைய வழியில் பயிற்றுவிப்பவர்களாக இருந்தனர். தனது சாச்சாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்வருமாறு அறிவுரை கூறினார்கள்.

‘நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! உதவி கோரினாலும் அல்லாஹ்விடமே உதவி கோருவாயாக! ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

தௌஹீத் என்பது இஸ்லாம் அதன்மீது கட்டி எழுப்பப்பட்ட அடிப்படை அஸ்திவாரம் என்றும், இதல்லாத வேறெந்த வணக்கமாயினும் இது இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறுமளவு இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள், தௌஹீதைக் கொண்டே இஸ்லாமியப் பிரசாரத்தை ஆரம்பிக்குமாறு தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். முஆத் (ரலி) அவர்களை நபியவர்கள் யமனுக்கு அனுப்பியபோது,

‘முஆதே! நீ மக்களை இஸ்லாத்தின்பால் அழைக்கும் போது முதலாவதாக ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ வைக் கொண்டே அழைப்பீராக!’ என்று கூறி அனுப்பினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

‘லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்று கூறுவதிலேயே தௌஹீத் உருவம் பெறுகின்றது. அதன் அர்த்தம் ‘அல்லாஹ்வையன்றி வணக்கத்துகுரியவன் வேறெவனுமில்லை என்பதும், வணக்கம் என்பது அவனுடைய ரஸூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்ததாகும்’ என்பதுமாகும்.

இந்த கலிமாதான் காஃபிர்களை இஸ்லாத்தினுள் பிரவேசிக்கச் செய்கின்றது. ஏனென்றால் இது சுவர்க்கத்தின் திறவுகோலாகும். இதனை மொழிந்தவன் இதற்கு மாறான செயல்களைக் கொண்டு இதனை முறித்து விடாதிருந்தால், இது அவனை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்கின்றது.

குறைஷிக் காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அரசாட்சி, பணம், அழகியபெண் போன்றவற்றைத் தருவதாகவும், அவர்களது தௌஹீதுப் பிரசாரத்தைக் கைவிட்டுவிட்டு, சிலை வணக்கத்தை எதிர்ப்பதை விடுமாறும் கூறினார்கள். அவை எதனையும் அவர்களிடமிருந்து நபியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

13 வருடங்களுக்குப் பின்னால் தௌஹீதுக்கு வெற்றி கிடைக்கும்வரை தானும், தனது தோழர்களும், பிரசாரத்தில் நிலையாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். இதன் பின்னால் தான் மக்கா வெற்றிக் கொள்ளப்பட்டு, சிலைகள் உடைத்துத் தகர்க்கப்பட்டன. அவ்வேளையில் அல்லாஹ்வுடைய ரஸூல் (ஸல்) அவர்கள், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது; நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” (17:81) என்ற அல்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.

‘தௌஹீத்’ என்பது ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையின் தொழிற்பாடாகும். அவன் வாழ்க்கையைத் தௌஹீதைக் கொண்டே ஆரம்பிக்கிறான். அதனை முடிப்பதும் தௌஹீதை (ஸகராத்தின் போது கலிமாவை)க் கொண்டுதான். சமூக வாழ்க்கையில் அவனது தொழில் தௌஹீதை நிலைநாட்டுவதும், அதன்பால் அழைப்பு விடுப்பதுமாகும். ஏனென்றால் தௌஹீத் என்பது மூமின்களை ஐக்கியப்படுத்தி கலிமதுத்தௌஹீதில் ஒன்று படுத்துகின்றது. இவ்வுலக வாழ்வில், கலிமதுத்தௌஹீத் எமது கடைசிப் பேச்சாக அமைவதற்கு அல்லாஹ்விடம் கெஞ்சிக் கேட்போமாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதின் முக்கியத்துவம்

இறைவன் ஒருவனே!

7:65. “‘ஆத்’ (என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம்முடைய ரஸூலாக அனுப்பினோம்) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை. (ஆகவே,) நீங்கள் (அவனுத்துப்) பயப்பட வேண்டாமா?” என்று கூறினார்.

11:60. “‘ஸமூது’ (என்னும் மக்)களிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை (நம்முடைய ரஸூலாக அனுப்பி வைத்தோம்.) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர வேறு நாயன் இல்லை” என்று கூறினார்.

11:84. “‘மத்யன்’ (என்னும் ஊர்) மக்களுக்கு, அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பினோம்.) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு நாயன் உங்களுக்கு இல்லை” என்று கூறினார்.

43:26,27. (நபியே!) இப்றாஹீம் (அலை) தன்னுடைய தந்தையையும் ஜனங்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பாரும். ‘நிச்சயமாக நான் நீங்கள் வணங்குபவைகளை விட்டு விலகிக் கொண்டேன்; எவன் என்னைச் சிருஷ்டித்தானோ, அவனைத்தவிர, (அவனையே நான் வணங்குவேன்;) நிச்சயமாக அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான் (என்றும் கூறினார்.)

அல் குர்ஆன்
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறைவன் ஒருவனே!

தீர்ப்பு நாளின் பரிந்துரையாளர் யார்?


2:48. “நீங்கள் மறுமை நாளை அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள்! அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்குப் பலனளிக்காது. எந்தவொரு ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்காகப் பரிந்து பேசுவதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாக) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் பெற மாட்டார்கள்”.

2:123. “எந்த நாளில் ஒரு ஆத்மா மற்றவொரு ஆத்மாவுக்கு எந்தப் பலனையும் அளிக்காதோ அந்நாளைப் பயந்துக் கொள்ளுங்கள். அந்த ஆத்மாவிடமிருந்து எந்தவொரு பரிகாரமும் அங்கீகரிக்கப்பட மாட்டாது. அதற்காக எவர் பரிந்துரைத்தாலும் பலனில்லை. அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் பெற மாட்டார்கள்”.

40:18. “அநீதி செய்பவர்களுக்கு உதவியாளர்கள் அந்நாளில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். அனுமதி பெற்ற சிபாரிசுகாரர்களும் இருக்கமாட்டார்கள்”.

74:48. “அவர்களுக்காகப் பரிந்து பேசுவோரின் சிபாரிசும் அன்று யாதொரு பயனும் அளிக்காது”

70:40-48. சுவனத்திலிருப்பவர்கள் நரகவாதிகளைப் பார்த்து உங்களை நரகத்தில் புகுத்தியது எது? என முஷ்ரிக்குகளான குற்றவாளிகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘நாங்கள் தொழக்கூடியவர்களில்லை. ஏழைகளுக்கு நாங்கள் ஆகாரமளிக்கவில்லை. வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் சேர்ந்து நாமும் வீணில் மூழ்கிக் கிடந்தோம். கூலிகள் வழங்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். நாங்கள் மரணித்து இதை உறுதியாகக் காணும் வரையில் இவ்வாறே இருந்தோம்’ என்று கூறுவார்கள். எனவே அவர்களுக்காகப் பரிந்துரை பேசுவோரின் சிபாரிசும் அன்று யாதொரு பயனும் அளிக்காது”

2:255. “அல்லாஹ்வுடைய அனுமதியின்றி அவனிடத்தில் எவருக்காக யாரால்தான் பரிந்துபேச முடியும்…?”

53:26.”வானத்தில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர். அவர்கள் (எவருக்காகவும்) ஷபாஅத்துச் செய்தாலும் அது எந்தப் பயனும் அளிக்காது. ஆனால் அல்லாஹ் தான் விரும்பி திருப்திப்பட்டு எவருக்கு ஷபாஅத்துக்கு அனுமதி கொடுக்கின்றானோ (அத்தகையவர் பரிந்துப் பேசுவது பயனளிக்கும்).”

21:28. “அவர்களுக்கு முன்பின் இருப்பவற்றை அவன் நன்றாக அறிகின்றான். அவன் விரும்பியவர்களுக்கன்றி மற்றெவருக்கும் இந்த மலக்குகள் சிபாரிசு செய்ய மாட்டார்கள். அவனுக்கஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்”

34:23. “அல்லாஹ்வுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறெவருடைய சிபாரிசு செய்வதும் பலனளிக்காது.”

10:18. “முஷ்ரிக்குகள் தமக்கு நன்மையோ தீமையோ எதுவும் செய்யமுடியாதவற்றை வணங்குவதுடன் இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை என்றும் கூறுகின்றனர்”.

6:51. “நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை”

32:4. “அல்லாஹ் தான் வானங்கள் பூமி இவற்றுக்கிடையிலுள்ளவை அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்து பிறகு அர்ஷின் மீது ஸ்திரப்பட்டான். உங்களை இரட்சிப்பதற்கும், உங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கும் அவனை தவிர வேறு ஒருவருமில்லை. இதனை நீங்கள் சிந்திக்கவேண்டாமா?”.

39:43-44. “இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே! நீர் கேளும். மேலும் நபியே! நீர் சொல்லும் ‘சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே! (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்”.

20:109. “அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து அவர்களின் பேச்சைக் கேட்க விரும்பினானோ அவர்களைத் தவிர மற்றெவருடைய சிபாரிசும் பயனளிக்காது.”

36:22-23. “என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அவனையன்றி (மற்றெதனையும், எவரையும்) இறைவானாகிய நான் எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கு ஏதேனும் தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு அதில் ஒன்றையுமே என்னை விட்டுத் தடுத்துவிடாது. அதிலிருந்து என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது”.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தீர்ப்பு நாளின் பரிந்துரையாளர் யார்?

நஜஷ் – வியாபாரத்தில் வஞ்சித்தல்

நஜஷ் என்பது பொருளை வாங்காத ஒருவர் (இவர் வியாபாரியால் நிறுத்தப் பட்டிருப்பார்) அதன் விலையை அதிகப் படுத்துவதாகும். பிறரை ஏமாற்றுவதும் படிப்படியாக அவரை அதிக விலைக்குக் கொண்டு செல்வதும் தான் இதன் நோக்கமாக இருக்கும். ‘நீங்கள் வஞ்சக வியாபாரம் செய்யாதீர்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.

இது ஒரு வகையான ஏமாற்றுதலாகும் என்பதில் ஐயமில்லை. திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘சதி செய்வதும் ஏமாற்றுவதும் நரகிற்கு கொண்டு செல்லும் காரணிகளில் உள்ளவையாகும்’ அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல்: பைஹகீ.

வியாபாரச் சந்தைகளிலும் ஏலம் நடக்கின்ற இடங்களிலும் மற்றும் வாகனக் கண்காட்சிகளிலும் உள்ள பெரும்பாலான தரகர்கள் விலக்கப்பட்ட காரியங்களை அதிகம் செய்வதால் அவர்களின் சம்பாத்தியம் ஹராமானதாகும். மேலே சொன்ன நஜஷ் எனும் வஞ்சகமான வியாபாரத்திற்கு அவர்கள் உடன்படுவதும் ஹராமான சம்பாத்தியமே. மேலும் வெளியே இருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் அல்லது வியாபாரியிடம் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றுவதும் ஹராமானதே. (சரக்கு வியாபாரியினுடையதாக இருந்தால் அவரை ஏமாற்றி) சரக்கின் விலையை குறைத்து விடுகின்றனர். ஆனால் இந்த தரகர்களுக்கு சொந்தமான சரக்காக இருந்தால் விலையை ஏற்றி விடுகின்றனர். வாடிக்கையாளர்களையும் வியாபாரிகளையும் வஞ்சிக்கிறார்கள். ஏலத்தின் விலையை அதிகரிக்கின்றனர். இவ்வாறாக இத்தரகர்கள் மனிதர்களை ஏமாற்றி அவர்களுக்கு தீங்கிழைக்கின்றனர்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on நஜஷ் – வியாபாரத்தில் வஞ்சித்தல்

இஸ்லாத்தின் மூன்று அடிப்படை விஷயங்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ் உன்மீது அருள்புரிவானாக!

நான்கு விஷயங்களை அறிவது நம்மீது கடமையாகும் என்பதை நீ அறிந்து கொள்.

ஒன்றாவது: அறிவு, அதாவது அல்லாஹ்வையும், அவன் நபியையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் ஆதாரபூர்வமாக அறியத்தேவையான அறிவு.

இரண்டாவது: அந்த அறிவின்படி அமல் செய்வது.

மூன்றாவது: அதன்பால் மக்களை அழைப்பது.

நான்காவது: இவ்வாறு அழைப்புக் கொடுக்கும் போது ஏற்படுகின்ற இன்னல்கள் மீது பொறுமை செய்வது.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“காலத்தின் மீது ஆணையாக மனிதன் (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக நஷ்டத்தி(ன் வழியி)லிருக்கின்றான். ஆயினும், எவர்கள் விசுவாசம் கொண்டு நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும், நன்மைகளை செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, இவர்களைத் தவிர (மற்றவர்கள் நஷ்டவாளிகளாவார்கள்) (103:1,2,3)

இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்:-

அல்லாஹ் ‘அஸ்ர்’ என்ற இந்த அத்தியாயத்தை மட்டும் இறக்கியிருந்தாலும், இந்த ஒரு அத்தியாயம் மட்டுமே தன் படைப்புகள் மீது (அவர்கள் செய்த தவறுகளுக்காக) ஆதாரம் எடுத்துக் கொள்வதற்கு போதுமானதாகும். (அந்த அளவிற்கு மிக முக்கியமான கருத்துக்களை இவ்வத்தியாயம் உள்ளடக்கியுள்ளது)

(அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கு அறிவு மிக அவசியம் என்பதைக் குறிக்கும் வண்ணம்) இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், ‘சொல், செயலிற்கு முன் அதுபற்றிய அறிவு அவசியம்’ என்ற ஒரு பாடத்தை ஒதுக்கி அப்பாடத்தில் அறிவின் முக்கியத்துவத்தைக் குறிக்கின்ற ஹதீஸ்களை கூறியுள்ளார்கள்.

அறிவு எந்த அளவிற்கு அவசியம் என்பதை கீழ்காணும் இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது.

“(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்ல என்பதை நீர் (உறுதியாக) அறிந்து கொண்டு உமக்காக பாபமன்னிப்பு கோருவீராக!” (47:19)

சொல், செயலுக்கு முன் அறிவைக் கொண்டு அல்லாஹ் ஆரம்பித்துள்ளான். (சொல், செயலுக்கு முன் அதைப்பற்றிய அறிவு மிக அவசியமாகும்)

அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக! கீழ்காணும் மூன்று விஷயங்களை அறிந்து அதன்படி அமல் செய்வது முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையானதாகும் என்று நீ அறிந்து கொள்.

1. நிச்சயமாக அல்லாஹ் நம்மைப் படைத்து நமக்கு உணவும் அளித்தான். அவன் நம்மை வீணாக விட்டுவிடவில்லை. மாறாக, நமக்கு அவனுடைய தூதரையும் அனுப்பி வைத்தான். யார் அவர்களுக்கு வழிபடுகின்றானோ அவன் சுவர்க்கம் செல்வான். யார் அவர்களுக்கு மாறு செய்வானோ அவன் நரகம் புகுவான்.

அதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் (நம்முடைய) ஒரு தூதரை அனுப்பி வைத்தோம்; (மறுமையில்) அவர் உங்களுக்கு சாட்சியாக வருவார். இவ்வாறே பிர்அவ்னிடமும் முன்னர் ஒரு தூதரை நாம் அனுப்பி வைத்தோம். எனினும் பிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். ஆகவே, நாம் அவனை பலமாகப் பிடித்துக் கொண்டோம். (73:16)

2. இறைவனால் அனுப்பப்பட்ட நபியாக இருந்தாலும் சரி, அல்லது அவனோடு நெருங்கிய மலக்காக இருந்தாலும் சரி, இறைவனுக்கு செலுத்த வேண்டிய வணக்க வழிபாடுகளில் , அவனோடு யாரையும் இணைவைப்பதை அல்லாஹ் நிச்சயமாக விரும்பமாட்டான்.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“நிச்சயமாக மஸ்ஜிதுகளெல்லாம் அல்லாஹ்வி(ன் வணக்கத்தி)ற்காகவே உள்ளன. ஆகவே (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (வணங்க, பெயர்கூறி) அழைக்காதீர்கள்” (72:18)

3. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்கு தகுதியானவன் என நம்பி, அவனது தூதருக்கு வழிபடுபவன், தனது நெருங்கிய குடும்பத்தினர்களாக இருப்பினும் சரி, அல்லாஹ், அவனது தூதரின் விரோதிகள் யாரையும் தனது காரிய பரிபாலராக ஆக்கிக் கொள்வது கூடாது.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(நபியே!) எந்த ஜனங்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) விசுவாசம் கொண்டுள்ளார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றவர்களை நேசிக்க மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய மூதாதையர்களாக இருந்த போதிலும், அல்லது தங்களுடைய சகோதரர்களாக இருந்த போதிலும், அல்லது தங்களுடைய பந்துக்களாக இருந்த போதிலும், அவர்களுடன் இவர்கள் உறவாடுவதை நீர் காண மாட்டீர். இத்தகையோர் தான் இவர்களுடைய இருதயங்களில் அல்லாஹ் விசுவாசத்தைப் பதியவைத்துத் தன்னுடைய சக்தியைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கிறான். சதா நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளில் இவர்களைப் புகுத்தி விடுவான். அவற்றில் என்றென்றும் இவர்கள் தங்கி விடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களும் அவனைப்பற்றி திருப்தியடைந்தார்கள். இவர்கள் தான் அல்லாஹ்வின் கூட்டத்தினர்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்கள் தாம் சித்தியடைந்தோர்கள் என்பதை (நபியே!) நீர் அறிந்து கொள்ளும்” (58:22)

அல்லாஹ்வை வணங்க உனக்கு அவன் நேர்வழி காட்டுவானாக!

(மில்லத்தே ஹனீபிய்யா) (1) என்ற இப்றாஹீம் (அலை) அவர்களுடைய தூய்மையான மார்க்கம் என்பது, அல்லாஹ் ஒருவனை மட்டும் தூய்மையாக, கலங்கமற வணங்குவதாகும். (வணக்க வழிபாட்டில் எதையும் அல்லாஹ் அல்லாதவருக்கு செய்தல் கூடாது) இதையே அல்லாஹ் உலக மனிதர்கள் அனைவர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். இதற்காகவே மனிதர்களையும் படைத்தான் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இதுபற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

“(எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் சிருஷ்டிக்கவில்லை” (51:56)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள ‘இறைவனை வணங்குவதற்காக’ என்பதின் பொருள் என்னவெனில், அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி, வணக்கத்தால் அவனை ஒருமைப் படுத்துவதாகும்.

‘தவ்ஹீத்’ என்னும் ஏக தெய்வக் கொள்கையே அல்லாஹ்வின் கட்டளைகளில் மிகப் பெரியதும் முக்கியமானதுமாகும். அதாவது, அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்கு தகுதியானவன், என்று வணக்கத்தால் அவனை ஒருமைப்படுத்துவதாகும். அல்லாஹ் விலக்கியவற்றில் மிகப் பெரியதென்னவெனில், ‘ஷிர்க்’ என்னும் இணை வைத்தலாகும். அதாவது அல்லாஹ்வுடன் அவன் அல்லாதவர்களை அழைத்து உதவி தேடுவதாகும்.

இதற்கு கீழ்காணும் இறைவசனம் ஆதாரமாகும்.

“அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள்” (4:36)

(1) உலகிலுள்ள எல்லா மதங்களையும் விட்டு விட்டு ஏக தெய்வக் கொள்கை என்னும் ‘தவ்ஹீதை’ மெய்ப்பிக்கின்ற இஸ்லாமிய மார்க்கத்திற்கே ‘மில்லத் ஹனீபிய்யா’ எனக் கூறப்படும்

இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் இஸ்லாத்தின் மூன்று அடிப்படை விஷயங்கள் என்ற நூலிலிருந்து. (தமிழாக்கம்: மௌலவி எஸ். கமாலுத்தீன்.)

இன்னும் வரும்
Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on இஸ்லாத்தின் மூன்று அடிப்படை விஷயங்கள்

“அர்-ரஹ்மானு அலல் அர்ஷிஸ்தவா”

(ரஹ்மான் அர்ஷில் அமைந்து விட்டான்)

இஸ்தவா என்ற சொல்லுக்கு ‘அல்உலுவ்வு’ என்னும் அல்லாஹ்வுக்குரிய உயர்வை உறுதிப்படுத்தக் கூடியதாக குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் ஸலபு(முன்னோர்)களின் கூற்றுகள் ஆதாரமாய் அமைந்துள்ளன. பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் அல்லாஹ் உயர்வான இடத்தில் அமைந்துள்ளான் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

“கலிமாதையிப், ஸலவாத்து போன்ற தூய வாக்கியங்கள் அவனளவில் உயர்கின்றன. நல்ல செயல்களை அவனே உயர்த்துகின்றான்” (35:10)

“ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமான அந்நாளில் மலக்குகளும் (ஜிப்ரீல் ஆகிய பரிசுத்த) ஆவியும் அவனிடத்தில் ஏறிச் செல்வார்கள்” (70:4)

“மிக்க மேலான உமது இறைவனின் திருநாமத்தை நீ புகழ்ந்து துதி செய்வீராக!” (87:1)

“அர்ரஹ்மான் அர்ஷில் அமைந்துள்ளான்” (20:5) உயர்ந்தான், அமைந்தான் என்று அர்த்தங் கொள்ளப்படும் ‘இஸ்தவா’ என்ற சொல்லைத் தாங்கியதாக, மேற்கண்டவாறு குர்ஆனில் ஏழு இடங்களில் வருவதைக் காணலாம். அனைத்து இடங்களிலும் ஒரே அர்த்தத்துடனேயே இது அமைந்துள்ளது. அந்த வசனங்களாவன: (7:54, 10:3, 13:2, 25:59, 32:4, 57:4)

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், புகாரியில் தௌஹீத் என்ற பாடத்தில் மேற்காட்டிய வசனங்களிலுள்ள ‘இஸ்தவா’ என்ற சொல்லுக்கு அபுல்ஆலியா (ரஹ்) முஜாஹித் (ரஹ்) ஆகியோர் மூலம் வந்த கருத்தென்பதாகக் கூறி ‘அலா’ (உயர்ந்தான்) என்றும் ‘இர்தபஅ’ (உயர்ந்தான்) என்றும் அர்த்தம் கொடுத்துள்ளார்கள். தப்ஸீர் தபரியில் ‘அலா’ என்றும் ‘இர்தபஅ’ என்றும் புகாரியில் வருவது போலவே அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தனது பிரியாவிடை ஹஜ்ஜின் போது அரபா நாளன்று பின்வருமாறு கூறினார்கள். ‘நான் உங்களுக்கு எத்தி வைக்க வேண்டியவற்றை எத்தி வைத்து விட்டேனா? என்று (ஸஹாபாக்களை நோக்கிக்) கேட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஆம்! எனப் பதிலளித்தார்கள்.

அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தனது விரலை வானத்தின் பக்கம் நீட்டி, அதனை மனிதர்கள் பக்கம் சுட்டிக்காட்டி ‘அல்லாஹ்வே! (நான் எத்தி வைத்ததற்கு) நீ சாட்சியாயிருப்பாயாக!’ என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

‘அல்லாஹ் ஒரு பதிவேட்டில் பதிந்து வைத்துள்ளான். அது அவனிடத்தில் அர்ஷில் இருக்கின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

‘நீங்கள் என்மீது நம்பிக்கை கொள்ள மாட்டீர்களா? நானோ வானத்தில் உள்ளவனுடைய நம்பிக்கைக்கு உரியவன். காலையிலும் மாலையிலும் வானத்திலிருந்து எனக்குச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன’ என்று நபி (ஸல்) அவர்கள் (தனது தோழர்களை நோக்கிக்) கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

‘நிச்சயமாக அல்லாஹ் தனது அர்ஷில் அமைந்துள்ளான் என்ற கருத்திலும், அவனுடைய ஸிபத்துகளைப் பற்றி ஸுன்னாவில் வந்துள்ளதை (வேறு அர்த்தம் கொடுக்காமல் வந்துள்ளவாறே) நம்புவதில் நாமும், தாபியீன்கள் அனைவரும் ஒத்த கருத்துள்ளவர்களாக இருக்கின்றோம்’ என்று இமாம் அப்துர்ரஹ்மான் அல் அவுஸாயீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: பைஹகீ (ஸஹீஹ்), பத்ஹுல் – பாரி.

‘நிச்சயமாக அல்லாஹ் தனது வானத்தில் அர்ஷின் மீது அமைந்துள்ளான். தனது படைப்புகளில் தான் விரும்பியவர்களிடம் நெருங்குகிறான்’ என்று இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்றோ, பூமியில் இருக்கிறான் என்றோ எனக்குத் தெரியாது என்று எவனாவது சொன்னால், அவன் காபிராவான். ஏனென்றால் ‘அர்-ரஹ்மானு அலல் அர்ஷிஸ்தவா’ (அர்-ரஹ்மான் அர்ஷில் அமைந்துள்ளான்) என்று அல்லாஹ் கூறியுள்ளான். அவனுடைய அர்ஷு ஏழு வானங்களுக்கு மேல் அமைந்துள்ளது’.

மேலும், அவன் ‘அல்லாஹ் அர்ஷின் மீது அமந்துள்ளான் என்ற கருத்தைப் பற்றி, ‘அந்த அர்ஷு வானத்தில் இருக்கின்றதா? அல்லது பூமியில் இருக்கின்றதா? என்பதை நானறியேன்’ என்று சொன்னாலும் காபிராவான். ஏனென்றால் இதன் மூலம் அல்லாஹ்வுடைய அர்ஷு உயர்ந்த இடத்தில் இருக்கின்றது, அல்லாஹ் உயர்ந்த இடத்தில் இருக்கின்றான் என்ற உண்மையை நிராகரிக்கின்றான்’.

‘அல்லாஹ் உயர்வான இடத்தில் இருப்பதை எவன் நிராகரிக்கின்றானோ, அவனும் காபிராவான். அல்லாஹ் மிகமிக உயர்வான இடத்திலேயே இருக்கின்றான். அவன் உயர்ந்த இடத்தில் இருக்கின்ற நிலையிலேயே அழைக்கப்படுகிறான். தாழ்ந்த இடத்தில் இருக்கும் நிலையில் அவன் அழைக்கப்பட மாட்டான்’. ஆதாரம்: ஷரஹுல் அகீததித் தஹாவியா பக்கம்: 322.

‘அல்லாஹ் அர்ஷில் அமைந்துள்ளான்’ என்பது பற்றி இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதனைக் கேட்டவர்களை நோக்கி ‘அர்ஷில் அமைந்து விட்டான் என்பது அறியக்கூடிய ஒன்றாகும்; அது எப்படி? என்பது தான் அறியமுடியாத ஒன்றாகும்; அர்ஷில் அமைந்து விட்டான் என்பதை நம்புவது வாஜிபாகும்; அது எப்படி? என்று (குர்ஆனிலும் ஸுன்னாவிலும் சொல்லப்பட்டதை விட அதிகமாகக்) கேள்வி கேட்பது பித்அத்தாகும்; இவ்வாறான கேள்வி கேட்பவனை உங்களுடைய இடத்திலிருந்து வெளியேற்றி விடுங்கள்’ என்று இமாமவர்கள் பதிலளித்தார்கள்.

‘இஸ்தவா’ என்ற சொல்லுக்கு ‘இஸ்தவுலா’ (அதிகாரம் செலுத்தினான், ஆட்சி செய்தான்) என்று விளக்கமளிப்பது தவறாகும். ஏனென்றால், ஸலபு (முன்னோர்)களின் வழிமுறையில் அவ்வாறான விளக்கம் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த வழி ஈடேற்றமுடையதும், சரியானதும், மிக்க ஞானம் நிரம்பியதுமாகும்.

இமாம் இப்னுல் கையிம் – அல்ஜவுஸிய்யி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘அல்லாஹ் யூதர்களை நோக்கி, ‘ஹித்ததுன்’ (மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறி அவனிடம் பிரார்த்திக்குமாறு கட்டளையிட்டான். அவர்கள் அதனைத் தமது விருப்பப்படி மாற்றி ‘ஹின்ததுன்’ (கோதுமை) என்று கூறினார்கள்.

அல்லாஹ் எமக்கு ‘இஸ்தவா அலல் அர்ஷி’ என்பதில் ‘இஸ்தவா’ என்று கற்றுத் தந்துள்ள சொல்லைத் தமது விருப்பப்படி கருத்துச் சொல்லுகின்றவர்கள், ‘இஸ்தவுலா’ என்று மாற்றிக் கூறியுள்ளார்கள். யூதர்கள் தமக்குக் கற்பிக்கப்பட்ட ஒரு சொல்லில் ஒரு ‘நூன்’ ஐ அதிகப் படுத்தியுள்ளது போலவே குர்ஆனுக்குச் சொந்தக் கருத்துக் கூறுகின்றவர்கள் ஒரு ‘லாம்’ ஐ அதிகப் படுத்தியுள்ளனர். மார்க்கத்தில் மாற்றம் கொண்டு வருவதில் இவர்கள் இரு சாராருக்கும் இடையில் எந்தளவு பொருத்தம் இருக்கின்றது? இப்னுல் கையிமுல் ஜவுஸிய்யி (ரஹ்) அவர்களுடைய இக்கூற்றை முஹம்மத் அமீன் சன்கீதீ அவர்கள் திரட்டித் தந்துள்ளார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on “அர்-ரஹ்மானு அலல் அர்ஷிஸ்தவா”