7:94. நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.
7:95. பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலைக்கு மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் – ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.
7:96. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரகத்துகளை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
7:97. அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
7:98. அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களைத் தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.
7:100. பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.
7:101. (நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை – இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் (நம்பிக்கை கொள்ளாதவர்களின்) இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
7:102. அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை – அன்றியும் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
அல் குர்ஆன்: அல் அஃராஃப் (சிகரங்கள்)
அல்லாஹ்வின் நடைமுறை
This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.