33,34. பிளேக் நோயும் தியாகியின் கூலியும்
ஹதீஸ் 33. ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்களிடம் தாவூன் எனும் உயிர்க்கொல்லி நோய் பற்றி கேட்டேன். அதற்கு என்னிடம் நபியவர்கள் சொன்னார்கள்: தாவூன் (எனும் நோய்) ஒரு தண்டனையாகும். அல்லாஹ், அதனை எந்த மக்கள் மீது அனுப்ப விரும்புகிறானோ அந்த மக்கள் மீது அனுப்புகிறான். ஆனால் முஃமின் (இறைவிசுவாசி)களுக்கு, அதனை ஓர் அருட்கொடையாக ஆக்கியுள்ளான். (இறைவிசுவாசியான) ஓர் அடியார், தாவூன் நோயில் மாட்டிக் கொள்கிறபொழுது -விதியில் அல்லாஹ் எழுதியதைத்தவிர வேறெதுவும் அவரைத் தீண்டாது என்று அறிந்தவராக, பொறுமையுடனும் அதற்கான கூலியை எதிர்பார்த்தவராகவும் தனது ஊரிலேயே தங்கியிருந்தார் எனில், இறைவழிப் போரில் உயிர் நீத்த தியாகி பெறுவதுபோன்ற கூலி நிச்சயம் அவருக்குண்டு. (புகாரி)
ஹதீஸ் 34. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டுள்ளேன்: அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய ஓர் அடியானை நான் சோதனைக்குள்ளாக்கினால் (அதாவது) அவனுக்கு விருப்பமான இரண்டைப் பறித்(து அவனைச் சோதித்)தால் அப்பொழுது அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டான் என்றால், அவ்விரண்டுக்குப் பகரமாக சுவனத்தை அவனுக்கு நான் வழங்குவேன் – அவனுக்கு விருப்பமான இரண்டை அதாவது அவனுடைய இரு கண்களை. (நூல்: புகாரி)
தெளிவுரை
இவ்விரு நபிமொழிகளும் குறிப்பிட்ட இரு துன்பங்களின் மீது பொறுமை கொள்வதன் சிறப்பை எடுத்துரைக்கின்றன. ஒன்று: உயிரையே காவு கொள்ளும் பிளேக் போன்ற கொடிய நோய்! இரண்டு: இரு கண்களையும் இழந்து பரிதவிப்பது.
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிப்பு பிளேக் போன்ற உயிர்க்கொல்லி நோய் தொடர்பானது.
தாவூன் எனும் அரபிச்சொல்லின் பொருள், பிளேக் எனும் குறிப்பிட்டதொரு நோயாகும். அல்லது தொற்று நோய்போல் எல்லோரையும் தாக்கி மரணத்தின் பிடியில் சிக்கவைக்கும் உயிர்க்கொல்லி நோய் அனைத்தையும் அது குறிக்கும். இந்த இரண்டாவது கருத்தின்படி காலரா, பிளேக் போன்ற நோய்கள் அனைத்தையும் இந்த வார்த்தை உள்ளடக்கும். ஆக, தாவூன் என்பது அல்லாஹ் அனுப்பும் கடுமையானதொரு தண்டனையே! Continue reading