ரியாளுஸ் ஸாலிஹீன் (1-10)

10. ஜமாஅத்துடன் தொழுவது கடமையே!

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் ஜமாஅத்துடன் நிறைவேற்றும் தொழுகை, அவர் தனது வீட்டில் தொழும் தொழுகையை விடவும் தனது கடைத்தெருவில் தொழும் தொழுகையை விடவும் இருபதுக்கும் அதிகமான அந்தஸ்துகளைப் பெறுகிறது.

அதற்குக் காரணம், ஒருவர் அழகாக உளூ செய்துகொண்டு பிறகு பள்ளிவாசல் நோக்கி வருகிறார் எனில் – தொழுகையைத் தவிர வேறதுவும் அவரை வெளிக்கிளப்பவில்லை என்றிருந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்குப் பகரமாக நிச்சயமாக அவருக்கு ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான். ஒரு குற்றத்தை அவரை விட்டும் அகற்றுகிறான். இது பள்ளிவாசலில் அவர் நுழைவது வரையிலாகும்.

பள்ளிவாசலில் நுழைந்து விட்டாரெனில் – தொழுகை அவரை அங்கு தடுத்து வைத்திருக்கும் காலம் வரையில் அவர் தொழுகையில் ஈடுபட்டிருப்பதாகவே கருதப்படுவார். மேலும் உங்களில் ஒருவர் தான் தொழுத இடத்தில் இருந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் மலக்குமார்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறார்கள்: யா அல்லாஹ், இவருக்கு அருள் பொழிந்திடு! இவரது பாவத்தை மன்னித்திடு. இவரது பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றிடு என்று! அந்த இடத்தில் இவர் யாருக்கும் தொல்லை கொடுக்காமலும் உளூ முறியாமலும் இருக்கும் வரையிலாகும் இது” (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் தொழுகையும் ஒன்று. இது நாள்தோறும் ஐந்து நேரம் கடமையாக்கப்பட்டுள்ளது. இந்தக் கடமையான தொழுகையைப் பள்ளிவாசல் சென்று இமாம் – ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும். அதாவது ஒருவரை இமாமாக -தலைவராக முன்னிருத்தி அவர் பின்னால் எல்லோரும் அணிவகுத்து நின்று கூட்டான முறையில் நிறைவேற்றுவது கடமை. இத்தகையக் கூட்டுத் தொழுகையின் அவசியத்தையும் சிறப்பையுமே இந்நபிமொழி எடுத்துரைக்கிறது.

இமாம் – ஜமாஅத்துடன் நிறைவேற்றும் ஒரு தொழுகைக்கு இருபது சொச்சம் (மற்றோர் அறிவிப்பின்படி) இருபத்தேழு நன்மைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில் ஜமாஅத்துடன் தொழுவதென்பது அல்லாஹ் விதித்த முக்கியமானதொரு கடமை. அதனைப் பேணுவதற்கே இத்துணை சிறப்பு!

சிலரிடம் தவறான கருத்தொன்றுள்ளது. அதாவது ஜமாஅத்துடன் தொழுவது கடமையானதல்ல. ஸுன்னத்தானது – சிறப்பானது மட்டுமே என்று வாதிடுகின்றனர். அதற்கு இதுபோன்ற நபிமொழிகளை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அதற்குரிய பதில் இதுதான்: ஒரு பொருளுக்குச் சிறப்பு சேர்ப்பதனால் அது கடமையானதல்ல என்றாகாது. தவ்ஹீத் எனும் ஏகத்துவக் கொள்கையின் சிறப்பு குறித்து எத்தனையோ நபிமொழிகள் பேசுகின்றன. அதனால் தவ்ஹீத் கொள்கை கடமையானதல்ல என்றாகி விடுமா? கடமைகளிலெல்லாம் அதிமுக்கிய கடமை தவ்ஹீத்தானே! அஃதன்றி எந்த அமலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லையே! அத்துடனே அதற்குச் சிறப்புகளும் உண்டு. சிறப்புகள் என்பன பயன்களையும் விளைவுகளையும் பொருத்ததாகும்.

எனவே இறைமார்க்க அறிஞர்கள் பெரும்பாலோரின் கருத்து, ஜமாஅத்துடன் தொழுவது கடமை என்பதே! இதுவே ஆதாரப்பூர்வமானது. ஒருமுஸ்லிம் பள்ளிவாசல் சென்று ஜமாஅத்துடன் சேர்ந்துதான் கடமையான ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றவேண்டுமென்று குர்ஆனும் பல நபிமொழிகளும் வலியுறுத்துகின்றன! அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

மேலும் (நபியே) நீர் முஸ்லிம்களிடையே இருக்கும்பொழுது (போர் நிலையில்) அவர்களுக்குத் தொழ வைப்பீராயின் அவர்களில் ஒரு குழுவினர் தங்களுடைய ஆயுதங்களை ஏந்திக்கொண்டு உம்மோடு நிற்க வேண்டும். பிறகு அவர்கள் சுஜூது செய்து (தொழுது) முடித்துவிட்டால் பின்னால் சற்று விலகிச் சென்றிட வேண்டும். தொழாமல் இருக்கும் மற்றொரு குழுவினர் வந்து உம்மோடு தொழ வேண்டும். அத்துடன் அவர்களும் முன்னெச்சரிக்கையாக தம் ஆயுதங்களை ஏந்திக் கொண்டிருக்க வேண்டும். (4 : 102)

– இவ்வாறு போர்ச் சூழ்நிலையிலேயே ஜமாஅத்துடன் தொழுவதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளபொழுது சாதாரண காலத்தில் அதன் கடமை இன்னும் முக்கியத்துவம் பெறுவது தெளிவான ஒன்றாகும்.

ஜமாஅத்துடன் தொழுவதற்கு இத்துணை சிறப்பு வழங்கப்படுவதன் காரணத்தையும் இந்நபிமொழி தொடர்ந்து குறிப்பிடுகிறது: ‘ தொழுகையைத் தவிர வேறெதுவும் அவரை வெளிக் கிளப்பவில்லை. தொழுகையைத் தவிர வேறெதையும் அவர் நாடவில்லை…

– ஆம்! வாய்மையான – தூய்மையான எண்ணத்துடன் வீட்டை விட்டும் ஜமாஅத் தொழுகைக்காக அவர் வந்திருக்கிறார் என்பதே காரணம்! அதனால் அவரது ஒவ்வொரு எட்டுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன: அந்தஸ்து உயர்வு – பாவமன்னிப்பு

ஆம்! அவரது இல்லம் மஸ்ஜிதின் அருகில் இருந்தாலும் சரி, தொலைவாக இருந்தாலும் சரியே! அவர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் இந்த இரண்டு பயன்கள் உண்டு!

மேலும் இகாமத் சொல்லும் நேரத்தை எதிர்பார்த்து பள்ளிவாசலில் அவர் இருக்கும் வரையிலும் தொழுகையில் ஈடுபட்டிருப்பதாகவே அவர் கருதப்படுகிறார்!

– இதுவும் மகத்தானதோர் அருட்கொடையன்றோ! எவ்வளவு நீண்ட நேரமானாலும்- தஹிய்யதுல் மஸ்ஜித் எனும் காணிக்கைத் தொழுகை இரண்டு ரக்அத் தொழுவிட்டு பிறகு எவ்வளவு நேரம் நீங்கள் உட்கார்ந்திருந்தாலும் தொழுததற்கான கூலியே உங்களுக்கு வழங்கப்படுகிறது!

இதேபோல் தொழுத இடத்தில் நீங்கள் உளூ உடனும் பிறருக்குத் தொல்லை கொடுக்காமலும் இருக்கும் நேரம் வரையில் மலக்குகளின் துஆவும் – பிரார்த்தனையும் உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதுவும் மகத்தான சிறப்பே ஆகும்!

கேள்விகள்

1) ஜமாஅத்துடன் தொழுவது கடமையே என்பதை இந்நபிமொழி எப்படி உணர்த்துகிறது?

2) அந்தக் கருத்துக்கு குர்ஆனின் ஆதாரம் என்ன?

3) ஜமாஅத் தொழுகைக்குரிய சிறப்புகளைப் பட்டியலிடவும்.

4) அறிவிப்பாளர் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.