1834. இவருக்கு (அலீ (ரலி)க்கு) உதவுவதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) என்னைச் சந்தித்து ‘எங்கே செல்கிறீர்?’ எனக் கேட்டார். நான் இவருக்கு உதவப் போகிறேன் என்றேன். அதற்கவர் ‘நீர் திரும்பிச் செல்லும்; ஏனெனில், ‘இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, ‘அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்’
1835. ஒரே வாதத்தை முன் வைக்கிற இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை இறுதி நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1836. (ஒரு முறை) எங்களிடையே நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விடவில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்து விட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன். தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.