தௌஹீதில் உலமாக்களின் நிலைபாடு

உலமாக்கள் (கற்றபடி செயல்படும் அறிஞர்கள்) நபிமார்களின் வாரிசு (அனந்திரக்காரர்)கள். நபிமார்கள் மக்களை முதலாவது அழைத்தது தௌஹீதின் பக்கமாகும். இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

“(உலகின் பல பாகங்களில் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பாருக்கும், நிச்சயமாக நாம் தூதரை (ரஸூலை) அனுப்பி இருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். வழி கெடுக்கும் ஷைத்தான்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். (என்று கூறினார்கள்) அல்லாஹ் நேரான வழியில் செலுத்தியோரும் அவர்களில் உண்டு; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (நபிமார்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எவ்வாறாயிற்று? என்பதைக் கவனித்துப் பாருங்கள்” (16:36)

இவ்வசனத்தில் ஷைத்தான்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ‘தாகூத்’ என்ற சொல்லின் அர்த்தமாவது: பொருத்தத்தை நாடி வணங்கப்படக்கூடிய அல்லாஹ் அல்லாத ஒவ்வொன்றுமாகும்.

இதனாலே தான் அல்லாஹ்வுடைய ரஸூல்மார்கள் தமது இஸ்லாமிய அழைப்புப் பணியை எதிலிருந்து ஆரம்பித்தனரோ, அதிலிருந்தே ஆரம்பிப்பது உலமாக்கள் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். எனவே, இந்த உலமாக்கள் தமது அழைப்புப் பணியை, எல்லா வணக்கங்களிலும் குறிப்பாக துஆக் கேட்பதில் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்பதின் பால் மக்களை அழைப்பது அவர்கள் மீது கடமையாகும்.

‘துஆ என்பது வணக்கமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

இன்று அதிகமான முஸ்லிம்கள் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து, ஷிர்க்கில் மூழ்கியுள்ளனர். இவர்களுடைய துர்பாக்கியத்துக்கு இதுவே காரணமாகும். இவர்களுக்கு முன்னிருந்த சமுதாயங்களின் துர்பாக்கிய நிலைக்கும் இதுவே காரணமாய் அமைந்தது.அவர்கள் தமது தேவைகளை அல்லாஹ் அல்லாத தமது அவ்லியாக்களிடம் வேண்டிப் பிரார்த்தனை செய்த காரணத்தினாலேயே அல்லாஹ் அவர்களை அழித்தான்.

தௌஹீதுடைய நிலைபாட்டிலும், ஷிர்க்குக்கெதிரான போராட்டத்திலும் உலமாக்கள் பல பிரிவுகளாகப் பிரிகின்றனர்.

முதலாவது பிரிவு: அவர்கள் தௌஹீதையும் அதன் அவசிய தன்மையையும் அதன் பிரிவுகளையும் விளங்கிக் கொண்டனர்; ஷிர்க்கையும் அதன் பிரிவுகளையும் விளங்கிக் கொண்டனர்; அவர்கள் தமது கடமையை செய்தனர்; தௌஹீதையும் ஷிர்க்கையும் மக்களுக்கு தெளிவாக விளங்க வைத்தனர்.

இவர்களுடைய அத்தாட்சிகள் அல்குர்ஆனும் ஸஹீஹான ஸுன்னாவுமாகும். நபிமர்களி குறுக்கிட நேர்ந்தது போலவே இந்த உலமாக்களுக்கும் மக்களால் சுமத்தப்படுகின்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் குறுக்கிட நேர்ந்தது. அவர்கள் பொறுமையாக இருந்தனர். ஆனால் சடைந்து பின்வாங்கவில்லை. பின்வரும் அல்லாஹ்வுடைய சொல் அவர்களை அடையாளம் காட்டுகின்றது.

“(நபியே!) அவர்கள் (உம்மைப்பற்றி குற்றம் குறைகள்) கூறுவதைச் சகித்துக் கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி விடும்”. (73:10)

மிக நீண்ட காலத்துக்கு முன்னரே லுக்மான் (அலை) அவர்கள் தமது மைந்தனுக்குச் சொன்னதென்னவென்று குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“என்னருமை மகனே! நீ தொழுகையைக் கடைபிடித்தொழுகு. நன்மையான காரியங்களை கொண்டு ஏவி, பாபமான காரியங்களிலிருந்து (மனிதர்களை) விலக்கி வை. உனகேற்படும் கஷ்டங்களை நீ பொருமையுடன் சகித்துக் கொள். செயல்களில் இது மிக்க வீரமுள்ளதாகும்” (31:17)

இரண்டாவது பிரிவு: இஸ்லாத்தின் அஸ்திவாரமான தௌஹீதின்பால் மக்களை அழைப்பதில் சில உலமாக்கள் அலட்சியமாக நடந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிம்களுக்கு அகிதாவை (அடிப்படைக் கொள்கையை) சரியான முறையில் சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக அவர்களை தொழுகையின்பால் அழைக்கவும், சட்டங்களையும், ஜிஹாதையும் பற்றிச் சொல்லிக் கொடுக்கவும் ஈடுபட்டனர். இவர்கள் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை செவி தாழ்த்தவில்லை போலும்.

“(முன்சொன்ன நபிமார்கள் யாவரும் சென்ற) இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தன் அடியார்களில் விரும்பியவர்களை அதில் செலுத்துகின்றான். அவர்கள் (இதனை தவிர்த்து, அல்லாஹ்வுக்கு) இணை வைத்தாலோ, அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் யாவும் அவர்களை விட்டு அழிந்து விடும்” (06:88)

இரண்டாவதாகக் கூறப்பட்ட மேற்சொன்ன உலமாக்கள், முந்தைய இறைதூதர்கள் செய்தது போலவே தமது பிரசாரத்தில் தௌஹீதை அதல்லாதவைகளை விட முற்படுத்தி இருப்பார்களென்றால் அவர்களுடைய பிரசாரம் வெற்றி பெற்றிருக்கும். அல்லாஹ் தனது நபிமார்கள், ரஸூல்மார்களுக்கு உதவி செய்தது போலவே இவர்களுக்கு உதவி செய்திருப்பான். அல்லாஹ் இதுபற்றி பின்வருமாறு கூறுகின்றான்.

“(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை (ப் பூமிக்கு) அதிபதிகளாக்கிய பிரகாரமே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதிகளாக்கி வைப்பதாகவும், அவன் திருப்தியடைந்த அவர்களுடைய மார்க்கத்தில் அவர்களை ஸ்திரப்படுத்தி வைப்பதாகவும், இவர்களுடைய பயத்தை அமைதியும் பாதுகாப்புமாக மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். (இவ்வாறு செய்த பின்னர்) அவர்கள் எனக்கு யாதொன்றையும் இணையாக்காது என்னையே வணங்கவும். இதன் பின்னர் உங்களில் எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாபிகள்தாம்” (24:55)

‘அல்லாஹ்வின் உதவி கிடைப்பதற்குரிய அடிப்படை நிபந்தனை தௌஹீதாகவே இருக்க வேண்டும்’ என்பதை மேலேயுள்ள ஆதாரங்கள் உணர்த்தக் கூடியதாக இருக்கின்றன.

மூன்றாவது பிரிவு:- இன்னும் சில உலமாக்கள் மக்களுடைய எதிர்ப்புக்குப் பயந்தவர்களாகவும் தமது தொழில் அல்லது அந்தஸ்து பறிக்கப்படும் என்று பயந்தவர்களாகவும் தௌஹீதுப் பிரசாரத்தையும் ஷிர்க்குக்கெதிரான போராட்டத்தையும் கைவிட்டு விட்டார்கள். மக்களுக்கு எத்திவைக்குமாறு அல்லாஹ் சொன்னவற்றை இவர்கள் மறைத்து விட்டார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவது பின்வருமாறு அமைந்துள்ளது.

“நேர்வழியையும் தெளிவான அத்தாட்சியையும் நாம் அருளி, அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்தி (க் கூறிய) பின்னும், எவர்கள் அவற்றை மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான்; (மற்றும்) சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர்” (2:159)

உண்மையான இஸ்லாமியப் பிரசாரகர் (தாஈ)களைப் பற்றி பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்.

“(முன்னைய நபிமார்களாகிய) அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒரு)வனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே நபியே! நீரும் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். இதைப்பற்றி அவர்களிடம் கேள்வி) கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்” (33:39)

அறிவை மறைப்பவர்களின் நிலை மறுமையில் எவ்வாறிருக்கும் என்பது பற்றி அல்லாஹ்வுடைய ரஸூல் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

‘எவன் (தன்னிடமுள்ள) ஓர் அறிவை மறைக்கின்றானோ, அவனுக்கு அல்லாஹ் (மறுமையில்) நெருப்பினாலான கடிவாளத்தைப் பூட்டுவான்’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

நான்காவது பிரிவு:- இன்னும் சில உலமாக்களும், ஷைகு (தலைவர்)களும் இருக்கின்றனர். அவர்கள் தௌஹீதுப் பிரசாரத்தையும், அல்லாஹ்விடம் மட்டுமே தேவைகளைப் பெற்றுக் கொள்ள பிரார்த்திக்க வேண்டுமென்று சொல்கின்றவர்களையும் எதிர்க்கின்றனர். அல்லாஹ் அல்லாத நபிமார்கள் அவ்லியாக்கள் ஆகியோரிடம் கேட்பதை ஆமோதிக்கின்றனர்.

அல்லாஹ் அல்லாதவர்களை உதவிக்கு அழைப்பது பற்றி எச்சரிக்கையாக வந்துள்ள குர்ஆன் வசனங்கள் (கலிமாச் சொல்லாத) முஷ்ரிக்குகளுக்கு உரியது என்று கூறுகின்றனர். முஸ்லிம்கள் எவரும் முஷ்ரிக்குகளாக இருக்க முடியாது என்றும் கூறுகின்றனர். இவர்கள் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தைச் செவிதாழ்த்தவில்லை போலும்.

“எவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, தங்கள் ஈமானுடன் யாதொரு ‘ளுல்ம்’ஐயும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக அபயமுண்டு; அவர்கள் தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்” (6:82)

மேற்காட்டிய மறைவசனத்திலுள்ள ‘ளுல்மு’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘ஷிர்க்கு’ என்றே பொருள் உண்டு. பின்வரும் இறைவசனம் அதற்கு ஆதாரமாய் அமைகின்றது.

“நிச்சயமாக இணை வைப்பது மகத்தான ஒரு ‘ளுல்மு’ (அக்கிரமமாகும்)” (31:13)

மேற்காட்டிய வசனத்துக்கு அமைய இக்காலத்தில் அதிகமான இஸ்லாமிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் ஷிர்க்கில் வீழ்ந்து விடுகின்றனர். இவற்றை ஆகுமாகின்றவர்கள், அல்லாஹ் அல்லாதவர்களை உதவிக்கு அழைப்பதையும் (பெரிய மனிதர்கள் என்று மக்கள் கருதுகின்றவர்களை) பள்ளிவாசலினுள் அடக்கஞ் செய்வதையும் கப்றுகளைச் சூழ வலம் வருவதையும் அவ்லியாக்களுக்காக நேர்ச்சை செய்வதையும் இதல்லாத இன்னும் பல பித்அத்துகள், தடுக்கப்பட்ட கருமங்கள் போன்றவற்றையும் ஆகுமாக்குகின்றனர். இத்தகையோரைப் பற்றி நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது.

‘என்னுடைய உம்மத்தின் மீது நான் பயப்படுவதெல்லாம் (மக்களை) வழி கெடுக்கக்கூடிய தலைவர்களைத்தான்’ ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

சில காலத்துக்கு முன்னிருந்த எகிப்து அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவரிடம் ‘கப்றை நோக்கித் தொழுவது ஆகுமா?’ என்று கேள்வி கேட்டபோது, ஏன் கூடாது? மதினாவில் மஸ்ஜிதுந்நபவியில் தொழுகின்ற, மக்கள் நபி (ஸல்) அவர்களுடைய கப்றை நோக்கித் தொழுவதில்லையா? என்று பதிலுக்காகக் கேளியொன்றைக் கேட்டுப் பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள் கப்றை நோக்கித் தொழுவதைத் தடை செய்துள்ளார்கள். அவர்கள் அடக்கஞ் செய்யப்பட்டது பள்ளிவாசலில் அல்ல. ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டின் ஒரு பகுதியில் என்பதை அவ்வறிஞர் மறந்து விட்டார் போலும். நபியவர்களுடைய துஆக்களில் ஒரு துஆ பின்வருமாறு அமைந்துள்ளது. (கண்மூடித்தனமாக இஸ்லாமிய விளக்கமளிக்கும் அறிஞர்களுக்கு இந்த துஆ ஒரு எச்சரிக்கையாகவும் நல்லுபதேசமாகவும் அமையட்டும்).

‘அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின்-இல்மில்லா யன்பஉ’ (அல்லாஹ்வே! பயனற்ற கல்வியிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்). ஆதாரம்: முஸ்லிம்.

(அதாவது அவ்வாறான கல்வியை நான் கற்கவும் மாட்டேன்; பிறருக்குக் கற்பிக்கவும் மாட்டேன்; அதனைக் கொண்டு செயல்படவும் மாட்டேன்; எனது பண்பாடுகளில் அது வெளிவராதிருக்க வேண்டும் என்றே மேற்கண்ட துஆ பொருள்படும்.)

மனிதர்கள் ஷைகுகளின் சொல்லை நம்பி, அவர்களுக்கு வழிபடுகிறார்கள். இவர்கள் பின்வரும் நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கு மாறு செய்கின்றவர்களாகவே இருக்கின்றனர்.

‘படைத்தவனுக்கு மாறு செய்வதிலே படைக்கப்பட்டவனுக்கு வழிபடுவதென்பது கிடையாது’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

இம்மக்கள் தமது பிழையான வழிபாட்டைக் குறித்து மறுமையில் கவலைப்படுவார்கள். ஆனால், அந்தக் கவலையால் எவ்விதப் பயனுமில்லை. காஃபிர்களையும் அவர்களுடைய வழியில் நடப்பவர்களையும் பற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்.

“அவர்களுடைய முகங்களைப் புரட்டிப் புரட்டி நெருப்பில் பொசுக்கும் நாளில் எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டாமா? (அவனுடைய) தூதருக்கும் வழிபட்டிருக்க வேண்டாமா? என்று கதறுவார்கள். என்றி எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்குமே வழிபட்டோம். அவர்கள் எங்களைத் தப்பான வழியில் செலுத்தி விட்டார்கள். (ஆகவே) ‘எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இருமடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்கள் மீது மகத்தான சாபத்தை இடு’ என்று கூறுவார்கள்” (33: 66,67,68)

இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் தனது தபிஸீரில் மேற்காட்டிய வசனங்களுக்குப் பின்வருமாறு விளக்கமளித்து உள்ளார்கள்.

அதாவது, அல்லாஹ்வே! தலைவர்களுக்கும், பெரியார்களுக்கும், மஷாயிகுகளுக்கும் வழிபட்டு உனது ரஸூலுக்கு மாறு செய்து விட்டோம்; நாங்கள் நம்பியவர்களிடம் ஏதாவது சக்திகள் இருக்குமென உறுதியாக நம்பினோம்; (ஏமாற்றமடைந்தோம்;) அவர்களிடமோ எதுவுமே இல்லை என்பது இப்பொழுது தெளிவாகி விட்டது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதில் உலமாக்களின் நிலைபாடு

வேத எச்சரிக்கை!


2:176. நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.

4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, ‘நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!’ என்று கூறி, ‘ராயினா’ என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் ‘நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிபட்டோம்;’ (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும் மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும் – ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களை சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.

4:47. வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பி விடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) ‘அஸ்ஹாபுஸ் ஸப்து’ என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப்பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்பட்டே தீரும்.

6:39. நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.

16:105. நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்.

25:30. ‘என்னுடைய இறைவா! நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விட்டார்கள்’ என்று (நம்) தூதர் கூறுவார்.

25:31. மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவி புரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.

25:32. இன்னும்: ‘இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை’ என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.

25:33. அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும் (அதை விடவும்) உண்மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.

25:34. எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் பெரிதும் வழிகெட்டவர்கள்.

86:21. (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.

86:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூலில் – பதிவாகி பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on வேத எச்சரிக்கை!

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும்

உரிமையை அழிப்பதற்கோ, பொய்யைச் செல்லுபடியாக்குவதற்கோ – மக்களிடையே தீர்ப்புச் சொல்லக்கூடிய நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பது குற்றமாகும். காரணம் இது தீர்ப்பில் நேர்மை தவறுவதற்கும் நியாயம் கிடைக்க வேண்டியவர்களுக்கு அநீதி இழைப்பதற்கும் இட்டுச் செல்லும். மேலும் இது குழப்பத்தை உருவாக்கும். அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதமான முறையில் தின்பதற்காக – அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் – அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளைஅணுகாதீர்கள்” (2:188)

(ஒரு விவகாரத்தில்) தீர்ப்புப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:அஹ்மத்.

ஆனால் நீதியை அடைவதோ அநீதியைத் தடுப்பதோ லஞ்சம் கொடுக்காமல் சாத்தியம் ஆகாதெனில் இத்தகைய (நிர்பந்தமான) சூழ்நிலையில் லஞ்சம் கொடுப்பவன் இந்த எச்சரிக்கையில் சேரமாட்டான்.

இந்தக் காலத்தில் லஞ்சம், பெருமளவு பெருகி விட்டது. எந்த அளவுக்கு எனில் சில ஊழியர்களுக்கு அவர்களுடைய ஊதியத்தை விடக் கூடுதல் வருமானமாக லஞ்சம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல பல கம்பெனிகளுடைய வரவு, செலவு கணக்கு (பட்ஜெட்)களில் பல்வேறு (மறைமுகமான) பெயர்களில் லஞ்சம் கொடுக்கல், வாங்கல்கள் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலான கொடுக்கல், வாங்கல்கள் எப்படி மாறி விட்டன என்றால் அவை ஆரம்பமாவதும் லஞ்சம் மூலமாகத்தான் முடிவதும் லஞ்சம் மூலமாகத்தான். அதனால் ஏழைகள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இதனால் (மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட) பல்வேறு பொறுப்புகள் பாழாகி விட்டன. தொழிலாளிகள் கெட்டுப் போவதற்கும் அதனால் முதலாளிகள் நஷ்டம் அடைவதற்கும் இதுதான் காரணம். அது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பவருக்குத் தான் வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுகிறது. எவர் லஞ்சம் கொடுக்கவில்லையோ அவருடைய வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுவதில்லை. அல்லது அவருடைய வேலை தாமதப்படுத்தப்படுகிறது.

லஞ்சம் கொடுத்தவர்கள் லஞ்சம் கொடுக்காதவர்களுக்குப் பிறகு வந்தும் அவர்களுக்கு வெகு முன்பாகவே வேலையை முடித்து விட்டுச் சென்று விடுகின்றனர். முதலாளிகளுக்குச் சேரவேண்டிய பணங்கள் லஞ்சம் காரணமாக முகவர்களின் பாக்கெட்டுகளில் சேர்ந்து விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் இந்தத் தீமையிலும் இது சம்பந்தபட்டவற்றிலும் பங்கு பெறுபவர்களை அல்லாஹ் தனது அருளை விட்டும் தூரமாக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் சபித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்னுமாஜா)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும்

தௌஹீதின் எதிரிகள்

“இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் விரோதிகளாக ஆக்கியிருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான (பொய்ச்) செய்திகளை, (க் காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். (6:112)

ஜின்னிலுள்ள ஷைத்தான்கள், மனிதர்களிலுள்ள ஷைத்தான்களை வழிகேடு, தீமை, பொய்யான செய்திகள் போன்றவற்றைக் கொண்டு, அவர்களுடைய உள்ளங்களில் சந்தேகங்களை ஏற்படுத்தி, அவர்களை வழிகெடச் செய்கிறார்கள் என்பதையே மேலேயுள்ள வசனம் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றது.

“மறுமையை நம்பாதோரின் இருதயங்கள் அதற்கு (அந்த வீணான செய்திகளுக்கு)ச் செவிசாய்த்து, அதனை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் (தீய) கருமங்களை இவர்களும் செய்வதற்காகவுமே (இவ்வாறு இவர்களை அவர்கள் மயக்கி வந்தனர்)” (6:113)

நபிமார்கள் தமது சமூகங்களுக்கு அழைப்பு விடுத்த கலிமதுத் தௌஹீதை விட்டு, அம்மக்களை, மேற்காட்டிய வசனங்களில் கூறப்பட்ட வழிகேடர்கள் வழிகெடுத்துக் கொண்டிருந்தார்கள். நபிமார்களுக்கும், தௌஹீதைப் போதிப்பவர்களுக்கும் இவ்வாறான எதிரிகளை ஏற்படுத்துவது அல்லாஹ்வின் ஹிக்மாவிலு (ஞானத்திலு)ள்ளதாகும்.

ஏனென்றால் இஸ்லாமியப் பிரசாரம் தௌஹீதின் மீதுதான் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஆச்சரியம் என்னவெனில் தௌஹீதின்பால் மக்களை அழைப்பதை, மக்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதாக சில ‘தாஇகள்’ (இஸ்லாமிய அழைப்பாளர்கள்) கருதுகின்றனர். தௌஹீதுதான் பிரிந்த நிலையிலிருக்கும் மக்களை ஒன்று படுத்துவதாய் இருக்கின்றது. ‘தௌஹீத்’ என்று கூறப்படும் அந்தப்பதமே அதற்குச் சான்றாய் அமைந்துள்ளது.

முஷ்ரிக்குகளோ, ‘படைத்தவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதை நம்புதல்’ என்ற கருத்துடனுள்ள ‘தௌஹீதுர் ருபூபிய்யா’வை அறிந்திருந்தனர். அல்லாஹ்தான் அவர்களைப் படைத்தான் என்பதை ஏற்றிருந்தனர். அவர்கள் நிராகரித்ததெல்லாம் ‘அல்லாஹ் ஒருவனை மட்டுமே அழைக்கக்கூடிய இரட்சித்தல் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமேயாகும்’ என்று கருத்துப்படும் தௌஹீதுல் உலூஹிய்யாவைத்தான்.

தமக்குப் பாதுகாப்பளிப்பவர்கள் என்று தவறாக நம்பிக்கைக் கொண்டிருந்த தமது அவ்லியாக் (பாதுகாவலர்)களைப் பிரார்த்தனை செய்து அழைப்பதை அவர்கள் கைவிடவில்லை. வணங்குவதிலும் வழிபடுவதிலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தக் கூடியதாக அல்லாஹ்வை மட்டுமே அழைக்குமாறு நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை அழைத்தபோது அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பது பற்றி பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

“என்ன! இவர் (முஹம்மத் (ஸல்) அவர்கள் நாங்கள் வணங்கும்) தெய்வங்கள் யாவற்றையும் (நிராகரித்து விட்டு, வணக்கத்துக்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கி விட்டாரா? உண்மையாகவே, இது ஓர் ஆச்சர்யமான விஷயம்தான்” (38:05)

நபி (ஸல்) அவர்களுடைய காலத்து நிலையை மேற்கண்டவாறு அல்லாஹ் கூறிவிட்டு, அவர்களுக்கு முன்னாலிருந்த சமுதாயங்களைப் பற்றி இன்வருமாறு கூறுகின்றான்.

“இவ்வாறே அவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (அவர்களிடம்) எந்தத்தூதர் வந்த போதிலும் (அவரைச்) ‘சூனியக்காரர்’ அல்லது ‘பைத்தியக்காரர்’ என்று அவர்கள் கூறாமல் இருக்கவில்லை” (51:52)

‘அல்லாஹ் ஒருவனை மட்டும் அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும்’ என்று கூறுவதை முஷ்ரிக்குகள் செவிதாழ்த்தினால் அவர்களுடைய உள்ளங்கள் சுருங்கி விடும்; விரண்டோடுவார்கள்; நிராகரித்துப் புறக்கணிப்பார்கள்; இவை இணை வைப்பவர்களின் பண்புகளாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் அவர்களுடைய பண்புகளைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறான்.

“தனித்தோனாகிய அல்லாஹ்(வின் பெயரை) மட்டும் கூறப்பட்டால், மறுமையை நம்பாதவர்களின் இருதயங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. (எனினும்,) அவனல்லாதவை(களின் பெயர்)கள் கூறப்பட்டாலோ, சந்தோசப்பட்டு (அவர்களுடைய இருதயங்கள் விரிந்து மலர்ந்து) விடுகின்றன” (39:45)

தௌஹீதைப் புறக்கணிக்கக்கூடிய, இணைவைப்பவர்களைப் பற்றி, அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

“(ஷிர்க் வைத்த குற்றத்துக்காக மறுமையில் தண்டனை பெறுபவர்களை நோக்கி அல்லாஹ்,) இ(த் தண்டனை கிடைத்த)தன் காரணமாவது: ‘அல்லாஹ் ஒருவன் தான் என்று கூறப்பட்டபோது, அதனை நீங்கள் நிராகரித்தீர்கள். அவனுக்கு (எவரையும்) இணையாக்கப்பட்ட போது (அதனை) நம்பினீர்கள். ஆதலால், (இன்று உங்களுக்குக் கிடைத்திருக்கும்) இத்தீர்ப்பு மிகப் பெரியவனும் மேலானவனுமான அல்லாஹ்வுக்கே உரியது’ என்று கூறுவான்” (4:12)

மேற்காட்டிய வசனங்கள் காஃபிர்களுடைய விஷயத்தில் அமைந்தனவாயிருந்தாலும் தாம் இஸ்லாத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, மேற்சொன்ன காஃபிர்களுடைய பண்புகளுடன் இருப்போருக்கும் அவை பொருத்தம் உடையதாக இருக்கும். இவர்கள் தௌஹீத் பிரசாரகர்களுடன் போர் தொடுத்து அவர்கள் மீது பல அவதூறுகளைச் சொல்லிக் கொண்டு, வெறுக்கத்தக்க பல மோசமான பெயர்களைச் சூட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வெதிரிகள் தௌஹீதைப் பிரசாரம் செய்வதற்கென்றே அனுப்பப்பட்ட ரஸூல்மார்களுடைய போதனைகளை மக்களுக்கு வெறுப்பூட்டி, அதனை விட்டு அவர்களைத் தடுக்கின்றனர்.

அல்லாஹ்விடம் மட்டுமே வேண்டப்படுகின்ற துஆவை இவர்கள் செவி தாழ்த்தினால் இவர்களிடம் உள்ளச்சம் இருக்காது. ரஸூலுல்லாஹ்விடமோ, அல்லது அவ்லியாக்களிடமோ உதவி வேண்டிப் பிரார்த்திக்கப்பட்டால் அதனை உள்ளச்சத்துடன் உயர்வாக கருதுவார்கள். இவர்களது செயல் எந்தளவு கெட்டதாகவுள்ளது?

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதின் எதிரிகள்

வழி கெடுத்த தலைவர்களும் வாழாவிருந்த மனிதர்களும்

33:67. எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்’ என்றும் அவர்கள் கூறுவார்கள்.

2:166. (தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களுக்கிடையே இருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டு விடும்.

2:167. (அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: ‘நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்’. இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெரும் துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான்; அன்றியும் அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகின்றவர்களும் அல்லர்.

33:68. ‘எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களை பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக’ (என்று) கூறுவர்)

33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள்.

9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப் பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனையன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.

7:37. எவன் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனைச் செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கின்றானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக் கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) ‘அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?’ எனக் கேட்பார்கள்; (அதற்கு) ‘அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்’ என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.

7:38. (அல்லாஹ்) கூறுவான்: ‘ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்’. ஒவ்வொரு கூட்டத்தாரும் நரகத்தில் நுழையும் போதெல்லாம், (தங்களுக்கு முன் அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தை அடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப் பற்றி, ‘எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையைக் கொடு’ என்று சொல்வார்கள். அவன் (அல்லாஹ்) கூறுவான்: உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு – ஆனால் நீங்கள் அதனை அறியமாட்டீர்கள்.

அல்குர்ஆன்
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on வழி கெடுத்த தலைவர்களும் வாழாவிருந்த மனிதர்களும்

திருடுதல்

அல்லாஹ் கூறுகிறான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்” (5:38)

திருட்டுக் குற்றங்களில் மிகப்பெரும் குற்றம் பழமையான அல்லாஹ்வின் ஆலயத்தை ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்களிடம் திருடுவதாகும். இத்தகைய திருடர்கள் இப்புவியின் மிகச்சிறந்த இடமான மஸ்ஜிதுல் ஹராமிலும் அதைச் சுற்றிய இடங்களிலும் கூட அல்லாஹ்வின் வரம்புகளுக்கு எந்த மதிப்பும் அளிப்பதில்லை. சூரிய கிரகணத் தொழுகை பற்றிய ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘நரகம் என்னிடம் கொண்டு வரப்பட்டது. எப்போதெனில் அதன் ஜுவாலை என்மீது பட்டு விடுமோ என அஞ்சி நான் (தொழுகையில்) சற்று பின்னால் நகர்ந்ததை நீங்கள் பார்த்த சமயத்தில் (கொண்டு வரப்பட்டது).

அப்போது அங்குசத்தை வைத்திருக்கும் ஒருவன் நரகில் தன்னுடைய குடலை இழுத்துச் செல்வதைக் கண்டேன். தன்னுடைய அங்குசத்தைக் கொண்டு ஹாஜிகளிடம் திருடியவன் தான் அவன். ஹாஜிக்கு இது தெரிந்து விட்டால், உங்கள் சாமான் என்னுடைய அங்குசத்தில் தெரியாமல் கொழுவிக் கொண்டது என்று (சமாதானம்) கூறிவிடுவான். ஹாஜிக்கு இது தெரியாவிட்டால் சாமானை எடுத்துச் சென்று விடுவான். (முஸ்லிம்)

பொதுச் சொத்தைத் திருடுவது மோசமான திருட்டாகும். இதைச் செய்பவர்களில் சிலர், மற்றவர்கள் செய்வது போலவே நாங்களும் செய்கிறோம் என்று கூறுகின்றார்கள். இது எல்லா மக்களிடமிருந்து திருடுவது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால் பொதுச் சொத்து என்பது மக்கள் எல்லோருக்கும் சொந்தமானது. இறையச்சம் இல்லாதவர்களுடைய இத்தகைய செயலை மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதைக் காட்டி நியாயப்படுத்த முடியாது.

இன்னும் சிலர் காஃபிர்களுடைய சொத்தை – அவர்கள் காஃபிர்களாக இருக்கிறார்கள் என்பதை ஆதாரமாகக் கொண்டு – திருடுகின்றனர். இதுவும் சரியல்ல. ஏனெனில் எந்தக் காஃபிர்கள் முஸ்லிம்களுடன் போர் தொடுக்கின்றார்களோ அவர்களுடைய சொத்துக்கள் தான் முஸ்லிம்களுக்கு ஆகுமானதே தவிர அனைத்து காஃபிர்களுடைய சொத்துக்கள், நிறுவனங்கள், கம்பெனிகள் ஆகுமானவை அல்ல.

திருடக்கூடிய வழிமுறைகளில் சில: அடுத்தவர்களுடைய சட்டைப் பையில் அவர்களுக்குத் தெரியாமல் கையைப் போட்டு (பிட்பாக்கெட் அடித்து) விடுகின்றனர். சிலர் அடுத்தவர்களின் வீட்டில் அவர்களை சந்திக்கும் நோக்கில் நுழைந்து திருடி விடுகின்றனர். இன்னும் சிலர் விருந்தாளிகளுடைய பைகளில் திருடி விடுகின்றனர். வேறுசிலர் வியாபாரஸ்தலங்களில் நுழைந்து அங்குள்ள பொருட்களை தம்முடைய சட்டைப்பைகளில் அல்லது ஆடைகளில் மறைத்து விடுகின்றனர். சில பெண்கள் கூட இவ்வாறு செய்கின்றனர்.

இன்னும் சிலர் குறைவான அல்லது அற்பமான பொருட்களைத் திருடுவதை இலேசாகக் கருதுகின்றனர். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! (ஒரு) முட்டையைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும் எனக் கூறியுள்ளார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.

ஒருவன் ஒரு பொருளைத் திருடி விட்டால் அல்லாஹ்விடம் அவன் பாவமன்னிப்புக் கோருவதும் அப்பொருளை உரியவரிடம் திருப்பிக் கொடுப்பதும் அவசியமாகும். பகிரங்கமாக அவரிடம் கொடுத்தாலும் சரி அல்லது தனிப்பட்ட முறையில் இரகசியமாக அவரை சந்தித்துக் கொடுத்தாலும் சரி. ஆனால் உரியவரிடமோ அல்லது அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய வாரிசுகளிடமோ அப்பொருளை ஒப்படைக்க முடியவில்லையெனில், அவரைத் தேடுவதில் மிகுந்த முயற்சி எடுத்தும் இயலவில்லையெனில் உரியவர் பேரில் அப்பொருளை தர்மம் செய்து விட வேண்டும். அதற்கான கூலி உரியவருக்குக் கிடைக்க எண்ணிக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on திருடுதல்

முரண்படும் விஷயம்!

22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

22:66. இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

22:67. (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்.

22:68. (நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக.

22:69. நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாமநாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.”

22:70. நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது.

22:71. மேலும்: இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை.

22:72. இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடுரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது தான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

அல் குர்ஆன்- ஸூரா அல் ஹஜ்.
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on முரண்படும் விஷயம்!

தௌஹீதுடைய பயன்களிற் சில……..

ஒரு தனி மனிதனிடத்திலோ, அல்லது ஒரு ஜமாஅத்திடத்திலோ ‘தௌஹீத்’ உறுதிப் படுத்தப்பட்டு விட்டால், அப்பொழுது மிகச் சிறந்த சில கனிவர்க்கங்கள் அவர்களுக்குக் கிடைப்பது நிச்சயமாகி விடும். அவற்றில் சில……

1. மனிதன், அல்லாஹ் அல்லாதவர்களுக்கும், தாமே படைக்கப் பட்டிருக்கையில் எதனையும் படைக்கச் சக்தியற்ற படைப்புகளுக்கும் வணக்கம் செலுத்துவதிலிருந்தும், அவர்களுக்கு பணிந்து நடப்பதிலிருந்தும் அவனை விடுவிப்பதாகும். இது மேற்கூறப்பட்டவற்றில் முதலாவதாகும்.

அல்லாஹ் அல்லாத, வணங்கப்படுகின்றவர்கள் தமக்குத்தாமே நன்மையோ, தீமையோ செய்துகொள்ளச் சக்தியற்றவர்கள். மரணத்தை ஏற்படுத்தவோ, வாழ்க்கையை கொடுக்கவோ, அல்லது மரணித்தவனை எழுப்பவோ அவர்கள் சக்தியற்றவர்கள்.

தௌஹீத் என்றால், அல்லாஹ்வைத் தவிர வேறெந்த வஸ்துவுக்கும் அடிபணிவதிலிருந்து மனிதனைக் காப்பதும், அவனை, அனாச்சாரங்கள், சந்தேகங்கள், மனோ இச்சைக்கு வழிபடுதல், அலட்சியமான போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல், ஜோதிடர்களையும், எஜமானர்களையும் இரட்சகர்களாக ஆக்கிக் கொள்ளல், அல்லாஹ்வுக்கு வழிபடுவதை விட அதிகமாக இவர்களுக்கு வழிபடுதல் போன்றவற்றிலிருந்தும், இவைபோன்ற இன்னும் பல நடை முறைகளிலிருந்தும் பாதுகாப்பதாகும்.

இதற்காகத்தான் ஷிர்க்கை நிலைநாட்டிக் கொண்டிருந்த தலைவர்களும், அறியாமைக்கால வம்பர்களும் பொதுவாக நபிமார்களுடைய பிரசாரத்தை, குறிப்பாக நபி (ஸல்) அவர்களூடைய பிரசாரத்தை எதிர்த்தனர். ஏனென்றால் அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ்வுடைய அர்த்தத்தை அறிந்தவர்களாகவே இருந்தனர்.

இந்தக்கலிமா மனிதனுக்குச் சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் கொடுங்கோலாட்சியையும், பொய்யான தலைவர்களையும் வீழ்த்தி, ‘அல்லாஹ்வுக்கன்றி வேறெவருக்கும் தலை வணங்க மாட்டோம்’ என்பதில் உறுதியான மூமின்களுக்கு உயர்வைத் தேடிக் கொடுக்கக் கூடியது என்பதையும் இஸ்லாத்தின் அவ்வெதிரிகள் அறிந்திருந்தனர்.

2. மனிதனை நீதமாக அமைத்துவிடல்: தௌஹீத், மனிதனை நீதியான முறையில் நடப்பதற்கு உதவுகின்றது. ‘இரகசியத்திலும் வெளிப்படையாகவும் அவனுக்கு ஒரே ஒரு இறைவன் தான் உண்டு’ என்று அது தனது நோக்கத்தில் ஒரு நிலையான தன்மையைக் காட்டுகின்றது.

வணக்கத்துக்கு உரியவைகளும், பல கடவுள்களும் ஒரு முஷ்ரிக்குடைய உள்ளத்தைப் பல பிரிவுகளாகக் கூறுபோட்டுக் கொண்டதற்கு மாறாக, இந்தத் தௌஹீத் இரகசியத்திலும், பகிரங்கத்திலும் ஒரே இறைவனின் பக்கம் மனிதனை அழைக்கின்றது. அந்த முஷ்ரிக் ஒரு விடுத்தம் உயிருள்ளவர்களிடம் கேட்கிறான்; இன்னொரு விடுத்தம் இறந்தவர்களிடம் கேட்கிறான். யூஸுப் (அலை) அவர்கள் கூறியதை இங்கு கூறுவது பொருத்தமாகும். யூஸுப் (அலை) அவர்கள் சிறைக் கூடத்திலிருந்த போது, அங்கு தன்னுடனிருந்த இருவரை நோக்கி:-

“சிறைக் கூடத்திலிருக்கும் என்னிரு தோழர்களே! (யாதொரு சக்தியுமற்ற) வெவ்வேறுபட்ட தெய்வங்கள் மேலா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற (ஒரே இறைவனான) அல்லாஹ் ஒருவனே மேலா?” (12:39)

ஒரு மூமின் ஒரேயொரு இறைவனை மட்டுமே வணங்குகிறான். ‘அவனை திருப்திப் படுத்துவது எது? கோபப் படுத்துவது எது?’ என்பதையும் அவன் அறிகிறான். அவனைத் திருப்திப் படுத்துவதுடன் இந்த மூமின் நின்று கொள்கிறான். இதன் மூலம் இவனுடைய உள்ளம் அமைதி பெறுகின்றது.

முஷ்ரிக் என்பவனோ, அதிகமான கடவுள்களை வணங்குகிறான். வலது பக்கமாக ஒரு தெய்வத்தை எடுத்துக் கொள்கிறான்; இடது பக்கமாக மற்றொரு தெய்வத்தை எடுத்துக் கொள்கிறான். இவ்வாறாக பல தெய்வங்களுக்கிடையில் பங்குபோட்டுப் பல கூறாகப் பிரிக்கப்படுகிறான். இவனுக்கொரு நிலையான தன்மையில்லை.

3. தௌஹீத், மனிதர்களின் பாதுகாப்புக்கு முதற்படியாகும்:- ஏனென்றால் அதனை ஏற்றுக் கொண்டவனுடைய உள்ளத்தை, அது நம்பிக்கையாலும், அமைதியாலும் நிரப்புகின்றது. அப்பொழுது அவன் அல்லாஹ் அல்லாத எவருக்கும் அஞ்சமாட்டான். உயிர், பொருள், உணவு, குடும்பம் போன்றவை இதனை ஏற்றுக் கொள்வதால் அழிந்து விடுமா? என்ற அச்சத்தையும் அது நீக்கி விடும். மனிதன், ஜின் மரணம் ஆகியவற்றினால் ஏற்படும் அச்சத்தையும் அது அகற்றிவிடும்.

தௌஹீதுடைய அடிப்படையிலுள்ள ஒரு மூமின் அல்லாஹ்வையன்றி வேறெவருக்கும் அஞ்சமாட்டான். இதனால்தான் மனிதர்கள் பயப்படும் வேளைகளில் கூட அவனை அச்சமற்றவனாகவே நீ கண்டு கொள்கிறாய்; மனிதர்கள் கலக்கமுறும் வேளைகளில் அவனை அமைதியாக கண்டு கொள்கிறாய். இவ்வர்த்தத்தின் அடிப்படையில் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“எவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, தங்கள் ஈமானுடன், யாதோர் அக்கிரமத்தையும் கலந்து விடவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாகப் பாதுகாப்புண்டு; அவர்கள் தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்” (6:82)

அச்சமற்ற இந்த நிலை உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து உதயமாகின்றது. இது மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் பாதுகாவலர்களால் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பின் மூலம் ஏற்படும் நம்பிக்கையன்று. அரசுகளின் பாதுகாப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் இந்நம்பிக்கை இம்மையில் மட்டுமுள்ளதாகும். ஆனால் மறுமையிலுள்ள அச்சமற்ற நிலையோ மிக மகத்தானதும், நிலையானதுமாகும். ஏனென்றால் மூமின்களாகிய அவர்கள் பரிசுத்த எண்ணத்துடன் அல்லாஹ்வுக்காகவே செயல்படுகின்றவர்கள் ஆவர். அவர்கள் தங்களது தௌஹீதுடன் ஷிர்க்கைக் கலந்து விடாதவர்கள். ஷிர்க்கு என்னும் தீமையோ, மாபெரும் அக்கிரமமாகும்.

4. தௌஹீத் உள்ளத்தின் சக்திக்குரிய அடித்தளமாகும்:- ஏனென்றால், அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பதற்காகவும், அவனிடம் பொறுப்புகளைப் பாரம் சாட்டுவதற்காகவும், அவனுடைய தீர்ப்புகளைத் திருப்தியாக ஏற்றுக் கொள்வதற்காகவும், அவனுடைய சோதனைகளைப் பொறுமையாகச் சகித்துக் கொள்வதற்காகவும், அவனுடைய படைப்புகளிடம் தேவையற்றிருப்பதற்காகவும் தௌஹீதை ஏற்றுக் கொண்டவனுக்குப் பெறுமதி வாய்ந்த சக்திமிக்க வெகுமதிகளை அது அளிக்கின்றது.

அவன் மலையைப் போன்று உறுதியாக நிற்பவனாவான். அவனுக்கு யாதொரு துன்பம் வந்து விட்டாலோ, அதனை நீக்குமாறு அவனுடைய ரப்பாகிய அல்லாஹ்விடம் மட்டுமே கேட்பான். மரணித்தவர்களிடம் எதனையும் கேட்க மாட்டான். நபி (ஸல்) அவர்களுடைய பின்வரும் சொல் இதற்கு ஆதாரமாய் அமைகின்றது.

‘நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! உதவிகோரினால் அல்லாஹ்விடமே உதவி கோரு!’ ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

துயரத்தைத் துடைத்து இரட்சிப்பவன் அல்லாஹ்வையன்றி வேறெவருமில்லை என்பதைப் பின்வரும் அல்குர்ஆன் வசனம் கூறுவதைக் காணலாம்.

“அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைத்தால், அதனை நீக்குவோர் அவனையன்றி வேறெவருமில்லை. (அவ்வாறே) உமக்கு யாதொரு நன்மை நேரிடினும் (அதைத் தடுத்து விடக் கூடியவன் எவனுமில்லை) அவன் யாவற்றின் மீதும் மிக்க ஆற்றலுடையோன்” (6:17)

5. தௌஹீத் சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அஸ்திவாரமாகும். ஏனென்றால் அல்லாஹ் அல்லாதவர்களில் சிலரைத் தங்கள் இரட்சகர்களாக ஆக்கிக் கொள்கின்றவர்களைப் பின்பற்றுவதற்குத் தன்னை சார்ந்தோரை அது அனுமதிக்காது.

இரட்சிக்கும் தன்மையும், மனிதர்கள் செய்யக்கூடிய வணக்கங்களும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும். அவர்களுக்குத் தலைமை தாங்கத் தகுதியானவர், அல்லாஹ்வுடைய ரஸூல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமேயாவார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதுடைய பயன்களிற் சில……..

மூன்று அடிப்படை விஷயங்கள் – 2

ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம் என்னவென்று உன்னிடம் கேட்கப்பட்டால், நீ சொல்,

ஒருவன் தன் இறைவனையும், அவன் மார்க்கத்தையும், அவனது நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் பற்றி அறிவதாகும்.

முதலாவது அடிப்படை விஷயம்
அல்லாஹ்வை அறிவதாகும்.

உன்னுடைய இறைவன் யார்? என்று உன்னிடம் கேட்கப்பட்டால் நீ சொல்,

என்னையும் உலகத்திலுள்ள அனைவர்களையும் தனது அருட்கொடையால் வளர்த்து பரிபாலிப்பவனே எனது இறைவன். அவன் தான் நான் வணங்குவதற்குத் தகுதியானவன். நான் வணங்குவதற்குத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. என நீ பதில் கூற வேண்டும்.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்துகின்ற அல்லாஹ்விற்கே எல்லா புகழும்” (1:1)

அல்லாஹ்வைத் தவிர மற்ற படைப்பினங்கள் எல்லாவற்றிருக்கும் சிருஷ்டி என்று சொல்லப்படும். அந்த சிருஷ்டிகளில் நானும் ஒருவனாகும் எனக் கூறு.

உன்னுடைய இறைவனை நீ எப்படி அறிந்து கொண்டாய்? என உன்னிடம் கேட்கப்படும் போது பின்வருமாறு கூற வேண்டும்.

இறைவனின் அத்தாட்சிகளைக் கொண்டும், அவன் படைப்பினங்களை சிந்திப்பதின் மூலமும் அவனை அறிந்தேன். இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவன் அத்தாட்சிகளாகும். வானங்கள், பூமி, பிரபஞ்சம் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவைகளாகும். (எனவே இவைகளைப் படைத்தவனே என் இறைவன்.)

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் இறைவனை அறிவிக்கக்கூடிய) அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். ஆகவே மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாயிருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவைகளை சிருஷ்டித்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள். (என்றும் நபியே நீர் கூறுவீராக!)” (41:37)

மேலும் இறைவசனம் கூறுவதாவது:

“நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, அர்ஷின் மீது தரிபட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான். (பலலால் இரவை மூடுகிறான்) அவ்விரவு பகலை வெகு விரைவாகப் பின் தொடர்கின்றது. சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் அவன் கட்டளைக்கு உட்பட்டிருக்கின்றன. படைப்பும் (படைத்தலும்) அதன் ஆட்சியும் அவனுக்குரியதல்லவா? அகில உலகங்களையும் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவனாவான்” (7:54)

உலகத்தாரையும் அதிலுள்ளவற்றையும் இரட்சித்துப் பரிபாலிக்கக் கூடியவனே நம் வணக்கத்திற்கு தகுதியானவன்.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“மனிதர்களே! நீங்கள், உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்” (2:21)

“அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையை பொழிவித்து, அதனைக் கொண்டு உங்களுக்கு உணவாகக் கூடிய கனிவர்க்கங்களையும் உங்களுக்கு வெளிப்படுத்துகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் (தெளிவாக) அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு (எத்தகைய) இணைகளையும் ஏற்படுத்தாதீர்கள்” (2:22)

இப்னு கதீர் (ரஹ்) என்பவர்கள் கூறுகின்றார்கள். மேற்கூறப்பட்ட இறைவசனத்தில் உள்ளவைகளை படைத்தவனே வணக்கத்திற்கு தகுதியானவன். இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் என்னும் கருணை இவைகள் அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்ட வணக்கங்களாகும். இந்த வணக்கங்களின் வகையைச் சார்ந்ததுதான் பிரார்த்தனை, பயம், ஆதரவு, பரம் சாட்டுதல், ஆசை வைத்தல், பக்திபூர்வமான பயம், உள்ளச்சம், பச்சாதாபம், உதவி தேடல், காவல் தேடல், அபயம் தேடல், குர்பானி கொடுத்தல், நேர்ச்சை செய்தல் போன்றவைகளும், மேலும் இவை அல்லாத இறைவனால் கட்டளையிடப்பட்ட வணக்க வகைகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானதாகும்.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(நிச்சயமாக) மஸ்ஜிதுகளெல்லாம் அல்லாஹ்வி(ன் வணக்கத்தி)ற்காகவே உள்ளன. ஆகவே (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (வணங்க பெயர்கூறி) அழைக்காதீர்கள்” (72:18)

மேலே கூறப்பட்ட வணக்க வழிபாடுகளின் வகைகளில் எதையேனும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்பவன், இறைவனுக்கு இணை வைத்தவனாக, காஃபிராக ஆகி விடுகிறான்.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனை (வணக்கத்திற்கு தகுதியானவன் எனக் கருதி) அழைக்கின்றானோ அவனிடத்தில் அதற்குரிய யாதோர் அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாபக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில் தான் (தீர்க்கப்படும்) நிச்சயமாக (உணமையை) நிராகரிக்கும் இத்தகையோர் சித்திபெறவே மாட்டார்கள்” (23:117)

ஹதீஸில் வந்துள்ளதாவது:

‘துஆ என்பது வணக்கங்களின் மூளையாகும்’

மேலும் இறைவன் கூறும் ஆதாரமாவது:

“உங்கள் இறைவன் கூறுகிறான்: நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை யாவையும் கேட்க) என்னையே அழையுங்கள்; நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்குப் பதிலளிப்பேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ அவர்கள், நிச்சயமாக சிறுமைப் பட்டவர்களாக நரகம் புகுவர்” (40:60)

பயம்:

அல்லாஹ் ஒருவனையே பயப்பட வேண்டும். (அஞ்ச வேண்டும்) என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறை வசனமாகும்.

“(விசுவாசிகளே!) நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால் அவர்களுக்குப் பயப்பட வேண்டாம். (எனக்கே பயப்படுங்கள்)” (3:175)

அதாவது அல்லாஹ்வை அஞ்சிப் பயப்படுவது போன்று படைப்பினங்களில் யாரையும், எதையும் பயப்படுவது கூடாது.

ஆதரவு வைத்தல்:

அல்லாஹ் ஒருவனிடமே ஆதரவு வைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“ஆகவே, எவன் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறானோ அவன் நற்கருமங்களைச் செய்து, தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவானாக” (18:110)

பரம் சாட்டல் (தவக்கல்)

அல்லாஹ் ஒருவனிடமே நம் காரியங்களை பரம் சாட்ட வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்விடமே உங்கள் காரியங்களை பரம் சாட்டுங்கள்” (5:23)

எவர் அல்லாஹ்வை (முற்றிலும்) நம்புகின்றாரோ, அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்” (65:3)

ஆசை வைத்தல், பக்தி பூர்வமான பயம், உள்ளச்சம்:

இவைகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

…..நிச்சயமாக இவர்கள் யாவரும், நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம்முடைய அருளை) விரும்பியும் (நம் தண்டனைக்குப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யாவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாக இருந்தார்கள்” (21:90)

உள்ளச்சம்:

…..அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (அப்போது) என்னுடைய அருட்கொடையை நான் உங்கள் மீது பூரணமாக்கி வைப்பேன். (அதனால்) நீங்கள் நேரான வழியை அடையலாம்” (2:150)

பச்சாதாபம்:

பச்சாதாபம் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன்பால் திரும்பி அவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடவுங்கள். (வேதனை வந்து விட்டாலோ) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்” (39:54)

உதவி தேடல்:

அல்லாஹ் ஒருவனிடமே உதவி தேட வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(இறைவனே!) உன்னையே நாங்கள் வனங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்” (1:5)

ஹதீஸில் வந்துள்ளது:

‘நீ உதவி தேடும்போது அல்லாஹ் ஒருவனிடமே உதவிதேடு’

பாதுகாவல் தேடுதல்:

அல்லாஹ் ஒருவனைக் கொண்டே காவல் தேட வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(நபியே! பிரார்த்தனை செய்து) நீர் கூறுவீராக! மனிதர்களை இரட்சித்துப் பரிபாலிப்பவனும், மனிதர்களின் (உண்மையான) அரசனுமான அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்” (114:1,2)

அபயம் தேடல்:

அல்லாஹ் ஒருவனிடமே அபயம் தேட வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது அணி அணியாக (உங்களைப் பின்பற்றி வரக்கூடிய) ஆயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்” (8:9)

குர்பானி: (அறுத்துப் பலியிடுதல்)

அல்லாஹ் ஒருவனுக்கே அறுத்து குர்பானி கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய தியாகமும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தைப் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்விற்கே உரித்தானவை. அவனுக்கு யாதோர் இணையுமில்லை. (துணையுமில்லை) இவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே (அவனுக்கு வழிப்பட்ட) முஸ்லிம்களில் நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக!)” (6:162)

ஹதீஸிலிருந்து ஆதாரம்:

‘அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவனை (குர்பானி கொடுப்பவனை) அல்லாஹ் சபிக்கின்றான் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நேர்ச்சை:

அல்லாஹ் ஒருவனுக்கே நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“….இவர்கள் (தங்கள் இறைவனுக்குச் செய்த நேர்ச்சைகளையும் நிறைவேற்றி வைத்தனர். நீண்ட வேதனையுடைய நாளுக்கும் பயந்து கொண்டிருந்தனர்” (76:7)

நல்லோர்களின் சிறப்பைப் பற்றிக் கூறப்படும் வசனத்தொடரில் இதுவும் கூறப்பட்டுள்ளது.

இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் இஸ்லாத்தின் மூன்று அடிப்படை விஷயங்கள் என்ற நூலிலிருந்து. (தமிழாக்கம்: மௌலவி எஸ். கமாலுத்தீன்.)

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மூன்று அடிப்படை விஷயங்கள் – 2

பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே!


39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39: 54. ஆகவே (மனிதர்களே) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட் மாட்டீர்கள்.

39:55. நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.

39:56. “அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;

39:57. அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால் , நானும் முத்தகீன் – பயபக்தியுடையவர்களில் – ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும் ;

39:.58. அல்லது: வேதனையை கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகி விடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;

39:59. (பதில் கூறப்படும்) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் (நிராகரிப்பவர்களில்) ஒருவனாக இருந்தாய்.”

39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம (இறுதி தீர்ப்பு) நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரத்தில் இருக்கிறதல்லவா?

அல் குர்ஆன்: அல் ஜூமர் (கூட்டங்கள்)
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே!