‘வஹ்ஹாபி’ என்பதென் அர்த்தமென்ன’?

மனிதர்கள் தங்களுடைய பழக்கவழக்கங்களுக்கும், வீணான நம்பிக்கைகளுக்கும், பித்அத்தான நடைமுறைகளுக்கும் மாறாக நடக்கின்றவர்களை ‘வஹ்ஹாபிகள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். இவர்களுடைய நம்பிக்கைகள் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்படக்கூடிய பிழையானவையாக இருப்பினும் சரிதான். குறிப்பாக தௌஹீதின் பக்கம் மக்களை அழைப்பதையும், அவனிடம் மட்டுமே தேவைகளைக் கேட்க வேண்டும் என்று கூறுவதையும், அவனல்லாத எவரிடமும் கேட்கக்கூடாது என்று கூறுவதையும் தான் பிழை என்பதாக மக்கள் கருதி வஹ்ஹாபிப் பட்டம் சூட்டுகின்றனர்.

நான் ஓர் ஆசிரியரிடத்தில் இமாம் நவவி (ரஹ்) அவர்களுக்குரிய ‘அல்-அர்பஊன் லின்-நவவி’ என்ற நூலில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ‘நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! உதவி தேடினால் அல்லாஹ்விடம் மட்டுமே உதவிதேடு’ என்ற நபியவர்களுடைய ஹதீஸைப் படித்துக் கொண்டிருந்தேன். இந்த ஹதீஸுக்கு இமாம் நவவி அவர்கள் அளிக்கும் விரிவுரை அவ்வேளை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவ்விளக்கம் பின்வருமாறு.

‘நேர்வழி படுத்தல், நோயைக் குணப்படுத்தல், அறிவைக் கொடுத்தல் போன்ற மனிதனால் மனிதனுக்கு நிறைவேற்றிக் கொடுக்க முடியாதவற்றை அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். இப்படியானவற்றை அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்பதும், அவற்றை அவர்கள் நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்புதலும் நிந்திக்கப்பட்ட இழிந்த செயல்களாகும்.

இமாம் நவவி (ரஹ்) அவர்களுடைய இவ்விளக்கத்தைக் கேட்டதும் ‘அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிக் கேட்கக்கூடாது’ என்றல்லவா இவ்விளக்கம் அமைந்துள்ளது என்று எனது ஆசிரியரிடம் கேட்டேன். அதற்கவர், ‘அவ்வாறு கேட்பது அனுமதிக்கப்பட்டது’ என்று கூறினார். நான், அதனைத் தொடர்ந்து ‘நீங்கள் சொல்வதற்கு ஆதாரமென்ன?’ என்று கேட்டேன்.

அப்பொழுது எனது ஆசிரியர் கோபத்துடன் கத்திக் கொண்டே பின்வருமாறு சொன்னார். ‘எனது தந்தையின் உடன்பிறந்த சகோதரி (மாமி) இந்தப் பள்ளிவாசலினுள் அடக்கஞ் செய்யப்பட்டிருப்பவரிடம் ‘யாஷைக் ஸஃது!’ என்று அழைத்து தனது தேவைகளைக் கேட்கிறாள். நான் அவர்களைப் பார்த்து ‘தாயே! பெரியார் ஸஃது உங்களுக்குப் பயனுள்ள ஏதாவதொன்றைச் செய்து தருகிறாரா?’ என்று கேட்டேன். அதற்கு அத்தாய் நான் இப்பெரியாரிடம் கேட்கிறேன். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் தன்னையே அர்பணிக்கின்றவர்கள்) எனக்காக அல்லாஹ்விடத்தில் ஷபாஅத் செய்கிறார்கள்; பரிந்து பேசுகிறார்கள் என்று பதில் கூறினாள். ஆசிரியவர்கள் என்மீது கொண்ட கோபத்துடன் தனது மாமியாரின் விளக்கத்தை மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் எனது ஆசிரியரை நோக்கி, பெரியார் அவர்களே! ‘நீங்களோ ஓர் ஆலிம்; உங்களுடைய வாழ்நாளையே கிதாபுகளை வாசிப்பதிலேயே கழித்துள்ளீர்கள். இவ்வளவு படித்த பின்பும் உங்களது அகீதாவை (அடிப்படைக் கொள்கையை) அறிவீனமாகக் கதைக்கும் உங்களது மாமியிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளீர்களே’ என்று கூறினேன்.

அப்பொழுது அவர் என்னை நோக்கி, ‘உன்னிடம் ‘வஹ்ஹாபிய்யத்’ சிந்தனைகள் இருக்கின்றன. நீ உம்ராவுக்காக மக்கா சென்று வரும்போது வஹ்ஹாபிய்யக் கருத்துள்ள நூல்களைக் கொண்டு வருகிறாய்’ என்று கூறினார். எனது ஆசிரியரைப் போன்றவர்களிடம் அல்லாது வஹ்ஹாபிய்யத்தைப் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.

வஹ்ஹாபிகள் முஸ்லிம்களுக்கு மாறுபட்டவர்கள் என்றும், அவ்லியாக்களையும் அவர்களுடைய கராமத்துக் (அற்புதங்)களையும் நம்பாதவர்கள் என்றும், நபி (ஸல்) அவர்களை விரும்பாதவர்கள் என்றும், இதல்லாத இன்னும் பல பொய்யான குற்றச்சாட்டுகளையும் எனது ஆசிரியர்கள் சொல்லுவார்கள்.

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கோருகின்றவர்களாகவும், அவன் மட்டுமே நோயைக் குணப்பபடுத்துகிறான் என்று நம்புகிறவர்களாகவும் வஹ்ஹாபிகள் இருப்பார்களென்றால் அந்த வஹ்ஹாபிய்யத்தை நானும் அறிய வேண்டுமென விரும்பினேன். அவர்களுடைய கூட்டங்கள் நடைபெறும் இடங்களை விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹூ போன்றவைகளைக் கற்றுக் கொள்வதற்காக ஒவ்வொரு மாலை பொழுதும் ஒன்று சேர்வதாக மக்கள் கூறினார்கள். நான் எனது பிள்ளைகளுடனும் சில வாலிபர்களுடனும் அவ்விடம் சென்றேன்.

பெரிய விசாலமான அறையொன்றில் பாடம் ஆரம்பிப்பதை எதிர்பார்த்து அமர்ந்திருந்தோம். சற்று நேரத்துக்குப் பின் எம்மிடத்தில் வயது முதிர்ந்த பெரிய மனிதரொருவர் வந்தார். அவர் நம்மனைவர் மீது ஸலாம் சொல்லி, வலதுகையைக் கொண்டு நம்மனைவருடனும் முஸாபஹா (கைலாகு) செய்தார். பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார்.

அம்மனிதர் எம்மிடத்தில் நுழைந்தபோது அவருக்கு மரியாதை செய்வதற்காக எவரும் எழுந்து நிற்கவில்லை. அம்மகானைப்பற்றி ‘இவர் ஒரு ஷைகாக (வயது முதிர்ந்தவராக)வல்லவா இருக்கிறார்; தனக்காக எவரும் எழுந்து மரியாதை செய்ய வேண்டுமென்பதை விரும்பாதவராக இருக்கிறாரே’ என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.

நபி (ஸல்) அவர்கள் தனது குத்பாக்களையும் பாடங்களையும் ஆரம்பித்தவாறே அம்மனிதர் அல்லாஹ்வைப் புகழ்ந்து, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லியவராக பாடத்தை ஆரம்பித்தார். பின்னர் அவர் அரபு மொழியில் பேச ஆரம்பித்தார். அவர் ஹதீஸ்களை அறிவிக்கும்போது அவற்றை அறிவித்தவர் (‘ராவி’) யார்? என்பதையும், அவை ஸஹீஹ் என்பதையும் அறிவிப்பவராயிருந்தார். நபி (ஸல்) அவர்களுடைய பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் அவர்கள் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டே இருந்தார்.

இறுதியாக அவரிடத்தில் காகிதங்களில் எழுதப்பட்ட கேள்விகள் கொடுக்கப்பட்டன. அவற்றுக்குக் குர்ஆன், ஸுன்னாவினது ஆதாரங்களைக் கொண்டு பதிலளிக்க ஆரம்பித்தார். சபையில் சமூகம் அளித்திருந்தவர்களில் சிலர் அவருடன் கலந்துரையாடினர். அவர் எந்த ஒருவரையும் கேள்வி கேட்பதற்கு தடை செய்தது கிடையாது.

அவர் தனது பாடத்தின் இறுதியில் ‘நாங்கள் முஸ்லிம்களாகவும் ‘ஸலபி’களாகவும் (ஸலபிகள் என்றால் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் நடந்த வழியில் இருப்பவர்கள்) இருப்பதற்கு வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்றார்.

மேலும் சில மனிதர்கள் எங்களை வஹ்ஹாபிகள் என்று சொல்லுகிறார்கள். இது பட்டப்பெயர் சூட்டுவதாகும். அல்லாஹ் பின்வரும் தனது வார்த்தையின் மூலம் இதனைத் தடை செய்துள்ளான்.

“உங்களில் ஒருவர் மற்றவருக்கு (த் தீய) பட்டப்பெயர் சூட்ட வேண்டாம்” (49:11)

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களை, ஆரம்பகாலத்திலிருந்த சிலர் ‘ராபிழி’ (காரிஜிய்யா) வகுப்பைச் சேர்ந்தவர் என்று கருதினர். அதற்குப் பின்வருமாறு கவியொன்றின் மூலமே இமாமவர்கள் பதிலளித்தார்கள்.

‘முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தை நேசிக்கின்ற ஒருவன் ராபிழியாக இருப்பானென்றால், நானும் ஒரு ‘ராபிழி’ என்பதற்கு மனிதர்களும், ஜின்களும் சாட்சியாக இருக்கட்டும்’.

எங்களை எவரேனும் வஹ்ஹாபிகள் என்று சந்தேகம் கொள்கின்றவர்களாக இருந்தால் அவர்களுக்குப் பின்வருமாறு ஒரு கவிஞர் கூறுவதைக் கொண்டு நாங்கள் பதிலளிப்போம்.

‘அஹ்மதை (முஹம்மத் (ஸல்) அவர்களை)ப் பின்பற்றுகின்றவர் வஹ்ஹாபியாக இருப்பாரென்றால், நானும் என்னை ஒரு வஹ்ஹாபி என்று உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்’.

பாடம் முடிந்ததும், பாடம் நடத்தியவருடைய அறிவையும் பணிவான நடத்தையையும் கண்டு ஆச்சர்யமடைந்தவர்களாக சில வாலிபர்களுடன் வெளியேறினோம். இவர்தான் ஓர் உண்மையான ‘ஷைகு’ என்று அவ்வாலிபர்களில் ஒருவர் சொல்லக் கேட்டேன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.