மறுமை நாள் (அத்தியாயம்-5)

மரணமும், அதனைத் தொடரும் (B)பர்ஜக் வாழ்வும்

மரணம் யாராலும் தவிர்ந்து கொள்ள முடியாததொரு நிகழ்வு. மனிதனின் இயலாமையைத் தெளிவாகக் காட்டும் உண்மை. அவனால் என்றுமே அம்மரணத்தை வெற்றிக் கொள்ள முடியாது. அது ஓர் பயங்கர அனுபவம். எனவே, எல்லா மனிதர்களையும் அந்த மரண பயம் பீடித்தவாறே உள்ளது. அனைவரும் இதனை இயன்றளவு பிற்போட முயற்சிக்கின்றனர். இத்தகைய மரணம் குறித்து அல்குர்ஆன் சொல்லும் விளக்கத்தை இங்கே தருகிறோம்:

முதலில் அல்குர்ஆன்,

“ஆத்மாக்களை அவற்றின் நித்திரையின் போது அல்லாஹ் மரணிக்கச் செய்கிறான்.”
(ஸூரா அல்ஜுமர் : 42)

அதாவது, அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கவும் செய்கிறான். இது மிகத் தெளிவான அம்சம். பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்துக்கும் அவனே காரணம் எனத் தெளிவாகச் சொல்கிறது.

ஆனால், அல்லாஹ் எல்லா நிகழ்வுகளையும் சில காரணிகளோடு தொடர்பு படுத்தி அமைத்துள்ளான். தனது நாட்டங்களை நிறைவேற்ற சில சக்திகளைப் பயன்படுத்திக் கொள்கிறான். இதுவும் அவனது பிரபஞ்சத்தில் நாம் அவதானிக்கும் ஒரு விஷயமாகும். அந்த வகையில் மரணத்திற்குப் பொறுப்பாகவும் ஒரு மலக்கை (வானவரை) அல்லாஹ் நியமித்துள்ளான். இக்கருத்தை கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் விளக்குகிறது.

“நபியே! சொல்வீர்களாக: உங்களுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ள மரணத்திற்கான மலக்கு உங்களை மரணிக்கச் செய்கிறார். பின்னர் உங்கள் இரட்சகனிடத்தில் மீட்டிக் கொண்டு வரப்படுகிறீர்கள்.” (ஸூரா ஸஜ்தா : 12)

மரணிக்கச் செய்தல் என்ற வேலைக்குப் பொறுப்பாக ஒரு மலக்கு (வானவர்) இருப்பினும் அவருக்கு உதவியாக இன்னும் பல மலக்கு(வானவர்)கள் இருக்கிறார்கள் என்பது கீழ்வரும் வசனங்களிலிருந்து தெளிவாகிறது:

“உங்களில் ஒருவருக்கு மரணம் வந்து விட்டால் எங்களது தூதுவர்கள் அவரை மரணிக்கச் செய்கிறார்கள். அவர்கள் குறை வைப்போர்களன்று!”. (ஸூரா அன்ஆம் : 61)

“தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்கள் அவர்களை மலாயிகத்து (வானவர்)கள் மரணிக்கச் செய்கையில், நீங்கள் எங்கிருந்தீர்கள் எனக் கேட்பர்”. (ஸூரா நிஸா : 97)

இவ்வுலகம் அழிந்து, உலகில் தோன்றிய மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் போதே மறு உலகவாழ்வு ஆரம்பமாகிறது. எனவே மரணத்திற்கும் மறு உலக வாழ்வுக்குமிடையே நீண்டதொரு கால இடைவெளி இருக்கிறது. இக்கால இடைவெளியில் மனிதனுக்கு நிகழ்வது என்ன? மரணத்தின் பின்னர் மனிதன் எதிர்நோக்கும் அடுத்த நிகழ்வுகள் யாவை என்பதையும் அல்குர்ஆனும், சுன்னாவும் விளக்குகின்றன. அவையும் மறுமை நம்பிக்கையின் ஒரு பகுதியாகின்றன. எனவே அவற்றை இப்போது நோக்குவோம் :

அல்குர்ஆன் மரணத்திற்கும் மறுமையில் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதற்கு இடையிலான வாழ்வை பர்ஜக் வாழ்வு என அழைக்கிறது. பர்ஜக் எனில் இரு பொருட்களுக்கு இடையிலான தடைச்சுவர் எனப் பொருள்படும். அதாவது மரணத்திற்கும் மறுமை வாழ்வுக்குமிடையிலான காலப்பிரிவு வாழ்வை இது குறிக்கிறது. கீழ்வரும் வசனம் இதை விளக்குகிறது :

“மரணம் அவர்களில் ஒருவருக்கு வந்து விட்டால் அவர், எனது இரட்சகா! என்னைத் திருப்பி அனுப்பி விடு. விட்டு வந்தவற்றில் நற்செயல்களை நான் செய்வேன் என்பான். அது அவன் சொல்லும் வெறும் வார்த்தை மட்டுமே. அவர்களுக்குப் பின்னால் அவர்கள் எழுப்பபடும் நாள் வரை (பர்ஜக் என்ற) இடைக்கால வாழ்வு ஒன்றுள்ளது”. (ஸூரா முஃமினூன் : 99,100)

“(நபியே!) நீர் கூறும், ‘பூமியில் பிரயாணம் செய்து, சிருஷ்டிகளை அவன் ஆரம்பத்தில் எவ்வாறு படைத்தான்’ என்பதை அவர்கள் அவதானிக்கட்டும். பின்னர், அல்லாஹ் மீண்டும் அவற்றை (மறுமையின் போது) படைக்கிறான்”. (ஸூரா அன்கபூத் : 20)

(B)பர்ஜக் வாழ்வு

மரணத்திலிருந்து ஆரம்பிக்கும் இவ்வாழ்வில் மனிதனின் நிலைக்கு ஏற்ப சுக வாழ்வோ அல்லது தண்டனையோ கிடைப்பதாக அல்குர்ஆனும் சுன்னாவும் விளக்குகின்றன. இதனை, மரணிக்கும் பெரும்பாலோர் புதைகுழியில் அடக்கம் செய்யப்படுவதன் காரணமாக கப்ரின் வேதனை, கப்ரின் இன்ப வாழ்வு என அழைக்கிறோம். இக்கருத்தை விளக்கும் திருமறை வசனங்களையும் ஹதீஸ்களையும் கீழே தருகிறோம் :

“காலையிலும் மாலையிலும் நரகம் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படும். மறுமை நாள் நிகழும் நாளில் பிர்அவ்னைச் சேர்ந்தோரை கடும் தண்டனைக்குக் கொண்டு செல்லுங்கள் என சொல்லப்படும்”. (ஸூரா காஃபிர் : 46)

கீழ்வரும் ஹதீஸ்களும் புதைகுழி(கப்ர்)யின் தண்டனையை உறுதிப்படுத்துகின்றன :

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) சொன்னதாக அறிவிக்கிறார்கள் :

‘உங்களில் ஒருவர் மரணமடைந்தால் காலையிலும் மாலையிலும் அவருக்கு அவர் தங்கப்போகுமிடம் எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாயின் சுவர்க்கவாசிக்கான இடமும், நரகவாசியாயின் நரகவாசிக்கான இடமும் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். மறுமை நாளில் நீ அல்லாஹ்விடத்தில் எழுப்பப்படும் வரை இதுவே உன்னுடைய இடம் என அவனுக்கு அப்போது சொல்லப்படும்.’ (ஆதார நூற்கள் : ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரு கப்ருகளுக்குப் பக்கத்தில் நடந்து போனார்கள். அப்போது சொன்னார்கள் : ‘இவர்கள் இருவரும் தண்டிக்கப்படுகிறார்கள். ஒரு பெரிய குற்றத்திற்காக அவர்கள் தண்டிக்கப்படவில்லை. அவர்களில் ஒருவர் சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்து கொள்ளவில்லை. அடுத்தவர் கோள் சொல்லித் திரிந்தார்.’

பின்னர் பேரீச்சம் மரக்கிளை ஒன்றை எடுத்து அதனை இரண்டாகப் பிளந்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு புதைகுழியின் மீதும் நட்டினார்கள். ‘இறைத்தூதரே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?’ என நாம் கேட்டோம். அதற்கு, ‘அவை இரண்டும் காய்ந்து போகாதவரை அவர்கள் தண்டனை இலேசாக்கப்படலாம்’ என அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (ஆதார நூல் : ஸஹீஹ் முஸ்லிம்)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனைகளின் போது ‘நரகின் வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடியதோடு கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடியமை’ பிரசித்தமானது. பல ஹதீஸ்களில் காணப்படக் கூடியது.

மேலே குறிப்பிட்ட திருமறை வசனங்களிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் மரணத்தின் பின்னர் மறுமை நாள் தோன்றும் வரையில் கப்ரின் தண்டனை அல்லது இன்ப வாழ்வு என்ற ஒன்றிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அது எவ்வாறு அமையும் என்பதனை விரிவாக ஆராய்வது சாத்தியமில்லை. ஏனெனில் அது மறை உலக உண்மைகளில் ஒன்றாகும். அப்படியொரு வாழ்விருக்கிறது என்பதை ஏற்று நம்பிக்கைக் கொள்வது மேற்கூறிய ஆதாரங்களால் அவசியமாகிறது. அதனுடைய முழு உண்மையையும், ஒழுங்கையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமேயாகும்.

கப்ரில் நிகழும் தண்டனையின் அல்லது வெகுமதியின் ஆரம்பம் கேள்வி கணக்குக் கேட்டலாகும். அதாவது ஒரு மனிதன் இறந்து அவன் புதைகுழியில் வைக்கப்பட்டதும் இரண்டு மலக்குகளால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனை கீழ்வரும் ஹதீஸ்கள் காட்டுகின்றன :

அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்:

இறைத்தூதர் (ஸல்) சொன்னார்கள்: ‘ஓர் அடியான் புதைகுழியில் வைக்கப்பட்டு அவனது தோழர்கள் அவனை விட்டுத் திரும்பிச் சென்றதும் அவர்களின் செருப்புகளின் சத்தத்தைக் கூட நிச்சயமாக அவன் கேட்கிறான். இரு மலக்கு(வானவர்)கள் வருவார்கள். அவனை எழுப்பி அமர்த்துவார்கள். ‘நீ இந்த மனிதரைப்பற்றி (அதாவது முஹம்மத் (ஸல்) அவர்களைக் குறித்து) என்ன சொல்லி வந்தாய்?’ எனக் கேட்பார்கள். அவன் முஃமினாயின், ‘அவர் அல்லாஹ்வின் அடியார், அவனது தூதர்’ என்று சொல்வார் அப்போது அவனைப் பார்த்து, ‘நரகில் உனது இடத்தைப்பார். அல்லாஹ் அதற்குப்பதிலாக உனக்கு சுவர்க்கத்தில் ஓரிடத்தை ஆக்கி விட்டான்’ என சொல்லப்படும். இரண்டு இடத்தையும் அவன் பார்ப்பான்.

நயவஞ்சகர்களையும், நிராகரிப்பாளர்களையும் பார்த்து, ‘இந்த மனிதரைப்பற்றி என்ன சொல்லி வந்தாய்?’ என வினவப்படும். ‘எனக்குத் தெரியாது. மக்கள் சொல்வதை நானும் சொல்லி வந்தேன்’ என அவர்கள் கூறுவார்கள். ‘உனக்குத் தெரியாது. நீ அவரைப் பின்பற்றவுமில்லை’ என அவர்களுக்குச் சொல்லப்படும். ஓர் இரும்புச் சுத்தியலால் அவனுக்கு ஓரடி அடிக்கப்படும். அப்போது அவன் பெரும் சத்தமிடுவான். அதனை அம்னிதர்களும் ஜின்களும் தவிர அவனைச் சூழவுள்ள எல்லோரும் கேட்பர்.” (ஆதார நூற்கள்: ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “ஒரு மனிதன் அடக்கம் செய்யப்பட்டு விட்டால் கருப்பும், நீல நிறமும் கொண்ட இரு மலக்குகள் வருவார்கள். ஒருவர் முன்கர் எனவும், மற்றவர் நகீர் எனவும் அழைக்கப்படுவர்.” (ஸுனன் திர்மிதி ஹதீஸ் நூலிலுள்ள ஒரு நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

“அல்லாஹ் விசுவாசம் கொண்டவர்களை உறுதியான வார்த்தை மூலம் உலகிலும், மறுமையிலும் நிலைப்படுத்துகிறான்.”
(ஸூரா இப்ராஹீம்: 27) என்ற இறைவசனம் கப்ரின் வேதனை குறித்து இறங்கியது எனக் கூறிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உனது இரட்சகன் யார் என அப்போது வினவப்படும்?’ ‘எனது இரட்சகன் அல்லாஹ் எனது நபி முஹம்மத் என அப்போது அவன் சொல்வான்’ எனவும் கூறினார்கள். (ஆதார நூற்கள்: ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இத்தகைய விசாரணை, தண்டனை என்பன பர்ஜகின் வாழ்வில் கொடுக்கப்படுகின்றன. மனிதர்களில் அதிகமானோர் கப்ரில் அடக்கம் செய்யப்படுவதை வைத்து கப்ரில் விசாரணை என இது அழைக்கப்படுகிறது. கப்ரிலோ அல்லது அவ்வாறு கப்ரில் அடக்கப்படாதவருக்கு வேறு ஒழுங்கிலோ அது நிகழும். மறை உலக உண்மைகள் பௌதீக உலக நிலைகளோடு ஒப்பிட முடியாதவை. இந்த நிகழ்ச்சிகள் நடப்பது உண்மை  என்பதை இத்தகைய ஆதாரங்கள் ஊடாக நாம் புரிந்து கொள்கிறோமே தவிர, அதன் உண்மை அமைப்பை, ஒழுங்கை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.

மறுமை நாள் (Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.

2 Responses to மறுமை நாள் (அத்தியாயம்-5)

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    இணையத்தில் உலாவிக்கொண்டிருந்த போது எம் முன் கிடக்கும் முக்கிய பொறுப்பை கண்டு அதிர்ச்சியடைந்தேன். google search ல் தேடும் போது முதலில் காட்டபடுவது wikkipedia ல் உள்ள உள்ளடக்கங்களே. தமிழ் பேசுவோர் ஏதும் விளக்கம் தேவையனில் முதலில் செல்வதும் இந்த wikkipedia வே. இங்கு இஸ்லாம் என்ற பகுப்பின் கீழ் பல கட்டுரைகள் முற்றிலும் தவறான விளக்கங்களுடன் மற்ற மதத்தவர்களால் தொகுக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய கலைகளஞ்சியத்தில் இஸ்லாம் மற்றும் அதன் பிரிவுகளின் விளக்கங்கள் இவ்வாறு முரணாக அடையாளப்பத்த்தப்பட்டதற்கு நாம் ஒவ்வொருவரும் குற்றவாளிகளே. முடியுமானவரை உங்களிடமுள்ள தகவல்களைக்கொண்டு திருத்தி இஸ்லாத்தை சரியான முறையில் தமிழ் பேசும் மக்களிடம் கொண்டு சேருங்கள். தினமும் 50000 இற்கும் அதிகமானவர்கள் வருகை தரும் தமிழ் விக்கிபீடியாவில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்த ஒருவர் கூட இல்லை எனும் போது நாம் வெட்க்கப்பட வேண்டியுள்ளது. இங்கு மாற்று மதத்வர்களே அதிகம் வருகின்றனர் என்பதால் புரிந்து கொள்வதற்கு இலகுவான முறையில் நமது பங்களிப்புகளை கொடுக்க வேண்டியது கட்டாயத்தேவையாகும். என்னால் முடிந்த மட்டும் இன்று வரை திருத்திக்கொண்டிருக்கிறேன்.

    மோசமான உள்ளடக்கங்கள்.
    http://ta.wikipedia.org/wiki/பகுப்பு:இஸ்லாம்

    Mohamed S . Nisardeen

  2. மேலுள்ள முகவரியில் சென்று எமது இதுவரையும் கொடுக்கப்பட்டுள்ள இஸ்லாத்துக்கான வரைவிலக்கணத்தை
    காணலாம்.நானும் ஓரிரு நாட்களாகவே விக்கிபீடியாவுக்குள் திருத்தம் மேற்கொள்கிறேன்
    ( சபா மலைக்குன்றை தேடுகையிலேயே உங்களது இணையத்தளத்தை தற்செயலாக இன்று கண்ணுற்றேன். “மன்சூர் உஸ்தாத்” அவர்களது சேவையை அறிந்துள்ளதால் உரிய இடத்தில் இவ்விடயத்தை சுட்டியதில் திருப்திகொள்கிறேன். அவருக்காகவும்/உங்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன் )

Comments are closed.