1788. (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘ஆம்”என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், ‘நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை – எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை” என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நரகவாசி வேதனையிலிருந்து விடுபட.
மறுமை நாள் (அத்தியாயம்-5)
மரணமும், அதனைத் தொடரும் (B)பர்ஜக் வாழ்வும்
மரணம் யாராலும் தவிர்ந்து கொள்ள முடியாததொரு நிகழ்வு. மனிதனின் இயலாமையைத் தெளிவாகக் காட்டும் உண்மை. அவனால் என்றுமே அம்மரணத்தை வெற்றிக் கொள்ள முடியாது. அது ஓர் பயங்கர அனுபவம். எனவே, எல்லா மனிதர்களையும் அந்த மரண பயம் பீடித்தவாறே உள்ளது. அனைவரும் இதனை இயன்றளவு பிற்போட முயற்சிக்கின்றனர். இத்தகைய மரணம் குறித்து அல்குர்ஆன் சொல்லும் விளக்கத்தை இங்கே தருகிறோம்:
முதலில் அல்குர்ஆன்,
“ஆத்மாக்களை அவற்றின் நித்திரையின் போது அல்லாஹ் மரணிக்கச் செய்கிறான்.” (ஸூரா அல்ஜுமர் : 42)
அதாவது, அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கவும் செய்கிறான். இது மிகத் தெளிவான அம்சம். பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்துக்கும் அவனே காரணம் எனத் தெளிவாகச் சொல்கிறது.
ஆனால், அல்லாஹ் எல்லா நிகழ்வுகளையும் சில காரணிகளோடு தொடர்பு படுத்தி அமைத்துள்ளான். தனது நாட்டங்களை நிறைவேற்ற சில சக்திகளைப் பயன்படுத்திக் கொள்கிறான். இதுவும் அவனது பிரபஞ்சத்தில் நாம் அவதானிக்கும் ஒரு விஷயமாகும். அந்த வகையில் மரணத்திற்குப் பொறுப்பாகவும் ஒரு மலக்கை (வானவரை) அல்லாஹ் நியமித்துள்ளான். இக்கருத்தை கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் விளக்குகிறது. Continue reading
அல்லாஹ்வை விட பொறுமையாளன் இல்லை.
1787. மன வேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்து விடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு ‘யாருமில்லை’ அல்லது ‘ஏதுமில்லை’ மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவனோ அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சந்திரன் பிளத்தல்.
1784. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.
1785. மக்காவாசிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.
1786. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவு பட்டது.
புகை.
1783. (குறைஷியருக்கு ஏற்பட்ட) இந்தப் பஞ்சத்திற்குக் காரணம், குறைஷியர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் ஏற்படட்டும்’ எனக் குறைஷியருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டது. எலும்புகளை அவர்கள் சாப்பிடும் அளவிற்கு(ப் பஞ்சம் கடுமையாக இருந்தது.) அவர்களில் ஒருவர் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து) களைப்படைந்து தமக்கும் வானத்திற்கும் இடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அப்போது அல்லாஹ், ‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். அது மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அது துன்புறுத்தும் வேதனை ஆகும்” எனும் (திருக்குர்ஆன் 44:10, 11ஆகிய) வசனங்களை அருளினான். அப்போது ஒருவர் (அபூசுஃப்யான்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! முளர் குலத்தாருக்கு மழை வேண்டிப் பிரார்த்தியுங்கள். அவர்கள் அழிவுக்குள்ளாகி விட்டார்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘முளர் குலத்தினருக்கா? நீங்கள் துணிவு மிக்கவர் தாம்” என்று கூறிவிட்டு, (அவர்களுக்காக) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே, அவர்களுக்கு வானம் பொழிந்தது. அப்போது, ‘மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்” எனும் (திருக்குர்ஆன் 44:15 வது) வசனம் அருளப்பட்டது. (பிறகு அவர்களுக்குப் பஞ்சம் விலகி,) வளமான வாழ்வு ஏற்பட்டபோது, பழைய (இணைவைக்கும்) நிலைக்கே திரும்பிச் சென்றனர். அப்போது வல்லவனும் மாண்பாளனுமாகிய அல்லாஹ், ‘மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம்” எனும் (திருக்குர்ஆன்44:16 வது) வசனத்தை அருளினான். அந்நாள் பத்ருப்போர் நாளாகும்.
நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இருக்கும் போது வேதனை இறங்காது.
1782. (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!” என்று சொன்னான். அப்போது ‘(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்களின் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆகமுடியும்! அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்” எனும் வசனங்கள் (திருக்குர்ஆன் 08:33, 34) அருளப்பெற்றன.
யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.
1780. அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றைஅவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்’ என்றார். அவர்களின் இன்னொருவர் ‘அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை என்றார். அவர்களில் மற்றொருவரோ, ‘(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப்பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்’ என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து,’அபுல்காஸிம் அவர்களே! ரூஹு என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். ‘அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது’ என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது ‘(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப் படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!’ (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்”.
1781. நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவன் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை வாங்குவதற்காக அவனிடம் நான் சென்றேன். அப்போது அவன், ‘நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்குத் (திருப்பித்) தரமாட்டேன்!”என்றான். நான் ‘அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்!’ எனக் கூறினேன். அதற்கவன் ‘நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்!” என்றான். அப்போதுதான் ‘நம்முடைய வசனங்களை நிராகரித்து, ‘(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்!’ என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்பட வேண்டுமென்று) கருணையாளனான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?’ என்ற (திருக்குர்ஆன் 19:77, 78) இறைவசனம் அருளப்பட்டது!”.
சுவன வாசிகள் பெறும் மகிழ்ச்சி.
1778. நபி (ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப் போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்” என்று கூறினார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘சரி’ என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே ‘மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு ‘உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?’ என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு ‘பாலாம்’ மற்றும் ‘நூன்’ என்றார். மக்கள் ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். அந்த யூதர் ‘(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்” என்று கூறினார்.
1779. யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின், யூதர்கள் (அனைவருமே) என் மீது நம்பிக்கை கொண்டிருந்திருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கியாம நாளில் மரித்தோரை உயிர்ப்பித்தல்.
1777. (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான ஸஹ்ல் (ரலி) அவர்கள், அல்லது மற்றொருவர் ‘அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது” என்று (கூடுதலாக) அறிவித்தார்கள்.
மறுமை நாள். சொர்க்கம் நரகம்
1773. மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். ‘மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்” எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1774. யூத அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, ‘நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்” என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, ‘அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத்தை ஓதினார்கள்.
1775. அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு ‘நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?’ என்று கேட்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1776. அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு ‘நானே அரசன்!” என்று சொல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.