ஒரு ஸஹாபியின் குறிப்பிட்ட தனிமையான ஒரு அபிப்பிராயத்தை மார்க்க விதிகளுக்குச் சான்றாக எடுக்கப்படுமா இல்லையா என்பதில் அறிஞர் சிலர் அபிப்பிராய பேதங்களைக் கூறியுள்ளனர். ஸஹாபாக்களில் ஒருவரின் கருத்து குர்ஆன், ஹதீஸ் நேருரைகளுக்கு (நஸ்ஸுக்கு) மாறாக இல்லையென்றால் அது ஆதாரமாகக் கொள்ளப்படும். ஒருவரின் அபிப்பிராயத்தை அனைத்து ஸஹாபாக்களும் புறக்கணிக்காமல் இருக்கின்ற போதும் அது சான்றுடையதாக மதிக்கப்படும். இதற்கு ‘இஜ்மாவுன் இக்ராரிய்யுன்’என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் தவறுதலான அபிப்பிராயம் கூறப்படுமானால் மற்ற ஸஹாபிகள் அதனை ஏற்கமாட்டார்கள். அதனை புறக்கணித்து விடுவார்களல்லவா?
அன்று ஒரு நபித்தோழர் ஒரு அபிப்பிராயத்தைக் கூறி அந்த அபிப்பிராயம் பிரபலமாகாமல் மங்கி விட்டது என்று வைத்துக் கொள்வோம். நபித்தோழரின் அந்த அபிப்பிராயத்துக்கு எதிராக மற்றவர்கள் எதுவும் சொல்லவுமில்லை என்றால் பிரபலமாகாத அந்த அபிப்பிராயமும் ஆதாரமாக எடுக்கப்படும். ஆனால் மற்ற ஸஹாபிகள் அந்த ஒருவரின் அபிப்பிராயத்துக்கு மாறாக கூறியிருந்தால் இங்கு மிகுதியானவர்களின் அபிப்பிராயமே செல்லுபடியாகுமே தவிர ஒரு ஸஹாபி மட்டும் கூறியது ஒதுக்கப்படும் என அனைத்து அறிஞர்களும் கூறியிருக்கின்றனர். ஒருவருடைய அபிப்பிராயத்துக்கு முரணான கருத்தை அல்லது அதற்கு ஒத்த மற்றவர்கள் கூறி இருக்கிறார்களா, இல்லையா என்று சந்தேகிக்க வேண்டியது நேர்ந்தால் எந்த கருத்தையும் கவனிக்க கூடாது. பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீஸின் மேற்படி கருத்தை சீர்தூக்கிப் பார்த்து அந்த ஹதீஸுக்கு ஒப்ப தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஹதீஸுக்கு முரண்பட்ட யாருடைய தீர்ப்பும் எடுக்கப்பட மாட்டாது.
இவை அறிஞர்களின் விதிமுறைகள். இந்த விதிகளின் அடிப்படையில் முன்னர் நாம் கூறிய உஸ்மான் பின் ஹனீப் அவர்களோ, மற்றவர்களோ நபியவர்கள் இறந்ததன் பின் அவர்களை பொருட்டாக வைத்து வஸீலா கேட்கலாம் என அபிப்பிராயப் படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அபூபக்கர், உமர் போன்ற பெரிய ஸஹாபிகள் இது விஷயத்தில் உஸ்மான் பின் ஹனீபுடைய அபிப்பிராயத்துக்கு மாற்றமாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில் பெரிய ஸஹாபிகளின் கருத்திற்கொப்ப செயல்படுவதுடன் உஸ்மான் பின் ஹனீபின் அபிப்பிராயத்தை ஒதுக்கி விட வேண்டும்.
ஆகவே தான் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்னர் அன்னாரின் பெரிய தந்தையாரை வைத்து வஸீலா தேடினார்கள். இந்நேரம் உமர் (ரலி) அவர்கள் அருகில் முஹாஜிரீன்கள், அன்சாரிகள், இன்னும் பற்பல ஸஹாபிகளும் அதை நோக்கி நின்று ஆதவரவளித்தனர். அவர்களில் எவரும் அதை எதிர்த்துப் பேசவில்லை. மக்கள் இந்நேரத்தில் மழையின்றி வறட்சியால் தவித்துக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் மக்களுக்குச் செழிப்பும், ஐஸ்வர்யமும் மீண்டும் கிடைக்கும் வரையில் நான் நெய்யாலான உணவருந்த மாட்டேன் என்று சபதம் செய்து கொண்டு அப்பாஸ் (ரலி) அவர்களிக் கொண்டு பிரார்த்தித்து வஸீலா தேடினார்கள். தம் பிரார்த்தனையில் ‘இறைவா! நாங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட நேரத்தில் மழை பெய்வதற்காக எங்கள் நபியை வைத்து வஸீலா தேடினோம். மழையையும் பெய்யச் செய்தாய். ஆகவே இன்றி அதே நபியின் பெரிய தந்தையாரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம். எங்களுக்கு மழை பெய்யச் செய்தருள்வாயாக!’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியதும் மழை பெய்தது.
இந்த துஆவை அனைத்து ஸஹாபிகளும் அறிந்து ஏற்றுக் கொண்டனர். பிரபலமான இந்த துஆவை ஸஹாபிகள் யாரும் விமர்சிக்கவில்லை. இதுவும் ‘அல்-இஜ்மாவுல் இக்ராரிய்யீன்’ வகையில் மிகத் தெளிவான விதியாகும். இதைப்போன்று முஆவியா (ரலி) அவர்களும் தம் ஆட்சியில் யஸீத் பின் அல்-அஸ்வதைக் கொண்டு வஸீலா தேடுவதும், இவ்விரு வஸீலாக்களும் ஒரே நியதியில் ஒரே மாதிரியில் இருந்திருக்குமானால் உமர் (ரலி), அப்பாஸ் (ரலி) அவர்களைக் கொண்டும், முஆவியா (ரலி) யஸீதைக் கொண்டும் வஸீலா தேடிய நேரத்தில் எல்லா ஸஹாபிகளும் உமரிடமும், முஆவியாவிடமும் ஆட்சேபித்து இருப்பார்கள்.
‘அனைத்து சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் மேன்மைக்குரிய வஸீலாவாக நபிகளை விட்டுவிட்டு ஏன் அப்பாஸைக் கொண்டு வஸீலா தேட வேண்டும்’ என பற்பல வினாக்கள் வீசி இருப்பார்கள். ஆனால் அப்படி எவரும் எதையும் உமர் அவர்களிடம் கேட்கவில்லை. இதுவே நமக்குப் பெரிய ஆதாரமாக இருக்கிறது.
நபிகள் (ஸல்) அவர்கள் வாழ்ந்திருக்கையில் அவர்களின் துஆ, ஷபாஅத்தைக் கொண்டு வஸீலா தேடினார்கள். நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்னர் அது முடியாததினால் மற்ற மனிதர்களின் துஆவைக் கொண்டு வஸீலா தேடினார்கள். ஆகவே எந்த சிருஷ்டிகளைக் கொண்டும் வஸீலா தேடப்பட மாட்டாது, துஆவைக் கொண்டு வஸீலா தேடப்படும் என்பதுவே இதன் முடிவு. உமர் (ரலி) அவர்களின் செயல்களுக்குக் கண்பார்வை இழந்த ஸஹாபியின் சம்பவமும், எல்லா ஸஹாபாக்களின் சம்பவங்களும் சான்று பகர்கின்றன. ஏனெனில் கண்பார்வை இழந்த ஸஹாபியை நபிகளின் சிபாரிசைக் கொண்டும், துஆவைக் கொண்டும் வஸீலா தேட வேண்டுமென்றும் பணித்தார்களே தவிர நபி (ஸல்) அவர்கள் தங்களைக் கொண்டே வஸீலா தேட பணிக்கவில்லை. எனவேதான் துஆவில் ‘இறைவா! என் விஷயத்தில் நபியவர்களின் துஆவை ஏற்றருள்வாயாக!’ என்று நீர் கூறும் என அவருக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
ஸஹாபிகள் சிலர் மற்றவர்களிடம் நபியின் துஆவையும், ஷபாஅத்தையுமன்றி நபியைக் கொண்டே வஸீலா தேட பணித்தார்கள் என்றும், அனுமதிக்கப்பட்ட துஆக்கள் அத்தனையையும் சொல்லிக் கொடுக்காமல் சிலதை சொல்லியும், சிலதை விட்டும் கூறினார்கள் என்றும் கற்பனை செய்தால் கூட உமர் (ரலி) அவர்களின் செய்கை ஒன்றே போதுமானது. ஏனெனில் நபிகளின் ஸுன்னத்துக்கு உமர் (ரலி) அவர்களின் இச்செய்கை பொருத்தமாக இருக்கிறது. எனவே எவர் உமரின் செயலுக்கு மாற்றம் செய்கிறாரோ அவர் நபியின் ஸுன்னத்தை எடுத்துச் செயல்படாதவராகக் கருதப்படுவார். இது விஷயத்தில் நபிகளைப்பற்றி அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் இம்மனிதனுக்கு பாதகமாக அமையும், சாதகமாக அமையாது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…