இஸ்தஇன் பில்லாஹி வஹ்தஹூ

(அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கோருவீராக)

1. ‘நீ கேட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே கேள்! உதவி கோரினால் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கோரு!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

இமாம் நவவி (ரஹ்) அவர்களும், இப்னுஹஜர் ஹைதமி (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘இவ்வுலக தேவையாயினும் மறு உலக தேவையாயினும் உனக்குத் தேவையேற்படும் போது, அல்லாஹ்விடம் மட்டுமே கேள்! குறிப்பாக அல்லாஹ் அல்லாத எவராலும் நிறைவேற்ற முடியாதவற்றை அவனிடம் மட்டுமே கேள். உதாரணத்திற்கு நோயைக் குணப்படுத்தல், உணவு தேடல், நேர்வழிப் படுத்துமாறு வேண்டுதல் போன்றவை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானவை ஆகும்’ இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

“அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைத்தால் அதனை நீக்குவோர் அவனையன்றி வேறெவருமில்லை. (அவ்வாறே) உமக்கு யாதொரு நன்மை நேரிடினும் (அதைத் தடுத்து விடக் கூடியவன் எவனுமில்லை) அவன் யாவற்றின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்” (6:17).

2. எவன் அத்தாட்சியை விரும்புகிறானோ, அவனுக்கு அல்குர்ஆன் அத்தாட்சிக்குப் போதுமானதாகும். எவன் தன்னை இரட்சிக்கும் ஒருவனைப் பெற விரும்புகிறானோ, அவனுக்கு அல்லாஹ் போதுமானவன். எவன் தனக்கு நல்லுபதேசம் புரிகின்ற ஒருவனைப் பெற விரும்புகிறானோ, அவனுக்கு மௌத்து போதுமானதாகும். இவற்றிலிருந்து எதுவும் அவனுக்குப் போதுமென்ற நிலை ஏற்படவில்லையோ அவனுக்கு நரகமே போதுமானதாகும். இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுவதைக் காணலாம்.

“தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனல்லவா?” (39:36)

3. ‘அல்லாஹ்விடம் மட்டுமே தம் தேவைகளைக் கேட்டுப் பெற வேண்டும்’ என்பது பற்றி அப்துல் காதிருல் ஜீலானிய்யி (ரஹ்) அவர்கள் தமது பத்ஹுர்ரப்பானியில் பின்வருமாறு கூறுகிறார்கள்.

‘நீங்கள் அல்லாஹ்விடமே கேளுங்கள்; அவனல்லாதவனிடம் கேளாதீர்கள்; அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கோருங்கள்; அவனல்லாத எவரிடமும் உதவி கோராதீர்கள். உனக்கென்ன கேடு பிடித்து விட்டது? (அவனல்லாதவரிடம் கேட்டு விட்டு) நாளை எந்த முகத்துடன் அவனைச் சந்திக்கப் போகிறாய்? இம்மையில் நீ அவனு(அல்லாஹ்வு)டன் போட்டி போடுகிறாய். அவனைப் புறக்கணித்து விட்டு அவனுடைய படைப்புகளிடம் முன்னோக்குகிறாய்; அவனுக்கு இணை கற்பிக்கிறாய். உனது தேவைகளைப் படைப்புகளிடம் முன்வைத்து உனது பொறுப்புகளை அவர்களிடம் காட்டுகிறாய்.

உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் தரகர்களை அகற்றுங்கள். உங்களிடத்தில் அந்தத் தரகர்களை வைத்திருப்பது ஒரு பைத்தியகாரத்தனமாகும். ஆட்சியோ, அரசுரிமையோ, செல்வமோ, கண்ணியமோ அல்லாஹ்வுக்கன்றி வேறெவருக்குமில்லை. படைப்புகளைக் கைவிட்டு விட்டு அல்லாஹ்வுடன் இருந்து கொள்ளுங்கள். அதாவது படைப்புகளின் (உண்மைக்கு முரண்பட்ட) வார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்காது அல்லாஹ்வுடனேயே இருந்து கொள்ளுங்கள்.

4. மார்க்கம் அனுமதிக்கின்ற உதவிகோரல்: உனது கஷ்டங்களை, தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அல்லாஹ்விடம் உதவிகோரல் என்பதற்கு மார்க்கம் அனுமதிக்கின்ற உதவிகோரல் எனப்படும். அல்லாஹ் அல்லாத நபிமார்கள், மரணித்த நல்லடியார்கள், (சத்தத்தைக் கேட்க முடியாத தூரத்தில்) மறைவிலுள்ள உயிருள்ளவர்கள் போன்றவர்களிடம் உதவிகோரல் என்பது இணை கற்பிக்கக்கூடிய உதவிகோரலாகும்.

அல்லாஹ் அல்லாத இவர்கள் நன்மையோ, தீமையோ செய்வதற்குச் சக்திபெற மாட்டார்கள். துஆவையும் செவிதாழ்த்த மாட்டார்கள். அவர்கள் செவிதாழ்த்தினால் கூட எமக்குப் பதிலளிக்க மாட்டார்கள்.

பள்ளிவாசலொன்றைக் கட்டுவது, அல்லது பொருளினால் ஒரு உதவியைச் செய்வது போன்ற உயிருள்ளவர்கள் செய்யச் சக்தியுள்ளவற்றை அவர்களிடம் கேட்பது அனுமதிக்கப்பட்டதாகும். மரணித்தவர்களிடம் கேட்பது இதுவும் சமமாக மாட்டாது. உயிருள்ளவர்கள் தங்களுக்குள் உதவி உபகாரங்கள் செய்து கொள்வது பற்றி அல்லாஹ்வும் அவனுடைய ரஸுலும் பின்வருமாறு கூறுகின்றனர்.

“நன்மை செய்வதிலும் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாயிருங்கள்” (5:2)

‘ஓர் அடியான் தனது சகோதர அடியானுக்கு உதவும் காலமெல்லாம், அவனுக்கு அல்லாஹ் உதவுகின்றவனாகவே இருக்கின்றான்’ ஆதாரம்: முஸ்லிம்

உயிருள்ளவர்களிடம் உதவி பெற்றுக்கொள்ள அனுமதியுள்ள வழிகளின் உதாரணங்களிற் சிலவற்றைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

“(மூஸா (அலை) அவர்கள் ஒரு நாளன்று,) ஜனங்கள் அயர்ந்து இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அங்கு அவர் கண்டார். ஒருவன் அவரது இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவருடைய விரோதிகளைச் சார்ந்தவன். விரோதிக்கு எதிராக உதவி செய்யுமாறு அவருடைய இனத்தைச் சேர்ந்தவன் அவரிடத்தில் வேண்டிக் கொண்டான்” (28:15)

“(உங்கள்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கும் (யஃஜூஜ் மஃஜூஜ் என்னும்) அவர்களுக்கு இடையில் உறுதியான ஒரு (மதிற் சுவரைத்) தடுப்பாக எழுப்பி விடுகிறேன். (என்று துல்கர்னைன் (அலை) அவர்கள் தனது ஜனங்களை நோக்கிக் கூறினார்கள்.) (18:95)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.