பொறுமை
அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (3:200)
மேலும் கூறுகிறான்: ‘சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள், விளைபொருள்களில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்தச் சூழ்நிலைகளில்) பொறுமையை மேற்கொள்வோருக்கு (நபியே!) நீர் நற்செய்தி சொல்வீராக! ‘ (2:155)
மேலும் கூறுகிறான்: ‘பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி நிறைவாய் வழங்கப்படும்’ (39:10)
வேறோர் இடத்தில், ‘யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்’ (42:43)
பிறிதோரிடத்தில்,
‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (2:153)
மற்றோரிடத்தில், ‘மேலும் நாம் உங்களை நிச்சயம் சோதனைக்கு உள்ளாக்குவோம். உங்களில் யார் யார் முஜாஹிதுகள் (போராளிகள்) பொறுமையாளர்கள் என்பதை நாம் கண்டறிவதற்காக!’ (47:31)
பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிடக்கூடிய குர்ஆன் வசனங்கள் ஏராளமாய் பிரபலமாய் உள்ளன.
தெளிவுரை
பொறுமையின் தத்துவம்
பொறுமை என்பதற்கு அரபியில் ஸப்ர் என்பர். தடுத்து வைத்தல் என்பது அதன் அகராதிப் பொருள். ஆனால் ஸப்ர் என்றால் இஸ்லாமிய வழக்கில் மனத்தை மூன்று விஷயங்களில் கட்டுப்படுத்துவதாகும்.
- அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதில்
- விலக்கப்பட்ட செயல்களை விட்டு விலகுவதில்
- அல்லாஹ் நிர்ணயித்த விதியை ஏற்பதில்
இறைவழிபாட்டில் பொறுமை தேவை. ஏனெனில் இறைவனை வணங்கி வழிபடுவதை சிரமமான ஒன்றாகவே மனிதன் உணர்கிறான். மனத்திற்கு அது ஒரு பாரமாகவே உள்ளது.
நோயினாலோ முதுமையினாலோ மனிதனுக்கு இயலாமை வந்து விட்டால் வணக்க வழிபாடென்பது உடலைப் பொறுத்தும் பாரமாகி விடுகிறது.
இதே போலவே ஹஜ், ஜிஹாத் போன்ற பணம் செலவு செய்து நிறைவேற்றும் வழிபாடு என்று வரும் பொழுது அவற்றை நிறைவேற்றுவதும் மனிதனுக்குச் சிரமமாகவே படுகிறது! இந்தச் சூழ்நிலைகளில் இறைவழிபாட்டை நிறைவேற்றுவதற்குப் பொறுமை தேவை. Continue reading