உலமாக்கள் (கற்றபடி செயல்படும் அறிஞர்கள்) நபிமார்களின் வாரிசு (அனந்திரக்காரர்)கள். நபிமார்கள் மக்களை முதலாவது அழைத்தது தௌஹீதின் பக்கமாகும். இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
“(உலகின் பல பாகங்களில் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பாருக்கும், நிச்சயமாக நாம் தூதரை (ரஸூலை) அனுப்பி இருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். வழி கெடுக்கும் ஷைத்தான்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். (என்று கூறினார்கள்) அல்லாஹ் நேரான வழியில் செலுத்தியோரும் அவர்களில் உண்டு; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (நபிமார்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எவ்வாறாயிற்று? என்பதைக் கவனித்துப் பாருங்கள்” (16:36)
இவ்வசனத்தில் ஷைத்தான்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ‘தாகூத்’ என்ற சொல்லின் அர்த்தமாவது: பொருத்தத்தை நாடி வணங்கப்படக்கூடிய அல்லாஹ் அல்லாத ஒவ்வொன்றுமாகும்.
இதனாலே தான் அல்லாஹ்வுடைய ரஸூல்மார்கள் தமது இஸ்லாமிய அழைப்புப் பணியை எதிலிருந்து ஆரம்பித்தனரோ, அதிலிருந்தே ஆரம்பிப்பது உலமாக்கள் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். எனவே, இந்த உலமாக்கள் தமது அழைப்புப் பணியை, எல்லா வணக்கங்களிலும் குறிப்பாக துஆக் கேட்பதில் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்பதின் பால் மக்களை அழைப்பது அவர்கள் மீது கடமையாகும்.
‘துஆ என்பது வணக்கமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)
இன்று அதிகமான முஸ்லிம்கள் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து, ஷிர்க்கில் மூழ்கியுள்ளனர். இவர்களுடைய துர்பாக்கியத்துக்கு இதுவே காரணமாகும். இவர்களுக்கு முன்னிருந்த சமுதாயங்களின் துர்பாக்கிய நிலைக்கும் இதுவே காரணமாய் அமைந்தது.அவர்கள் தமது தேவைகளை அல்லாஹ் அல்லாத தமது அவ்லியாக்களிடம் வேண்டிப் பிரார்த்தனை செய்த காரணத்தினாலேயே அல்லாஹ் அவர்களை அழித்தான்.
தௌஹீதுடைய நிலைபாட்டிலும், ஷிர்க்குக்கெதிரான போராட்டத்திலும் உலமாக்கள் பல பிரிவுகளாகப் பிரிகின்றனர்.
முதலாவது பிரிவு: அவர்கள் தௌஹீதையும் அதன் அவசிய தன்மையையும் அதன் பிரிவுகளையும் விளங்கிக் கொண்டனர்; ஷிர்க்கையும் அதன் பிரிவுகளையும் விளங்கிக் கொண்டனர்; அவர்கள் தமது கடமையை செய்தனர்; தௌஹீதையும் ஷிர்க்கையும் மக்களுக்கு தெளிவாக விளங்க வைத்தனர்.
இவர்களுடைய அத்தாட்சிகள் அல்குர்ஆனும் ஸஹீஹான ஸுன்னாவுமாகும். நபிமர்களி குறுக்கிட நேர்ந்தது போலவே இந்த உலமாக்களுக்கும் மக்களால் சுமத்தப்படுகின்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் குறுக்கிட நேர்ந்தது. அவர்கள் பொறுமையாக இருந்தனர். ஆனால் சடைந்து பின்வாங்கவில்லை. பின்வரும் அல்லாஹ்வுடைய சொல் அவர்களை அடையாளம் காட்டுகின்றது.
“(நபியே!) அவர்கள் (உம்மைப்பற்றி குற்றம் குறைகள்) கூறுவதைச் சகித்துக் கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி விடும்”. (73:10)
மிக நீண்ட காலத்துக்கு முன்னரே லுக்மான் (அலை) அவர்கள் தமது மைந்தனுக்குச் சொன்னதென்னவென்று குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“என்னருமை மகனே! நீ தொழுகையைக் கடைபிடித்தொழுகு. நன்மையான காரியங்களை கொண்டு ஏவி, பாபமான காரியங்களிலிருந்து (மனிதர்களை) விலக்கி வை. உனகேற்படும் கஷ்டங்களை நீ பொருமையுடன் சகித்துக் கொள். செயல்களில் இது மிக்க வீரமுள்ளதாகும்” (31:17)
இரண்டாவது பிரிவு: இஸ்லாத்தின் அஸ்திவாரமான தௌஹீதின்பால் மக்களை அழைப்பதில் சில உலமாக்கள் அலட்சியமாக நடந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிம்களுக்கு அகிதாவை (அடிப்படைக் கொள்கையை) சரியான முறையில் சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக அவர்களை தொழுகையின்பால் அழைக்கவும், சட்டங்களையும், ஜிஹாதையும் பற்றிச் சொல்லிக் கொடுக்கவும் ஈடுபட்டனர். இவர்கள் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை செவி தாழ்த்தவில்லை போலும்.
“(முன்சொன்ன நபிமார்கள் யாவரும் சென்ற) இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தன் அடியார்களில் விரும்பியவர்களை அதில் செலுத்துகின்றான். அவர்கள் (இதனை தவிர்த்து, அல்லாஹ்வுக்கு) இணை வைத்தாலோ, அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் யாவும் அவர்களை விட்டு அழிந்து விடும்” (06:88)
இரண்டாவதாகக் கூறப்பட்ட மேற்சொன்ன உலமாக்கள், முந்தைய இறைதூதர்கள் செய்தது போலவே தமது பிரசாரத்தில் தௌஹீதை அதல்லாதவைகளை விட முற்படுத்தி இருப்பார்களென்றால் அவர்களுடைய பிரசாரம் வெற்றி பெற்றிருக்கும். அல்லாஹ் தனது நபிமார்கள், ரஸூல்மார்களுக்கு உதவி செய்தது போலவே இவர்களுக்கு உதவி செய்திருப்பான். அல்லாஹ் இதுபற்றி பின்வருமாறு கூறுகின்றான்.
“(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை (ப் பூமிக்கு) அதிபதிகளாக்கிய பிரகாரமே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதிகளாக்கி வைப்பதாகவும், அவன் திருப்தியடைந்த அவர்களுடைய மார்க்கத்தில் அவர்களை ஸ்திரப்படுத்தி வைப்பதாகவும், இவர்களுடைய பயத்தை அமைதியும் பாதுகாப்புமாக மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். (இவ்வாறு செய்த பின்னர்) அவர்கள் எனக்கு யாதொன்றையும் இணையாக்காது என்னையே வணங்கவும். இதன் பின்னர் உங்களில் எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாபிகள்தாம்” (24:55)
‘அல்லாஹ்வின் உதவி கிடைப்பதற்குரிய அடிப்படை நிபந்தனை தௌஹீதாகவே இருக்க வேண்டும்’ என்பதை மேலேயுள்ள ஆதாரங்கள் உணர்த்தக் கூடியதாக இருக்கின்றன.
மூன்றாவது பிரிவு:- இன்னும் சில உலமாக்கள் மக்களுடைய எதிர்ப்புக்குப் பயந்தவர்களாகவும் தமது தொழில் அல்லது அந்தஸ்து பறிக்கப்படும் என்று பயந்தவர்களாகவும் தௌஹீதுப் பிரசாரத்தையும் ஷிர்க்குக்கெதிரான போராட்டத்தையும் கைவிட்டு விட்டார்கள். மக்களுக்கு எத்திவைக்குமாறு அல்லாஹ் சொன்னவற்றை இவர்கள் மறைத்து விட்டார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவது பின்வருமாறு அமைந்துள்ளது.
“நேர்வழியையும் தெளிவான அத்தாட்சியையும் நாம் அருளி, அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்தி (க் கூறிய) பின்னும், எவர்கள் அவற்றை மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான்; (மற்றும்) சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர்” (2:159)
உண்மையான இஸ்லாமியப் பிரசாரகர் (தாஈ)களைப் பற்றி பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்.
“(முன்னைய நபிமார்களாகிய) அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒரு)வனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே நபியே! நீரும் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். இதைப்பற்றி அவர்களிடம் கேள்வி) கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்” (33:39)
அறிவை மறைப்பவர்களின் நிலை மறுமையில் எவ்வாறிருக்கும் என்பது பற்றி அல்லாஹ்வுடைய ரஸூல் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
‘எவன் (தன்னிடமுள்ள) ஓர் அறிவை மறைக்கின்றானோ, அவனுக்கு அல்லாஹ் (மறுமையில்) நெருப்பினாலான கடிவாளத்தைப் பூட்டுவான்’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)
நான்காவது பிரிவு:- இன்னும் சில உலமாக்களும், ஷைகு (தலைவர்)களும் இருக்கின்றனர். அவர்கள் தௌஹீதுப் பிரசாரத்தையும், அல்லாஹ்விடம் மட்டுமே தேவைகளைப் பெற்றுக் கொள்ள பிரார்த்திக்க வேண்டுமென்று சொல்கின்றவர்களையும் எதிர்க்கின்றனர். அல்லாஹ் அல்லாத நபிமார்கள் அவ்லியாக்கள் ஆகியோரிடம் கேட்பதை ஆமோதிக்கின்றனர்.
அல்லாஹ் அல்லாதவர்களை உதவிக்கு அழைப்பது பற்றி எச்சரிக்கையாக வந்துள்ள குர்ஆன் வசனங்கள் (கலிமாச் சொல்லாத) முஷ்ரிக்குகளுக்கு உரியது என்று கூறுகின்றனர். முஸ்லிம்கள் எவரும் முஷ்ரிக்குகளாக இருக்க முடியாது என்றும் கூறுகின்றனர். இவர்கள் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தைச் செவிதாழ்த்தவில்லை போலும்.
“எவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, தங்கள் ஈமானுடன் யாதொரு ‘ளுல்ம்’ஐயும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக அபயமுண்டு; அவர்கள் தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்” (6:82)
மேற்காட்டிய மறைவசனத்திலுள்ள ‘ளுல்மு’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘ஷிர்க்கு’ என்றே பொருள் உண்டு. பின்வரும் இறைவசனம் அதற்கு ஆதாரமாய் அமைகின்றது.
“நிச்சயமாக இணை வைப்பது மகத்தான ஒரு ‘ளுல்மு’ (அக்கிரமமாகும்)” (31:13)
மேற்காட்டிய வசனத்துக்கு அமைய இக்காலத்தில் அதிகமான இஸ்லாமிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் ஷிர்க்கில் வீழ்ந்து விடுகின்றனர். இவற்றை ஆகுமாகின்றவர்கள், அல்லாஹ் அல்லாதவர்களை உதவிக்கு அழைப்பதையும் (பெரிய மனிதர்கள் என்று மக்கள் கருதுகின்றவர்களை) பள்ளிவாசலினுள் அடக்கஞ் செய்வதையும் கப்றுகளைச் சூழ வலம் வருவதையும் அவ்லியாக்களுக்காக நேர்ச்சை செய்வதையும் இதல்லாத இன்னும் பல பித்அத்துகள், தடுக்கப்பட்ட கருமங்கள் போன்றவற்றையும் ஆகுமாக்குகின்றனர். இத்தகையோரைப் பற்றி நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது.
‘என்னுடைய உம்மத்தின் மீது நான் பயப்படுவதெல்லாம் (மக்களை) வழி கெடுக்கக்கூடிய தலைவர்களைத்தான்’ ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)
சில காலத்துக்கு முன்னிருந்த எகிப்து அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவரிடம் ‘கப்றை நோக்கித் தொழுவது ஆகுமா?’ என்று கேள்வி கேட்டபோது, ஏன் கூடாது? மதினாவில் மஸ்ஜிதுந்நபவியில் தொழுகின்ற, மக்கள் நபி (ஸல்) அவர்களுடைய கப்றை நோக்கித் தொழுவதில்லையா? என்று பதிலுக்காகக் கேளியொன்றைக் கேட்டுப் பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள் கப்றை நோக்கித் தொழுவதைத் தடை செய்துள்ளார்கள். அவர்கள் அடக்கஞ் செய்யப்பட்டது பள்ளிவாசலில் அல்ல. ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டின் ஒரு பகுதியில் என்பதை அவ்வறிஞர் மறந்து விட்டார் போலும். நபியவர்களுடைய துஆக்களில் ஒரு துஆ பின்வருமாறு அமைந்துள்ளது. (கண்மூடித்தனமாக இஸ்லாமிய விளக்கமளிக்கும் அறிஞர்களுக்கு இந்த துஆ ஒரு எச்சரிக்கையாகவும் நல்லுபதேசமாகவும் அமையட்டும்).
‘அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின்-இல்மில்லா யன்பஉ’ (அல்லாஹ்வே! பயனற்ற கல்வியிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்). ஆதாரம்: முஸ்லிம்.
(அதாவது அவ்வாறான கல்வியை நான் கற்கவும் மாட்டேன்; பிறருக்குக் கற்பிக்கவும் மாட்டேன்; அதனைக் கொண்டு செயல்படவும் மாட்டேன்; எனது பண்பாடுகளில் அது வெளிவராதிருக்க வேண்டும் என்றே மேற்கண்ட துஆ பொருள்படும்.)
மனிதர்கள் ஷைகுகளின் சொல்லை நம்பி, அவர்களுக்கு வழிபடுகிறார்கள். இவர்கள் பின்வரும் நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கு மாறு செய்கின்றவர்களாகவே இருக்கின்றனர்.
‘படைத்தவனுக்கு மாறு செய்வதிலே படைக்கப்பட்டவனுக்கு வழிபடுவதென்பது கிடையாது’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)
இம்மக்கள் தமது பிழையான வழிபாட்டைக் குறித்து மறுமையில் கவலைப்படுவார்கள். ஆனால், அந்தக் கவலையால் எவ்விதப் பயனுமில்லை. காஃபிர்களையும் அவர்களுடைய வழியில் நடப்பவர்களையும் பற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்.
“அவர்களுடைய முகங்களைப் புரட்டிப் புரட்டி நெருப்பில் பொசுக்கும் நாளில் எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டாமா? (அவனுடைய) தூதருக்கும் வழிபட்டிருக்க வேண்டாமா? என்று கதறுவார்கள். என்றி எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்குமே வழிபட்டோம். அவர்கள் எங்களைத் தப்பான வழியில் செலுத்தி விட்டார்கள். (ஆகவே) ‘எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இருமடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்கள் மீது மகத்தான சாபத்தை இடு’ என்று கூறுவார்கள்” (33: 66,67,68)
இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் தனது தபிஸீரில் மேற்காட்டிய வசனங்களுக்குப் பின்வருமாறு விளக்கமளித்து உள்ளார்கள்.
அதாவது, அல்லாஹ்வே! தலைவர்களுக்கும், பெரியார்களுக்கும், மஷாயிகுகளுக்கும் வழிபட்டு உனது ரஸூலுக்கு மாறு செய்து விட்டோம்; நாங்கள் நம்பியவர்களிடம் ஏதாவது சக்திகள் இருக்குமென உறுதியாக நம்பினோம்; (ஏமாற்றமடைந்தோம்;) அவர்களிடமோ எதுவுமே இல்லை என்பது இப்பொழுது தெளிவாகி விட்டது.