அவதூறு பரப்புவதும் கொலையை போன்றதே!

70- யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார்.தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம்,அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்)எந்த மனிதனுக்கும் தகாது எதன்மூலம் ஒருவர் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்கிறாரோ அதன் மூலம் அவர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். இறை நம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். யார் ஒர் இறை நம்பிக்கையாளரை இறைமறுப்பாளர்(காஃபிர்)என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.இதை அந்த மரத்தினடியில்(பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவரான ஸாபித் பின் ளஹ்ஹாக்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி-6047: ஸாபித் பின் ளஹ்ஹாக்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அவதூறு பரப்புவதும் கொலையை போன்றதே!

‘வஹ்ஹாபி’ என்பதென் அர்த்தமென்ன’?

மனிதர்கள் தங்களுடைய பழக்கவழக்கங்களுக்கும், வீணான நம்பிக்கைகளுக்கும், பித்அத்தான நடைமுறைகளுக்கும் மாறாக நடக்கின்றவர்களை ‘வஹ்ஹாபிகள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். இவர்களுடைய நம்பிக்கைகள் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்படக்கூடிய பிழையானவையாக இருப்பினும் சரிதான். குறிப்பாக தௌஹீதின் பக்கம் மக்களை அழைப்பதையும், அவனிடம் மட்டுமே தேவைகளைக் கேட்க வேண்டும் என்று கூறுவதையும், அவனல்லாத எவரிடமும் கேட்கக்கூடாது என்று கூறுவதையும் தான் பிழை என்பதாக மக்கள் கருதி வஹ்ஹாபிப் பட்டம் சூட்டுகின்றனர்.

நான் ஓர் ஆசிரியரிடத்தில் இமாம் நவவி (ரஹ்) அவர்களுக்குரிய ‘அல்-அர்பஊன் லின்-நவவி’ என்ற நூலில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ‘நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! உதவி தேடினால் அல்லாஹ்விடம் மட்டுமே உதவிதேடு’ என்ற நபியவர்களுடைய ஹதீஸைப் படித்துக் கொண்டிருந்தேன். இந்த ஹதீஸுக்கு இமாம் நவவி அவர்கள் அளிக்கும் விரிவுரை அவ்வேளை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவ்விளக்கம் பின்வருமாறு.

‘நேர்வழி படுத்தல், நோயைக் குணப்படுத்தல், அறிவைக் கொடுத்தல் போன்ற மனிதனால் மனிதனுக்கு நிறைவேற்றிக் கொடுக்க முடியாதவற்றை அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். இப்படியானவற்றை அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்பதும், அவற்றை அவர்கள் நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்புதலும் நிந்திக்கப்பட்ட இழிந்த செயல்களாகும்.

இமாம் நவவி (ரஹ்) அவர்களுடைய இவ்விளக்கத்தைக் கேட்டதும் ‘அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிக் கேட்கக்கூடாது’ என்றல்லவா இவ்விளக்கம் அமைந்துள்ளது என்று எனது ஆசிரியரிடம் கேட்டேன். அதற்கவர், ‘அவ்வாறு கேட்பது அனுமதிக்கப்பட்டது’ என்று கூறினார். நான், அதனைத் தொடர்ந்து ‘நீங்கள் சொல்வதற்கு ஆதாரமென்ன?’ என்று கேட்டேன்.

அப்பொழுது எனது ஆசிரியர் கோபத்துடன் கத்திக் கொண்டே பின்வருமாறு சொன்னார். ‘எனது தந்தையின் உடன்பிறந்த சகோதரி (மாமி) இந்தப் பள்ளிவாசலினுள் அடக்கஞ் செய்யப்பட்டிருப்பவரிடம் ‘யாஷைக் ஸஃது!’ என்று அழைத்து தனது தேவைகளைக் கேட்கிறாள். நான் அவர்களைப் பார்த்து ‘தாயே! பெரியார் ஸஃது உங்களுக்குப் பயனுள்ள ஏதாவதொன்றைச் செய்து தருகிறாரா?’ என்று கேட்டேன். அதற்கு அத்தாய் நான் இப்பெரியாரிடம் கேட்கிறேன். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் தன்னையே அர்பணிக்கின்றவர்கள்) எனக்காக அல்லாஹ்விடத்தில் ஷபாஅத் செய்கிறார்கள்; பரிந்து பேசுகிறார்கள் என்று பதில் கூறினாள். ஆசிரியவர்கள் என்மீது கொண்ட கோபத்துடன் தனது மாமியாரின் விளக்கத்தை மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் எனது ஆசிரியரை நோக்கி, பெரியார் அவர்களே! ‘நீங்களோ ஓர் ஆலிம்; உங்களுடைய வாழ்நாளையே கிதாபுகளை வாசிப்பதிலேயே கழித்துள்ளீர்கள். இவ்வளவு படித்த பின்பும் உங்களது அகீதாவை (அடிப்படைக் கொள்கையை) அறிவீனமாகக் கதைக்கும் உங்களது மாமியிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளீர்களே’ என்று கூறினேன்.

அப்பொழுது அவர் என்னை நோக்கி, ‘உன்னிடம் ‘வஹ்ஹாபிய்யத்’ சிந்தனைகள் இருக்கின்றன. நீ உம்ராவுக்காக மக்கா சென்று வரும்போது வஹ்ஹாபிய்யக் கருத்துள்ள நூல்களைக் கொண்டு வருகிறாய்’ என்று கூறினார். எனது ஆசிரியரைப் போன்றவர்களிடம் அல்லாது வஹ்ஹாபிய்யத்தைப் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.

வஹ்ஹாபிகள் முஸ்லிம்களுக்கு மாறுபட்டவர்கள் என்றும், அவ்லியாக்களையும் அவர்களுடைய கராமத்துக் (அற்புதங்)களையும் நம்பாதவர்கள் என்றும், நபி (ஸல்) அவர்களை விரும்பாதவர்கள் என்றும், இதல்லாத இன்னும் பல பொய்யான குற்றச்சாட்டுகளையும் எனது ஆசிரியர்கள் சொல்லுவார்கள்.

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கோருகின்றவர்களாகவும், அவன் மட்டுமே நோயைக் குணப்பபடுத்துகிறான் என்று நம்புகிறவர்களாகவும் வஹ்ஹாபிகள் இருப்பார்களென்றால் அந்த வஹ்ஹாபிய்யத்தை நானும் அறிய வேண்டுமென விரும்பினேன். அவர்களுடைய கூட்டங்கள் நடைபெறும் இடங்களை விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹூ போன்றவைகளைக் கற்றுக் கொள்வதற்காக ஒவ்வொரு மாலை பொழுதும் ஒன்று சேர்வதாக மக்கள் கூறினார்கள். நான் எனது பிள்ளைகளுடனும் சில வாலிபர்களுடனும் அவ்விடம் சென்றேன்.

பெரிய விசாலமான அறையொன்றில் பாடம் ஆரம்பிப்பதை எதிர்பார்த்து அமர்ந்திருந்தோம். சற்று நேரத்துக்குப் பின் எம்மிடத்தில் வயது முதிர்ந்த பெரிய மனிதரொருவர் வந்தார். அவர் நம்மனைவர் மீது ஸலாம் சொல்லி, வலதுகையைக் கொண்டு நம்மனைவருடனும் முஸாபஹா (கைலாகு) செய்தார். பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார்.

அம்மனிதர் எம்மிடத்தில் நுழைந்தபோது அவருக்கு மரியாதை செய்வதற்காக எவரும் எழுந்து நிற்கவில்லை. அம்மகானைப்பற்றி ‘இவர் ஒரு ஷைகாக (வயது முதிர்ந்தவராக)வல்லவா இருக்கிறார்; தனக்காக எவரும் எழுந்து மரியாதை செய்ய வேண்டுமென்பதை விரும்பாதவராக இருக்கிறாரே’ என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.

நபி (ஸல்) அவர்கள் தனது குத்பாக்களையும் பாடங்களையும் ஆரம்பித்தவாறே அம்மனிதர் அல்லாஹ்வைப் புகழ்ந்து, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லியவராக பாடத்தை ஆரம்பித்தார். பின்னர் அவர் அரபு மொழியில் பேச ஆரம்பித்தார். அவர் ஹதீஸ்களை அறிவிக்கும்போது அவற்றை அறிவித்தவர் (‘ராவி’) யார்? என்பதையும், அவை ஸஹீஹ் என்பதையும் அறிவிப்பவராயிருந்தார். நபி (ஸல்) அவர்களுடைய பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் அவர்கள் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டே இருந்தார்.

இறுதியாக அவரிடத்தில் காகிதங்களில் எழுதப்பட்ட கேள்விகள் கொடுக்கப்பட்டன. அவற்றுக்குக் குர்ஆன், ஸுன்னாவினது ஆதாரங்களைக் கொண்டு பதிலளிக்க ஆரம்பித்தார். சபையில் சமூகம் அளித்திருந்தவர்களில் சிலர் அவருடன் கலந்துரையாடினர். அவர் எந்த ஒருவரையும் கேள்வி கேட்பதற்கு தடை செய்தது கிடையாது.

அவர் தனது பாடத்தின் இறுதியில் ‘நாங்கள் முஸ்லிம்களாகவும் ‘ஸலபி’களாகவும் (ஸலபிகள் என்றால் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் நடந்த வழியில் இருப்பவர்கள்) இருப்பதற்கு வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்றார்.

மேலும் சில மனிதர்கள் எங்களை வஹ்ஹாபிகள் என்று சொல்லுகிறார்கள். இது பட்டப்பெயர் சூட்டுவதாகும். அல்லாஹ் பின்வரும் தனது வார்த்தையின் மூலம் இதனைத் தடை செய்துள்ளான்.

“உங்களில் ஒருவர் மற்றவருக்கு (த் தீய) பட்டப்பெயர் சூட்ட வேண்டாம்” (49:11)

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களை, ஆரம்பகாலத்திலிருந்த சிலர் ‘ராபிழி’ (காரிஜிய்யா) வகுப்பைச் சேர்ந்தவர் என்று கருதினர். அதற்குப் பின்வருமாறு கவியொன்றின் மூலமே இமாமவர்கள் பதிலளித்தார்கள்.

‘முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தை நேசிக்கின்ற ஒருவன் ராபிழியாக இருப்பானென்றால், நானும் ஒரு ‘ராபிழி’ என்பதற்கு மனிதர்களும், ஜின்களும் சாட்சியாக இருக்கட்டும்’.

எங்களை எவரேனும் வஹ்ஹாபிகள் என்று சந்தேகம் கொள்கின்றவர்களாக இருந்தால் அவர்களுக்குப் பின்வருமாறு ஒரு கவிஞர் கூறுவதைக் கொண்டு நாங்கள் பதிலளிப்போம்.

‘அஹ்மதை (முஹம்மத் (ஸல்) அவர்களை)ப் பின்பற்றுகின்றவர் வஹ்ஹாபியாக இருப்பாரென்றால், நானும் என்னை ஒரு வஹ்ஹாபி என்று உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்’.

பாடம் முடிந்ததும், பாடம் நடத்தியவருடைய அறிவையும் பணிவான நடத்தையையும் கண்டு ஆச்சர்யமடைந்தவர்களாக சில வாலிபர்களுடன் வெளியேறினோம். இவர்தான் ஓர் உண்மையான ‘ஷைகு’ என்று அவ்வாலிபர்களில் ஒருவர் சொல்லக் கேட்டேன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on ‘வஹ்ஹாபி’ என்பதென் அர்த்தமென்ன’?

மன்னிப்போன் கருணையுடையோன்!

எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 5:39)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மன்னிப்போன் கருணையுடையோன்!

நினைவு படுத்த எளிதானது

நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல் குர்ஆன்: 54:32)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நினைவு படுத்த எளிதானது

நிச்சயமாக மரித்தபின் மீண்டும் எழுப்பப்படுவீர்கள்!

11:7. “….உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) ”நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், ”இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை என்றும் கூறுவார்கள்”

17:49. “இன்னும்; ”(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப் போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்”

56:47. “மேலும், அவர்கள்; ”நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்”

36:78. “மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ”எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று”

37:53. “நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.)”

16:38 “இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.

79:11. “மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?”

64:7. (மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; ”அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் – மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக”

64:9. “ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்….”

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நிச்சயமாக மரித்தபின் மீண்டும் எழுப்பப்படுவீர்கள்!

கொலை செய்தவன் Vs வாழ வைப்பவன்

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (அல் குர்ஆன்: 5:32)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on கொலை செய்தவன் Vs வாழ வைப்பவன்

சிந்தித்து பார்!

இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். (அல்குர்ஆன் – 39:27)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on சிந்தித்து பார்!

தற்கொலையும் நரக நெருப்பும்……

69- யார் மலையின் மீதிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில்(தள்ளப்பட்டு மேலிருந்து கீழே)என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தை கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொணடேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புகாரி: 5778 அபுஹூரைரா(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தற்கொலையும் நரக நெருப்பும்……

இறைவனின் திருநாமத்தைக் கொண்டு படி, ஓது

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. (அவனே) ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். (96:1-2)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இறைவனின் திருநாமத்தைக் கொண்டு படி, ஓது

நிலத்தை அபகரித்தல்

இறையச்சம் இல்லாமல் போய் விடுமானால் சக்தியும் உபாயமும் அவற்றைப் பெற்றிருப்பவர்களுக்கே கேடாகி விடுகிறது. அவற்றை, பிறரின் பொருள்களை அபகரிப்பது போன்ற அக்கிரமத்திற்குப் பயன் படுத்துகிறார்கள். இந்த அக்கிரமத்தைச் சார்ந்ததுதான் நிலங்களை அபகரித்தல். இதன் முடிவு மிகப் பெரிய துன்பத்தில் கொண்டு போய் சேர்த்து விடும்.

‘ஒரு ஜாண் அளவு நிலத்தை அநியாயமாக ஒருவன் அபகரித்தால் இறுதி நாளில் அவன் ஏழு பூமிக்கடியில் அமிழ்த்தப்படுவான்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி.

‘ஒருவன் ஒரு ஜாண் நிலத்தை அநியாயமாக அபகரித்தால் மறுமையில் அதை ஏழு பூமிகளின் இறுதிவரை தோண்டும்படி அல்லாஹ் அவனை ஏவுவான். பின்னர் மக்களிடையே தீர்ப்புச் செய்யப்படும் வரை (அவன் அபகரித்த) அந்த நிலத்தை அவனுடைய கழுத்தில் மாலையாக அணிவித்து விடுவான்’ என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: யஃலா பின் முர்ரா (ரலி) நூல்: அஹ்மத்.

தப்ரானியின் அறிவிப்பில் …மறுமையில் அதை ஏழு பூமிகளின் அடிப்பாகம் வரைக் கொண்டு வரும்படி அல்லாஹ் அவனை ஏவுவான்… என்று உள்ளது.

நில அடையாளைக் கல்லை, நிலத்தின் எல்லைகளை மாற்றி அண்டை வீட்டாரின் நிலத்தை தன் நிலத்தோடு சேர்த்து விசாலப்படுத்திக் கொள்வதும் இதில் அடங்கும். பின்வரும் நபிமொழியும் இதையே சுட்டிக் காட்டுகிறது.

‘நில அடையாளக் கல்லை மாற்றுபவனை அல்லாஹ் சபிப்பானாக!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: முஸ்லிம்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on நிலத்தை அபகரித்தல்