ரியாளுஸ் ஸாலிஹீன் (1-11)

11 –  ஏராளமான நன்மைகளைப் பெறுவது எப்படி?

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருட்பேறும் உயர்வும் மிக்கவனாகிய தம் இறைவன் கூறியதாக அருளினார்கள்: ‘திண்ணமாக அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் பதிவு செய்து விட்டான்’

பிறகு அதற்கு விளக்கம் அளித்தார்கள்: ஒருவன் ஒரு நன்மையை நாடினால் அதனை அவன் செயல்படுத்தாவிட்டால் அல்லாஹ் அதனைத் தன்னிடத்தில் முழுமையானதொரு நன்மையாகப் பதிவு செய்து கொள்கிறான். மேலும் ஒருவன் நன்மை செய்ய நாடி அதனைச் செயல்படுத்தவும் செய்தால் அல்லாஹ் அதனைப் பத்து நன்மைகளாகப் பதிவு செய்து கொள்கிறான். அது எழுநூறு மடங்குகளாக ஏன் அதற்கும் அதிகமாக ஏராளமான மடங்குகளாக அதிகரித்துக் கொண்டு செல்கிறது!

ஒருவன் ஒரு தீமையை நாடினான். ஆனால் அதைச் செய்திடவில்லை என்றால் அல்லாஹ் அதனைத் தன்னிடத்தில் முழுமையானதொரு நன்மையாகப் பதிவு செய்து கொள்கிறான். ஆனால் தீமையை நாடி அதைச் செயல்படுத்தவும் செய்தால் அல்லாஹ் அதனை ஒரேஒரு தீமையாகத்தான் பதிவு செய்கிறான். (நூல் : புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

மனிதர்களின் செயல்களை மட்டுமல்ல அவற்றிற்குத் தூண்டுகோலாய் அமையும் நிய்யத்-எண்ணங்களையும் இறைவன் கவனிக்கிறான். அவை ஒவ்வொன்றிற்கும் தனது அறிவு ஞானத்திற்கு ஏற்ப நற்கூலி தண்டனை வழங்குகிறான். இவ்வாறு மனிதனுக்குரிய நன்மை-தீமைகளை இறைவன் பதிவு செய்வது இருவகையாய் உள்ளது.

லவ்ஹுல் மஹ்பூழ் எனும் மூல ஏட்டில் பதிவு செய்தல்

– பேரண்டத்தில் நிகழ்கிற எல்லாவற்றையும் அந்த மூல ஏட்டில் அல்லாஹ் பதிவு செய்கிறான். இதனை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: ‘திண்ணமாக நாம் ஒவ்வொன்றையும் ஒருகுறிப்பிட்ட விதிமுறையின்படி படைத்திருக்கிறோம்’ (54: 49)

மற்றோரிடத்தில், ‘ஒவ்வொரு சிறிய – பெரிய விஷயமும் எழுதப் பட்டுள்ளது(54: 53) என்று கூறுகிறது.

நன்மைகளையும் தீமைகளையும் – மனிதன் அவற்றைச் செய்கிற பொழுது பதிவு செய்தல்

இவ்விரண்டையும் வேறொரு வார்த்தையில் விளக்குவதானால் இவ்வாறு சொல்லலாம்: ஒன்று முந்தைய பதிவு. மற்றொன்று பிந்தைய பதிவு.

முந்தைய பதிவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிந்திட முடியாது. அல்லாஹ் நமக்கு நன்மையைப் பதிவு செய்துள்ளானா? தீமையைப் பதிவு செய்துள்ளானா? என்பதை – அவை நிகழும் முன்னர் யாரும் அறிய முடியாது.
பிந்தைய பதிவு அதாவது மனிதன் செயல்படும்பொழுது அவனுடைய செயல்களை இறைவன் பதிவு செய்வதென்பது அவனது ஞானம், நீதி, மேன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப அமைவதாகும்.

இதனை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக விவரித்துள்ளார்கள். ஒருமனிதன் நற்செயல் செய்ய வேண்டுமென எண்ணினால் அந்த எண்ணமே ஒரு நன்மையாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒருவர் உளூ செய்து கொண்டு குர்ஆன் ஓதவேண்டும் என நிய்யத் – எண்ணம் வைத்தார். ஆனால் வேறு பணிகள் வந்து சேரவே உளூ செய்வதை-குர்அன் ஓதுவதை நிறுத்திவிட்டு அவற்றில் ஈடுபட்டார்.

இதுபோன்றே, தர்மம் கொடுக்க எண்ணினார். அதற்கான பணத்தைத் தனியே எடுத்து வைக்கவும் செய்தார். பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அதைச் செயல்படுத்தவில்லை. இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என எண்ணினார். ஆனால் அதற்கான சூழ்நிலை மாறியதால் தொழ முடியவில்லை! இந்த எண்ணங்களுக்காக முழுமையான நன்மை பதிவு செய்யப்படுகிறது! நிய்யத் – நல்லெண்ணம் கொண்டதற்காக மட்டும் இறைவன் வழங்கும் நற்கூலியாகும் இது! இது எதைக் காட்டுகிறது? இறைவனின் நீதி, நிறைஞானம், பெருந்தன்மை ஆகியவற்றையே காட்டுகிறது.

சிலர் கேட்டலாம்: அது எப்படி முழுமையான நன்மை பதிவு செய்யப்படும்? அவன் தான் எண்ணியபடி நற்செயல் எதையும் செய்யவில்லையே? பிறகு கூலி கிடைப்பதெப்படி?

அதற்கான பதில் : முதலில் அல்லாஹ்வின் அருட்கொடைகள் கடலினும் விரிவானவை. கரை காணமுடியாதவை! அவனது நீதியும் ஞானமும் நிறைவானது! இரண்டாவதாக, மனிதனின் உள்ளத்தில் எழும் நல்லெண்ணமே நற்செயலாக- நன்மையாகக் கணிக்கப்படுவதற்குக் காரணம், உள்ளம் இருக்கிறதே அதில் நன்மையோ தீமையோ -எதாவது நிழலாடிக் கொண்டேயிருக்கும். சதாவும் எதையாவது எண்ணிக் கொண்டிருப்பதே அதன் இயல்பு! இத்தகைய எண்ணமே மனிதனைச் செயல்படத் தூண்டுகிறது! ஒரு மனிதன் நற்செயல் செய்ய வேண்டுமென நாடிவிட்டால் அதன்பால் ஓர் எட்டு எடுத்து வைத்து விட்டான் செயல்பட நெருங்கி விட்டான் என்பதே அதன் பொருளாகும். இவ்வடிப்படையிலேயே எண்ணமே ஒரு நன்மையாகப் பதிவு செய்யப்படுகிறது!

பிறகு அந்த மனிதன் அந்த எண்ணத்தின்படி செயல்பட்டாலோ அதற்குப் பத்திலிருந்து எழுநூறு மடங்கு நன்மைகள் வரை ஏன், அதனினும் ஏராளமான நன்மைகள் அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன!

இங்கு இன்னோர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நன்மை வழங்குவதில் பத்து-எழுநாறு -ஏராளம் என்கிற இந்த ஏற்றதாழ்வு ஓர்அடிப்படையின் கீழ் அமைந்ததாகும். அதுவே அல் இஃக்லாஸ் – அல்லாஹ்வுக்காகவே நிறைவேற்றுதல் என்கிற வாய்மையும், அல்முதாபஆ – அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுதலும் ஆகும்.

ஒரு மனிதன் தான் நிறைவேற்றும் வழிபாட்டில்- நற்செயலில் வாய்மையாளனாக – அல்லாஹ்வுக்காக மட்டுமே அதைச் சமர்ப்பிப்பதில் தூய்மையாளனாக இருந்தால், இதேபோன்று தனது வழிபாட்டு முறையை நபிவழியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அமைத்துக் கொண்டால் அதாவது பித்அத் எனும் நூதன அனுஷ்டானங்களையும் சுய கருத்துகளையும் அதில் தவிர்த்துக் கொண்டால் அவனது வழிபாடு முழுமையான நிலையை அடைகிறது. ஏராளமான நன்மைகளைப் பெறுகிறது. அவனுடைய நற்செயல்களுக்கு அதிக அளவிலான நற்கூலிகள் வழங்கப்படுகின்றன!

‘ஒருவன் தீமையை நாடினான். ஆனால் அதைச் செய்திடவில்லை என்றால் அல்லாஹ் அதனைத் தன்னிடத்தில் முழுமயான நன்மையாகப் பதிவு செய்து கொள்கிறான் ”

– அதாவது, தீமையைப் பொறுத்தவரையில், ஒருவன் அதைச் செய்ய நாடி பிறகு திருந்தி விட்டான் என்றால் இறைவனின் பார்வையில் அது முழு நன்மையாக ஆகிறது! இதுவும் இறைவனின் நீதி மற்றும் அருள், ஞானத்தின் பாற்பட்டதாகும்.

எடுத்துக்காட்டாக, ஒருவன் திருட வேண்டுமென எண்ணினான். ஆனால் இறைநினைவு அவனது உள்ளத்தில் வந்து இறைவனுக்குப் பயந்து அத்தீமையைத் தவிர்த்து விடுகிறான். மற்றோர் அறிவிப்பில்- அதனை அவன் என் பொருட்டால் விட்டு விட்டான் என்று வந்துள்ள வாசகம் இதனை இன்னும் தெளிவுபடுத்துவதைக் காணலாம்!

அதே நேரத்தில் எண்ணியது போல் அத்தீமையை அவன் செய்து விடுகிறான் என்றால் ஒரே ஒரு தீமை மட்டுமே அவன் பெயரில் பதிவு செய்யப்படுகிறது! இதுவும் இறைவனின் நீதி, அவனது மேன்மையின் பாற்பட்டதே! இறைவன் கூறுகிறான்:

எவர் இறைவனின் (திருமுன்னால்) ஒரு நன்மையைக் கொண்டு வருவாரோ அவருக்கு அதைப்போல் பத்து மடங்கு நற்கூலி உண்டு. எவர் தீமையைக் கொண்டு வருவாரோ அவருக்கு அவர் செய்த தீமை அளவுக்குத்தான் தண்டனை கொடுக்கப்படும். அவர்கள் யாருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது’ ( 6:160)

இந்நபிமொழியில் -நிய்யத் எனும் எண்ணமே ஒருவனை நன்மையின்பால் கொண்டு சேர்க்கிறது எனும் வகையில் அதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்தான் இன்னோர் உண்மை முன்பு விளக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒருவன் தீமை செய்ய எண்ணி அதனை நிறைவேற்றும் செயற்களத்திலும் இறங்கி, அதன் பிறகு அதனைச் செய்ய இயலாமலாகி விட்டான் என்றால் தீமை செய்தவனாகவே அவன் கருதப்படுவான். அந்தத் தீமை செய்தவனுக்கு என்ன தண்டனையோ அதில் ஒருபங்கு அவனுக்கு அளிக்கப்படும். -இந்த விபரம், இரண்டு முஸ்லிம்கள் தங்களின் வாட்களைக் கொண்டு மோதிக்கொண்டால் கொல்பவனும் கொல்லப்படுபவனும் நரகம் செல்வர்… என்கிற நபிமொழியின் கீழ் முன்னர் விவரிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் அறிமுகம் – அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்

இவர்களின் பெயர் அப்துல்லாஹ். அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வர் எனும் வகையில் இப்னு அப்பாஸ் என்று பிரபலமாகியிருப்பது இவர்களின் குறிப்புப் பெயராகும். இவர்கள் ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மரணம் அடைந்த பொழுது இவர்களின் வயது பதிமூன்று!

‘யா அல்லாஹ்! தீனில் (இறைமார்க்கத்தில்) இவருக்கு அதிக ஞானத்தை வழங்குவாயாக. சட்ட நுட்பத்தையும் விஷய ஞானத்தையும் இவருக்குக் கற்றுக் கொடுப்பாயாக!’ என்று இவருக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. அதற்கேற்ப இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தச் சமுதாயத்தின் மாமேதையாகவும் ஞானக்கடலாகவும் திகழ்ந்தார்கள்! இவர்களிடம் இருந்து 1660 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

ஹிஜ்ரி 68 ஆம் ஆண்டு தாயிஃப் நகரில் மரணம் அடைந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கேள்விகள்

1) லவ்ஹுல் மஹ்பூழ் என்றால் என்ன?

2) இந்நபிமொழியில் இறைவன் பதிவு செய்து விட்டான் எனும் வாசகத்தை விவரிக்கவும். மூல ஏட்டில் பதிவு செய்வதிலுள்ள வகைகளை விளக்கவும்.

3) நற்செயலைச் செய்யவில்லையாயினும் அதை எண்ணியதற்காக மட்டும் முழு நன்மை பதிவுசெய்யப்படும் என்றால், அது எப்படி?

4) ஒரு நற்செயல் எழுநூற்றுக்கும் அதிகமான, ஏராளமான நன்மைகளைப் பெற்று விடுவதன் இரகசியம் என்ன?

5) தீமை செய்ய நாடிய மனிதன் பிறகு அதைச் செய்யவில்லையெனில் அது ஒரு நன்மையாகப் பதிவு செய்யப்படுவதன் விளக்கம் என்ன?

6) அறிவிப்பாளர் பற்றி சிறு குறிப்பு செய்யவும்.

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.