இறையச்சம் மற்றும் இதயசுத்தி

1865. உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் (தங்கப்போகும்) இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். (அது) ஒன்று நரகமாயிருக்கும்; அல்லது சொர்க்கமாயிருக்கும். அப்போது ‘இதுதான் உன் இருப்பிடம். இறுதியில் இங்குதான் நீ அனுப்பப்படுவாய்” என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6515 இப்னு உமர் (ரலி).

1866. ‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப் அல் அன்சாரீ (ரலி) எனக்குக் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலித்து வரும்படி அனுப்பினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு அலா இப்னு ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா (ரலி) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா (ரலி) வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, ‘அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்’ என்று நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்று கூற, அன்சாரிகள், ‘ஆமாம், இறைத் தூதர் அவர்களே!” என்று பதிலளித்தார்கள். ‘எனவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3158 அம்ர் பின் அல் அவ்ஃப் (ரலி).

1867. செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6490 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , | Comments Off on இறையச்சம் மற்றும் இதயசுத்தி

இரு ஸூருக்கும் இடைப்பட்ட காலம்.

1864. ”(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) கூறினார். (அபூஹுரைரா (ரலி) அவர்களின் நண்பர்கள்,) ‘(அபூஹுரைரா அவர்களே!) நாள்களில் நாற்பதா?’ என்று கேட்டனர். அபூஹுரைரா (ரலி), ‘(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்” என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘நாற்பது மாதங்களா?’ என்று கேட்டனர். அதற்கும் ‘நான் விலகிக் கொள்கிறேன்” என அபூஹுரைரா (ரலி) கூறினார். ‘ஆண்டுகள் நாற்பதா?’ என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி), ‘நான் விலகிக் கொள்கிறேன்” என்று கூறினார்கள். பின்னர், ‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பதை; தவிர! அதுதான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள் வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்” என்று மேலும் கூறினார்கள்.

புஹாரி : 4935 அல் அமாஷ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on இரு ஸூருக்கும் இடைப்பட்ட காலம்.

தஜ்ஜாலுக்கு மதீனாவில் நுழையத் தடை.

1858. தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!” என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களைநோக்கி), ‘நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?’ என்று கேட்பான். மக்கள் ‘கொள்ள மாட்டோம்!” என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!” என்று கூறுவார். தஜ்ஜால்’ நான் இவரைக் கொல்வேன்!” என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1882 அபூ ஸயீத் (ரலி).

1859. நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. மேலும், அவர்கள் என்னிடம், ‘அவனால் உமக்கென்ன தீங்கு?’ என்று கேட்டார்கள். நான், ‘(அச்சம் தான்.) ஏனெனில், தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘இது என்ன (பிரமாதம்)? (அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கிறானோ) அதைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதே” என்றார்கள்.

புஹாரி : 7122 அல்முகீரா பின் ஷூஹ்பா (ரலி).

1860. ”மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நில நடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1881 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1861. யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமை நாள் வந்தடைகிறதோ அவர்கள் தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

புஹாரி : 7067 இப்னு மஸ்ஊத் (ரலி).

1862. தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறக் கேட்டேன்.

புஹாரி :4936 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி).

1863. நானும் மறுமை நாளும் இதோ இந்த (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டையும் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6504 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , , | Comments Off on தஜ்ஜாலுக்கு மதீனாவில் நுழையத் தடை.

அல்லாஹ்வுக்கு தீங்கிழைப்பவர்கள் யார்?

கேள்வி எண்: 105. அல்லாஹ்வுக்கு தீங்கிழைப்பவர்கள் என யாரைக் குறித்து இறைவன் கூறுகிறான்? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on அல்லாஹ்வுக்கு தீங்கிழைப்பவர்கள் யார்?

தஜ்ஜால் பற்றிய விவரங்கள்.

1854. நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால்’ என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, ‘அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், ‘தஜ்ஜால்’ என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனுடைய கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3439 இப்னு உமர் (ரலி).

1855. இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக,உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே ‘காஃபிர்’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7131 அனஸ் (ரலி).

1856. உக்பா இப்னு ஆமிர் (ரலி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி), ‘தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை ‘இது நெருப்பு’ என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை ‘இது குளிர்ந்த நீர்’ என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3450 ரபிஉ பின் ஹிராஸ் (ரலி).

1857. நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3338 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on தஜ்ஜால் பற்றிய விவரங்கள்.

இப்னு ஸய்யாத் பற்றி….

1851. உமர் (ரலி) நபித்தோழர்களின் ஒரு குழுவினருடன் நபியவர்களோடு (தான் இறைத்தூதர் என்று வாதாடிய) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள். பனீமகாலா குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அவனுடைய முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணரவில்லை. பிறகு, நபி (ஸல்) அவர்கள், ‘நான் இறைத்தூதர் (ஸல்) தான் என்று நீ சாட்சி கூறுகிறாயா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்து வீட்டு, ‘நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று பதிலளித்தான். அப்போது இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், நீங்கள் நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்றுக் கொண்டு) சாட்சி கூறுகிறீர்களா?’ என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நான் நம்பிக்கை கொண்டேன்” என்று கூறினார்கள். (பின்னர்) நபி (ஸல்) அவர்கள், (உன் நிலைபற்றி) நீ என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், ‘என்னிடம் மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்றன” என்றான். நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கு இப்பிரச்சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, ‘நான் ஒன்றை மனத்தில் உனக்காக (உன்னை சோதிப்பதற்காக) மறைத்து வைத்துள்ளேன். (அது என்ன என்று சொல்)” என்றார்கள். இப்னு ஸய்யாத், ‘அது ‘துக்’ என்று கூறினான். (அதாவது ‘துகான்’ என்பதை ‘துக்’ என அரைகுரையாகச் சொன்னான்.) உடனே நபி (ஸல்) அவர்கள், ‘தூர விலகிப் போ! நீ உன் எல்லையை தாண்டிவிட முடியாது என்று கூறினார்கள். உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இவனைக் கொல்ல எனக்கு அனுமதியுங்கள். இவனுடைய கழுத்தை நான் சீவி விடுகிறேன்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை” என்றார்கள்.

புஹாரி : 3055 இப்னு உமர் (ரலி).

1852. நபி (ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்ச தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்து விடும் முன்பே அவனிடமிருந்து அவனுடைய பேச்சு திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்து நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தன்னுடைய படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, ‘ஸாஃபியே!” (இது இப்னு ஸய்யாதின் பெயராகும்.) என்றழைத்தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி (ஸல்) அவர்கள், ‘அவள் அவனை அப்படியே விட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவு படுத்தியிருப்பான்” என்றார்கள்.

புஹாரி : 3056 இப்னு உமர் (ரலி).

1853. நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வைஅவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள். நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

புஹாரி : 3057 இப்னுஉமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on இப்னு ஸய்யாத் பற்றி….

குழப்பங்கள் கிழக்கிலிருந்து தோன்றுதல். குழப்பங்களின் நிலைகளில் சில.

1840. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிழக்கை நோக்கியபடி, அறிந்து கொள்ளுங்கள்! குழப்பம், ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இந்த இடத்திலிருந்து தோன்றும்” என்று சொல்ல கேட்டேன்.

புஹாரி : 7093 இப்னு உமர் (ரலி).

1841. தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் ‘துல்கலஸா’ கடவுள் சிலையைச் சுற்றி அசையாதவரை மறுமை நாள் வராது. ‘துல்கலஸா’ என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7116 அபூஹுரைரா (ரலி).

1842. ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, ‘அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?’ என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராதவரை மறுமை நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7115 அபூஹுரைரா (ரலி).

1843. ”அபிஷீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1596 அபூஹுரைரா (ரலி).

1844. கஹ்தான் குலத்திலிருந்து ஒருவர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3517 அபூஹுரைரா (ரலி).

1845. சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான (சப்பை) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதிநாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதி நாள் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2928 அபூஹுரைரா (ரலி).

1846. (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இந்தக் குறைஷிக் குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3604 அபூஹூரைரா (ரலி).

1847. (தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய ரோமப் பேரரசன்) சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் (வமிச அரசன்) எவனும் இருக்கமாட்டான். அவ்விருவரின் கருவூலங்களும் இறைவழியில் போரிடுவோரிடையே பங்கிடப்பட்டு விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3027 அபூஹுரைரா (ரலி).

1848. (தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா அழிந்துவிட்டால் அதன் பிறகு கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். (தற்போதைய ரோமப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அதன் பிறகு சீசர் எவரும் இருக்க மாட்டார். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் அவ்விருவரின் கருவூலங்களையும் இறைவழியில் செலவழிப்பீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3121 ஜாபிர் இப்னு சமுரா (ரலி).

1849. யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், ஒரு கல்கூட, முஸ
்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு” என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3593 இப்னு உமர் (ரலி).

1850. இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாதவரை இறுதிநாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

புஹாரி : 3609 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , , | Comments Off on குழப்பங்கள் கிழக்கிலிருந்து தோன்றுதல். குழப்பங்களின் நிலைகளில் சில.

ஹிஜாஸ் பகுதியில் நெருப்பு கிளம்புதல்.

1839. ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாதவரை மறுமைநாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7118 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on ஹிஜாஸ் பகுதியில் நெருப்பு கிளம்புதல்.

யூப்ரட்டிஸ் நதி புதையலை வெளிப்படுத்துதல்.

1838. (மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப்புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா இப்னு காலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் ‘தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தவுள்ளது” என்று இடம் பெற்றுள்ளது.

புஹாரி : 7119 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on யூப்ரட்டிஸ் நதி புதையலை வெளிப்படுத்துதல்.

கடலலைகள் போல் குழப்பங்கள் பரவுதல்.

1837. நாங்கள் உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்று பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு.) நபி (ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர் (ரலி) ‘நீர் அதற்குத் தகுதியானவர் தாம்’ என்றனர். ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும் என்றும் நான் விடையளித்தேன். அதற்கு உமர் (ரலி), ‘நான் இதைக் கருதவில்லை’ என்றனர். ‘கடலலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் (நபிகளால் முன்னறிவிக்கப்பட்ட) ஃபித்னா (குழப்பங்கள்) பற்றியே கேட்கிறேன்’ என்று கூறினார்கள். இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது என கூறினேன். ‘அக்கதவு திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?’ என உமர் (ரலி) கேட்டார்கள். நான் உடைக்கப்படும் என்றேன். ‘அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது’ என்று உமர் (ரலி) கூறினார். ஷகீக் கூறினார். அந்தக்கதவு எதுவென உமர் (ரலி) அறிவார்களா? என்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். ‘ஆம்! பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவது போல் அதை உமர் (ரலி) அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன்’ என்று ஹுதைஃபா (ரலி) கூறினார். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சி, மஸ்ரூக்கைக் கேட்கச் செய்தோம். அதற்கு ஹுதைஃபா (ரலி) ‘அந்தக் கதவு உமர் (ரலி) தாம்’ என்றார்கள்.

புஹாரி : 525 ஷகீக் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on கடலலைகள் போல் குழப்பங்கள் பரவுதல்.