இறையச்சம் இல்லாமல் போய் விடுமானால் சக்தியும் உபாயமும் அவற்றைப் பெற்றிருப்பவர்களுக்கே கேடாகி விடுகிறது. அவற்றை, பிறரின் பொருள்களை அபகரிப்பது போன்ற அக்கிரமத்திற்குப் பயன் படுத்துகிறார்கள். இந்த அக்கிரமத்தைச் சார்ந்ததுதான் நிலங்களை அபகரித்தல். இதன் முடிவு மிகப் பெரிய துன்பத்தில் கொண்டு போய் சேர்த்து விடும்.
‘ஒரு ஜாண் அளவு நிலத்தை அநியாயமாக ஒருவன் அபகரித்தால் இறுதி நாளில் அவன் ஏழு பூமிக்கடியில் அமிழ்த்தப்படுவான்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி.
‘ஒருவன் ஒரு ஜாண் நிலத்தை அநியாயமாக அபகரித்தால் மறுமையில் அதை ஏழு பூமிகளின் இறுதிவரை தோண்டும்படி அல்லாஹ் அவனை ஏவுவான். பின்னர் மக்களிடையே தீர்ப்புச் செய்யப்படும் வரை (அவன் அபகரித்த) அந்த நிலத்தை அவனுடைய கழுத்தில் மாலையாக அணிவித்து விடுவான்’ என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: யஃலா பின் முர்ரா (ரலி) நூல்: அஹ்மத்.
தப்ரானியின் அறிவிப்பில் …மறுமையில் அதை ஏழு பூமிகளின் அடிப்பாகம் வரைக் கொண்டு வரும்படி அல்லாஹ் அவனை ஏவுவான்… என்று உள்ளது.
நில அடையாளைக் கல்லை, நிலத்தின் எல்லைகளை மாற்றி அண்டை வீட்டாரின் நிலத்தை தன் நிலத்தோடு சேர்த்து விசாலப்படுத்திக் கொள்வதும் இதில் அடங்கும். பின்வரும் நபிமொழியும் இதையே சுட்டிக் காட்டுகிறது.
‘நில அடையாளக் கல்லை மாற்றுபவனை அல்லாஹ் சபிப்பானாக!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: முஸ்லிம்.