மறுமை நாளில் மனிதர்களின் நிலை.

1817. ”நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் ‘இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் ‘அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று கூறினார்கள்.

புஹாரி : 6527 ஆயிஷா (ரலி).

1818. நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்றபடி உரையாற்றினார்கள். அப்போது (பின் வருமாறு) கூறினார்கள்: (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள். அல்லாஹ் கூறினான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்வோம். (திருக்குர்ஆன் 21:104). மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். மேலும், என் சமுதாயத்தாரில் சில பேர் இடப்பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் ‘என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்பேன். அப்போது அல்லாஹ் ‘இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்பான். அப்போது நான், நல்லடியார் (நபி ஈஸா (அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று ‘நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்” (திருக்குர்ஆன் 05:117) என்று சொல்வேன். அப்போது ‘இவர்கள் தம் குதிகால்(சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும்.

புஹாரி : 6526 இப்னு அப்பாஸ் (ரலி).

1819. (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள்.அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும் போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீஅவர்களுடனேயே இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6522 அபூஹூரைரா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , , , , , . Bookmark the permalink.