1778. நபி (ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப் போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்” என்று கூறினார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘சரி’ என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே ‘மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு ‘உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?’ என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு ‘பாலாம்’ மற்றும் ‘நூன்’ என்றார். மக்கள் ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். அந்த யூதர் ‘(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்” என்று கூறினார்.
1779. யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின், யூதர்கள் (அனைவருமே) என் மீது நம்பிக்கை கொண்டிருந்திருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.