மறுமை நாள் (அத்தியாயம்-6)

மறுமை நாள் எப்போது தோன்றும்?

மறுமை நாள் எப்போது தோன்றும்? இந்தக் கேள்விக்கான பதிலை ஒரு முஸ்லிம் எப்படி விளங்கிக் கொள்வது என்பது மறுமை நாள் பற்றிய அறிவில் அடுத்த முக்கிய அம்சமாகும். மறுமை எப்போது தோன்றும் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்த உண்மையாகும். அல்லாஹ் அதுபற்றி தன் தூதர்களுக்குக் கூட அறிவிக்கவில்லை.

“மக்கள் உம்மிடம் அந்த இறுதி வேளை பற்றி கேட்கின்றனர். அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது என நீங்கள் சொல்வீர்களாக!” (ஸூரா அஹ்ஜாப் : 33)

ஜிப்ரீல் (அலை) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ‘மறுமை நாள் எப்போது நிகழும்?’ எனக் கேட்டபோது, ‘அதுபற்றிக் கேட்கப்படுபவர் கேட்பவரை விட கூடுதலாக எதுவும் அறிந்தவர் அல்லர்‘ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஆதார நூற்கள்: ஸஹீஹ் முஸ்லிம், இமாம் நவவி (ரஹ்) அவர்களின் 40 ஹதீஸ்கள் தொகுப்பின் 2வது ஹதீஸ். மேற்கூறப்பட்டது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி.)

இங்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) போன்ற ஒரு மலக்குக்கும் கூட அதுபற்றி எதுவும் தெரியாது என்கிறார்கள். இவ்வாறு மறுமை நாள் நிகழும் அந்த நாள் முழுமையாக மறைக்கப்பட்டு விட்டது. எனினும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறுதி நபியாக அனுப்பப்பட்டமை உலகத்தின் ஆயுளில் இன்னும் எஞ்சியிருக்கும் காலம் கொஞ்சமே எனக் காட்டுகிறது. இதனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு விளக்கினார்கள்: Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-6)

இரு முஸ்லீம்கள் வாளால் போரிட்டால்….

1834. இவருக்கு (அலீ (ரலி)க்கு) உதவுவதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) என்னைச் சந்தித்து ‘எங்கே செல்கிறீர்?’ எனக் கேட்டார். நான் இவருக்கு உதவப் போகிறேன் என்றேன். அதற்கவர் ‘நீர் திரும்பிச் செல்லும்; ஏனெனில், ‘இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, ‘அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்’

புஹாரி : அஹ்னஃப் இப்னு கைஸ் (ரலி).

1835. ஒரே வாதத்தை முன் வைக்கிற இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை இறுதி நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3608 அபூஹுரைரா (ரலி).

1836. (ஒரு முறை) எங்களிடையே நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விடவில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்து விட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன். தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.

புஹாரி : 6604 ஹூதைஃபா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , | Comments Off on இரு முஸ்லீம்கள் வாளால் போரிட்டால்….

குழப்பங்கள் மிகுந்து காணப்படுதல்.

1832. நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள். பிறகு, ‘நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள் வீடுகள் நெடுகிலும் (வருங்காலத்தில்) குழப்பங்கள் விளையக்கூடிய இடங்களை மழைத்துளிகள் விழும் இடங்களைப் (பார்ப்பதைப்) போன்று பார்க்கிறேன்!” என்று கூறினார்கள்.

புஹாரி : 1878 உஸாமா (ரலி).

1833. குழப்பங்கள் மிகுந்த அக்காலத்தில் அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அதை அடைகிறவனை அது வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது, புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெறட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி : 3601 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on குழப்பங்கள் மிகுந்து காணப்படுதல்.

கஃபாவைத் தாக்க வரும் படை.

1831. ”ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!” என கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!” என்றார்கள்.

புஹாரி : 2118 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on கஃபாவைத் தாக்க வரும் படை.

குழப்பங்கள்: யஹ்ஜூஜ் மஹ்ஜூஜ் வருகை.

குழப்பங்களும் கியாமநாளின் வருகையும்.

1829. நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டு விட்டது” என்று தம் கட்டைவிரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் ‘இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்; தீமை பெருகிவிட்டால்.” என்றார்கள்.

புஹாரி : 3346 ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி).

1830. நபி (ஸல்) அவர்கள், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவரிலிருந்து அல்லாஹ் இதைப்போல் (சிறிது) திறந்து விட்டான்” என்று கூறி தம் கையால் (அரபி எண் வடிவில்) 90 என்று மடித்துக் காட்டினார்கள்.”

புஹாரி : 3347 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on குழப்பங்கள்: யஹ்ஜூஜ் மஹ்ஜூஜ் வருகை.

மரணித்தவருக்கு சொர்க்கமா நரகமா என அறிவிக்கப் படுதல்.

1822. ”உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிறவரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1379 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1823. ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும்போது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, ‘யூதர்கள் அவர்களின் கப்ருகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” எனக் கூறினார்கள்.

1824. ”ஒர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப்பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத் (ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறை நம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான். அவனிடம் (நீகெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான். ”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்” என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1374 அனஸ் (ரலி).

1825. கப்ரில் ஒரு இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரண்டு வானவர்களைக்) கொண்டு வரப்படும் (கேள்வி கேட்கப்படும்); பிறகு (அவர்களிடம்) அந்த இறைநம்பிக்கையாளர், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்” என சாட்சி கூறுவார். இதையே அல்லாஹ் ‘நம்பிக்கை கொள்கிறவர்களை இவ்வுலக சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்” (திருக்குர்ஆன் 14:27) எனக் குறிப்பிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1369 பராவு இப்னு ஆஸிப் (ரலி).

1826. பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில்; இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாள்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, ‘இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?’ என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை” என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா (ரஹ்) கூறினார்கள்: அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப்படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி (ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான்.

புஹாரி :3976 அபூதல்ஹா (ரலி).

1827. ‘நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) தமக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்து கொள்ளும்வரை மீண்டும் மீண்டும் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ‘(மறுமையில்) விசாரணை செய்யப்பட்டவர் தண்டிக்கப்படுவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, ‘மிக எளிதான விசாரணையாகவே விசாரிக்கப்படுவார்’ என்று அல்லாஹ் (திருக்குர்ஆன் 84:08) கூறவில்லையா?’ எனஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அது (ஒருவர் செய்தவற்றை அவருக்கு) எடுத்துக் காட்டுவதாகும். எனினும், எவனிடம் துருவி விசாரிக்கப்படுகிறதோ அவன் அழிந்து விடுவான்’ என்று கூறினார்கள்”.

புஹாரி : 103 இப்னு அபீ முலைக்கா (ரலி).

1828. ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்காக ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7108 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , , | Comments Off on மரணித்தவருக்கு சொர்க்கமா நரகமா என அறிவிக்கப் படுதல்.

கியாம நாளின் திகில்கள்.

1820. நபி (ஸல்) அவர்கள், ‘(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள்” எனும் (திருக்குர்ஆன் 83:6 வது) இறை வசனத்தை ஓதிவிட்டு, ‘அன்று தம் இரண்டு காதுகளின் பாதிவரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப்போய் விடுவார்” என்று கூறினார்கள்.

புஹாரி : 4938 இப்னு உமர் (ரலி).

1821. மறுமை நாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6532 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on கியாம நாளின் திகில்கள்.

மறுமை நாளில் மனிதர்களின் நிலை.

1817. ”நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் ‘இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் ‘அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று கூறினார்கள்.

புஹாரி : 6527 ஆயிஷா (ரலி).

1818. நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்றபடி உரையாற்றினார்கள். அப்போது (பின் வருமாறு) கூறினார்கள்: (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள். அல்லாஹ் கூறினான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்வோம். (திருக்குர்ஆன் 21:104). மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். மேலும், என் சமுதாயத்தாரில் சில பேர் இடப்பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் ‘என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்பேன். அப்போது அல்லாஹ் ‘இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்பான். அப்போது நான், நல்லடியார் (நபி ஈஸா (அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று ‘நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்” (திருக்குர்ஆன் 05:117) என்று சொல்வேன். அப்போது ‘இவர்கள் தம் குதிகால்(சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும்.

புஹாரி : 6526 இப்னு அப்பாஸ் (ரலி).

1819. (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள்.அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும் போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீஅவர்களுடனேயே இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6522 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , | Comments Off on மறுமை நாளில் மனிதர்களின் நிலை.

அக்கிரமக்காரர்கள் பெருமையடிப்போர் நரகில்.

1809. சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னது. சொர்க்கம், ‘எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்” என்று கூறியது. அல்லாஹ் சொர்க்கத்திடம், ‘நீ என்னுடைய அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்” என்று கூறினான். நரகத்திடம் ‘நீ வேதனை(க்காகத்)தான். உன்மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்” என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தன்னுடைய காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் ‘போதும்! போதும்!” என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை. மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.

புஹாரி : 4850 அபூஹூரைரா (ரலி).

1810. (நரகவாசிகள் நரகத்தின் போடப்படுவார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால்) ‘இன்னும் அதிகம் இருக்கிறதா? ‘என்று கேட்டுக் கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தம் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது ‘போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!” என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6661 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1811. (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டு வரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், ‘சொர்க்கவாசிகளே!’ ‘இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்பார். அவர்கள், ‘ஆம்! இதுதான் மரணம்” என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: ‘நரகவாசிகளே! ‘என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் ‘இதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்பார். அவர்கள், ‘ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்” என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டு விடும். பிறகு அவர், ‘சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை” என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், ‘(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்” எனும் (திருக்குர்ஆன்19:39வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், ‘இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்” என்றும் கூறினார்கள்.

புஹாரி : 4730 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1812. சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு ‘மரணம்’ (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டு வரப்பட்டு சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர் ‘சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது. நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது” என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்குமேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6548 இப்னு உமர் (ரலி).

1813. (நரகத்தில்) இறை மறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ளதூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6551 அபூஹுரைரா (ரலி).

1814. நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள், பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

1815. (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியதை செவியுற்றேன். அப்போது அவர்கள், ‘(இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘அவர்களிலுள்ள துர்பாக்கியசாலி ஒருவன் முன்வந்தபோது…” எனும் (திருக்குர்ஆன் 91:12 வது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, ‘அபூ ஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத் (தைக் கொல்வ)துக்காக முன் வந்தான்” என்று கூறினார்கள். மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு, (உடலிலிருந்து பிரியும்) வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, ‘(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?’ என்று கேட்டபடி உபதேசித்தார்கள்.

புஹாரி : 4942 அப்துல்லாஹ் பின் ஸமா (ரலி).

1816. நபி (ஸல்) அவர்கள், ‘குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு ஆமிர் இப்னிலுஹை என்பவரை, நரகத்தில் தன் குடலை இழுத்துச் சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர் தான் முதன் முதலில் ‘சாயிபா’ ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்து கொண்டிருக்கும்படி) விட்டவர்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3521 அபூ ஹுரைரா(ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , , | Comments Off on அக்கிரமக்காரர்கள் பெருமையடிப்போர் நரகில்.

நரக வேதனையின் கடுமை.

1808. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்” என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப் படுத்தப்) போதுமானதாயிற்றே” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அப்படியல்ல) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்” என்றார்கள்.

புஹாரி : 3265 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on நரக வேதனையின் கடுமை.