இஸ்தவா என்ற சொல்லுக்கு ‘அல்உலுவ்வு’ என்னும் அல்லாஹ்வுக்குரிய உயர்வை உறுதிப்படுத்தக் கூடியதாக குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் ஸலபு(முன்னோர்)களின் கூற்றுகள் ஆதாரமாய் அமைந்துள்ளன. பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் அல்லாஹ் உயர்வான இடத்தில் அமைந்துள்ளான் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
“கலிமாதையிப், ஸலவாத்து போன்ற தூய வாக்கியங்கள் அவனளவில் உயர்கின்றன. நல்ல செயல்களை அவனே உயர்த்துகின்றான்” (35:10)
“ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமான அந்நாளில் மலக்குகளும் (ஜிப்ரீல் ஆகிய பரிசுத்த) ஆவியும் அவனிடத்தில் ஏறிச் செல்வார்கள்” (70:4)
“மிக்க மேலான உமது இறைவனின் திருநாமத்தை நீ புகழ்ந்து துதி செய்வீராக!” (87:1)
“அர்ரஹ்மான் அர்ஷில் அமைந்துள்ளான்” (20:5) உயர்ந்தான், அமைந்தான் என்று அர்த்தங் கொள்ளப்படும் ‘இஸ்தவா’ என்ற சொல்லைத் தாங்கியதாக, மேற்கண்டவாறு குர்ஆனில் ஏழு இடங்களில் வருவதைக் காணலாம். அனைத்து இடங்களிலும் ஒரே அர்த்தத்துடனேயே இது அமைந்துள்ளது. அந்த வசனங்களாவன: (7:54, 10:3, 13:2, 25:59, 32:4, 57:4)
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், புகாரியில் தௌஹீத் என்ற பாடத்தில் மேற்காட்டிய வசனங்களிலுள்ள ‘இஸ்தவா’ என்ற சொல்லுக்கு அபுல்ஆலியா (ரஹ்) முஜாஹித் (ரஹ்) ஆகியோர் மூலம் வந்த கருத்தென்பதாகக் கூறி ‘அலா’ (உயர்ந்தான்) என்றும் ‘இர்தபஅ’ (உயர்ந்தான்) என்றும் அர்த்தம் கொடுத்துள்ளார்கள். தப்ஸீர் தபரியில் ‘அலா’ என்றும் ‘இர்தபஅ’ என்றும் புகாரியில் வருவது போலவே அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தனது பிரியாவிடை ஹஜ்ஜின் போது அரபா நாளன்று பின்வருமாறு கூறினார்கள். ‘நான் உங்களுக்கு எத்தி வைக்க வேண்டியவற்றை எத்தி வைத்து விட்டேனா? என்று (ஸஹாபாக்களை நோக்கிக்) கேட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஆம்! எனப் பதிலளித்தார்கள்.
அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தனது விரலை வானத்தின் பக்கம் நீட்டி, அதனை மனிதர்கள் பக்கம் சுட்டிக்காட்டி ‘அல்லாஹ்வே! (நான் எத்தி வைத்ததற்கு) நீ சாட்சியாயிருப்பாயாக!’ என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
‘அல்லாஹ் ஒரு பதிவேட்டில் பதிந்து வைத்துள்ளான். அது அவனிடத்தில் அர்ஷில் இருக்கின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
‘நீங்கள் என்மீது நம்பிக்கை கொள்ள மாட்டீர்களா? நானோ வானத்தில் உள்ளவனுடைய நம்பிக்கைக்கு உரியவன். காலையிலும் மாலையிலும் வானத்திலிருந்து எனக்குச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன’ என்று நபி (ஸல்) அவர்கள் (தனது தோழர்களை நோக்கிக்) கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
‘நிச்சயமாக அல்லாஹ் தனது அர்ஷில் அமைந்துள்ளான் என்ற கருத்திலும், அவனுடைய ஸிபத்துகளைப் பற்றி ஸுன்னாவில் வந்துள்ளதை (வேறு அர்த்தம் கொடுக்காமல் வந்துள்ளவாறே) நம்புவதில் நாமும், தாபியீன்கள் அனைவரும் ஒத்த கருத்துள்ளவர்களாக இருக்கின்றோம்’ என்று இமாம் அப்துர்ரஹ்மான் அல் அவுஸாயீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: பைஹகீ (ஸஹீஹ்), பத்ஹுல் – பாரி.
‘நிச்சயமாக அல்லாஹ் தனது வானத்தில் அர்ஷின் மீது அமைந்துள்ளான். தனது படைப்புகளில் தான் விரும்பியவர்களிடம் நெருங்குகிறான்’ என்று இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்றோ, பூமியில் இருக்கிறான் என்றோ எனக்குத் தெரியாது என்று எவனாவது சொன்னால், அவன் காபிராவான். ஏனென்றால் ‘அர்-ரஹ்மானு அலல் அர்ஷிஸ்தவா’ (அர்-ரஹ்மான் அர்ஷில் அமைந்துள்ளான்) என்று அல்லாஹ் கூறியுள்ளான். அவனுடைய அர்ஷு ஏழு வானங்களுக்கு மேல் அமைந்துள்ளது’.
மேலும், அவன் ‘அல்லாஹ் அர்ஷின் மீது அமந்துள்ளான் என்ற கருத்தைப் பற்றி, ‘அந்த அர்ஷு வானத்தில் இருக்கின்றதா? அல்லது பூமியில் இருக்கின்றதா? என்பதை நானறியேன்’ என்று சொன்னாலும் காபிராவான். ஏனென்றால் இதன் மூலம் அல்லாஹ்வுடைய அர்ஷு உயர்ந்த இடத்தில் இருக்கின்றது, அல்லாஹ் உயர்ந்த இடத்தில் இருக்கின்றான் என்ற உண்மையை நிராகரிக்கின்றான்’.
‘அல்லாஹ் உயர்வான இடத்தில் இருப்பதை எவன் நிராகரிக்கின்றானோ, அவனும் காபிராவான். அல்லாஹ் மிகமிக உயர்வான இடத்திலேயே இருக்கின்றான். அவன் உயர்ந்த இடத்தில் இருக்கின்ற நிலையிலேயே அழைக்கப்படுகிறான். தாழ்ந்த இடத்தில் இருக்கும் நிலையில் அவன் அழைக்கப்பட மாட்டான்’. ஆதாரம்: ஷரஹுல் அகீததித் தஹாவியா பக்கம்: 322.
‘அல்லாஹ் அர்ஷில் அமைந்துள்ளான்’ என்பது பற்றி இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதனைக் கேட்டவர்களை நோக்கி ‘அர்ஷில் அமைந்து விட்டான் என்பது அறியக்கூடிய ஒன்றாகும்; அது எப்படி? என்பது தான் அறியமுடியாத ஒன்றாகும்; அர்ஷில் அமைந்து விட்டான் என்பதை நம்புவது வாஜிபாகும்; அது எப்படி? என்று (குர்ஆனிலும் ஸுன்னாவிலும் சொல்லப்பட்டதை விட அதிகமாகக்) கேள்வி கேட்பது பித்அத்தாகும்; இவ்வாறான கேள்வி கேட்பவனை உங்களுடைய இடத்திலிருந்து வெளியேற்றி விடுங்கள்’ என்று இமாமவர்கள் பதிலளித்தார்கள்.
‘இஸ்தவா’ என்ற சொல்லுக்கு ‘இஸ்தவுலா’ (அதிகாரம் செலுத்தினான், ஆட்சி செய்தான்) என்று விளக்கமளிப்பது தவறாகும். ஏனென்றால், ஸலபு (முன்னோர்)களின் வழிமுறையில் அவ்வாறான விளக்கம் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த வழி ஈடேற்றமுடையதும், சரியானதும், மிக்க ஞானம் நிரம்பியதுமாகும்.
இமாம் இப்னுல் கையிம் – அல்ஜவுஸிய்யி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘அல்லாஹ் யூதர்களை நோக்கி, ‘ஹித்ததுன்’ (மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறி அவனிடம் பிரார்த்திக்குமாறு கட்டளையிட்டான். அவர்கள் அதனைத் தமது விருப்பப்படி மாற்றி ‘ஹின்ததுன்’ (கோதுமை) என்று கூறினார்கள்.
அல்லாஹ் எமக்கு ‘இஸ்தவா அலல் அர்ஷி’ என்பதில் ‘இஸ்தவா’ என்று கற்றுத் தந்துள்ள சொல்லைத் தமது விருப்பப்படி கருத்துச் சொல்லுகின்றவர்கள், ‘இஸ்தவுலா’ என்று மாற்றிக் கூறியுள்ளார்கள். யூதர்கள் தமக்குக் கற்பிக்கப்பட்ட ஒரு சொல்லில் ஒரு ‘நூன்’ ஐ அதிகப் படுத்தியுள்ளது போலவே குர்ஆனுக்குச் சொந்தக் கருத்துக் கூறுகின்றவர்கள் ஒரு ‘லாம்’ ஐ அதிகப் படுத்தியுள்ளனர். மார்க்கத்தில் மாற்றம் கொண்டு வருவதில் இவர்கள் இரு சாராருக்கும் இடையில் எந்தளவு பொருத்தம் இருக்கின்றது? இப்னுல் கையிமுல் ஜவுஸிய்யி (ரஹ்) அவர்களுடைய இக்கூற்றை முஹம்மத் அமீன் சன்கீதீ அவர்கள் திரட்டித் தந்துள்ளார்கள்.