தௌஹீதுடைய பயன்களிற் சில……..

ஒரு தனி மனிதனிடத்திலோ, அல்லது ஒரு ஜமாஅத்திடத்திலோ ‘தௌஹீத்’ உறுதிப் படுத்தப்பட்டு விட்டால், அப்பொழுது மிகச் சிறந்த சில கனிவர்க்கங்கள் அவர்களுக்குக் கிடைப்பது நிச்சயமாகி விடும். அவற்றில் சில……

1. மனிதன், அல்லாஹ் அல்லாதவர்களுக்கும், தாமே படைக்கப் பட்டிருக்கையில் எதனையும் படைக்கச் சக்தியற்ற படைப்புகளுக்கும் வணக்கம் செலுத்துவதிலிருந்தும், அவர்களுக்கு பணிந்து நடப்பதிலிருந்தும் அவனை விடுவிப்பதாகும். இது மேற்கூறப்பட்டவற்றில் முதலாவதாகும்.

அல்லாஹ் அல்லாத, வணங்கப்படுகின்றவர்கள் தமக்குத்தாமே நன்மையோ, தீமையோ செய்துகொள்ளச் சக்தியற்றவர்கள். மரணத்தை ஏற்படுத்தவோ, வாழ்க்கையை கொடுக்கவோ, அல்லது மரணித்தவனை எழுப்பவோ அவர்கள் சக்தியற்றவர்கள்.

தௌஹீத் என்றால், அல்லாஹ்வைத் தவிர வேறெந்த வஸ்துவுக்கும் அடிபணிவதிலிருந்து மனிதனைக் காப்பதும், அவனை, அனாச்சாரங்கள், சந்தேகங்கள், மனோ இச்சைக்கு வழிபடுதல், அலட்சியமான போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல், ஜோதிடர்களையும், எஜமானர்களையும் இரட்சகர்களாக ஆக்கிக் கொள்ளல், அல்லாஹ்வுக்கு வழிபடுவதை விட அதிகமாக இவர்களுக்கு வழிபடுதல் போன்றவற்றிலிருந்தும், இவைபோன்ற இன்னும் பல நடை முறைகளிலிருந்தும் பாதுகாப்பதாகும்.

இதற்காகத்தான் ஷிர்க்கை நிலைநாட்டிக் கொண்டிருந்த தலைவர்களும், அறியாமைக்கால வம்பர்களும் பொதுவாக நபிமார்களுடைய பிரசாரத்தை, குறிப்பாக நபி (ஸல்) அவர்களூடைய பிரசாரத்தை எதிர்த்தனர். ஏனென்றால் அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ்வுடைய அர்த்தத்தை அறிந்தவர்களாகவே இருந்தனர்.

இந்தக்கலிமா மனிதனுக்குச் சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் கொடுங்கோலாட்சியையும், பொய்யான தலைவர்களையும் வீழ்த்தி, ‘அல்லாஹ்வுக்கன்றி வேறெவருக்கும் தலை வணங்க மாட்டோம்’ என்பதில் உறுதியான மூமின்களுக்கு உயர்வைத் தேடிக் கொடுக்கக் கூடியது என்பதையும் இஸ்லாத்தின் அவ்வெதிரிகள் அறிந்திருந்தனர்.

2. மனிதனை நீதமாக அமைத்துவிடல்: தௌஹீத், மனிதனை நீதியான முறையில் நடப்பதற்கு உதவுகின்றது. ‘இரகசியத்திலும் வெளிப்படையாகவும் அவனுக்கு ஒரே ஒரு இறைவன் தான் உண்டு’ என்று அது தனது நோக்கத்தில் ஒரு நிலையான தன்மையைக் காட்டுகின்றது.

வணக்கத்துக்கு உரியவைகளும், பல கடவுள்களும் ஒரு முஷ்ரிக்குடைய உள்ளத்தைப் பல பிரிவுகளாகக் கூறுபோட்டுக் கொண்டதற்கு மாறாக, இந்தத் தௌஹீத் இரகசியத்திலும், பகிரங்கத்திலும் ஒரே இறைவனின் பக்கம் மனிதனை அழைக்கின்றது. அந்த முஷ்ரிக் ஒரு விடுத்தம் உயிருள்ளவர்களிடம் கேட்கிறான்; இன்னொரு விடுத்தம் இறந்தவர்களிடம் கேட்கிறான். யூஸுப் (அலை) அவர்கள் கூறியதை இங்கு கூறுவது பொருத்தமாகும். யூஸுப் (அலை) அவர்கள் சிறைக் கூடத்திலிருந்த போது, அங்கு தன்னுடனிருந்த இருவரை நோக்கி:-

“சிறைக் கூடத்திலிருக்கும் என்னிரு தோழர்களே! (யாதொரு சக்தியுமற்ற) வெவ்வேறுபட்ட தெய்வங்கள் மேலா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற (ஒரே இறைவனான) அல்லாஹ் ஒருவனே மேலா?” (12:39)

ஒரு மூமின் ஒரேயொரு இறைவனை மட்டுமே வணங்குகிறான். ‘அவனை திருப்திப் படுத்துவது எது? கோபப் படுத்துவது எது?’ என்பதையும் அவன் அறிகிறான். அவனைத் திருப்திப் படுத்துவதுடன் இந்த மூமின் நின்று கொள்கிறான். இதன் மூலம் இவனுடைய உள்ளம் அமைதி பெறுகின்றது.

முஷ்ரிக் என்பவனோ, அதிகமான கடவுள்களை வணங்குகிறான். வலது பக்கமாக ஒரு தெய்வத்தை எடுத்துக் கொள்கிறான்; இடது பக்கமாக மற்றொரு தெய்வத்தை எடுத்துக் கொள்கிறான். இவ்வாறாக பல தெய்வங்களுக்கிடையில் பங்குபோட்டுப் பல கூறாகப் பிரிக்கப்படுகிறான். இவனுக்கொரு நிலையான தன்மையில்லை.

3. தௌஹீத், மனிதர்களின் பாதுகாப்புக்கு முதற்படியாகும்:- ஏனென்றால் அதனை ஏற்றுக் கொண்டவனுடைய உள்ளத்தை, அது நம்பிக்கையாலும், அமைதியாலும் நிரப்புகின்றது. அப்பொழுது அவன் அல்லாஹ் அல்லாத எவருக்கும் அஞ்சமாட்டான். உயிர், பொருள், உணவு, குடும்பம் போன்றவை இதனை ஏற்றுக் கொள்வதால் அழிந்து விடுமா? என்ற அச்சத்தையும் அது நீக்கி விடும். மனிதன், ஜின் மரணம் ஆகியவற்றினால் ஏற்படும் அச்சத்தையும் அது அகற்றிவிடும்.

தௌஹீதுடைய அடிப்படையிலுள்ள ஒரு மூமின் அல்லாஹ்வையன்றி வேறெவருக்கும் அஞ்சமாட்டான். இதனால்தான் மனிதர்கள் பயப்படும் வேளைகளில் கூட அவனை அச்சமற்றவனாகவே நீ கண்டு கொள்கிறாய்; மனிதர்கள் கலக்கமுறும் வேளைகளில் அவனை அமைதியாக கண்டு கொள்கிறாய். இவ்வர்த்தத்தின் அடிப்படையில் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“எவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, தங்கள் ஈமானுடன், யாதோர் அக்கிரமத்தையும் கலந்து விடவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாகப் பாதுகாப்புண்டு; அவர்கள் தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்” (6:82)

அச்சமற்ற இந்த நிலை உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து உதயமாகின்றது. இது மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் பாதுகாவலர்களால் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பின் மூலம் ஏற்படும் நம்பிக்கையன்று. அரசுகளின் பாதுகாப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் இந்நம்பிக்கை இம்மையில் மட்டுமுள்ளதாகும். ஆனால் மறுமையிலுள்ள அச்சமற்ற நிலையோ மிக மகத்தானதும், நிலையானதுமாகும். ஏனென்றால் மூமின்களாகிய அவர்கள் பரிசுத்த எண்ணத்துடன் அல்லாஹ்வுக்காகவே செயல்படுகின்றவர்கள் ஆவர். அவர்கள் தங்களது தௌஹீதுடன் ஷிர்க்கைக் கலந்து விடாதவர்கள். ஷிர்க்கு என்னும் தீமையோ, மாபெரும் அக்கிரமமாகும்.

4. தௌஹீத் உள்ளத்தின் சக்திக்குரிய அடித்தளமாகும்:- ஏனென்றால், அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பதற்காகவும், அவனிடம் பொறுப்புகளைப் பாரம் சாட்டுவதற்காகவும், அவனுடைய தீர்ப்புகளைத் திருப்தியாக ஏற்றுக் கொள்வதற்காகவும், அவனுடைய சோதனைகளைப் பொறுமையாகச் சகித்துக் கொள்வதற்காகவும், அவனுடைய படைப்புகளிடம் தேவையற்றிருப்பதற்காகவும் தௌஹீதை ஏற்றுக் கொண்டவனுக்குப் பெறுமதி வாய்ந்த சக்திமிக்க வெகுமதிகளை அது அளிக்கின்றது.

அவன் மலையைப் போன்று உறுதியாக நிற்பவனாவான். அவனுக்கு யாதொரு துன்பம் வந்து விட்டாலோ, அதனை நீக்குமாறு அவனுடைய ரப்பாகிய அல்லாஹ்விடம் மட்டுமே கேட்பான். மரணித்தவர்களிடம் எதனையும் கேட்க மாட்டான். நபி (ஸல்) அவர்களுடைய பின்வரும் சொல் இதற்கு ஆதாரமாய் அமைகின்றது.

‘நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! உதவிகோரினால் அல்லாஹ்விடமே உதவி கோரு!’ ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

துயரத்தைத் துடைத்து இரட்சிப்பவன் அல்லாஹ்வையன்றி வேறெவருமில்லை என்பதைப் பின்வரும் அல்குர்ஆன் வசனம் கூறுவதைக் காணலாம்.

“அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைத்தால், அதனை நீக்குவோர் அவனையன்றி வேறெவருமில்லை. (அவ்வாறே) உமக்கு யாதொரு நன்மை நேரிடினும் (அதைத் தடுத்து விடக் கூடியவன் எவனுமில்லை) அவன் யாவற்றின் மீதும் மிக்க ஆற்றலுடையோன்” (6:17)

5. தௌஹீத் சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அஸ்திவாரமாகும். ஏனென்றால் அல்லாஹ் அல்லாதவர்களில் சிலரைத் தங்கள் இரட்சகர்களாக ஆக்கிக் கொள்கின்றவர்களைப் பின்பற்றுவதற்குத் தன்னை சார்ந்தோரை அது அனுமதிக்காது.

இரட்சிக்கும் தன்மையும், மனிதர்கள் செய்யக்கூடிய வணக்கங்களும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும். அவர்களுக்குத் தலைமை தாங்கத் தகுதியானவர், அல்லாஹ்வுடைய ரஸூல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமேயாவார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.