62:2-3-4. அவன்(அல்லாஹ்)தான் உம்மி*களிடையே ஒரு தூதரை – அவர்களிலிருந்தே தோற்றுவித்தான். அவர் எத்தகையவர் எனில், அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுகின்றார்; அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப் படுத்துகின்றார்; மேலும், அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். ஆனால், அவர்களோ இதற்கு முன்பு வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடந்தார்கள். இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும்** ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதர் தோற்றுவிக்கப்பட்டுள்ளார்). அல்லாஹ் வல்லமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனகவும்*** இருக்கின்றான். இது அவனுடைய அருள். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மகத்தான அருளைப் பொழிபவனாகவும் இருக்கின்றான்.
அல்குர்ஆன்: அல் ஜும்ஆ.
*இங்கு ‘உம்மி’ (எழுத, படிக்க தெரியாதவர்) என்னும் சொல் யூதர்களின் சொல் வழக்குப்படி இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு நுட்பமான பழிப்புரை மறைந்துள்ளது. இதன் கருத்து: எந்த அரபிகளை யூதர்கள் ‘உம்மிகள்’ என்று இழிவாகக் கூறுகின்றார்களோ – தம்மைவிட அற்பமானவர்கள், இழிவானவர்கள் என்று கருதுகின்றார்களோ – அவர்களிலிருந்துதான் மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமான அல்லாஹ் ஓர் இறைதூதரைத் தோற்றுவித்துள்ளான். அவர் தாமே வரவில்லை. மாறாக, அவரைத் தோற்றுவித்தவன் இப்பேரண்டத்தின் அரசனும், வல்லமையாளனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்வே ஆவான். அவனது வலிமையை எதிர்த்தால், இவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்வார்களேயன்றி அவனுக்குச் சிறிதும் தீங்கிழைக்க இவர்களால் முடியாது.
**அதாவது, முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவம் அரபு சமுதாயத்துக்கு மட்டுமல்ல, மாறாக உலகில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும், இனங்களுக்கும் உரியதாகும். இன்னும் இறை நம்பிக்கையாளர்களின் குழுவில் சேராத சமூகங்களுக்கும் மறுமைநாள் வரை தோன்ற இருக்கின்ற சமூகங்கள் அனைத்திற்கும் உரியதாகும் அது.
***அதாவது, அவனுடைய பேராற்றல், நுண்ணறிவு ஆகியவற்றின் விந்தையே ஆகும் இது. அதாவது, இத்தகைய பண்படாத ‘உம்மி’களின் சமுதாயத்தில் மாபெரும் இறைதூதர் ஒருவரை அவன் தோற்றுவித்தான். அவருடைய அறிவுரைகளும், வழிகாட்டலும் எந்த அளவுக்குப் புரட்சிகரமானவையாகவும், உலகளாவிய நிலையான நெறிகளைத் தாங்கியவையாகவும் உள்ளன என்றால், அவற்றின் அடிப்படியில் மனிதகுலம் முழுவதும் ஒருங்கிணைந்து ஓர் இலட்சியக் குழுவாக – உம்மத்தாக விளங்க முடியும். மேலும், என்றென்றும் அந்தக் கொள்கைகளின் வாயிலாக வழிகாட்டுதலைப் பெற முடியும்.
அறிவுடையோர் எவரும் தன்னைவிட வலிமையாளனை எதிர்ப்பாரா?
This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.