தௌஹீதின் முக்கியத்துவம்

அல்லாஹ் உலகோர்களைத் தனக்கு வழிபடுவதற்காவே படைத்துள்ளான். அல்குர்ஆன் தனது அதிகமான அத்தியாயங்களில் ஏகத்துவக் கொள்கையையே வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. தனிமனிதனுக்கும், சமூகத்துக்கும் ஷிர்க்குடைய தீய விளைவுகளைப் பற்றி வலியுறுத்திக் கூறிக் கொண்டிருக்கின்றது. இது, இம்மையில் அழிவுக்கும், மறுமையில் நிரந்தர நரக வாழ்க்கைக்கும் காரணமாய் அமைகின்றது.

ரஸுல்மார்கள் அனைவரும் தமக்கு அல்லாஹ் கட்டளையிட்டபடி, தௌஹீதைக் கொண்டே பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறியுள்ளான்.

“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், நிச்சயமாக என்னைத் தவிர வேறு நாயனில்லை; எனவே என்னையே நீங்கள் வணங்குங்கள் என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை” (21:25)

எங்கள் பால் அனுப்பப்பட்ட ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த 13 வருடகாலங்களில் 12 வருடங்களாகத் தௌஹீதையே போதித்துக் கொண்டிருந்தார்கள். அக்காலங்களில் அல்லாஹ் அருளியவற்றில் பின்வரும் வசனமும் இடம் பெற்றுள்ளது.

“(நபியே! ஜனங்களுக்கு) நீர் கூறும்: நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் எனது இறைவனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்” (72:20)

நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பின்பற்றியோரைச் சிறுபிராயம் முதலே தௌஹீதுடைய வழியில் பயிற்றுவிப்பவர்களாக இருந்தனர். தனது சாச்சாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்வருமாறு அறிவுரை கூறினார்கள்.

‘நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! உதவி கோரினாலும் அல்லாஹ்விடமே உதவி கோருவாயாக! ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

தௌஹீத் என்பது இஸ்லாம் அதன்மீது கட்டி எழுப்பப்பட்ட அடிப்படை அஸ்திவாரம் என்றும், இதல்லாத வேறெந்த வணக்கமாயினும் இது இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறுமளவு இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள், தௌஹீதைக் கொண்டே இஸ்லாமியப் பிரசாரத்தை ஆரம்பிக்குமாறு தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். முஆத் (ரலி) அவர்களை நபியவர்கள் யமனுக்கு அனுப்பியபோது,

‘முஆதே! நீ மக்களை இஸ்லாத்தின்பால் அழைக்கும் போது முதலாவதாக ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ வைக் கொண்டே அழைப்பீராக!’ என்று கூறி அனுப்பினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

‘லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்று கூறுவதிலேயே தௌஹீத் உருவம் பெறுகின்றது. அதன் அர்த்தம் ‘அல்லாஹ்வையன்றி வணக்கத்துகுரியவன் வேறெவனுமில்லை என்பதும், வணக்கம் என்பது அவனுடைய ரஸூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்ததாகும்’ என்பதுமாகும்.

இந்த கலிமாதான் காஃபிர்களை இஸ்லாத்தினுள் பிரவேசிக்கச் செய்கின்றது. ஏனென்றால் இது சுவர்க்கத்தின் திறவுகோலாகும். இதனை மொழிந்தவன் இதற்கு மாறான செயல்களைக் கொண்டு இதனை முறித்து விடாதிருந்தால், இது அவனை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்கின்றது.

குறைஷிக் காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அரசாட்சி, பணம், அழகியபெண் போன்றவற்றைத் தருவதாகவும், அவர்களது தௌஹீதுப் பிரசாரத்தைக் கைவிட்டுவிட்டு, சிலை வணக்கத்தை எதிர்ப்பதை விடுமாறும் கூறினார்கள். அவை எதனையும் அவர்களிடமிருந்து நபியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

13 வருடங்களுக்குப் பின்னால் தௌஹீதுக்கு வெற்றி கிடைக்கும்வரை தானும், தனது தோழர்களும், பிரசாரத்தில் நிலையாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். இதன் பின்னால் தான் மக்கா வெற்றிக் கொள்ளப்பட்டு, சிலைகள் உடைத்துத் தகர்க்கப்பட்டன. அவ்வேளையில் அல்லாஹ்வுடைய ரஸூல் (ஸல்) அவர்கள், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது; நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” (17:81) என்ற அல்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.

‘தௌஹீத்’ என்பது ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையின் தொழிற்பாடாகும். அவன் வாழ்க்கையைத் தௌஹீதைக் கொண்டே ஆரம்பிக்கிறான். அதனை முடிப்பதும் தௌஹீதை (ஸகராத்தின் போது கலிமாவை)க் கொண்டுதான். சமூக வாழ்க்கையில் அவனது தொழில் தௌஹீதை நிலைநாட்டுவதும், அதன்பால் அழைப்பு விடுப்பதுமாகும். ஏனென்றால் தௌஹீத் என்பது மூமின்களை ஐக்கியப்படுத்தி கலிமதுத்தௌஹீதில் ஒன்று படுத்துகின்றது. இவ்வுலக வாழ்வில், கலிமதுத்தௌஹீத் எமது கடைசிப் பேச்சாக அமைவதற்கு அல்லாஹ்விடம் கெஞ்சிக் கேட்போமாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.