1 – எண்ணம் போல் வாழ்வு
உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு அருளியதை நான் செவியுற்றிருக்கிறேன்: செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன. மனிதன் எதை எண்ணினானோ அதுவே அவனுக்குக் கிடைக்கும். எனவே ஒருவன் அல்லாஹ்வுக்காக அவனுடைய தூதருக்காக ஹிஜ்ரத் மேற்கொண்டால் அது அல்லாஹ்-ரஸூலுக்காக மேற்கொள்ளப்பட்டதாக அமையும். ஒருவன் உலக நன்மையை அடைவதற்காகவோ ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவோ ஹிஜ்ரத் மேற்கொண்டால் அவனது ஹிஜ்ரத் அது எந்நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதற்காகவே அமையும்.‘ (புகாரி, முஸ்லிம்)
தெளிவுரை
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன.
மனிதன் எதை எண்ணினானோ அதுவே அவனுக்குக் கிடைக்கும்.
இந்த இரு வாக்கியங்கள் குறித்து நபிமொழி ஆய்வாளர்களிடையே பல கருத்துகள் நிலவுகின்றன. சிலர் கூறுவர்: இந்த இரண்டு வாக்கியங்களும் ஒரே பொருள் கொண்டவை. முதல் வாக்கியத்தின் பொருளையே இரண்டாம் வாக்கியமும் வலியுறுத்திக் கூறுகிறது!
இந்தக் கருத்து சரியானதல்ல. இரண்டாவது வாக்கியம் புதியதொரு கருத்தைக் கொடுப்பதே தவிர முந்தைய வாக்கியத்தின் கருத்தையே மீண்டும் கூறுவதல்ல.
சற்று ஆழமாகச் சிந்தித்தால் இவ்விரண்டு வாக்கியங்களுக்கிடையே பெருத்த வேறுபாடு இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
முதல் வாக்கியம் காரண அடிப்படையிலானது.
இரண்டாம் வாக்கியம் விளைவாய் வருவது.
முதல் வாக்கியத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எண்ணம் இருப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. மனிதன் செயல் சுதந்திரம் உடையவன். எனவே அவனுடைய செயல்களின் பின்னணியில் எண்ணம் இருக்கத்தான் செய்யும். அறிவும் சுதந்திரமும் உள்ள எந்த மனிதனின் செயலும் எண்ணமின்றி அமையாது. அப்படி அமைவது இயலாத ஒன்று!
அறிஞர் சிலர் கூறியதைக் கவனியுங்கள்: ‘எண்ணுதல் இன்றி அமல் செய்யுமாறு அல்லாஹ் நம்மைப் பணித்திருந்தால் அது நம்மால் முடியாது. நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை அல்லாஹ் நம் மீது சுமத்தியதாக ஆகிவிடும்’
– இந்தக் கருத்து முற்றிலும் சரியானது. நீங்கள் அறிவும் சுதந்திரமும் பெற்றிருந்து எவருடைய நிர்பந்தமும் இல்லா நிலையில் ஒரு செயலைச் செய்யும் பொழுது எந்த ஓர் எண்ணமும் இல்லாமல் எப்படிச் செயல்படுவீர்கள்? அது நடைமுறைக்கு இயலாதது. நாட்டம் மற்றும் ஆற்றலில் இருந்து பிறப்பதே செயல். நாட்டமே எண்ணம் என்பது!
இப்பொழுது பாருங்கள். முதல் வாக்கியம் ஒரு செயலைச் செய்பவருக்கு ஓர் எண்ணம் இருப்பது அவசியம் எனும் பொருளைத் தருகிறது.
– இங்கு இன்னொன்றை அறிந்து கொள்வது பயன்மிக்கது. அதாவது, எண்ணங்கள் பலவிதமாய் உள்ளன. ஓர் எண்ணத்திற்கும் மற்றோர் எண்ணத்திற்கும் வானம், பூமி அளவு வேறுபாடு உள்ளது.
சிலரின் எண்ணம் நல்லதாக இருக்கும். அவர்களுடைய அமல்களில் மேலான-உன்னதமான குறிக்கோள் இருக்கும். வேறு சிலரின் எண்ணம் கீழ்த்தரமானதாய் இருக்கும். மட்டரகமான – கெட்ட நோக்கமே அவர்களின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும்.
நீங்கள் இரண்டு மனிதர்களைப் பார்க்கலாம்! இருவரும் ஒரே செயலைத் தான் செய்வார்கள். அதன் தொடக்கம் – முடிவு, அமைதி, அசைவு எனும் அனைத்து அம்சங்களிலும் இருவரும் ஒன்று போல் தெரிவார்கள்! ஆனால் அவ்விருவருக்கும் வானம் – பூமி அளவு வித்தியாசம்! ஏன்? எண்ணத்தின் வேறு பாட்டினால்தான்!
-ஆக, எண்ணமின்றி எந்த ஒருசெயலும் இல்லை என்பது ஓர்அடிப்படை அம்சமாகும். Continue reading →