தௌபா – பாவமீட்சி தேடல்
இறைமார்க்க அறிஞர்கள் கூறுவர்: அனைத்துப் பாவங்களில் இருந்தும் பாவமீட்சி தேடுவது கடமையாகும். மனித உரிமையுடன் தொடர்பில்லாமல் – மனிதனுக்கும் இறைவனுக்கும் மத்தியிலான பாவமாக இருந்தால் அதிலிருந்து மீட்சி பெறுவதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன.
- அந்தப் பாவத்திலிருந்து முற்றாக விடுபடுதல்
- அதனைச் செய்தது குறித்து வருந்துதல்
- இனி எப்போதும் அந்தப் பாவத்தைத் திரும்பச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல்
இந்த மூன்று நிபந்தனைகளில் ஒன்று விடுபட்டால் அவனது பாவமீட்சி நிறைவேறாது. மனித உரிமையுடன் தொடர்பான பாவமாக இருந்தால் அதிலிருந்து மன்னிப்புத் தேடுவதற்கு நான்கு நிபந்தனைகள் உள்ளன. நான்காவதாக அந்த மனிதனின் உரிமையி(னைப் பாதிக்கும் தீங்கி)லிருந்து விடுபடல் வேண்டும். அது பணமாகவோ பொருளாகவோ இருந்தால் அதனை அவனிடம் திருப்பிக் கொடுத்திட வேண்டும். அவதூறு சுமத்தியதற்கான தண்டனை போன்றதாக இருந்தால் அந்தத் தண்டனையை ஏற்றிடும் வகையில் அவனிடம் தன்னை ஒப்படைத்திட வேண்டும். அல்லது அதனை மன்னித்து விடுமாறு அவனிடம் கோரிட வேண்டும். புறம் பேசிய பாவமாக இருந்தால் அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு அவனிடம் கேட்க வேண்டும்.
அனைத்துப் பாவங்களை விட்டும் மீட்சி பெறுவது கடமை. ஒரு மனிதன் சில பாவங்களிலிருந்து மட்டும் பாவமீட்சி தேடினால் சத்தியவான்களிடத்தில் அந்தப் பாவத்திலிருந்து மட்டும் தான் மீட்சி தேடியதாக ஆகும். மற்ற பாவங்கள் அப்படியே அவன் மீது படிந்திருக்கும்.
பாவமீட்சி தேடுவது கடமை என்பதற்கு குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்கள் ஏராளம் உள்ளன. சமுதாயத்தின் கருத்தொற்றுமையும் அதற்குண்டு. அல்லாஹ் கூறுகிறான்:
‘இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். நீங்கள் வெற்றி அடையக்கூடும்’‘ (24:31)
வேறோரிடத்தில், ‘உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புப் கோரி பிறகு அவன் பக்கம் மீளுங்கள்” (11:3)
இன்னோரிடத்தில், ‘இறை நம்பிக்கைகொண்டோரே! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். தூய்மையான பாவமன்னிப்பாக” (66:8)
தெளிவுரை
தௌபா எனும் அரபிச் சொல்லுக்கு அகராதியில் திரும்புதல் என்று பொருள். இறைமார்க்கத்தின் வழக்கில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதை விட்டும் திரும்பி, அவனுக்குக் கீழ்ப்படிவதாகும்.
பாவமீட்சி தேடுவதில் மிக முக்கியமானதும் கண்டிப்பானதும் யாதெனில், இறை நிராகரிப்பை விட்டும் இணைவைப்பை விட்டும் பாவமீட்சி தேடி இறைநம்பிக்கை கொள்வதாகும். ஏனெனில், இவை தான் மிகவும் கொடிய பாவச்செயல்களாகும். Continue reading