1809. சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னது. சொர்க்கம், ‘எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்” என்று கூறியது. அல்லாஹ் சொர்க்கத்திடம், ‘நீ என்னுடைய அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்” என்று கூறினான். நரகத்திடம் ‘நீ வேதனை(க்காகத்)தான். உன்மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்” என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தன்னுடைய காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் ‘போதும்! போதும்!” என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை. மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.
1810. (நரகவாசிகள் நரகத்தின் போடப்படுவார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால்) ‘இன்னும் அதிகம் இருக்கிறதா? ‘என்று கேட்டுக் கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தம் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது ‘போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!” என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1811. (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டு வரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், ‘சொர்க்கவாசிகளே!’ ‘இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்பார். அவர்கள், ‘ஆம்! இதுதான் மரணம்” என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: ‘நரகவாசிகளே! ‘என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் ‘இதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்பார். அவர்கள், ‘ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்” என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டு விடும். பிறகு அவர், ‘சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை” என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், ‘(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்” எனும் (திருக்குர்ஆன்19:39வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், ‘இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்” என்றும் கூறினார்கள்.
1812. சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு ‘மரணம்’ (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டு வரப்பட்டு சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர் ‘சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது. நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது” என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்குமேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1813. (நரகத்தில்) இறை மறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ளதூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1814. நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள், பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.
1815. (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியதை செவியுற்றேன். அப்போது அவர்கள், ‘(இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘அவர்களிலுள்ள துர்பாக்கியசாலி ஒருவன் முன்வந்தபோது…” எனும் (திருக்குர்ஆன் 91:12 வது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, ‘அபூ ஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத் (தைக் கொல்வ)துக்காக முன் வந்தான்” என்று கூறினார்கள். மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு, (உடலிலிருந்து பிரியும்) வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, ‘(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?’ என்று கேட்டபடி உபதேசித்தார்கள்.
1816. நபி (ஸல்) அவர்கள், ‘குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு ஆமிர் இப்னிலுஹை என்பவரை, நரகத்தில் தன் குடலை இழுத்துச் சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர் தான் முதன் முதலில் ‘சாயிபா’ ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்து கொண்டிருக்கும்படி) விட்டவர்” என்று கூறினார்கள்.