ஒரு ஸஹாபியின் குறிப்பிட்ட தனிமையான ஒரு அபிப்பிராயத்தை மார்க்க விதிகளுக்குச் சான்றாக எடுக்கப்படுமா இல்லையா என்பதில் அறிஞர் சிலர் அபிப்பிராய பேதங்களைக் கூறியுள்ளனர். ஸஹாபாக்களில் ஒருவரின் கருத்து குர்ஆன், ஹதீஸ் நேருரைகளுக்கு (நஸ்ஸுக்கு) மாறாக இல்லையென்றால் அது ஆதாரமாகக் கொள்ளப்படும். ஒருவரின் அபிப்பிராயத்தை அனைத்து ஸஹாபாக்களும் புறக்கணிக்காமல் இருக்கின்ற போதும் அது சான்றுடையதாக மதிக்கப்படும். இதற்கு ‘இஜ்மாவுன் இக்ராரிய்யுன்’என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் தவறுதலான அபிப்பிராயம் கூறப்படுமானால் மற்ற ஸஹாபிகள் அதனை ஏற்கமாட்டார்கள். அதனை புறக்கணித்து விடுவார்களல்லவா? Continue reading
பார்வையிழந்த ஸஹாபியைப் பற்றிய ஹதீஸ்
இந்த ஹதீஸை இமாம் திர்மிதியும், நஸாயீயும் அறிவிக்கிறார்கள். ‘நபிகளின் துஆவை வைத்து பிரார்த்தித்தல்’ என்ற இனத்தைச் சார்ந்த ஹதீஸாக இந்த ஹதீஸ் அமைந்திருக்கிறது. கண்பார்வை இழந்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து தமக்காகப் பிரார்த்தித்து தமது பார்வையை மீட்டுத்தர அல்லாஹ்வை வேண்டும்படி கேட்டுக்கொண்டார். இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரை நோக்கி ‘நீர் விரும்பினால் கொஞ்சம் பொறுமையுடன் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் நீர் நினைப்பதுபோல நான் பிரார்த்திக்கிறேன்’ என்றார்கள். இதைக் கேட்ட அம்மனிதர் ‘பிரார்த்தியுங்கள்’ என்றார். Continue reading
ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் உண்டா?
13:16. (நபியே அவர்களிடம்:) “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ் தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும், தீமையும் செய்துக் கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்.” மேலும் கூறும்: குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.” (அவ்வாறில்லையே; எனவே, நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.
13:17. அவன் தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்து போய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.
13:18. எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருட்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.
அல் குர்ஆன்: அர் ரஃது (இடியோசை)
அழகான படைப்பாளன்!
22:5. மனிதர்களே! மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்: நாம் உங்களை மண்ணிலிருந்து, பிறகு இந்திரியத்திலிருந்து – பிறகு இரத்தக்கட்டியிலிருந்து – பிறகு வடிவமைக்கப்பட்ட அல்லது வடிவமைக்கப்படாத சதைப் பிண்டத்திலிருந்து படைத்தோம். உண்மை நிலையை உங்களுக்கு நாம் விளக்குவதற்காகதான் (இவற்றை நாம் எடுத்துரைக்கிறோம்). நாம் நாடுகின்ற (இந்திரியத்)தைஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறைகளில் தங்க வைக்கின்றோம். பிறகு உங்களைக் குழந்தை வடிவில் வெளிக் கொணர்கின்றோம்.
23:14. பிறகு, அந்த விந்தினை இரத்தக்கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர், அந்த இரத்தக்கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு, அச்சதைக் கட்டியை எழும்புகளாய் ஆக்கினோம். பின்னர், அவ்வெலும்புகளைச் சதையால் போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளர செய்தோம். பெரும் அருட்பேறுகள் உடையவன் ஆவான் அல்லாஹ், படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்.
ஆதம் நபியவர்கள் பெருமானாரின் பொருட்டால் வஸீலாத் தேடினார்கள் என்று கூறப்படும் ஹதீஸைப் பற்றி…
ஆதம் (அலை) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள் என்று சொல்லப்படும் இந்த ஹதீஸ் நபிகளைப் பற்றி உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. சுவர்க்கத்தில் பிசகிய ஆதம் (அலை) அவர்கள் ‘இறைவா! முஹம்மதின் பொருட்டால் அவரின் உரிமையைக் கொண்டு ஆணையிட்டுக் கேட்கிறேன். நீ என் குற்றங்களை மன்னித்தருள்’ என்றார்களாம்.
இதற்கு இறைவன் ‘ஆதமே! (நான் முஹம்மதைப் படைப்பதற்கு முன்னரே) நீர் அவரை எப்படி அறிந்து கொண்டாய்’ என்று கேட்டான். Continue reading
ஹதீஸ்களின் தராதரங்கள்
இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தமது ஜாமிஉ என்ற ஹதீஸ் தொகுப்பில் ஹதீஸ்களை மூன்றாகத் தரம் பிரித்தார்கள். அவை: ஸஹீஹ், ஹஸன், ளயீஃப் என்பன. இமாம் திர்மிதி அவர்கள்தாம் முதன் முதலாக ஹதீஸ்களை இப்படி பிரித்துக் காட்டியவர்கள். ஒரே ஹதீஸ் பல வழிகளில் அறிவிக்கப்படும் போதும், அறிவிப்பாளர்கள் பட்டியலில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், ஒற்றையாக நிற்பவர்களும் இல்லாமல் இருக்கும்போதும் தான் அந்த ஹதீஸுக்கு ‘ஹஸன்’ என்று பெயரிட்டார்கள். இமாம் திர்மிதி ஹஸன் என்று கருதிய ஹதீஸ்களை இமாம் அஹ்மத், ளயீஃப் (பலவீனமானவை) என்ற தரத்திலுள்ள ஹதீஸ்களோடு இணைத்து, இத்தகைய பலவீனமான ஹதீஸ்களை இஸ்லாமிய சட்ட விதிகளுக்குப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். Continue reading
நேர்வழியுடன் கூடிய சத்திய மார்க்கம்!
9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் மஸீஹை (இயேசு) அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பபபடுகிறார்கள்?
9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் (இயேசுவையும்) தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் (அல்லாஹ்) அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.
9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
9:33. அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான்.முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள் இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே ( அவ்வாறு தன் தூதரை அனுப்பினான்).
9:34. ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
9:35. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).
வஸீலா ஷபாஅத் என்னும் வார்த்தைகளில் ஏற்பட்ட சந்தேகங்கள்
வார்த்தைகளைப் பற்பல கருத்துக்களுக்குப் பிரயோகிப்பதை அறியாதவர்களும், புரட்டியும், திருப்பியும் சொற்களைக் கூறக் கூடியவர்களுமான சிலரிடத்தில் வஸீலா, தவஸ்ஸுல், ஷபாஅத் போன்ற சில வார்த்தைகள் கிடைத்தபோது அவற்றிற்கு அல்லாஹ்வும், ரஸூலும், ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்கள் ஆகியோரெல்லாம் விலக்கியிருந்ததற்கு மாற்றமான கருத்துக்களைக் கொடுத்து மக்களை தவறின்பால் திருப்பி விட்டார்கள். இதனால் பலர் தவறினார்கள். இவ்வார்த்தையின் உட்கருத்தைப் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. பொதுவாக கல்வி என்பது நன்றாக ஆராய்ந்து கற்று அறிந்து கொள்வதாகும். அறிஞர்களிடமிருந்து ஏதாவது உரைகளை நகர்த்தி, அவ்வாறு நகர்த்திய உரைகளை அந்த அறிஞர்களே கூறியதாகச் சொல்லப்படும்போது இச்சொல்லில் எத்தனை உண்மை இருக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும். நபிகளுடைய பதப்பிரயோகங்களையும், ஸஹாபாக்களுடையவும், தாபியீன்களுடையவும் சொற்களின் கருத்துக்களையும் நன்றாக அறிந்த பின்னர் அவற்றுக்கு விளக்கம்தர முனைவது போல திருமறைக்கு விளக்கம் சொல்லும்போதும், வார்த்தைகளின் தாத்பரியங்களைக் கூறும்போதும் தகுந்த சான்றுகளைக் கொண்டு சொல்ல வேண்டும். Continue reading
கப்றும் திருவிழாக்களும்
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ‘அல்லாஹ்வுக்குப் பூமியில் வந்து போகின்ற மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள் என்மீது கூறுகின்ற ஸலாம் எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கிறார்கள். (நஸாயீ, அபூஹாதிம்)
தூரத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் நபியின் மீது சொல்லும் ஸலாம் மலக்குகள் வழியாக நபியின்பால் சேர்த்து வைக்கப் படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. Continue reading
அறிவுடையோர் எவரும் தன்னைவிட வலிமையாளனை எதிர்ப்பாரா?
62:2-3-4. அவன்(அல்லாஹ்)தான் உம்மி*களிடையே ஒரு தூதரை – அவர்களிலிருந்தே தோற்றுவித்தான். அவர் எத்தகையவர் எனில், அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுகின்றார்; அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப் படுத்துகின்றார்; மேலும், அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். ஆனால், அவர்களோ இதற்கு முன்பு வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடந்தார்கள். இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும்** ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதர் தோற்றுவிக்கப்பட்டுள்ளார்). அல்லாஹ் வல்லமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனகவும்*** இருக்கின்றான். இது அவனுடைய அருள். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மகத்தான அருளைப் பொழிபவனாகவும் இருக்கின்றான்.
அல்குர்ஆன்: அல் ஜும்ஆ.
*இங்கு ‘உம்மி’ (எழுத, படிக்க தெரியாதவர்) என்னும் சொல் யூதர்களின் சொல் வழக்குப்படி இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு நுட்பமான பழிப்புரை மறைந்துள்ளது. இதன் கருத்து: எந்த அரபிகளை யூதர்கள் ‘உம்மிகள்’ என்று இழிவாகக் கூறுகின்றார்களோ – தம்மைவிட அற்பமானவர்கள், இழிவானவர்கள் என்று கருதுகின்றார்களோ – அவர்களிலிருந்துதான் மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமான அல்லாஹ் ஓர் இறைதூதரைத் தோற்றுவித்துள்ளான். அவர் தாமே வரவில்லை. மாறாக, அவரைத் தோற்றுவித்தவன் இப்பேரண்டத்தின் அரசனும், வல்லமையாளனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்வே ஆவான். அவனது வலிமையை எதிர்த்தால், இவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்வார்களேயன்றி அவனுக்குச் சிறிதும் தீங்கிழைக்க இவர்களால் முடியாது.
**அதாவது, முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவம் அரபு சமுதாயத்துக்கு மட்டுமல்ல, மாறாக உலகில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும், இனங்களுக்கும் உரியதாகும். இன்னும் இறை நம்பிக்கையாளர்களின் குழுவில் சேராத சமூகங்களுக்கும் மறுமைநாள் வரை தோன்ற இருக்கின்ற சமூகங்கள் அனைத்திற்கும் உரியதாகும் அது.
***அதாவது, அவனுடைய பேராற்றல், நுண்ணறிவு ஆகியவற்றின் விந்தையே ஆகும் இது. அதாவது, இத்தகைய பண்படாத ‘உம்மி’களின் சமுதாயத்தில் மாபெரும் இறைதூதர் ஒருவரை அவன் தோற்றுவித்தான். அவருடைய அறிவுரைகளும், வழிகாட்டலும் எந்த அளவுக்குப் புரட்சிகரமானவையாகவும், உலகளாவிய நிலையான நெறிகளைத் தாங்கியவையாகவும் உள்ளன என்றால், அவற்றின் அடிப்படியில் மனிதகுலம் முழுவதும் ஒருங்கிணைந்து ஓர் இலட்சியக் குழுவாக – உம்மத்தாக விளங்க முடியும். மேலும், என்றென்றும் அந்தக் கொள்கைகளின் வாயிலாக வழிகாட்டுதலைப் பெற முடியும்.