1832. நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள். பிறகு, ‘நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள் வீடுகள் நெடுகிலும் (வருங்காலத்தில்) குழப்பங்கள் விளையக்கூடிய இடங்களை மழைத்துளிகள் விழும் இடங்களைப் (பார்ப்பதைப்) போன்று பார்க்கிறேன்!” என்று கூறினார்கள்.
1833. குழப்பங்கள் மிகுந்த அக்காலத்தில் அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அதை அடைகிறவனை அது வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது, புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெறட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.