நயவஞ்சகர்களின் பண்புகள்.

1765. ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் ‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, ‘நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்” என்று கூறினான். அவன் கூறியதை ‘(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்’ அல்லது ‘உமர் (ரலி) அவர்களிடம்’ கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) ‘நாங்கள் அதைச் சொல்லவேயில்லை” என்று அவர்கள் சாதித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று கூறினார்கள். அப்போது, ‘இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிற போது” என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, ‘ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவு படுத்திவிட்டான்)” என்று கூறினார்கள்.

புஹாரி :4900 ஜைது பின் அர்கம் (ரலி).

1766. அப்துல்லாஹ் இப்னு உபை கப்ரில் வைக்கப்பட்ட பின் அங்கு வந்த நபி (ஸல்) அவனுடைய உடலை வெளியிலெடுக்க செய்து அவன் உடலில் தம் எச்சிலை உமிழ்ந்துவிட்டுத் தம் சட்டையை அவனுக்கு அணிவித்தார்கள்.

புஹாரி : 1270 ஜாபிர் (ரலி).

1767. (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, ‘(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்” என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களை இழுத்து, ‘நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’ எனக் கூறிவிட்டு, ‘நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை” என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே ‘அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்” என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.

புஹாரி : 1269 இப்னு உமர் (ரலி).

1768. இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் ‘குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்’ (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், ‘நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?’ என்று கேட்டார். மற்றொருவர், ‘நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை’ என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், ‘நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ், ‘(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்த்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 41:22-24) அருளினான்.

புஹாரி :4817 இப்னு மஸ்ஊது (ரலி).

1769. நபி (ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்து விட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் ‘இவர்களைக் கொல்வோம்!” என்றனர். அப்போது ‘நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரண்டு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ (திருக்குர்ஆன் 04:88) என்னும் வசனம் இறங்கியது. ‘நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1884 ஜைது பின் ஸாபித் (ரலி).

1770. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புனிதப் போருக்குச் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய், தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப் போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள் அப்போதுதான் ‘தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்படவேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” எனும் (திருக்குர்ஆன் 03:188 வது) இறைவசனம் அருளப்பெற்றது.

புஹாரி : 4567 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

1771. (மதீனா ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம் தம் காவலரிடம் ‘ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, ‘தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத (சாதனைகள் முதலிய)வற்றுக்காகத் தாம் புகழப்படவேண்டுமென்று விரும்புகிற மனிதர் ஒவ்வொருவரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின் நாம் அனைவருமே வேதனை செய்யப்பட வேண்டி வருமே!’ என்று (நான் வினவியதாகக்) கேள்” என்று கூறினார். (அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) ‘உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்துவிட்டு (உண்மைக்கப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்த த(கவலி)ற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்” என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதினார்கள்: வேதம் வழங்கப்பட்டவர்களிடம் ‘நீங்கள் அதனை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது’ என அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். ஆனால், அதனை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு, அதற்கு பதிலாக அற்ப விலையை வாங்கிக் கொண்டனர் என்பதை (நபியே! அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) அவர்கள் வாங்கிக் கொண்டது மிக மோசமானதாகும். தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டபடவேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 03:187, 188) .

புஹாரி : 4568 அல்கமா பின் வக்காஸ் (ரலி).

1772. ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். ‘அல்பகரா’ மற்றும் ‘ஆலு இம்ரான்’ அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) ‘முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்தைத் தவிர வேறெதுவும் தெரியாது” என்று சொல்லிவந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தையளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டிருந்தது. உடனே, (கிறிஸ்தவர்கள்), ‘இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடி வந்துவிட்டதால் அவரின் மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டுவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, அவருக்காக இன்னும் அழகாக ஒரு புதை குழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது. அப்போதும், ‘இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களுடைய வேலைதான். நம் தோழர் அவர்களை விட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்” என்று கூறினர். மீண்டும் அவர்களால் குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் பூமி அவரை முடிந்த அளவிற்கு மிக அழமான குழியை அவருக்காகத் தோண்டிப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல. (இறைவனின் தண்டனை தான்) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டுவிட்டனர்.

புஹாரி : 3617 அனஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on நயவஞ்சகர்களின் பண்புகள்.

ஆயிஷா (ரலி) அவர்களின் மீது கூறிய அவதூறும் அபாண்ட இட்டுக்கட்டலும்.

1763. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் மேற்கொண்ட (‘பனூ முஸ்தலிக்’ என்ற) ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் என்னுடைய ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்பட்டும் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்பட்டும் வந்தேன்.

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் அந்தப் போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கியபோது, இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும் படி அறிவித்தார்கள். அப்போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ‘ழஃபாரி’ நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. எனவே, நான் திரும்பிச் சென்று என்னுடைய மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேர விடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது. என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைக்கும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு, அதைச் சுமந்து சென்று, நான் சவாரி செய்து வந்த என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவையே அவர்கள் உண்பார்கள். எனவே, சிவிகையைத் தூக்கிய போதும், அதைச் சுமந்த போதும் அது கனமில்லாமல் இருந்ததை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை மேலும், நான் வயது குறைந்த இளம் பெண்ணாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு (தொலைந்து போன) என்னுடைய மாலை கிடைத்துவிட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்று விட்டிருந்தனர்.) அங்கு அவர்களில் அழைப்பவரோ பதில் கொடுப்பவரோ எவரும் இருக்கவில்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிப் போ(ய் அங்கு அமரலா)னேன். நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு படையினர் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் என்னுடைய இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மிகைத்து விட, நான் தூங்கி விட்டேன். படை சென்றதற்குப் பின்னால் (படையினர் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் (அங்கே) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். எனவே, என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்து கொண்டார். அவர், என்னை அறிந்து கொண்டு, ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பச் செல்லவிருக்கிறோம்” என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே என்னுடைய முகத்திரையால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்று கூறியதைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து கேட்கவுமில்லை. பிறகு, அவர் விரைவாக தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்ள வசதியாக) அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் எழுந்து சென்று அதில் ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அப்போது அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்வதில் பெரும்பங்கு எடுத்துக் கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் (எனும் நயவங்சகர்களின் தலைவன்) ஆவான்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) கூறினார்: அந்தப் பழிச்சொல் பரப்பப்பட்டும், அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலிடம் பேசப்பட்டும் வந்தது. அப்போது அவன் அதை ஏற்று, காது தாழ்த்திக் கேட்டு, அதை (மேன் மேலும்) கிளறிவிட்டுக் கொண்டிருந்தான் – என்று எனக்குச் செய்தி கிடைத்து.

அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) மேலும் கூறுகிறார்கள்: அவதூறு கூறியவர்(களான முஸ்லிம்)களில் ஹஸ்ஸான் இப்னு ஸாபித், மிஸ்தஹ் இப்னு உஸாஸா, ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ஆகியோரைத் தவிர மற்ற சிலரின் பெயர்கள் எனக்குத் தெரியாது. ஆயினும் அல்லாஹ் (தன்னுடைய வேதத்தில், ‘அவதூறு கற்பித்தவவர்களும் உங்களில் ஒரு குழுவினரே’‘ என்று 4:11-ம் வசனத்தில்) கூறியது போன்று அவர்கள் ஒரு குழுவினர் ஆவர். அ(ந்தச் சம்பவத்)தில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் ஆவான். தமக்கு முனனால் ஹஸ்ஸான் அவர்கள் ஏசப்படுவதை ஆயிஷா (ரலி) விரும்பதாதவர்களாக இருந்தார்கள். மேலும், ‘அந்த ஹஸ்ஸான் அவர்கள் தாம் இந்தக் கவிதையைச் சொன்னவர்” என்று ஆயிஷா (ரலி) கூறுவார்கள்: ‘(பகைவர்களே!) என் தந்தையும், என் தந்தையின் தந்தையும், என்னுடைய மானமும் உங்களிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களின் மானத்தைக் காக்கும் கேடயமாகும்” (தொடர்ந்து) ஆயிஷா (ரலி) கூறினார்.

பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான் றோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் நோயுற்றுபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகிற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது) அவர்களிடம் காண முடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, ‘எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்பார்கள்; பிறகு போய் விடுவார்கள். அவ்வளவு தான் இதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த) அந்த தீய சொல்லில் ஒரு சிறிதும், நான் நோயிலிருந்து குணமடைந்து வெளியே செல்லும்வரை எனக்குத் தெரியாது. அப்போது நான் மிஸ்தஹின் தாயாருடன் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த ‘மனாஸிஉ’ (எனப்படும் புறநகர்ப் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்று கொண்டிருந்ததே எங்களுடைய இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதை நாங்கள் தொந்தரவாகக் கருதி வந்தோம். நானும் உம்மு மிஸ்தஹும் சென்றோம். அவர் அபூ ருஹ்கி இப்னு முத்தலிப் இப்னி அப்து மனாஃப் அவர்களின் மகளாவார். அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (சல்மா) பின்த் ஸக்ர் இப்னி ஆமிர் தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்தஹின் மகனே, மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னி அப்பாத் இப்னு முத்தலிப் ஆவார். (இத்தகைய) உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக் கொண்டு என் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தன் ஆடையில் இடறிக் கொண்டார். உடனே அவர், ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று (தன் மகனை சபித்தவராகக்) கூறினார். நான், ‘மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப்போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா ஏசுகிறீர்” என்று கூறினேன். அதற்கு அவர், ‘அம்மா! அவர் என்ன கூறினார் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?’ என்று கேட்டார். ‘என்ன கூறினார்?’ என்று நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் இல்லத்திற்குத் திரும்பி வந்தபோது (என் கணவர்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து சலாம் கூறிவிட்டு ‘எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டார்கள். அப்போது நான், ‘என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?’ என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதா என்று விசாரித்து, என் மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். (நான் என் தாய் வீட்டிற்குச் சென்றேன்) என் தாயாரிடம், ‘அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?’ என்று கேட்டேன். என் தாயார், ‘அன்பு மகளே! உன் மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசமாலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்” என்று கூறினார்கள். நான், ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்” என்று (வியப்புடன்) கேட்டேன். அன்றிரவு காலை வரை அழுதேன் என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலைநேரம் வந்த போதும் அழுதேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப் அவர்களையும், உஸாமா இப்னு ஸைத் அவர்களையும் அழைத்தார்கள் அப்போது வஹீ (இறைச்செய்தி) (வேத வெளிப்பாடு – தாற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா அவர்களோ, நான் நிரபராதி என தாம் அறிந்துள்ளதையும், நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீது உள்ளத்தில் தாம் கொண்டிருந்த (பாசத்)தையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். ‘(இறைத்தூதர் அவர்களே!) தங்களின் துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை” என்று உஸாமா கூறினார்கள். அலீ அவர்களோ (நபி-ஸல் – அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக), ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண்ணை (பரீராவை)க் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பணிப்பெண்ணான) பரீராவை அழைத்து, ‘பரீராவே!
நீ (ஆயிஷாவிடம்) உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, ‘தங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய் விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்று விடும்; அத்தகைய (கவனக் குறைவான) இளவயதுப் பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார்.

அன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் (மேடையில்) ஏறி நின்று அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முஸ்லிம்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நல்லதையே அறிவேன். அவர்கள் (அவதூறு கற்பித்த நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். என்னோடு தான் அவர் என் வீட்டாரிடம் வந்திருக்கிறார் (தனியாக வந்ததில்லை)” என்ற கூறினார்கள். உடனே பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு முஆத் (ரலி) எழுந்து நின்று, ‘இறைத்தூதர் அவர்களே! அவனை தண்டிக்கத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்” என்று கூறினார்கள். உடனே, ‘கஜ்ரஜ்’ குலத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்தார். அவர் ‘கஸ்ரஜ்’ குலத்தின் தலைவரான ஸஅத் இப்னு உபாதா ஆவார். ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அவர்களின் தாயார், இவரின் குடும்பத்தில் ஒருவரும், இவருடைய தந்தையின் சகோதரின் மகளும் ஆவார். இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத்தான் இருந்தார். ஆயினும், குலமாச்சரியம் அவரை உசுப்பிவிடவே ஸஅத் இப்னு முஆத் அவர்களைப் பார்த்து ‘அல்லாஹ்வின் மீதாணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது. அவன் உம்முடைய குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவன் கொல்லப்படுவதை நீர் விரும்பமாட்டீர்” என்று கூறினார். உடனே உசைத் இப்னு ஹுளைர் (ரலி) எழுந்து நின்று இவர், ஸஅத் இப்னு முஆத் அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். -ஸஅத் இப்னு உபாதா அவர்களிடம், ‘நீர் தாம் தவறாகப் பேசினீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்” என்று கூறினார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மேடை மீது நின்று கொண்டிருக்க அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிடத் தயாராகி விட்டனர். நபி (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு தாமும் மௌனமானார்கள். அன்றைய நாள் முழுவதும் நான் அழுது கொண்டிருந்தேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க), என் ஈரல் பிளந்து விடுமோ என்றென்னும் அளவிற்கு அழுதிருந்தேன். என் தாய் தந்தையர் என் அருகேயிருக்க நான் அழுது கொண்டிருந்தபோது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்து வந்தார்கள். பிறகு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனைப் புகழ்ந்துவிட்டு, ‘நிற்க, ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னை குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புகோரி அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன்னுடைய பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்” என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்தபோது என்னுடைய கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை. நான் என் தந்தையார் (அபூ பக்ர் அவர்கள்) இடம், ‘இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், ‘இறைத்தூதர் சொன்னதற்கு (என் சார்பாக) பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தாயார், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘நானோ வயது குறைந்த இளம்பெண் ஆவேன். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவளும் ஆவேன். இந்நிலையில், அல்லாஹ்வின் மீதாணையாக! (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்ட) இச்செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனத்தில் பதிந்து போய், அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதை அறிவேன். எனவே, நான் குற்றமற்றவள் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப் போவதில்லை; நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் – நான் குற்றமற்றவன் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் – (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி – யஅகூப்-அலை) அவர்களையே உவமையாகக் கருதுகிறேன். (அதாவது:) (இதைச்) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும். (திருக்குர்ஆன் 12:18)’‘ என்று கூறினேன். ‘நான் அப்போது குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்; (அந்த) அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான்” என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறுபக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! என் விஷயத்தில் (மக்களால்) ஓதப்படுகிற வஹீ (இறைச்செய்தி) – வேத வெளிப்பாட்டை – (திருக்குர்ஆனில்) அல்லாஹ் அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் பேசுகிற அளவிற்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் ஏதேனுமொரு கனவைத் தம் உறக்கத்தில் காண்பார்கள்’ என்றே எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்கள்) அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் நபிகளாருக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து சின்னஞ்சிறு முத்துகளைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அவர்களின் மீது அருளப்பட்ட (இறைச்) சொற்களின் பாரத்தினால் தான் (அவர்களுக்கு வியர்வை வழியும் அளவிற்குச் சிரம நிலை) ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிய முதல் வார்த்தையாக, ‘ஆயிஷா! அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என அறிவித்து விட்டான்” என்று கூறினார்கள். உடனே என் தாயார், ‘அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்” என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், ‘மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்” என்றேன். (அப்போது) அல்லாஹ், ‘(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்” என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11 – 20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூ பக்ர் அஸ்ஸித்தீக் (ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் சிறிதும் செலவிட மாட்டேன்” என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள் – மிஸ்தஹ் இப்னு உஸாஸா, தம் உறவினர் என்பதாலும் அவர் ஏழை என்பதாலும், அவருக்காக அபூ பக்ர் அவர்கள் செலவிட்டு வந்தார்கள் – அப்போது அல்லாஹ், ‘உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்” என்னும் (திருக்குர்ஆன் 24:22) வசனத்தை அருளினான். அபூ பக்ர் (ரலி), ‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்” என்றும் கூறினார்கள். (திருக்குர்ஆனில் என்னுடைய கற்பொழுக்கம் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம் விசாரித்தார்கள். ‘ஸைனபே! நீ (ஆயிஷாவைக் குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?… அல்லது (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?… என்று (ஸைனபிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்” என்று பதிலளித்தார்கள். ஸைனப் அவர்கள் தாம், நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி-ஸல்-அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவரின் சகோதரி ஹம்னா (என்னுடன்) போரிடலானார். (என் விஷயத்தில் அவதூறு பேசி) அழிந்து போனவர்களுடன் அவரும் அழிந்து போனார்.

அறிவிப்பாளர் இப்னு ளுஹாப் (ரஹ்) கூறினார்:

இதுதான் அந்த (நால்வர்) குழுவிடமிருந்து எனக்கு கிடைத்த அறிவிப்பாகும்.

ஆயிஷா (ரலி) கூறினார்:
அல்லாஹ்வின் மீதாணையாக! எவரைக் குறித்து (அந்தப் பழிச்சொல்) கூறப்பட்டதோ அந்த மனிதர் (-ஸஃப்வான், தம் அன்னையான என்னுடன் தம்மை இணைத்து அவதூறு பேசுவதைக் கேட்டு), ‘சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்); என்னுடைய உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் ஒருபோதும் எந்த (அந்நியப்) பெண்ணின் மறைவிடத்தையும் திறந்ததில்லை” என்று கூறினார். அதன் பிறகு அவர் இறைவழியில் (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார்.

புஹாரி :4141 ஆயிஷா (ரலி).

1764. என் தொடர்பாக அவதூறு பேசப்பட்டபோது எனக்கு இன்னும் அது தெரிந்திராத நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தொடர்பாக உரையாற்றிட எழுந்து நின்றார்கள். ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வைத் தக்கபடி போற்றிவிட்டு, ‘என் மனைவியின் மீது அபாண்டப் பழி சுமத்தியவர்களின் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் எந்தத் தீயொழுக்கத்தையும் நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய பண்பையும் நான் காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறு எந்தச் சமயத்திலும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில் வெளியில் சென்றால் அவரும் என்னுடனேயே இருப்பார்” என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , என் வீட்டிற்கு வந்திருந்து என் பணிப் பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள் ‘இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து ‘அவர்கள் பிசைந்து வைத்த மாவை’ அல்லது ‘அவர்கள் குழைத்து வைத்த மாவை’த் தின்றுவிட்டுச் செல்லும் அளவிற்கு (மெய் மறந்து) உறங்கி விடுவார்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையையும் நான் (அவரிடமிருந்து) அறியவில்லை” என்று சொல்லியிருந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அவளை அதட்டி, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்!” என்று அவளிடம் விரிவாக விஷயத்தை விளக்கினார். அப்போதும் அவள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக, பொற்கொல்லன், சிவப்பான (தூய்மையான) தங்கக் கட்டியை எப்படி மாசுமாறுவற்றதாகக் கருதுவோனோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன்” என்றே சொன்னாள். எந்த மனிதரைக் குறித்து (என்னுடன் இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் ‘அல்லாஹ் தூய்மையானவன். நான் இதுவரை எந்த அன்னியப் பெண்ணின் ஆடையையும் நீக்கியதில்லையே!” என்று கூறினார். பிறகு அவர் இறைவழியில் வீரமரணம் அடைந்தார்.

புஹாரி :4757 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on ஆயிஷா (ரலி) அவர்களின் மீது கூறிய அவதூறும் அபாண்ட இட்டுக்கட்டலும்.

கொலைகள் செய்தவர் தவ்பா அங்கீகரிக்கப் படுதல்.

1760. பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, ‘(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?’ என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், ‘கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒருவர், ‘(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குக் கூறினார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார். அப்போது இறை கருணையைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) தர்க்கித்தனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, ‘நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, ‘நீ தூரப்போ!” என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, ‘அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3470 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி).

1761. நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன், அவர்களின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, ‘(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?’ என்று கேட்டதற்கு இப்னு உமர் (ரலி), ‘அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, ‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்பான். அதற்கு, அவன் ‘ஆம், என் இறைவா!’ என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், ‘நாம் இத்தோடு ஒழிந்தோம்’ என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், ‘இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்’ என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், ‘இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்’ என்று கூறுவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2441 ஸஃப்வான் பின் முஹ்ரிஜ் (ரலி).

1762. ”தபூக் போரைத் தவிர, நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. இதுவல்லாது நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. பத்ரில் கலந்துகொள்ளாத எவரும் (அல்லாஹ்வினால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை (வழி மறிக்க) நாடியே (பத்ருக்குப் போனார்கள். (போன இடத்தில்) போரிடும் திட்டம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில) சந்திக்கும்படி செய்துவிட்டான். ‘இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம்’ என (அன்சாரிகளான) நாங்கள் உறுதிமொழி அளித்த ‘அகபா இரவில்’ இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் இருந்தேன். இதற்கு பதிலாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; ‘அல் அகபா’ பிரமாணத்தைவிட ‘பத்ர்’ மக்களிடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே! (தபூக் போரில் கலந்து கொள்ளாததையடுத்து நடந்த நிகழ்ச்சிகள் குறித்த) என்னுடைய செய்திகள் சில பின்வருமாறு: அந்த (தபூக்) போரில் நான் கலந்து கொள்ளாதபோது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ்நாளில்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்கள் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், அந்தப் போரின்போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன். மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குச் செல்ல நாடினால் (பெரும்பாலும்) வேறெதற்கோ செல்வது போன்று (இரண்டு பொருள்படும்படி பேசிப் பாசாங்கு செய்து) அதை மறைக்காமல் இருந்ததில்லை. ஆனால், தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயியில் நபி (ஸல்) அவர்கள் படையெடுத்துச் செல்லவிருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் (பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்து செல்லவேண்டியிருக்கும் என்றும், அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர் பார்த்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்கள். அப்போதுதான் அவர்கள் தங்களின் போருக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். தாம் விரும்பிய திசையை (தபூக்கை) அவர்களுக்குத் தெரிவித்தும் விட்டார்கள். ‘எழுதப்படும் எந்தப் பதிவேடும் இத்தனைப் பேருக்கு இடமளிக்காது’ எனும் அளவிற்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள்.(போரில் கலந்துகொள்ளாமல்) தலைமறைவாகி விடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு (வஹீ) வராத வரையில் (தான் போருக்கு வராத) விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணவே செய்வார். (அந்த அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற) அறுவடைக் காலமான அந்த வெப்பம் மிகுந்த வெயில்) காலத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்யக் காலை நேரத்தில் செல்லலாவேன். என்னுடைய பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்துவிடுவேன். ‘(நினைக்கும் போது) அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத் தான் சக்தியிருக்கிறதே! (பிறகு, நான் ஏன் அவசரப்படவேண்டும்?)’ என்று என் மனத்திற்குள் கூறிக்கொண்டேன். என் நிலை இப்படியே நீடித்துக் கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாடுபட்டனர். (ஒரு வழியாகப் பயண ஏற்பாடு முடிந்தது.) பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , தம்முடன் முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு (ஒரு) காலை நேரத்தில் புறப்பட்டு விட்டார்கள். அப்போதும் நான் என்னுடைய பயணத்திற்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்கவில்லை. ‘நபி (ஸல்) அவர்கள் சென்ற பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்களில் பயண ஏற்பாடுகளைச் செய்து அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொள்வேன்’ என்று நான் (என் மனத்திற்குள்) சொல்லிக் கொண்டேன். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு (அன்றைய இரவும் கழிந்து) மறுநாள் காலை பயண ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தேன். ஆனால், அன்றைய தினமும் எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்தேன். அதற்கு அடுத்த நாள் காலையிலும் நினைத்தேன். அன்றும் அந்த பிற்பகுதியும் செய்து முடிக்கவில்லை. (இன்று நாளை என்று) என்னுடைய நிலை இழுபட்டுக் கொண்டே சென்றது. முஸ்லிம்கள் விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். (எனக்கு) அந்தப் போர் கை நழுவிவிட்டது. நான் உடடினயாகப் புறப்பட்டுச் சென்று படையினருடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படி நான் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். (ஆனால், என்ன செய்வது?) அது என் விதியில் எழுதப்பட்டிருக்கவில்லை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னால், மதீனாவில் நான் மக்களிடையே சுற்றி வரும்போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர்களையும் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர், பெண்கள் போன்ற) பலவீனர்களையும் தவிர வேறெவரையும் நான் (மதீனாவிற்குள்) பார்க்கவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , தபூக் சென்றடையும் வரையில் என்னை நினைவு கூரவேயில்லை. தபூக்கில் மக்களிடையே அமர்ந்து கொண்டிருக்கும்போது தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘கஅப் என்ன ஆனார்?’ என்று கேட்டார்கள். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! அவரின் இரண்டு சால்வைகளும் (ஆடை அணிகலன்களும்) அவற்றைத் தம் தோள்களில் போட்டு அவர் (அழகு) பார்த்துக் கொண்டிருப்பதும் தான் அவரை வரவிடாமல் தடுத்துவிட்டன” என்று கூறினார். உடனே, முஆத் இப்னு ஜபல் (ரலி), (அந்த மனிதரை நோக்கி), ‘தீய வார்த்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) மௌனமாகவே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டியபோது கவலை என் மனத்தில் (குடி) புகுந்தது. (அல்லாஹ்வின் தூதரிடம் சாக்குப் போக்குச் சொல்வதற்காகப்) பொய்யான காரணங்களை நான் யோசிக்கத் தொடங்கினேன். ‘நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்?’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மேலும், அதற்காக நான் என் குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் (ஆலோசனை) உதவி தேடினேன். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவை) நெருங்கி வந்துவிட்டார்கள் என்று (செய்தி) சொல்லப்பட்டபோது (நான் புனைந்து வைத்திருந்த) பொய்மை என் மனத்தைவிட்டு விலகிவிட்டது. ‘பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது. அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். அவன் தன் தூதருக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்து விடுவான்)’ என்று உணர்ந்து, நபி (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்லிவிட முடிவு செய்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள்.(பொதுவாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்து கொள்வது அவர்களின் வழக்கம். (வழக்கம் போல்) அதை அவர்கள் செய்தபோது, (தபூக் போரில் கலந்துகொள்ளச் செல்லாமல்) பின்தங்கி விட்டவர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு (தாம் போருக்கு வராமல் போனதற்கு) சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , அவர்களின் வெளிப்படையான காரணங்களை ஏற்று அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள். அப்போது, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்னபோது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போன்று புன்னகைத்தார்கள். பிறகு, ‘வாருங்கள்” என்று கூறினார்கள். உடனே, நான் அவர்களிடம் (சில எட்டுகள் வைத்து) நடந்து சென்று அவர்களின் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், ‘(போரில்) நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்து கொண்டிருக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாயதவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி (அவருடைய) கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். (எவராலும் வெல்ல முடியாத) வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்போது) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் போரில் கலந்து கொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை விட்டும் நான் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை” என்று கூறினேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இவர் உண்மை சொல்லிவிட்டார்” (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்களின் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தப் பாவத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. (போரில்) கலந்து கொள்ளாத (மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்குக் கூட உங்களால் இயலாமல் போய்விட்டதே! நீங்கள் செய்த பாவத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்கும் பாவ மன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ சலிமா குலத்தினர் என்னைக் கடுமையாக ஏசிக் கொண்டேயிருந்தனர். எந்த அளவிற்கென்றால், நான் (அல்லாஹ்வின் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்கு முன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லிவிடலாமா என்று நான் நினைத்தேன். பிறகு நான் பனூ சலிமா குலத்தாரை நோக்கி, ‘(தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட) இந்த நிலையை என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கிறார்களா?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘ஆம், இரண்டு பேர் நீங்கள் சொன்னதைப் போன்றே (உண்மையான காரணத்தை நபியவர்களிடம்) கூறினார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டதும் தான் அப்போது அவர்கள் இருவருக்கும் (பதிலாகச்) சொல்லப்பட்டது.” என்று கூறினார்கள். உடனே நான், ‘அவர்கள்” இருவரும் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘முராரா இப்னு ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் இப்னு உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும்” என்று பத்ருப்போரில் கலந்துகொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ சலிமா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச்) சென்று விட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்து விட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்களின் விஷயத்தில் மாறிப் போய்விட்டார்கள். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்புவியே மாறிவிட்டது போன்றும் அது எனக்கு அன்னியமானது போன்றும் நான் கருதினேன். இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாள்கள் இருந்தோம். என்னுடைய இரண்டு சகாக்களும் (முராராவும், ஹிலாலும்) செயலிழந்து போய்த் தம் இல்லங்களிலேயே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தனர். ஆனால் நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவனாகவும் (மன) வலிமை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டை விட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்) தொழுகையில் கலந்துகொண்டும், கடை வீதிகளில் சுற்றிக் கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேசமாட்டார்கள். நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வேன். தொழுகையை முடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும்போது சலாம் கூறுவேன். எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன். பிறகு, அவர்களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகைகளை நிறைவேற்றுவேன். அப்போது (என்னை நபி (ஸல்) அவர்கள் பார்க்கிறார்களா என்று) ஓரக் கண்ணால் இரகசியமாகப் பார்ப்பேன். நான் என் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பியதும் அவர்கள் என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தார்கள். மக்களின் புறக்கணிப்பு நீடித்துக் கொண்டே சென்றபோது, நான் நடந்து சென்று அபூ கத்தாதா (ரலி) அவர்களின் தோட்டத்தின் சுவர் மீதேறினேன். அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார். அவருக்கு நான் சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்கு பதில் சலாம் சொல்லவில்லை. உடனே நான், ‘அபூ கத்தாதா! அல்லாஹ்வை முன்வைத்து உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்று நீ அறிவாயாக?’ என்று கேட்டேன். அதற்கு அவர் (பதிலேதும் கூறாமல்) மௌனமாயிருந்தார். பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து (முன்பு போன்றே) கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாயிருந்தார். (மூன்றாம் முறையாக) மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன். அப்போது அவர், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று (மட்டும்) பதிலளித்தார். அப்போது என் இரண்டு கண்களும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு நான் திரும்பி வந்த அந்தச் சுவரில் ஏறி (வெளியேறி) னேன். (நிலைமை இவ்வாறு நீடித்துக் கொண்டிருக்க) ஒரு நாள் மதீனாவின் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயிகளில் ஒருவர், ‘கஅப் இப்னு மாலிக்கை எனக்கு அறிவித்துத் தருவது யார்?’ என்று (என்னைக் குறித்து) விசாரித்துக் கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர். உடனே, அவர் என்னிடம் வந்து, ‘ஃகஸ்ஸான்’ நாட்டின் அரசனிடமிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த) கடிதமொன்றைத் தந்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: நிற்க! உங்கள் தோழர் (முஹம்மது) உங்களைப் புறக்கணித்து (ஒதுக்கி)விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்துவிடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம். இதை நான் படித்தபோது, ‘இது இன்னொரு சோதனையாயிற்றே!” என்று (என் மனத்திற்குள்) கூறிக்கொண்டு அதை எடுத்துச் சென்று (ரொட்டி சுடும்) அடுப்பிலிட்டு எரித்து விட்டேன்.

ஐம்பது நாள்களில் நாற்பது நாள்கள் கழிந்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒரு தூதர் என்னிடம் வந்து, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , நீங்கள் உங்கள் மனைவியை விட்டும் விலகி விட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நான், ‘அவளை நான் விவாகரத்துச் செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டேன். அவர், ‘இல்லை. (விவாகரத்து செய்ய வேண்டாம்.) அவரைவிட்டு நீங்கள் விலகி விடவேண்டும். அவரை நெருங்கக் கூடாது (இதுவே இறைத்தூதர் உத்தரவு)” என்று கூறினார். இதைப் போன்றே என் இரண்டு சகாக்களுக்கும் (நபி (ஸல்) அவர்கள் உத்தரவு) அனுப்பியிருந்தார்கள். எனவே, நான் என் மனைவியிடம், ‘உன் குடும்பத்தாரிடம் சென்று, இது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் அவர்களிடத்திலேயே இருந்து வா!” என்று சொன்னேன். (என் சகா) ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்களின் மனைவி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘(என் கணவர்) ஹிலால் இப்னு உமய்யா செயல்பட முடியாத வயோதிகர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா?’ என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இல்லை. ஆயினும், அவர் உன்னை (உடலுறவு கொள்ள) நெருங்க வேண்டாம்” என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதிலிருந்து இந்த நாள் வரையில் அழுது கொண்டேயிருக்கிறார்” என்றும் (அல்லாஹ்வின் தூதரிடம்) கூறினார். கஅப்(ரலி) கூறினார்: என் வீட்டாரில் ஒருவர், ‘தம் கணவருக்குப் பணிவிடை புரிய ஹிலால் இப்னு உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்தது போல், உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடைபுரிய) அனுமதிக்கும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டால் (நன்றாயிருக்குமே)” என்று கூறினார். அதற்கு நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி விஷயத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்கமாட்டேன். என் மனைவி விஷயத்தில் நான் அனுமதி கோரும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ன (பதில்) சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாக (வேறு) இருக்கிறேன். (ஹிலால், வயோதிகர். அதனால் அவருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சலுகை காட்டியிருக்கலாம்)” என்று கூறி (மறுத்து) விட்டேன். அதற்குப் பின் பத்து நாள்கள் (இவ்வாறே) இருந்தேன். எங்களிடம் பேசக் கூடாதென இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்த நாளிலிருந்து ஐம்பது நாள்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118வது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) ‘பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொருத்த வரையில் அது குறுகி, நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது அப்போது, ‘சல்உ’ மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில்
, ‘கஅப் இப்னு மாலிக்கே! நற்செய்தி பெற்றுக்கொள்!” என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம் வந்துவிட்டது என்று அறிந்து கொண்டேன். ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்தபோது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று அறிவித்து விட்டார்கள்’ என நான் விளங்கிக் கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரண்டு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார். அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக்கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி கூறினார்.) மேலும், (மலை மீதிருந்து வந்த) வந்து சேர்ந்தது. எவருடைய குரலை (மலை மீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்தபோது நான் என் இரண்டு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூ கத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி நான் அணிந்துகொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன். அப்போது (வழியில்) மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவமன்னிப்புக் கிடைத்ததால், ‘அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்து விட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம்’ என்று கூறலாயினர். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்களிருக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) எழுந்தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர்களில் அவர்களைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி (வருவதற்காக) எழவில்லை. தல்ஹா (ரலி) அவர்களின் இந்த அன்பை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னபோது, சந்தோஷத்தினால் அவர்கள் தம் முகம் மின்னிக்கொண்டிருக்க, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘உன்னை உன் தாய் பெற்றெடுத்தது முதல் உன்னைக் கடந்து சென்ற நாள்களில் மிகச் சிறந்த நாளான இன்று உனக்கு (பாவ மன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி கூறுகிறேன்” என்று கூறினார்கள்.
நான், ‘இறைத்தூதர் அவர்களே! (இந்த நற்செய்தியைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தெரிவிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இல்லை. (என் தரப்பிலிருந்து நான் இதைத் தெரிவிக்கவில்லை.) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்துள்ள வேத அறிவிப்பின் அடிப்படையில்) தான் தெரிவிக்கிறேன்” என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஏதாவது) சந்தோஷம் ஏற்படும்போது அவர்களின் முகம் சந்திரனின் ஒரு துண்டு போல் ஆகி பிரகாசிக்கும். அவர்களின் முகத்தின் பிரகாசத்தை வைத்து அவர்களின் சந்தோஷத்தை நாங்கள் அறிந்துகொள்வோம். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்து கொண்டபோது, ‘இறைத்தூதர் அவர்களே! என்னுடைய பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக் கொள்வதற்காக) தர்மமாக அளித்து விடுகிறேன்” என்று சொன்னேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது” என்று கூறினார்கள். ‘கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக் கொள்கிறேன் இறைத்தூதர் அவர்களே! உண்மை பேசிய காரணத்தினால் தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதையடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன்” என்று கூறினேன். எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்தது போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதி மொழியை நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன நாளிலிருந்து என்னுடைய இந்த நாள் வரை நான் பொய்யை நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் கால(மனை)த்திலும் அல்லாஹ் என்னைப் (பொய் சொல்லவிடாமல்) பாதுகாப்பான் என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், ‘திண்ணமாக, அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள் புரிந்தான். (அவ்வாறே) துன்ப வேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களின் மீதும் அன்சாரிகளின் மீதும் (அருள் புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான். (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாமல்) விவகாரம் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்துவிட்டான்.) பூமி இவ்வளவு விசாலமானதாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கடியாகத் தோன்றி அவர்கள் உயிர் வாழ்வதும் மிகக் கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனை விட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் உறுதிபட அறிந்துகொண்டனர். எனவே, அவர்கள் பாவத்திலிருந்து விலகிக்கொள்ளும் பொருட்டு அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்” எனும் (திருக்குர்ஆன் 09: 117-119) வசனங்களை அருளினான். எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழி காட்டிய பின், தன் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னை உண்மை பேசச் செய்து உபகாரம் புரிந்தது போன்று வேறெந்த உபகாரத்தையும் நான் மிகப் பெரியதாக ஒருபோதும் கருதவில்லை. நான் அவர்களிடம் பொய் பேசியிருந்தால், (போருக்குச் செல்லாமல்) பொய் சொன்ன(வர்களான நயவஞ்சகர்)கள் அழிந்து போனது போன்று நானும் அழிந்து விட்டிருப்பேன். ஏனெனில், இறைவன் வேத அறிவிப்பு (வஹீ) அருளியபோது யாருக்கும் சொல்லாத கடுமையான சொற்களைப் பொய் சொன்னவர்கள் குறித்து அருளினான். ‘நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது, அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுங்கள்! ஏனென்றால், அவர்கள் அசுத்தமானவர்கள்; உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினைகளுக்கு இதுவே கூலியாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்களின் மீது ஒருபோதும் திருப்தி கொள்ளமாட்டான்” என்று (கடிந்த வண்ணம்) அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 09:95, 96) குறிப்பாக, எங்கள் மூவரின் விவகாரம் மட்டும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (பொய்) சத்தியம் செய்தவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களிடமும் உறுதிப்பிரமாணம் பெற்று அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். (எங்களின்) அந்த விவகாரத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிக்கும் வரையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் விவகாரத்தைத் தள்ளிப்போட்டு வந்தார்கள். இதனால் தான் (9வது அத்தியாயத்தின் 118-வது வசனத்தில்) அல்லாஹ் எங்களைக் குறித்து ‘போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்ட மூவர்’ என்று (போரைக் குறிப்பிட்டுக்) கூறவில்லை. (மாறாக, ‘பின்தங்கிவிட்ட மூவர்’ என்று பொதுவாகவே குறிப்பிட்டுள்ளான்.) ‘நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் பொய்யான சாக்குப் போக்குக் கூறியவர்களின் காரணங்களை உடனுக்குடன் ஏற்றது போன்றல்லாமல் எங்கள் விவகாரத்தை (உடனே தீர்க்காது) அல்லாஹ் தள்ளிப்போட்டு வந்தான்” என்பதே அதன் கருத்தாகும்.

புஹாரி : 4418 அப்துல்லாஹ் பின் கஃப் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , , | Comments Off on கொலைகள் செய்தவர் தவ்பா அங்கீகரிக்கப் படுதல்.

நல்லறங்கள் தீயவைகளை அழித்து விடும்.

1758. ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றி விடும்” (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

புஹாரி :526 இப்னு மஸ்ஊது (ரலி).

1759. நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருமனிதர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றை செய்து விட்டேன். எனவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்தபோது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். எனவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (தொழுதேன்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் அல்லாஹ் ‘உம்முடைய பாவத்தை’ அல்லது உமக்குரிய தண்டனையை’ மன்னித்து விட்டான்” என்றார்கள்.

புஹாரி :6823 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on நல்லறங்கள் தீயவைகளை அழித்து விடும்.

துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்

இறைவன் படைத்த நாட்கள் யாவும் சிறப்புக்குரியவையாகும்.அவற்றுள் அடியார்கள் வணக்கஙகள் புரிந்து அதன்மூலம் மாண்பைப்பெற சில நாட்களை இறைவன் சிறப்பித்துள்ளான். ஏனைய சமுதாய மக்களின் வாழ்நட்களை ஒப்பிடும்போது நமது ஆயுள் மிகவும் குறைவானதாகும்.

லைத்துல் கத்ரு இரவு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-

“எனது சமுதாய மக்களின் ஆயுட்காலம் அறுபது முதல் எழுபது வயது வரையாகும்”. (திர்மிதி,இப்னு மாஜா) இந்த மணிவாசகம் மிகவும் சிந்திக்கத்தக்கதாகும். எனவே குறைந்த ஆயுளில் நிறைந்த ஆயுளின் மாண்பைப்பெற இறைவன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சமுதாய மக்களுக்குப் புரிந்துள்ள மாபெரும் அருட்கொடைகளே சிறப்புக்குரிய சிலநாட்கள்! அத்தகைய நாட்களில் தலையாயது ரமளானின் லைலத்துல் கத்ரு என்னும் இரவு. இது ஆயிரம் மாதங்கள் (அதாவது 83.33 ஆண்டுகள்) வணக்கம் புரிவதை விட மாண்புடயதாகும். (அல்குர்ஆன்-97:3) Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்

அல்லாஹ் அதிக ரோஷக்காரன்.

1755. ”அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திருக்கும் அல்லாஹ் தடைவிதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. எனவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்” (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா (ரஹ்) கூறினார்: நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா (ரஹ்) அவர்களிடம் ‘இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். நான், ‘இதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டார்களா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஆம்” என்று பதில் கூறினார்கள்.

புஹாரி :4634 அம்ர் பின் அபூவாயில் (ரலி).

1756. நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறை நம்பிக்கையாளர் செய்வதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5223 அபூ ஹுரைரா (ரலி).

1757. அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5222 அஸ்மா (ரலி) .
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on அல்லாஹ் அதிக ரோஷக்காரன்.

பெருமைக் கொண்டதால் சிறுமை அடைந்த மனித குல விரோதி!

நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், ”ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

”நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; ”நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

”இதிலிருந்து நீ இறங்கிவிடு, நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை, ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு – நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான். ”(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான். Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on பெருமைக் கொண்டதால் சிறுமை அடைந்த மனித குல விரோதி!

பாவங்களை மீண்டும் செய்து விட்டு தவ்பா செய்பவன் பற்றி….

1754. ஓர் அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு ‘இறைவா! நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். ‘என் அடியான் எனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று) நான் என் அடியானை மன்னித்து விட்டேன்” என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடியவரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) ‘என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம் முறையும்) ‘என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்து விட்டேன்” என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடியவரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) ‘என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் ‘என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்து விட்டேன். இனி அவன் நாடியதைச் செய்து கொள்ளட்டும்” என்று சொன்னான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7507 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on பாவங்களை மீண்டும் செய்து விட்டு தவ்பா செய்பவன் பற்றி….

அல்லாஹ்வின் இரக்கம் அவனின் கோபத்தை மிகைத்தது.

1749. அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3194 அபூஹுரைரா (ரலி).

1750. அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6000 அபூஹுரைரா (ரலி).

1751. (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!” என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது” என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்” என்று கூறினார்கள்.

புஹாரி :5999 உமர் (ரலி).

1752. (முந்தைய காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒருவர் ‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, அந்தச் சாம்பலில் பாதியைக் கரையிலும் பாதியைக் கடலிலும் தூவிவிடுங்கள். ஏனெனில், இறைவன் மீதாணையாக! என் மீது இறைவனுக்கு சக்தி ஏற்பட்டால், உலக மக்களில் யாவரும் அளிக்காத வேதனையை அவன் எனக்கு அளித்து விடுவான்” என்று சொல்லி(விட்டு இறந்து) விட்டார். (அவ்வாறே அவர் உடல் எரிக்கப்பட்டு சாம்பல் தூவப்பட்டது.) பிறகு, அல்லாஹ் கடலுக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரின் உடலை ஒன்று திரட்டினான். தரைக்கு ஆணையிட்டு அதிலிருந்தும் அவரின் உடலை ஒன்று திரட்டினான். பிறகு, ‘நீ எதற்காக இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டான். அதற்கு அவர், ‘உன் அச்சத்தினால் தான். நீ நன்கறிந்தவன்” என்று சொல்ல, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7506 அபூஹுரைரா (ரலி).

1753. உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒருவர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிவிட்டபோது தன் மகன்களிடம், ‘உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்” என்று கேட்டார். அவர்கள், ‘சிறந்த தந்தையாக இருந்தீர்கள்” என்று பதில் கூறினர். அதற்கு அவர், ‘நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. எனவே, நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள்” என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை (அவரின் உடல் அணுக்களை) அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) ‘இப்படிச் செய்ய உத்திரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?’ என்று கேட்டான். அவர், ‘உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் (இப்படி உத்திரவிட என்னைத் தூண்டியது)” என்று
கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அவன் அரவணைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3478 அபூ ஸயீத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , | Comments Off on அல்லாஹ்வின் இரக்கம் அவனின் கோபத்தை மிகைத்தது.

தவ்பாவின் சிறப்பு.

தவ்பா (பாவ மீட்சி)

1746. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7405 அபூஹுரைரா (ரலி).

1747. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் ‘கடுமையான வெப்பமும் தாகமும்’ அல்லது ‘அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று’ ஏற்பட்டது. அவன், ‘நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்” என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதைவிடத் தன் அடியான் தவ்பா – பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6308 இப்னு மஸ்ஊத் (ரலி).

1748. உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா – பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6309 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on தவ்பாவின் சிறப்பு.