1755. ”அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திருக்கும் அல்லாஹ் தடைவிதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. எனவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்” (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.)
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா (ரஹ்) கூறினார்: நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா (ரஹ்) அவர்களிடம் ‘இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். நான், ‘இதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டார்களா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஆம்” என்று பதில் கூறினார்கள்.
1756. நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறை நம்பிக்கையாளர் செய்வதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1757. அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.