விற்பனைப் பொருளின் குறைகளை மறைத்தல்

‘ஒரு உணவுக் குவியலின் பக்கம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அதில் அவர்கள் தம் கையை நுழைத்தபோது அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. உணவு வியாபாரியே! என்ன இது? என்று வினவினார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் பட்டு விட்டது என்று பதிலளித்தார். மக்கள் பார்க்கும் விதமாக உணவுப் பொருளின் மேற்பகுதியில் அதைப் போட்டிருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

இறையச்சமில்லாத பெரும்பாலான வியாபாரிகள், பொருளின் குறையை மறைக்க பல விதத்திலும் முயலுகின்றனர். அதன் மீது டேப் ஒட்டி விடுகின்றனர். அல்லது அதைப் பெட்டியின் அடியில் போட்டு விடுகின்றனர். அல்லது ஏதாவது ரசாயனத்தைப் பயன்படுத்தி அழகுபடுத்தி விடுகின்றனர். வாகனத்தில் இஞ்சினின் ஆரம்ப சத்தத்தில் எழக்கூடிய குறையை மறைத்து விடுகின்றனர். குறைகளுடையப் பொருளை ஒருவன் வாங்கிச் சென்றால் அது சீக்கிரம் பழுதாகி விடுகிறது. இன்னும் சிலர் பொருள் காலாவதி ஆகக்கூடிய தேதியை மாற்றி விடுகின்றனர். அல்லது பொருளைப் பார்ப்பதற்கோ பரிசோதிப்பதற்கோ அனுமதிப்பதில்லை. வாகனங்களை அல்லது கருவிகளை விற்பவர்களில் பெரும்பாலோர் அவற்றின் குறைகளைத் தெளிவு படுத்துவதில்லை. இவை யாவும் விலக்கப்பட்டவையாகும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்குச் சகோதரனாவான். தன் சகோதரனுக்கு குறையுள்ள பொருளை விற்கின்ற எந்த முஸ்லிமுக்கும் அதைத் தெளிவு படுத்தாமலிருப்பது ஹலால் இல்லை’ அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: இப்னுமாஜா.

சிலர் கருதுகின்றனர். வாகனங்களை ஏலம் விடும்போது நான் இரும்புகளை விற்கப் போகிறேன் என்று மக்களிடம் கூறி விட்டால் தம்முடைய பொறுப்பு நீங்கி விடும் என்று. (பழுதான வாகனங்களை வீற்ற குற்றம் வராது என்று) இப்படிப்பட்ட வியாபாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது போல அபிவிருத்தியை – பரக்கத்தை அழித்து விடக் கூடியதாகும்.

‘விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத்தை விட்டும்) பிரிந்து செல்லாத வரை வியாபாரத்தை ரத்து செய்ய உரிமை பெற்றவராவர். அவ்விருவரும் உண்மை கூறி (எதையும் மறைக்காது) தெளிவு படுத்தினால் அவர்களுடைய வியாபாரத்தில் அவர்களுக்கு அபிவிருத்தி அளிக்கப்படும். அவ்விருவரும் பொய் கூறி எதையேனும் மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் அபிவிருத்தி அழிக்கப்படும் (நபிமொழி) அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) நூல்: புகாரி.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
This entry was posted in எச்சரிக்கை. Bookmark the permalink.