1807. அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் – உங்களின் மீது சாந்தி பொழியட்டும்” என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)’ என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் மீது தவக்குல் வைத்தோர் சிறப்பு.
சுவன வாசிகளின் மனைவிமார்களின் கூடாரங்கள்.
1806. (சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு முத்தாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறை நம்பிக்கையாளனுக்குத் துணைவியர் இருப்பர். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சுவனத்தில் புகும் முதல் அணியினர் பற்றி….
1805. ‘சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
சுவன வாசிகளின் தரங்கள்.
1803. சொர்க்கவாசி(களில் கீழ்த்தட்டில் இருப்பவர்)கள் (மேல்) அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கிழக்கு அடிவானில் (தோன்றி), மேற்கு அடிவானில் மறையும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று’ எனக் கூடுதலாக அறிவித்ததை நான் உறுதியாகக் கேட்டேன்.
1804. ”சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்கு மிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டே) அப்படிப் பார்ப்பார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?’ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றவர்களேயாவர்” என பதிலளித்தார்கள்.
சுவன வாசிகளிடம் அல்லாஹ் ஒருபோதும் கோபிப்பதில்லை.
1802. அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி சொர்க்கவாசிகளே! என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் திருப்தி அடைந்தீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகியவற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா? என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் அதை விடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப் போகிறேன் என்பான். அவர்கள் அதிபதியே! அதை விடச் சிறந்தது எது? என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் உங்கள் மீது என் திருப்தியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்பட மாட்டேன் என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சுவன மரத்தின் சிறப்பு.
1799. சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதை கடக்க முடியாது. (அந்த அளவிற்கு அது பெரிய மரமாகும்.) நீங்கள் விரும்பினால், (படர்ந்து விரிந்த) நீண்ட நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்” எனும் (திருக்குர்ஆன் 56:30 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1800. சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு ஆண்டுகள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1801. சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சுவனத்தின் சிறப்புகளும் சுவனவாசிகளும்.
1797. மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1798. ”எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், ‘மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஈடேற்றம் பெற அல்லாஹ்வின் அருள் அவசியம்.
1793. ”இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப் படுவார்)” என்று கூறினார்கள். மக்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)” என்று வினவினார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘(ஆம்) என்னையும் தான். அல்லாஹ் அரவணைத்துக் கொண்டால் தவிர” என்று கூறிவிட்டு, ‘(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறி விடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைபிடியுங்கள்.) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்” என்றார்கள்.
1794. நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1795. சில சமயம் நபி (ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள்.
1796. ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் ‘அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்’ என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவது தான் இதை விட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள்’ என்றார்”.
இறை நம்பிக்கையாளன் நிராகரிப்பவனின் உதாரணம்.
1790. இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்து விடும். காற்று நின்று விட்டால், அது நேராக நிற்கும். சோதனையின் போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1791. இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1792. ‘மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?’ என்று நபி (ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்’ என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘பேரீச்சை மரம்’ என்றார்கள்” .
நிராகரிப்போர் முகத்தால் நடத்தல்.
1789. ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! இறை மறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘இந்த உலகில் அவனை இரண்டு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?’ என்று (பதிலுக்குக்) கேட்டார்கள். (இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா இப்னு திஆமா (ரஹ்) ‘ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!” என்று கூறினார்கள்.