வார்த்தைகளைப் பற்பல கருத்துக்களுக்குப் பிரயோகிப்பதை அறியாதவர்களும், புரட்டியும், திருப்பியும் சொற்களைக் கூறக் கூடியவர்களுமான சிலரிடத்தில் வஸீலா, தவஸ்ஸுல், ஷபாஅத் போன்ற சில வார்த்தைகள் கிடைத்தபோது அவற்றிற்கு அல்லாஹ்வும், ரஸூலும், ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்கள் ஆகியோரெல்லாம் விலக்கியிருந்ததற்கு மாற்றமான கருத்துக்களைக் கொடுத்து மக்களை தவறின்பால் திருப்பி விட்டார்கள். இதனால் பலர் தவறினார்கள். இவ்வார்த்தையின் உட்கருத்தைப் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. பொதுவாக கல்வி என்பது நன்றாக ஆராய்ந்து கற்று அறிந்து கொள்வதாகும். அறிஞர்களிடமிருந்து ஏதாவது உரைகளை நகர்த்தி, அவ்வாறு நகர்த்திய உரைகளை அந்த அறிஞர்களே கூறியதாகச் சொல்லப்படும்போது இச்சொல்லில் எத்தனை உண்மை இருக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும். நபிகளுடைய பதப்பிரயோகங்களையும், ஸஹாபாக்களுடையவும், தாபியீன்களுடையவும் சொற்களின் கருத்துக்களையும் நன்றாக அறிந்த பின்னர் அவற்றுக்கு விளக்கம்தர முனைவது போல திருமறைக்கு விளக்கம் சொல்லும்போதும், வார்த்தைகளின் தாத்பரியங்களைக் கூறும்போதும் தகுந்த சான்றுகளைக் கொண்டு சொல்ல வேண்டும்.
எல்லா இடங்களில் வைத்தும் நபிகளின் மீது ஸலாத்தும், ஸலாமும் கூற வேண்டுமென்று அல்லாஹ் நம்மைப் பணித்திருக்கிறான். இதைக் குர்ஆன், ஹதீஸுடைய நேருரையிலிருந்து வெளிப்படையாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இதில் மாறுபட்ட அபிப்பிராயம் கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. நபிகளுக்கு வேண்டி அல்லாஹ்விடம் வஸீலா, பளீலா என்னும் சில பதவிகளைக் கேட்டுப் பிரார்த்திக்க வேண்டுமென்று நபியவர்களே நம்மைப் பணித்துள்ளார்கள். ஸஹீஹான ஹதீஸ் வழியாக இது விஷயத்தில் நமக்கு ஆசையூட்டியிருக்கிறார்கள். நபியவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்தற்கொப்ப புகழுக்குரிய உன்னதமான இடத்தில் அவர்களை மறுமையில் சேர்த்துவிட வேண்டுமென்று பிரார்த்திக்கவும் நம்மைப் போதித்தார்கள். இத்தகைய வஸீலாவும், ஸலாவாத்துகளுமெல்லாம் நபிகளுடைய சொந்தப் பாத்தியதைகளாகும்.
மேலும் நாம் தேட வேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ள வஸீலா என்பது வணக்க வழிபாடுகள் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வோடு நெருங்க வேண்டும் என்பதாகும். இந்தக் கருத்துக்குட்பட்ட வஸீலாவில் நபியின் ஏவல்கள் அனைத்தும் இடம் பெறுகின்றன. நபியவர்களை முழுக்க விசுவாசித்து அவர்களின் பாதையை முன்மாதிரியாகப் பின்பற்றி அவர்களுக்கு முழுக்க வழிபட்டு நடப்பதினால் இந்த வஸீலாவைப் பெற முடிகிறது. அவ்வாறென்றால் இத்தகைய வஸீலாவைத் தேடுதல் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
இன்னும் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருக்கையில் அவர்களின் பிரார்த்தனைகள், ஷபாஅத்துகள் இவற்றைப் பெற்றும், மறுமையில் அவர்களின் ஷபாஅத்தை வேண்டியும் அல்லாஹ்வை சமீபிக்கத் தேடுவது இன்னொரு வகை வஸீலாவாகும். நபியவர்களுக்கு அல்லாஹ்விடம் இருக்கின்ற மதிப்பினாலும், கண்ணியத்தினாலும் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று ஷபாஅத்தை அங்கீகரித்து அல்லாஹ் அவர்களை கௌரவிப்பான். இதனால் நபி (ஸல்) அவர்களின் துஆ, ஷபாஅத் ஆகியவற்றைப் பெற்றவர்கள் பயனடைந்தார்கள். அன்று ஸஹாபிகளுக்கு நபியின் இந்த ஷபாஅத் கிடைத்ததினால் அவர்களுக்கு அல்லாஹ் மழையைப் பெய்யச் செய்து வறட்சிக்கு நிவாரணமளித்தான். கண்பார்வை இழந்த ஸஹாபி ஒருவரின் கண்பார்வை திரும்பியது. நபியவர்களின் துஆவும், ஷபாஅத்தும் அருளப்பட்டவருக்கும், அவற்றை அருளப்படாதவருக்கும் இடையில் நீண்ட வேறுபாடுகள் உள்ளன.
நபி (ஸல்) அவர்களைப் பொருட்டாக வைத்து ஸஹாபாக்கள் தாமாகவே பிரார்த்தனை நடத்தியதினால் மழை பெய்தது என்றோ, நபியைக் கொண்டு ஆணையிட்டு இறைவனிடம் ஸஹாபாக்கள் தாமாகவே வேண்டியதினால் இறைவன் அவர்களுக்கு மழையைப் பெய்யச்செய்தான் என்றோ, பார்வையிழந்த ஸஹாபிக்கு அவர் தாமாக பிரார்த்தனை நடத்தியதினால் தான் தன் பார்வை திரும்பியது என்றோ எண்ணுவது பெரிய குற்றமாகும். சில மக்கள் இப்படிச் செய்து வருகிறார்கள். நபியவர்கள் இறந்த பின்னரும் அவர்களைப் பொருட்டாக வைத்தும், அவர்களைக் கொண்டு சத்தியம் செய்தும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றனர். இதை ஷரீஅத் அனுமதிக்கின்ற செய்கை என்றும் கருதிக் கொள்கின்றனர். நபியவர்களைக் கொண்டு சத்தியம் செய்வதோடு நின்று விடுவதில்லை. மலக்குகள், ஸாலிஹீன்கள் மற்றும் தமது எண்ணத்தில் நல்லவர்கள் என்று நினைப்பவர்களை எல்லாம் பொருட்டாக வைத்து அவர்களைக் கொண்டெல்லாம் சத்தியம் செய்து கேட்கின்றனர். உண்மையில் இம்மக்கள் (அதாவது நல்லவர்கள் என்று கருதப்பட்டவர்கள்) பெரிய குற்றவாளிகளாக இருந்தாலும் பிரார்த்திப்பவர்களின் நினைப்பில் இவர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதுமானது. அதனால் இவர்களை வஸீலாத் தேடுவதற்குரிய கருவிகளாக்கி விடுகின்றனர். உண்மையில் ஸஹீஹான ஹதீஸ் இவர்களின் இப்பொய் வாதத்திற்குச் சாட்சி கூறாது. நபிகளின் மீது இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட பொய்யான ஹதீஸ்களும், பலவீனமான ஏதோ சில ஆதாரங்களுமே இவர்களின் இவ்வாதத்திற்குச் சான்றுகளாகி விடுகின்றன.
படைப்பினங்களை பொருட்டாக வைத்து வஸீலா தேடலாம் என்று கூறும் வாதத்திற்குச் சான்றாக நபிகள் கூறிய ஸஹீஹான ஹதீஸ்களைப் பார்க்க முடியாது. இமாம் புகாரி (ரஹ்) அவர்களுடைய மாபெரும் ஹதீஸ் தொகுப்பான ஸஹீஹ் புகாரியிலும், இமாம் முஸ்லிமின் ஹதீஸ் திரட்டிலும், பொதுவான ஆறு பெரும் ஹதீஸ் தொகுப்புகளிலும், மற்றும் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) போன்ற ஹதீஸ் அறிஞர்களின் ‘முஸ்னத்’* களிலும் மேலும் இவைப்போன்ற நம்பத்தகுந்த நூற்களிலும் இவ்வாதத்திற்கு சான்றுகளைப் பெற முடியாது. இட்டுக்கட்டப்பட்ட (மவ்ளூஃ) ஹதீஸ்கள் அதிகமாக இடம்பெற்றுள்ள சில நூற்கள் மட்டும்தான் மேற்படி வாதத்தை அனுமதிக்கின்றன. இமாம் அஹ்மத் பின் ஹன்பலுடைய முஸ்னதிலும், அதைப்போன்ற வேறு சில நூற்களிலும் பொய்யுரைக்கும் பலவீனமான அறிவிப்பாளர்கள் வழியாக வந்த சில பலவீனமான ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இமாம் அஹ்மதைப் பொறுத்தவரையில் வேண்டுமென்றே அவற்றைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். மாறாக அந்த அறிவிப்பாளர்கள் பலவீனமான ஹதீஸ்களைக் கூறுகிறவர்கள் எனத் தெரியாமல் அவர்களின் ஹதீஸ்கள் தவறான முறையில் இமாம் அஹ்மதின் நூலான முஸ்னதில் இடம் பெற்றுவிட்டது. அவை அறிவிப்பாளர் பொய்யர், பலவீனர் எனத் தெரிந்ததற்கு அப்பால் சேர்க்கப்பட்ட ஹதீஸ்கள் அல்ல.
இமாம் அஹ்மத் பின் ஹன்பலுடைய முஸ்னத் எனும் ஹதீஸ் தொகுப்பில் புனையப்பட்ட ஹதீஸ்கள் ஏதேனும் இருக்கிறதா இல்லையா என்ற விஷயத்தில் ஹாபிஸ் அபுல் அலா அல்-ஹமதானீ, ஷைகு அபுல்ஃபர்ஜ், இப்னுல் ஜவ்ஸீ ஆகியோருக்கிடையே அபிப்பிராயப் பேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஹாபிஸ் அபுல் அலா இல்லையென மறுக்கிறார்கள். இப்னுல் ஜவ்ஸீ இமாம் அஹ்மதின் முஸ்னதில் மப்ளூஃ (நபியின் மீது இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்கள் இருப்பதாக நிரூபித்துக் காட்டுகிறார். இவ்விரு அறிஞர்களும் ஒவ்வொரு அபிப்பிராயத்தைக் கூறிவிட்டாலும் இருவரின் சொல்லும் ஒன்றைத்தான் காட்டுகிறது. ஏனெனில் புனையப்பட்ட ஹதீஸ்கள் யாவை என விளக்கம் கூறுவதில் இவ்விருவரும் இரு மாதிரியான அபிப்பிராயங்களைக் கூறுகின்றனர். அபுல்ஃபர்ஜ் ‘ஒரு ஹதீஸ் அது சரியானதல்ல என காட்டுகின்ற ஏதேனும் ஒருசான்று கிடைத்து விட்டால் அதுவே புனையப்பட்ட ஹதீஸாகும்’ என்று கூறுகிறார். அபுல்ஃபர்ஜ் இந்த இனத்தைச் சார்ந்த பற்பல ஹதீஸ்களை தமது நூலில் புனையப்பட்ட ஹதீஸ்களுக்கு உதாரணமாகவும் எடுத்துக் காட்டுகிறார். ஆனால் அபுல் அலா ‘புனையப்பட்ட ஹதீஸ் என்றால் நபிகள் கூறியதாக வேண்டுமென்றே அவர்கள்மீது இட்டுக்கட்டி பொய்யாகக் கூறப்படும் ஹதீஸாகும்’ என்று கூறுகிறார்.
இந்த விளக்கத்தை ஹாபிஸ் அபுல் அலா ஆமோதிக்கிறார். அறிஞர் அபுல்ஃபர்ஜ் புனையப்பட்டது எனக்கூறிய சில ஹதீஸ்களைப் பற்றி வேறு சில அறிஞர்கள் அவை மெய்யான ஹதீஸ்கள் என்று கூறி அபுல்ஃபர்ஜின் அபிப்பிராயத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
ஸலபுஸ்ஸாலிஹீன்களுக்கிடையில் பொய்யும், புரட்டும் கொண்டு புனையப்பட்டவை குறைவுதான். ஸஹாபாக்களைப் பொறுத்தவரையில் நபிகளைப்பற்றி ஹதீஸ்கள் அறிவிக்கும்போது அவர்கள் அனைவரும் உண்மையையும், நேர்மையையும் தமது கடமையாகக் கொண்டிருந்தார்கள். வேண்டாத அனுஷ்டானங்கள், பித்அத்துகள் எதுவும் அவர்களிடம் காணப்படவில்லை. ஆனால் காரிஜிய்யாக்கள், முர்ஜிய்யாக்கள், ராபிளிய்யாக்கள், கத்ரிய்யாக்கள் போன்ற வழிகெட்ட வகுப்பார்களிடம் அன்று நூதனமான புதுப்புது அனுஷ்டானங்கள் காணப்பட்டன. இவர்களில் ஒருவர்கூட நபித்தோழராக இருக்கவில்லை. ஸஹாபிகளில் யாரும் என்னிடம் ஹிள்ர் வந்தார் என்று கூறவில்லை. மூஸா நபியுடைய வரலாற்றில் காணப்படுகின்ற ஹிள்ர் என்பவர்கள் இறந்து விட்டார்கள் என்பது நிச்சயம். இதைப்பற்றி விளக்கமான செய்திகளை நான் இன்னொரு இடத்தில் விளக்கியிருக்கிறேன். எனவே இதைப்பற்றி அதிகமாக நான் இங்கே விளக்கவில்லை.
மக்களிடத்தில் அதிகமாக வந்து போய்க் கொண்டிருப்பதாக அறியப்படும் ஹிள்ர் என்பவர் ஜின் என்பதாக விளங்கிக் கொள்ள வேண்டும். மனித உருவத்தில் ஆள்மாறாட்டம் செய்து தன்னை ஹிள்ர் எனக்கூறுவது ஜின் இனத்தில் ஒன்றாகும். பொய்யர்களான மனிதர்களில் சிலரும், தம்மைப்பற்றி தாம் ஹிள்ர் என்றும் பொய் வாதாட்டம் செய்து வருகிறார்கள். இவர்களைப் பற்றி யாரும் மலக்கு என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். மலக்குகள் எக்காலமும் பொய்யுரைக்க மாட்டார்கள். மனு-ஜின் இனங்களில்தான் பொய் மலிவாகக் காணப்படும். ஹிள்ர் என்று கூறி பலரிடம் ஜின்கள் ஆள்மாறாட்டம் செய்து வந்திருக்கின்றன. அவர்களில் பலரை நானும் அறிவேன். இவர்களைப்பற்றி விளக்கமாகக் கூறினால் நமது தலைப்பு நீண்டு விடும் என்பதால் சுருக்கிக் கொள்கிறேன்.
ஜின்களுடைய இத்தகைய ஏமாற்று வித்தை ஸஹாபாக்களிடம் விலை போகவில்லை. இது விஷயத்தில் அவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தார்கள். விபரமற்ற ஆபிதுகள் (வணக்கவாளிகள்) பலரை ஜின்கள் மக்காவுக்குத் தூக்கிக் கொண்டு வந்து அரஃபாவில் நிறுத்தி மீண்டும் அவர்களை ஊரில் திருப்பிக் கொண்டு விட்டிருக்கின்றன. இம்மாதிரி ஏமாற்றங்களில் ஸஹாபிகள் சிக்கியதில்லை. சிலரின் பணத்தைத் திருடி, உணவுப் பண்டங்களைக் கையாடி பிறரிடம் கொண்டு கொடுத்தும் ஜின்கள் ஏமாற்றுகின்றன. இவற்றையெல்லாம் காணுகின்ற மனிதன் கராமத்துகள் என தவறாக விளங்கிக் கொள்கிறான். இவையனைத்தும் ஜின்-ஷைத்தான்களுடைய ஊசலாட்டங்கள் என்று நினைப்பதில்லை.
ஸஹாபாக்களின் வரலாற்றில் அவர்களில் ஒருவர் கூட ஜின்-ஷைத்தான்களின் சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொள்ளவில்லை. தாபியீன்களைப் பொறுத்தவரையில் மக்கா, மதீனா, பஸரா, ஷாம் போன்ற பகுதிகளில் வசித்து வந்த தாபியீன்களில் எவருமே வேண்டுமென்றே பொய்யுரைக்கவில்லை. ஷியாக்கள் மட்டுமே பொய்யுரைப்பவர்களாக அறியப்பட்டு வந்திருக்கிறார்கள். வேறு சில கூட்டத்தாரிடமும் பொய் அறியப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் தவறுதல் என்பது எவரையும் விட்டு வைக்கவில்லை. அதை விட்டு தப்பியவர்கள் மிக அரிது. நபித்தோழர்களில் சிலரும் தவறுதலில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களும் தவறுதல் என்ற நோயால் சில நேரங்களில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். தாபியீன்களும் அப்படித்தான். தவறு இவர்களையும் விட்டு வைக்கவில்லை. எனவே ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹுல் முஸ்லிமைத் தவிர மற்ற நூற்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சில ஹதீஸ்களிலும் தவறுகள் பாய்ந்திருக்கின்றன. ஆனால் இமாம் புகாரி, இமாம் முஸ்லிமுடைய நூற்கள் மட்டும் மிக்க தூய்மையானது என்பதில் சந்தேகமில்லை. மற்ற ஹதீஸ் நூற்கள் சிலவற்றில் தவறுகள் இடம் பெற்றிருப்பதை ஹாபிஸ் அபுல் அலா அறிந்திருந்தார்கள். இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களே சில தவறான ஹதீஸ்களை தமது முஸ்னத் என்ற நூலில் அறிவித்து விட்டு பிறர் அவற்றைத் தவறானவை என்று விளங்குவதற்காகவே தாம் அறிவித்ததாக விளக்கம் தந்துள்ளார்கள்.
இது விஷயத்தில் இமாம் அஹ்மத் அவர்கள் மற்ற சில தொகுப்பாளர்களைப் போன்றவர்கள் அல்லர். ஏனெனில் மற்றவர்கள் வேண்டுமென்றே பொய்யுரைக்கின்ற அறிவிப்பாளர்களிடமிருந்து, அவர்கள் பொய்யர்கள் என்று தெரிந்த பிறகும் கூட, அவர்களால் கிடைக்கின்ற ஹதீஸ்களை தம் நூற்களில் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால் அபூதாவூத், திர்மிதி போன்ற ‘ஸுனன்’ தொகுப்பாசிரியர்களில் அறிவிப்பாளர் பட்டியலிலிருந்து சிலர் அறிவிக்கின்ற ஹதீஸ்களை இமாம் அஹ்மத் அவர்கள் வேண்டுமென்றே நீக்கிவிட்டு அத்தகைய ஹதீஸ்களை விட்டும் தமது முஸ்னத் என்ற நூலை சுத்தப்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, கதீர்-பின் அப்துல்லாஹ்வுடைய ஷைகுமார்களைப் பற்றி அறிவிக்கப்படும் ஹதீஸ்களை இமாம் அஹ்மத் அவர்கள் தமது ஸுனனில் பதிவு செய்யவில்லை. மாறாக இமாம் அபூதாவூத் தமது ஸுனனில் இத்தகைய ஹதீஸ்களைச் சேர்த்திருக்கிறார்கள். ஹதீஸ்களைத் திரட்டிப் பதிவு செய்வதில் இமாம் அஹ்மத் அவர்கள் விதித்துக் கொண்ட நிபந்தனைகள் அபூதாவூத் அவர்கள் விதித்துக் கொண்ட நிபந்தனையைக் காட்டிலும் தூய்மையானதாகக் காணப்படுகிறது.
சுருங்கக் கூறின் வஸீலா, தவஸ்ஸுல், ஷபாஅத் இவற்றையெல்லாம் மனிதனைப் பொருட்டாக வைத்துக் கேட்பதற்கு அனுமதியுண்டு என்று கூறக்கூடியவர்கள் வெறுக்கப்பட்டவையும், பலவீனமானவையும், புனையப்பட்டவையுமான ஹதீஸ்களைத்தான் ஆதாரமாகக் காட்ட முடியும். விசேஷ குணங்களைப் பற்றியும் (பளாயில்கள்) சிறப்பம்சங்கள், விசேஷ அமல்கள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் நல்லதையும், கெட்டதையும் கலந்து அறிவிக்கின்ற சில அறிவிப்பாளர்கள்தாம் இத்தகைய ஹதீஸ்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். காலங்களின் சிறப்பு, வழிபாடுகளின் சிறப்பு, நபிமார்களின் சிறப்பு, ஸஹாபாக்களின் சிறப்பு, குறிப்பிட்ட சில இடங்களின் சிறப்பு போன்ற சிறப்புகளைப்பற்றி நூற்களை தொகுத்தவர்களும் கூட இந்த புனையப்பட்ட பலவீனமான ஹதீஸ்களை ஏராளம் சேர்த்திருக்கிறார்கள். இவ்வாறான சிறப்புகள் பற்றி அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் ஸஹீஹான ஹதீஸ்களும் இருக்கின்றன. ஹஸன் என்ற நடுத்தரத்திலுள்ள நல்ல ஹதீஸ்களும் இடம் பெறுகின்றன. பலவீனமான பொய்யான இட்டுக்கட்டப்பட்ட பல ஹதீஸ்களும் பளாயில்கள் பற்றி அறிவிக்கின்றன. ஷரீஅத் சட்டங்களை விதிப்பதற்கு எக்காரணத்தாலும் பலவீனமான ஹதீஸ்கள் ஆதாரமாக எடுக்கப்பட மாட்டாது. ஷரீஅத்துடைய அனைத்துச் சட்டங்களையும், விதிகளையும், ஏவல்-விலக்கல்கள் அனைத்தையுமே ஸஹீஹ், ஹஸன் என்ற இரு தரத்திலுள்ள ஹதீஸ்களைக் கொண்டுதான் ஏவப்பட்டுள்ளது.
அத்துடன் இமாம் அஹ்மத் பின் ஹன்பலும், மற்றும் அறிஞர்கள் சிலரும் நற்கருமங்களுக்குரிய சிறப்புக்கள் பற்றி அறிவிக்கப்படுவதில் மட்டும் பலவீனமான சில ஹதீஸ்களை எடுத்துக் கொள்ளலாமென்று அனுமதி வழங்கியிருக்கிறார்கள். ஆனால் உறுதியாக அது பொய்யென்று நிரூபணமானால் அல்லது அது உண்மையான ஹதீஸ் அல்ல என்று வெளிப்பட்டால் இந்நிலையில் பலவீனமான ஹதீஸும் எடுக்கப்பட மாட்டாது என்று கூறியிருக்கிறார்கள்.
அதற்குக் காரணமாக கீழ்வருமாறு கூறினார்கள்: ஷரீஅத்திலுள்ள ஒரு அமல் அது தக்க சான்றுகளைக் கொண்டு விதிக்கப்படிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மேலும் அந்த அமலின் சிறப்பம்சங்களைப் பற்றியும், அதன் நன்மைகளைப் பற்றியும் ஒரு பலவீனமான ஹதீஸ் விலக்கிக் காட்டுகின்றது. இந்த பலவீனமான ஹதீஸில் கூறப்பட்டதற்கு ஏற்பதான் மேற்படி அமலின் சிறப்பும், நன்மையும் இருக்க முடியும். அத்துடன் இந்த பலவீனமான ஹதீஸ் பொய்யானதென்று நிரூபிக்கப்படவுமில்லை. இந்நிலையில் பலவீனமான ஹதீஸ் விளக்கிக் காட்டுகின்ற நன்மைகள் மெய்யாகவே இருக்க முடியும். அத்துடன் மற்றொன்றையும் இங்கே கவனித்தல் வேண்டும். அது என்னவென்றால் ஒரு அமலைப் பற்றி அது வாஜிபானது அல்லது ஸுன்னத்தானது என்று விதிகள் கூறப்பட வேண்டுமானால் பலவீனமான ஹதீஸ்களைச் சான்றாகக் கொண்டு விதிகளைக் கூற முடியாது. இது அறிஞர்கள் அனைவரின் அபிப்பிராயமாகும். பலவீனமான ஹதீஸைக் கொண்டு ஒருவர் ஸுன்னத் அல்லது வாஜிப் என்று ஷரீஅத்தில் விதித்தால் அவர் அறிஞர்களின் ஏகமனதான விதிகளுக்கு மாறு செய்தவராக மதிக்கப்படுவார். ஷரீஅத்தில் அறியப்படுகின்ற ஆதாரங்களை வைத்துத்தான் ஹராம் என்பதுவும் விதிக்கப்பட வேண்டும். ஒரு அனுஷ்டானத்தை ஷரீஅத்தில் ஹராமாக்கப்பட்ட பிறகு ஒரு பலவீனமான ஹதீஸில் இந்த ஹராமைப் புரிகிறவனுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த ஹதீஸைப் பொய்யென்று காட்டுகின்ற சான்றுகளுமில்லை. அப்படியானால் அத்தகைய பலவீனமான ஹதீஸை அறிவிப்பதில் குற்றமில்லை.
இதைப் போலவே மனிதனை நற்கருமங்களின்பால் ஆசையூட்டுகின்ற, மேலும் தீவினைகளை விட்டுத் தடுக்கின்ற பலவீனமான ஹதீஸ்களை அறிவித்தல் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்துடன் அவ்விஷயத்தில் அல்லாஹ்வும், நற்கிரியைகளைப் பற்றி அவை மேலானவை, தரமானவை என்று சிலாகித்து ஆர்வமூட்டியும் தீவினைகளைப்பற்றி அவை கேவலமானவை, அஞ்ச வேண்டியவை என்று எச்சரித்தும் கண்டித்தும் கூறியிருக்க வேண்டும் என்றால் மட்டுமே பலவீனமான ஹதீஸ்களை அது விஷயத்தில் எடுத்துக் கூற முடியும். பொய்யென்றும், புனையப்பட்டதென்றும் நபிகளின் மீது இட்டுக்கட்டாகக் கூறப்பட்டது என்று தெரியவரும் எந்த ஹதீஸும் எத்தகைய அமலுக்கும், விதிகளுக்கும் பயன் படுத்தப்படமாட்டாது. பலவீனமான ஹதீஸ்களைப் போன்றுதான் இஸ்ராயீலிய்யாத்துகளும் கருதப்பட வேண்டும். பாவம் செய்வதை விட்டு மனிதனை எச்சரிப்பதிலும், நன்மையின் பால் மனிதனைத் தூண்டி ஆர்வமூட்டுவதிலும் இஸ்ராயீலிய்யாத்துகளை உபயோகித்துக் கொள்வதற்கு அனுமதியிருக்கிறது.
அத்துடன் மேற்கூறப்பட்ட இரு நிபந்தனைகளையும் கவனிக்க வேண்டும். ஒன்று: இஸ்லாமிய ஷரீஅத்திலும் அதைச் செய்ய வேண்டுமென்று அல்லாஹ் நம்மைப் பணித்து அவன் நமக்கு ஆர்வமூட்டியிருக்க வேண்டும். அல்லது நம்மை தடுத்து அது விஷயத்தில் அச்சுறுத்தி இருக்க வேண்டும். இரண்டு: அது பொய்யான கதையென்று அறியப்படாமலும், நிரூபிக்கப்படாமலும் இருக்க வேண்டும். வெறும் இஸ்ராயீலியாத்துகளை மட்டும் வைத்து நமது இஸ்லாமிய ஷரீஅத்தில் விதிகள் விதிக்கப்பட மாட்டாது. இது எல்லா அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒர் உண்மையாகும். இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் பலவீனமான ஹதீஸ்களைச் சான்றாக எடுத்து இஸ்லாமிய விதிகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று அவர்களைப்பற்றிச் சொல்லப்படுவது சரியல்ல.
இமாம் அஹ்மதும், அவர்களுக்கு முன்னுள்ள அறிஞர் சிலரும் ஹதீஸை ‘ஸஹீஹ்’ என்றும், ‘ளயீஃப்’ என்றும் இரு வகையாக அமைத்து, அதில் ஒன்று முற்றிலும் பலவீனமானது என்றும், அதை வைத்து ஷரீஅத்தின் எந்தச் சட்டமும் விதிக்கப்பட மாட்டாது என்றும், இன்னொன்று பலவீனமான ஹதீஸ்களில் அழகானவை என்றும் வகுத்துக் கூறினார்கள்.
*அறிவிப்பாளர்களின் பெயர்ப்பட்டியலுடன் அறிவிக்கப்படும் ஹதீஸ் தொகுப்புகளுக்கு முஸ்னத் என்று சொல்லப்படும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…