மூன்று அடிப்படை விஷயங்கள் – 2

ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம் என்னவென்று உன்னிடம் கேட்கப்பட்டால், நீ சொல்,

ஒருவன் தன் இறைவனையும், அவன் மார்க்கத்தையும், அவனது நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் பற்றி அறிவதாகும்.

முதலாவது அடிப்படை விஷயம்
அல்லாஹ்வை அறிவதாகும்.

உன்னுடைய இறைவன் யார்? என்று உன்னிடம் கேட்கப்பட்டால் நீ சொல்,

என்னையும் உலகத்திலுள்ள அனைவர்களையும் தனது அருட்கொடையால் வளர்த்து பரிபாலிப்பவனே எனது இறைவன். அவன் தான் நான் வணங்குவதற்குத் தகுதியானவன். நான் வணங்குவதற்குத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. என நீ பதில் கூற வேண்டும்.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்துகின்ற அல்லாஹ்விற்கே எல்லா புகழும்” (1:1)

அல்லாஹ்வைத் தவிர மற்ற படைப்பினங்கள் எல்லாவற்றிருக்கும் சிருஷ்டி என்று சொல்லப்படும். அந்த சிருஷ்டிகளில் நானும் ஒருவனாகும் எனக் கூறு.

உன்னுடைய இறைவனை நீ எப்படி அறிந்து கொண்டாய்? என உன்னிடம் கேட்கப்படும் போது பின்வருமாறு கூற வேண்டும்.

இறைவனின் அத்தாட்சிகளைக் கொண்டும், அவன் படைப்பினங்களை சிந்திப்பதின் மூலமும் அவனை அறிந்தேன். இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவன் அத்தாட்சிகளாகும். வானங்கள், பூமி, பிரபஞ்சம் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவைகளாகும். (எனவே இவைகளைப் படைத்தவனே என் இறைவன்.)

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் இறைவனை அறிவிக்கக்கூடிய) அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். ஆகவே மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாயிருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவைகளை சிருஷ்டித்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள். (என்றும் நபியே நீர் கூறுவீராக!)” (41:37)

மேலும் இறைவசனம் கூறுவதாவது:

“நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, அர்ஷின் மீது தரிபட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான். (பலலால் இரவை மூடுகிறான்) அவ்விரவு பகலை வெகு விரைவாகப் பின் தொடர்கின்றது. சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் அவன் கட்டளைக்கு உட்பட்டிருக்கின்றன. படைப்பும் (படைத்தலும்) அதன் ஆட்சியும் அவனுக்குரியதல்லவா? அகில உலகங்களையும் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவனாவான்” (7:54)

உலகத்தாரையும் அதிலுள்ளவற்றையும் இரட்சித்துப் பரிபாலிக்கக் கூடியவனே நம் வணக்கத்திற்கு தகுதியானவன்.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“மனிதர்களே! நீங்கள், உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்” (2:21)

“அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையை பொழிவித்து, அதனைக் கொண்டு உங்களுக்கு உணவாகக் கூடிய கனிவர்க்கங்களையும் உங்களுக்கு வெளிப்படுத்துகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் (தெளிவாக) அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு (எத்தகைய) இணைகளையும் ஏற்படுத்தாதீர்கள்” (2:22)

இப்னு கதீர் (ரஹ்) என்பவர்கள் கூறுகின்றார்கள். மேற்கூறப்பட்ட இறைவசனத்தில் உள்ளவைகளை படைத்தவனே வணக்கத்திற்கு தகுதியானவன். இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் என்னும் கருணை இவைகள் அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்ட வணக்கங்களாகும். இந்த வணக்கங்களின் வகையைச் சார்ந்ததுதான் பிரார்த்தனை, பயம், ஆதரவு, பரம் சாட்டுதல், ஆசை வைத்தல், பக்திபூர்வமான பயம், உள்ளச்சம், பச்சாதாபம், உதவி தேடல், காவல் தேடல், அபயம் தேடல், குர்பானி கொடுத்தல், நேர்ச்சை செய்தல் போன்றவைகளும், மேலும் இவை அல்லாத இறைவனால் கட்டளையிடப்பட்ட வணக்க வகைகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானதாகும்.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(நிச்சயமாக) மஸ்ஜிதுகளெல்லாம் அல்லாஹ்வி(ன் வணக்கத்தி)ற்காகவே உள்ளன. ஆகவே (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (வணங்க பெயர்கூறி) அழைக்காதீர்கள்” (72:18)

மேலே கூறப்பட்ட வணக்க வழிபாடுகளின் வகைகளில் எதையேனும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்பவன், இறைவனுக்கு இணை வைத்தவனாக, காஃபிராக ஆகி விடுகிறான்.

இதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனை (வணக்கத்திற்கு தகுதியானவன் எனக் கருதி) அழைக்கின்றானோ அவனிடத்தில் அதற்குரிய யாதோர் அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாபக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில் தான் (தீர்க்கப்படும்) நிச்சயமாக (உணமையை) நிராகரிக்கும் இத்தகையோர் சித்திபெறவே மாட்டார்கள்” (23:117)

ஹதீஸில் வந்துள்ளதாவது:

‘துஆ என்பது வணக்கங்களின் மூளையாகும்’

மேலும் இறைவன் கூறும் ஆதாரமாவது:

“உங்கள் இறைவன் கூறுகிறான்: நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை யாவையும் கேட்க) என்னையே அழையுங்கள்; நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்குப் பதிலளிப்பேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ அவர்கள், நிச்சயமாக சிறுமைப் பட்டவர்களாக நரகம் புகுவர்” (40:60)

பயம்:

அல்லாஹ் ஒருவனையே பயப்பட வேண்டும். (அஞ்ச வேண்டும்) என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறை வசனமாகும்.

“(விசுவாசிகளே!) நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால் அவர்களுக்குப் பயப்பட வேண்டாம். (எனக்கே பயப்படுங்கள்)” (3:175)

அதாவது அல்லாஹ்வை அஞ்சிப் பயப்படுவது போன்று படைப்பினங்களில் யாரையும், எதையும் பயப்படுவது கூடாது.

ஆதரவு வைத்தல்:

அல்லாஹ் ஒருவனிடமே ஆதரவு வைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“ஆகவே, எவன் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறானோ அவன் நற்கருமங்களைச் செய்து, தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவானாக” (18:110)

பரம் சாட்டல் (தவக்கல்)

அல்லாஹ் ஒருவனிடமே நம் காரியங்களை பரம் சாட்ட வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்விடமே உங்கள் காரியங்களை பரம் சாட்டுங்கள்” (5:23)

எவர் அல்லாஹ்வை (முற்றிலும்) நம்புகின்றாரோ, அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்” (65:3)

ஆசை வைத்தல், பக்தி பூர்வமான பயம், உள்ளச்சம்:

இவைகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

…..நிச்சயமாக இவர்கள் யாவரும், நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம்முடைய அருளை) விரும்பியும் (நம் தண்டனைக்குப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யாவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாக இருந்தார்கள்” (21:90)

உள்ளச்சம்:

…..அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (அப்போது) என்னுடைய அருட்கொடையை நான் உங்கள் மீது பூரணமாக்கி வைப்பேன். (அதனால்) நீங்கள் நேரான வழியை அடையலாம்” (2:150)

பச்சாதாபம்:

பச்சாதாபம் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன்பால் திரும்பி அவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடவுங்கள். (வேதனை வந்து விட்டாலோ) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்” (39:54)

உதவி தேடல்:

அல்லாஹ் ஒருவனிடமே உதவி தேட வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(இறைவனே!) உன்னையே நாங்கள் வனங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்” (1:5)

ஹதீஸில் வந்துள்ளது:

‘நீ உதவி தேடும்போது அல்லாஹ் ஒருவனிடமே உதவிதேடு’

பாதுகாவல் தேடுதல்:

அல்லாஹ் ஒருவனைக் கொண்டே காவல் தேட வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(நபியே! பிரார்த்தனை செய்து) நீர் கூறுவீராக! மனிதர்களை இரட்சித்துப் பரிபாலிப்பவனும், மனிதர்களின் (உண்மையான) அரசனுமான அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்” (114:1,2)

அபயம் தேடல்:

அல்லாஹ் ஒருவனிடமே அபயம் தேட வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது அணி அணியாக (உங்களைப் பின்பற்றி வரக்கூடிய) ஆயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்” (8:9)

குர்பானி: (அறுத்துப் பலியிடுதல்)

அல்லாஹ் ஒருவனுக்கே அறுத்து குர்பானி கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“(நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய தியாகமும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தைப் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்விற்கே உரித்தானவை. அவனுக்கு யாதோர் இணையுமில்லை. (துணையுமில்லை) இவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே (அவனுக்கு வழிப்பட்ட) முஸ்லிம்களில் நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக!)” (6:162)

ஹதீஸிலிருந்து ஆதாரம்:

‘அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவனை (குர்பானி கொடுப்பவனை) அல்லாஹ் சபிக்கின்றான் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நேர்ச்சை:

அல்லாஹ் ஒருவனுக்கே நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம் கீழ்காணும் இறைவசனமாகும்.

“….இவர்கள் (தங்கள் இறைவனுக்குச் செய்த நேர்ச்சைகளையும் நிறைவேற்றி வைத்தனர். நீண்ட வேதனையுடைய நாளுக்கும் பயந்து கொண்டிருந்தனர்” (76:7)

நல்லோர்களின் சிறப்பைப் பற்றிக் கூறப்படும் வசனத்தொடரில் இதுவும் கூறப்பட்டுள்ளது.

இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் இஸ்லாத்தின் மூன்று அடிப்படை விஷயங்கள் என்ற நூலிலிருந்து. (தமிழாக்கம்: மௌலவி எஸ். கமாலுத்தீன்.)

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.