அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ‘அல்லாஹ்வுக்குப் பூமியில் வந்து போகின்ற மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள் என்மீது கூறுகின்ற ஸலாம் எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கிறார்கள். (நஸாயீ, அபூஹாதிம்)
தூரத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் நபியின் மீது சொல்லும் ஸலாம் மலக்குகள் வழியாக நபியின்பால் சேர்த்து வைக்கப் படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும் அதிகமாக என் மீது ஸலாம் சொல்லுங்கள். இந்நாளில் என் உம்மத்தாரின் ஸலவாத்துக்கள் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. எவர் எனக்கு அதிகமாக ஸலாம் சொல்கிறாரோ அவர்தாம் பதவியில் என்னுடன் நெருங்கியவராக இருப்பார் என்பது பிரபல்யமான மற்றொரு ஹதீஸாகும். நபி (ஸல்) அவர்களைப்பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் கீழ்வருமாறு காணப்படுகிறது: ‘என்னுடைய கப்றில் விழாக்கள் கொண்டாடாதீர்கள். உங்கள் இல்லங்களை கப்றுகளைப் போன்று ஆக்கி விடாதீர்கள். எங்கிருந்தாலும் என்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். காரணம் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேருகிறது’. (முஸ்னத்)
பிரிதொரு ஹதீஸில் நபிகள் (ஸல்) அவர்கள் ‘எனது கப்றின் அருகிலிருந்து எனக்கு யார் ஸலவாத்துச் சொன்னாலும் நான் அதைக் கேட்பேன். தூரத்திலிருந்து என்மீது யார் ஸலவாத்துச் சொன்னாலும் அது என்னிடம் சேர்த்து வைக்கப்படும்’ என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இன்னுமொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் உங்கள் இல்லங்களிலும் தொழுகையை நிறைவேற்றி வாருங்கள். கப்றுகளாக உங்கள் இல்லங்களை ஆக்கி விடாதீர்கள்.என்னுடைய கப்றை திருவிழா கொண்டாடும் அளவுக்கு அமைத்து விடாதீர்கள். என்மீது ஸலவாத்தும், ஸலாமும் சொல்லுங்கள். ஏனென்றால் அவை என்னைச் சேருகின்றன’ என்று கூறினார்கள்.
ஹஸன் (ரலி) அவர்களின் பேரனான அப்துல்லாஹ் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், நபிகளின் கப்றில் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்து ‘மனிதரே! நபிகள் (ஸல்) அவர்கள் தமது கப்றைப் பற்றி அதில் திருவிழாக்கள் கொண்டாடாதீர்கள் என்றும், நீங்கள் எங்கிருந்து ஸலவாத்துச் சொன்னாலும் அது எனக்கு சேர்ந்து விடும் என்றும் கூறியிருக்க ஏன் அடிக்கடி இங்கே வந்து செல்கிறீர்? என்று கேட்டு விட்டு நபியவர்களின் மீது நீர் சொல்லுகின்ற ஸலாமும், அந்தலூஸ் (ஸ்பெயின்) பகுதியில் வாழும் ஒரு மனிதர் சொல்லும் ஸலாமும் நபிகளைப் பொறுத்தவரையில் சமம்தான் என்று கூறினார்கள்.
பலவீனமானதும், துண்டிக்கப்பட்டதுமான ஹதீஸில் ‘நபிகளை விட்டு உமது முகத்தைத் திருப்பிவிட என்ன நேர்ந்து விட்டது? அந்த நபியவர்கள் மறுமைநாள் வரையிலும் உம்முடையவும், உம் ஆதிபிதா ஆதமுடையவும் வஸீலாவாக இருக்கிறார்களே’ என்று இமாம் மாலிக் கூறியதாக முன்னர் வந்துள்ளது. ஆனால் கீழ்வரும் சில சம்பவங்களைக் கவனித்தால் இதை நிச்சயமாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்பதை விளங்க முடியும்.
அறிவிப்பாளர் பட்டியலில் முஹன்னத் பின் ஹுமைத் அர்ராஸி இடம் பெற்றிருக்கிறார். இவரும், இமாம் மாலிக்கும் சந்தித்துக் கொள்ளவேயில்லை. அத்துடன் நபிகளின் சிபாரிசினால் மக்கள் மறுமையில் வஸீலா பெறுவார்கள் என்பதை பற்பல ஹதீஸ்கள் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. நபிகளின் தோழர்கள் வாழ்ந்திருந்த காலத்திலும் அவர்கள் நபியிடம் சென்று நபியின் துஆவினால் வஸீலாவைப் பெற்றிருக்கிறார்கள்.
எனவே இதை மட்டும் காரணமாக வைத்து நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த பின்னர் அவர்களின் துஆவையும், ஷபாஅத்தையும் அவர்களின் கப்றில் சென்று கேட்கலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இவ்வாறான ஒரு சம்பவத்தை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் சொல்லியிருக்க முடியாது. இவையாவும் நபி (ஸல்) அவர்கள் தம் சமூகத்தை விட்டும் முழுக்க முழுக்க தடுத்திருக்கின்ற ஒரு தீய செயலாகும் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். நபியவர்கள் இறந்துபோன பின்னர் ஸஹாபிகளோ, தாபியீன்களோ மற்றும் இமாம்களோ இப்படிச் செய்யவில்லை. மார்க்கத்தின் அடிப்படைகளையும், அதன் நுண்ணியமான கருத்துக்களையும், சட்டங்களையும் அறியாத அறிவீலிதான் இத்தகைய சம்பவங்களைக் கூறியிருக்க முடியுமே தவிர இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ஒருபோது இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள். கல்வியும், ஆராய்ச்சித் திறமையும், தலைமைப்பதவியும், அறிவு, மேன்மை போன்ற எத்தனை எத்தனையோ சிறப்பம்சங்கள் ஒருங்கே அமைந்த ஒரு இமாம் இந்தத் தவறான சம்பவத்தில் வருகின்ற ஒரு அபிப்பிராயத்துக்கு உறுதுணையாக இருந்திருக்க மாட்டார்கள். நபிகளின் ஸுன்னத்தை முழுக்க முழுக்க கடைப்பிடித் தொழுகுவதில் மிக்க அக்கரையுள்ளவர்களாக வாழ்ந்திருந்தார்கள். மார்க்கத்தில் இல்லாத நூதனமான செய்கைகள் மதத்தின் பெயரால் செய்யப்படுவதைத் தடுத்திருக்கிறார்கள். அந்தச் சமபவத்தில் கூறப்பட்ட மற்றொரு உரையைப் பார்ப்போமானால் கூட இமாம் அவர்கள் அதைக் கூறியிருக்க மாட்டார்கள் எனத் தெளிவாகும். ‘அந்த நபியைக் கொண்டு நீர் சிபாரிசு வேண்டும்! அல்லாஹ் உமது சிபாரிசை ஏற்றுக் கொள்வான்’ என்று அபூஜஃபரிடம் இமாம் அவர்கள் கூறினார்களாம்.
ஸஹாபாக்களின் வரலாற்றை நாம் படிக்கின்றபோது அவர்களில் ஒருவர் கூட நபிகள் இறந்த பின்னர் அவர்களிடமிருந்து ஷபாஅத்தைத் தேடியதாகக் காணமுடியாது. நபியின் கப்றிலும் கேட்கவில்லை. வேறு எந்த மாதிரியான ஷபாஅத்தையும் நபிகள் மரணமடைந்த பின்னர் கேட்கவில்லை. நபியவர்கள் அதை அன்று அனுமதித்திருந்தால் எல்லா ஸஹாபிகளும் அதன்படி செயல் பட்டிருப்பார்கள். நபியவர்களின் கட்டளைகளையும், ஸுன்னத்துகளையும் அதிகமதிகம் செய்ய வேண்டுமென்று பேராவல் கொண்டிருந்த ஸஹாபிகள் அதை அணுவளவும் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். மாறாக இதை அதிகமாகச் செய்திருப்பார்கள். இவை அனுமதிக்கப்பட்ட செய்கைகள் என்றும் விளங்கியிருந்தால் பிறரிடமும் இதைச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்.
அதைப் போன்றுதான் இமாம்களும் இச்சட்டத்தை விட்டு வைத்திருக்க மாட்டார்கள். தமது நூல்களில் இதை விளக்கமாக கூறியிருப்பார்கள். இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறிய ‘இஸ்லாமிய சமூகத்தில் தோன்றிய முன்னோர்கள் என்னென்ன காரணங்களினால் மதிப்பைப் பெற்றார்களோ அக்காரணங்களைக் கொண்டுதான் பின்னோர்களும் மதிப்பைப் பெற முடியும்’ என்ற தீர்க்கமான உறையை கவனித்தாலும், இந்தச் சமூகத்தின் முன்னோர்கள் அப்படிச் செய்திருப்பதாக எனக்குத் தகவல் கிடைக்கவில்லை என்று இமாமவர்கள் மற்றோர் இடத்தில் கூறியிருப்பதைக் கவனித்தாலும் இமாமவர்கள் அனைத்து ஸஹாபிகளுடையவும், தாபியீன்களுடையவும் மற்றும் ஸலபுஸ்ஸாலிஹீன்களுடையவும் எல்லாச் செய்திகளையும், வழிபாடுகளையும் துருவி ஆராய்ந்து தம் நூல்களில் பதிவு செய்ய வேண்டுமென்று பெரிதும் அக்கரையுள்ளவர்களாக இருந்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருக்கையில் அவர்களிடம் சென்று பிரார்த்திக்கக் கேட்பதிலும், ஷபாஅத்துச் செய்ய வேண்டுவதிலும் குற்றமில்லை என்று எல்லா அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள். ஸஹாபாக்களின் செயல்களும் இதற்குச் சான்றாக உள்ளன. இதைக் கீழ்வரும் சம்பவமும் விலக்கிக் காட்டுகிறது.
ஒருநாள் காட்டரபி ஒருவர் வந்து ‘யா ரஸூலல்லாஹ்! மனிதர்கள் எல்லோரும் துன்பப்படுகிறார்கள். குழந்தைகள் எல்லாம் பட்டினியால் வாடுகின்றன. செல்வங்கள் அழிந்து விட்டன. எனவே எங்கள் நலனுக்காகப் பிரார்த்தியுங்கள். நாம் உங்களிடம் அல்லாஹ்வைக் கொண்டு சிபாரிசு தேடுகிறோம். உங்களைக் கொண்டு அல்லாஹ்விடமும் ஷபாஅத்துத் தேடுகிறோம்’ என்று கூறினார்.
இதைச் செவியுற்ற நபியவர்கள் ஆச்சர்யத்தால் ‘ஸுப்ஹானல்லாஹ்!’ என்று கூறி அல்லாஹ்வைத் துதித்தார்கள். அக்கம் பக்கத்திலிருந்த ஸஹாபிகளின் முகங்களில் எல்லாம் ஏதோ சில மாறுதல்கள் காணப்பட்டன. இதைக் கண்ட நபி (ஸல்) வீறிட்டெழுந்து, ‘என்ன சொல்கிறீர்’ என அவரிடம் வினவி விட்டு ‘நீர் நினைப்பதைவிட அல்லாஹ்வுடைய ‘ஷான்’ மகத்துவம் வலுப்பமானதல்லவா? அவனைக் கொண்டு அவனுடைய சிருஷ்டிகளிடம் சிபாரிசு செய்ய முடியுமா? என வினவினார்கள். பின் ‘உம்மிடம் அல்லாஹ்வைக் கொண்டு சிபாரிசு செய்கிறோம்’ என்று கூறியதை வெறுத்துப் பேசினார்கள். ஆனால் மனிதரிடம் அல்லாஹ்வைக் காரணமாக வைத்துக் கேட்பதையும், படைப்பினங்களிடம் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்துக் கேட்பதையும், நபிகளைக் கொண்டு அல்லாஹ்விடம் சிபாரிசு தேடுவதையும் அவர்கள் வெறுக்கவோ, மறுக்கவோ இல்லை. அல்லாஹ்வைக் கொண்டு மனிதரிடம் சிபாரிசு தேடுவதை மட்டும் வெறுத்திருக்கிறார்கள்.
எனவே நபியின் ஷபாஅத்தை அவர்கள் வாழ்ந்திருக்கும் போதும், கியாமத்து நாள் அன்றும் கேட்பது அனுமதிக்கப் பட்டுள்ளது. நபியவர்களிடம் ஸஹாபாக்கள் பலர் வந்து ஷபாஅத்தை வேண்டி நின்றார்கள். இதை அல்லாஹ்வும் சுட்டிக் காட்டுகின்றான்: “ஆகவே அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட நேரத்தில் உம்மிடம் வந்து பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காக தூதராகிய நீரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால் அன்புடையவனுமாகவும், மன்னிப்புடையவனுமாகவே அல்லாஹ்வைக் கண்டிருப்பார்கள்”. (4:64)
நபியவர்கள் ‘ஷபீஃ ஆகவும், முஷஃப்பஃ ஆகவும் உள்ளார்கள் என்பது அனைத்து அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். நபி (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையின் போது அல்லாஹ்விடத்தில் தன்னை ஷபீஃ ஆக ஆக்க வேண்டுமென்று பிரார்த்தித்து இருக்கிறார்கள்.
அன்றி பாமர மக்கள் சிற்சில நேரங்களில் ஷபாஅத் என்ற வார்த்தைக்கு வஸீலா தேடுதல் என்ற கருத்தை வழங்கி விடுகிறார்கள். இன்ன மனிதரைக் கொண்டு உதவி தேடுகிறேன் என்ற கருத்திற்காக ஷபாஅத் தேடுகிறேன் எனக்கூறிப் பிரார்த்தித்தார்கள். கண் முன்னிலையை விட்டும் தூரமாக மறைந்திருக்கின்ற நபிமார்களைக் கொண்டு வஸீலா தேடுவதாகக் கருதி தமது பிரார்த்தனையின் போது ‘இறைவா! நான் இன்னாரின் சிபாரிஸைக் கேட்கிறேன்’ என்று கூறி தவஸ்ஸுல் (வஸீலா தேடுதல்) என்ற கருத்திற்கு ஷபாஅத் என்ற வார்த்தையை உபயோகித்தார்கள். வார்த்தைகளின் கருத்தையும், பொருளையும் திருப்பியும், புரட்டியும் விடுகிறவன் பெரிய குற்றவாளியாகி விடுகிறான் என்பதை இவர்கள் புரிவதில்லை. ஷபாத்துக்கும், வஸீலாவுக்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. மொழி அடிப்படையில் பார்த்தாலும், நபியவர்கள், ஸஹாபாக்கள் இவர்களின் உரையாடல்களைக் கவனித்தாலும், அவ்விரு வார்த்தைகளுக்கும் அறிஞர்கள் அளிக்கின்ற கருத்துக்களைக் கவனித்தாலும் வஸீலா, ஷபாஅத் போன்ற வார்த்தைகளுக்கு நிறைய வித்தியாசங்களைக் காண முடிகிறது. எனவே ஒரு வார்த்தையின் தாத்பரியம் பிரிதொரு வார்த்தைக்கு வழங்கப்படும்போது உண்மையில் அவ்வார்த்தையால் கிடைக்கும் நேரடி அர்த்தம் மாறி விடுகிறது. இதனால் தவறான பல கருத்துக்களிலும், பிழைகளிலும் மனிதன் சென்று சேர்ந்து விடுகிறான்.
இக்காரணத்தினால் தான் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட கதை அரபி மொழியிலும், ஷரீஅத்திலும் ஞானம் இல்லாதவர்களால் புனையப்பட்ட ஒரு சம்பவம் என்று அறிஞர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஷபாஅத் என்ற வார்த்தை வஸீலா என்ற வார்த்தையின் தாத்பரியத்தை அளிப்பதாக தெரியவருகிறது. அதுமட்டுமின்றி அதன் உரைநடையைக் கவனிக்கும் போதும், இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய உரைக்கும், இக்கதையின் உரைநடைக்குமிடையில் பெரும் வித்தியாசத்தைக் காணலாம்.
அதுமட்டுமின்றி மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் மஸ்ஜிதுர் ரஸூலில் குரலை உயர்த்திப் பேசக் கூடாது எனக்கூறி கலீபாவைத் தடுத்து வசனங்களை எடுத்தோதி அவருக்கு விளக்கமளித்ததெல்லாம் இமாம் மாலிக் அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஏனெனில் கலீபா உமர் (ரலி) அவர்கள் கூட நபியின் பள்ளிவாசலில் அமர்ந்திருந்து குரலை உயர்த்திப் பேசுவதை விலக்கியிருக்கிறார்கள். இது விஷயத்தில் இமாம் மாலிக் அவர்கள் கலீபா உமரைப் பின்பற்றி ஸுன்னத்தின் அடிப்படையில் செயல் பட்டிருக்கலாம். எனவே இதுபோன்ற செய்திகள் மட்டும் இமாம் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டால் அது உண்மையாக இருக்கும். எதையாவது மாபெரும் இமாம்கள் கூறியதாகச் சொல்லி இமாம்களோடு சேர்த்துக் கூறத் தகுதியற்ற சில சம்பவங்களைக் கூறினால் எவரும் அதை ஏற்கமாட்டார்கள்.
நபியவர்கள் ஸஹாபாக்களிடம் பேசும்போது பயன்படுத்திய சொற்பிரயோகங்கள், அன்னாரின் வார்த்தை நடைகள், பாணிகள், நபிகளிடம் ஸஹாபாக்கள் உரையாடிய உரையாடலின் பாணி, அன்னாரின் பேச்சுக்கள் இவற்றையெல்லாம் அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி ஹதீஸ் அறிவித்தால் அந்த ஹதீஸ்களில் பற்பல மாற்றங்களையும், திருப்பங்களையும் ஏற்படுத்தி விடுகிறார்கள். மக்கள் பலதரப்பட்டவர்கள். ஒவ்வொருவரிடமும் தனித்தனி வார்த்தை பிரயோகத்தை-சொல்லாட்சியைக் காண்கிறோம். ஒரு சொல்லை குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு அல்லது குறிப்பிட்ட ஒரு பொருளுக்குப் பிரயோகித்துப் பழகியிருப்பார்கள். அதேசொல் திருமறையிலும், நபிமொழியிலும், ஸஹாபாக்களின் பேச்சு வழக்கிலும் காணப்படும்போது தமக்குத் தெரிந்ததும், தாம் பழகியதுமான தாத்பரியத்தைக் கொடுக்கலானார்கள். இதனால் சில நேரங்களில் திருமறைக்கும், நபிமொழிக்கும், ஸஹாபாக்களின் சொற்களுக்கும் அல்லாஹ்வும், ரஸூலும் நாடியதற்கு நேர்மாற்றமான தாத்பரியத்தைக் கொடுக்க நேரிடும். இது பலருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினையாகும். இலக்கணம், இலக்கியம், தர்க்கம், சட்டம், மதஇயல் போன்ற துறைகளில் அறிஞர்களாக இருப்போர் கூட இத்தகைய தவறுகளில் அதிகமாக அகப்பட்டிருக்கிறார்கள். பொதுமக்களும் இதற்கு விதி விலக்கல்ல.
நாத்திகர்கள், பொய் ஸூஃபிகள் (விதண்டாவாதிகள்) இஸ்மாயிலிய்யா போன்றவர்களெல்லாம் நபிமார்களுடையவும், ஸஹாபாக்களுடையவும் உரைகளை எடுத்து தத்தம் மனப்போக்குபடி விருப்பமான விளக்கங்களை கொடுத்து விட்டு ‘நாங்களும், நபிமார்களும் அவர்களைப் பின்பற்றியோர் ஆகியோரின் மூல உரைகளுக்கொப்பவே விளக்கம் கொடுத்திருக்கிறோம்’ என பொய்யுரைக்கின்றனர். மலாயிகத் என்ற சொல்லுக்கு விவேகம், ஆற்றல், ஆத்மசக்தி என்றெல்லாம் பொருள் கூறுகிறார்கள். ஜின்-ஷைத்தான் என்பவற்றிற்கு மனஆற்றல் என்ற கருத்தையும் அளிக்கிறார்கள். அக்ல் என்ற சொல்லிற்கு பூமியிலுள்ள அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒருபொருள் என்பன போன்ற தாத்பரியங்களையும் வழங்கியுள்ளார்கள். இவர்களின் கொள்கையில் அல்லாஹ்வின் முதல் சிருஷ்டி அக்ல் என்பதாகும். இதற்குச் சான்றாகப் பொய்யான ஒரு ஹதீஸையும் எடுத்துக் காட்டுகிறார்கள். அந்த ஹதீஸுடைய கருத்தைக் கூறும் வேளையில் அல்லாஹ் முதன்முதலாக அக்லை படைத்ததாக கூறுகின்றனர். ‘அவ்வல மா கலக’ என்ற வாக்கியத்தை ‘அவ்வலு மா கலக’ என்று சொல்லப்பட்டதினால் தவறான கருத்துக்கள் அதிலே நுழைந்து விட்டன. ‘அவ்வல’ என்று சொல்லும்போது நேர்மையான கருத்தை இதற்குக் காண முடிகிறது. இதை மெய்யான ஹதீஸ் என ஏற்றால் கூட இவர்கள் கூறும் தாத்பரியத்தை அது அளிக்கவில்லை. ஏனெனில் அதன் உண்மையான கருத்தாவது: ‘அல்லாஹ் அக்லை படைத்ததும் அதனுடன் உரையாடினான். அதை நோக்கி வா என்றான். அது வந்தது. போ என்றான். அது போயிற்று. பிறகு அல்லாஹ் கூறினான். ‘எனது மகத்துவத்தின் மீது சத்தியமாக உன்னைவிட கண்ணியமான ஒரு சிருஷ்டியை நான் படைக்கவேயில்லை. ஆகவே உன்னைக் காரணமாக வைத்துதான் மக்களை நான் தண்டிப்பேன். அவர்களுக்கு நான் கூலியும் வழங்குவேன். அவர்களைத் தண்டிப்பதற்கும், அவர்களுக்கு நன்மைகள் வழங்குவதற்கும் நீதான் காரணம் என்று அக்லை பார்த்துக் கூறினான். அதைப் படைத்ததும் இப்படியெல்லாம் அதனுடன் உரையாடினான் என்றால் அதை படைப்பதற்கு முன்னர் வேறு எவற்றையெல்லாமோ படைத்திருக்கிறான் என்றும், அக்லை படைத்தபோது அதனுடன் உரையாடவும் செய்தான் என்றும் தெளிவாகிறது. மேலும் மக்களின் நிமித்தம் மேற்கூறிய நான்கு குணங்களை மட்டும் பெற முடியுமேயொழிய எல்லாக் காரியங்களையும் பெற முடியாது. முஸ்லிம்களிடம் அக்ல் என்றால் சிந்தித்து விளங்கும் ஒரு ஆற்றலுக்குச் சொல்லப்படும். இந்த அக்லினால் கல்விகளையும், செயல்திறன்கள் எல்லாவற்றையுமே பெற முடிகிறது.
இப்படியான வார்த்தைகளைப் புரட்டி மறித்து திருப்பிப் பொருள் கூறும் நாஸ்திகர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களுமெல்லாம் அல்லாஹ், ரஸூலுடைய பரிசுத்தமான திருமறையிலும், நபிமொழியிலும், அதன் உரைகளை மாற்றி மறித்து தத்தம் விருப்பங்களுக்கு ஏற்ப விளக்கம் கொடுத்து விடுகிறார்கள். அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும், நாடியதற்கு மாறாகவும் பொருள் காண்கிறார்கள். இதனால் அல் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்பதற்கு அண்ட கோளங்களின் ஆத்மா என்றும், அல் கலம் என்பதற்கு அல் அக்லுல் அவ்வல் என்றும், மல்கூத், ஜபரூத், முல்க் போன்ற சொற்களுக்கு நஃப்ஸப் என்றும், அக்ல் என்றும் விளக்கம் கொடுத்தார்கள்.
இப்படியாக ஷபாஅத் என்ற வார்த்தைக்கும் தவறான வியாக்கியானத்தைக் கொடுத்தார்கள். ஷபாஅத் என்றால் அதைக் கேட்பவனுக்காக கேட்கப்பட்டவனிடமிருந்து பரந்து வியாபிக்கிற ஒரு சக்தி என்று பொருள் கூறினார்கள். சொற்பிரயோகங்கள் பற்றி வியாக்கியானிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணமாக ‘கதீம்; என்ற சொல்லைப் பார்க்கலாம். அது அரபி அகராதியில் புதியது எனும் சொல்லுக்கு எதிர்ப்பதமாக உபயோகிக்கப்படுகிறது. அப்படியானால் அது பழையது எனப் பொருள்படும். பழமையானது என்றால் அதற்கு முன்னர் மற்றொன்று அதைவிட முந்தியிருந்தாலும், இல்லாவிடினும் அது கவனிக்கப் படுவதில்லை. இப்பொருளில் திருமறை கதீம் என்ற சொல்லை பிரயோகித்திருக்கிறது. இறைவன் கூறினான்: “பழைய பேரிச்சங்கம்பைப் போலாகும் வரையில்” (36:39). மேலும் நபி யூஸுபின் சகோதரர்கள் யஃகூப் நபியைப் பார்த்து “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீர் உம்முடைய பழைய வழிகேட்டில்தான் இருக்கிறீர்?” (12:95). என அல்லாஹ் கூறுகிறான். “நீங்களும், உங்களுக்கு முன்னிருந்த பிதாக்களும் வணங்கிக் கொண்டிருந்ததை நீங்கள் கவனித்தீர்களா? (26:75-76)
இதற்கெல்லாம் கதீம் (அக்தம்) என்பது அகராதியின் அடிப்படையில் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் கதீம் என்ற சொல்லுக்கு மதக் கோட்பாடு, மத நம்பிக்கைகள் பற்றி விதிகள் கூறும் அறிஞர்களிடத்தில் வேறுமாதிரியான கருத்துக்கள் இருக்கின்றன. இவர்கள் கதீம் என்றால் தொன்று தொட்டே உள்ளது. அதற்கு முன்னர் எதுவுமே ஏற்படவில்லை என்று விளக்கம் தருகிறார்கள்.
இதைப்போல வார்த்தை என்ற பதம் வாக்கியம் என்ற கருத்தில் அரபி மொழியிலும், குர்ஆனிலும், ஹதீஸிலும் உபயோகிக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.
உதாரணமாக நபிகளின் ஒரு ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம். நபியவர்கள் ‘அருளாளனான அல்லாஹ்வின்பால் மிகவும் உவப்பானவையும், நாவுக்கு இலேசான அதாவது எளிதில் சொல்லக் கூடியவையும், மறுமையில் நன்மை, தீமைகளை நிறுத்துப் பார்க்கும் மீஸானில்- தராசில் மிகக் கனமுடையவையுமான இரு வார்த்தைகள் தான் “ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அளீம்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸில் கலிமதானி (இரு சொற்கள்) என்பது வாக்கியங்கள் என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நபிகள் ‘கவிஞர் கூறிய வார்த்தையில் மிக உண்மையானது கவிஞர் நுபைது உரைத்த அல்லாஹ் அல்லாதவை அனைத்தும் அழிந்து விடுபவை’ என்று கூறினார்கள். இங்கேயும் நபிகள் வார்த்தையை வாக்கியம் என்ற பொருளில் பிரயோகித்திருக்கிறார்கள்.
திருமறையிலும் “அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் மிகப் பெரும் (பாவமான) வார்த்தையாகும். பொய்யைத் தவிர அவர்கள் கூறவில்லை” (18:5) என்று வருகிறது. இவ்வசனத்தில் வார்த்தை என்பது வாக்கியத்திற்குப் பதிலாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது. “வேதத்தையுடையோரே! எங்களுக்கும் உங்களுக்குமிடையே (சம்மதமான, ஒரு மத்திய சம நிலையான) வார்த்தையின் பால் வாருங்கள்!”. (3:64)
‘தவில் அர்ஹாம்’ என்ற சொற்றொடரும் இப்படித்தான் மாதா-பிதாக்களின் வழியாக உள்ள எல்லா உறவினர்களுக்கும் சொல்லப்படும். இவர்கள் அனந்தரச் சொத்துக்களுக்கு உரியவர்களானாலும் சரி, இல்லாவிட்டாலும் சரியே. ஆனால் புகஹாக்கள் இச்சொற்றொடரை அவகாசிகள் இல்லாதவனுடைய அனந்தரச் சொத்தைப் பெறுகிறவர்களுக்கு உபயோகித்தார்கள்.
“….அல்லாஹ் நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான். ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குதான் என்றும் மேலோங்கும்”. (9:40)
இம்மாதிரியாக அரபி மொழியிலும், திருமறையிலும், ஹதீஸிலும் பற்பல இடங்களில் வார்த்தை என்பது வாக்கியத்துக்கு உபயோகிக்கப் படுவதைக் காண முடிகிறது. இலக்கண அறிஞர்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், துணைச் சொல் இவற்றிற்கெல்லாம் வார்த்தை என்ற பதத்தைப் பிரயோகித்தனர். பேச்சுகளுக்கு வார்த்தை என்று கூறுவதை அனுமதித்தனர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…