47, 48, 49. கோபமும் துயரமும்
ஹதீஸ் 47. முஆத் பின் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஒருமனிதன் சினத்தைச் செல்லுபடியாக்க ஆற்றல் பெற்றிருக்கும் நிலையிலும் அதனை மென்று விழுங்கினால் அவனை மறுமை நாளில் எல்லாப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைப்பான். ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்களில் அவன் விரும்புகிறவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவனுக்கு அனுமதி அளிப்பான். (நூல்: அபூ தாவூத், திர்மிதி)
ஹதீஸ் 48. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றார்கள். மீண்டும் அறிவுரை கூறுமாறு பல தடவை அவர் கேட்டதற்கும் நபிகளார்(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றே பதில் அளித்தார்கள்! (நூல்: புகாரி)
ஹதீஸ் 49. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: விசுவாசம் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் – அவர்களுடைய உயிர், பிள்ளைகள் மற்றும் செல்வம் ஆகியவற்றில் கஷ்டம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது! (அவர்களுடைய தவறுகளுக்கு அது பரிகாரமாகி விடுவதால்) இறுதியில் அவர்கள் மீது எவ்வித் தவறும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை அவர்கள் சந்திக்கிறார்கள்! (நூல்: திர்மிதி)
தெளிவுரை
இம்மூன்று நபிமொழிகளும் பொறுமையின் சிறப்பை எடுத்துரைக்கின்றன. முதல் ஹதீஸின் கருத்து: நியாயமாக நடவடிக்கை எடுத்து தனது சினத்தைத் தீர்க்க ஆற்றல் பெற்றிருந்தும் ஒருமனிதன் சினத்தை அடக்குகிறான். பொறுமையை மேற்கொள்கிறான் எனில் அதற்கு அல்லாஹ்விடத்தில் மகத்தான பரிசு உள்ளது!
அரபியில் அல் ஃகைள் – الغيظ என்றால் கடும்கோபம் அதாவது சினம் என்று பொருள். தனது சினத்திற்குப் பழிதீர்க்க வலிமை இல்லாதவன் சினத்தை மென்று விழுங்கினான் என்று சொல்லப்படுவதில்லை! கோபம் எனும் சொல்கூட ஆற்றலை வெளிப்படுத்தும் வார்த்தையே! ஆனால் துயருறுதல் எனும் வார்த்தையில் பலவீனத்தின் பொருள் உள்ளது. அதனால்தான் கோப நிலை – அது தன்னைப் பொறுத்து பூரணமான ஒன்றெனக் கூறப்படுகிறது! இந்த ரீதியில்தான் அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று சொல்வது சரிகாணப்படுகிறது. ஆனால் அல்லாஹ் துயரப்படுகிறான் என்று சொல்லப்படுவதில்லை! ஏனெனில் நினைத்ததை நிறைவேற்ற முடியாத பொழுதுதான் துயரப்படும் நிலை வருகிறது! அல்லாஹ்வோ எல்லா ஆற்றல்களும் கொண்டவன்! Continue reading