ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-39-40)

39, 40. தற்கொலை செய்தால் மட்டும் தொல்லை தீர்ந்துவிடுமா, என்ன?

ஹதீஸ் 39. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரைத் துன்பத்திற்குள்ளாக்குவான்’ நூல்: புகாரி

(இமாம் நவவி அவர்கள் சொல்கிறார்கள்) :يصب என்பதிலுள்ளالصاد க்கு فتح கொடுத்தும்كسر கொடுத்தும் இருவிதமாகவும் உச்சரித்திருக்கிறார்கள்.

ஹதீஸ் 40. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘உங்களில் யாரும் தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு விரும்பிடத்தான் வேண்டுமெனில் அவர் இவ்வாறு பிரார்த்தனை செய்யட்டும்: யா அல்லாஹ்! உயிர் வாழ்வது எனக்கு நலமுடையதாக இருக்கும் காலமெல்லாம் என்னை உயிர் வாழச் செய். மரணம் எனக்குப் பயனளிப்பதாக இருந்தால் என்னை மரணம் அடையச் செய்!’ நூல் : புகாரி

தெளிவுரை

வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்பட்டால் அவற்றைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வது கடமை என்பதை இந்நபிமொழிகள் விளக்குகின்றன.

முதல் ஹதீஸில்يصب எனும் அரபிச் சொல் ஆளப்பட்டுள்ளது. இதனைச் செய்வினையாகவும் செயப்பாட்டு வினையாகவும் பயன்படுத்தலாம். இமாம் நவவி (ரஹ்) அவர்களும் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். செய்வினை எனில் அதற்கு இவ்வாறு பொருள் அமையும்: அல்லாஹ் அவரைத் துன்பத்திற்குள்ளாக்குவான். -அதாவது, அந்த மனிதனின் விதியில் துன்பத்தை ஏற்படுத்தி, அவன் பொறுமை கொள்கிறானா? அல்லது பொறுமை இழந்து பதறிப் பரிதவிக்கிறானா? என்று அல்லாஹ் அவனைச் சோதிப்பான்.

செயப்பாட்டுவினை எனில், இவ்வாறு பொருள் அமையும்: அதனால் அவன் துன்பத்திற்குள்ளாக்கப்படுவான். – இதில் இரண்டு நிலைகளும் வரும். அல்லாஹ் அவனுக்குத் துன்பங்களைக் கொடுப்பான். மற்றவர்களாலும் அவனுக்குத் துன்பங்கள் நேரும். இவ்வாறு இது பொதுவான அர்த்தத்தைத் தருகிறது.

ஆயினும் வேறு சில அறிவிப்புகளின் மூலம் இதன் கருத்து இவ்வாறு நிர்ணயமாகி விடுகிறது: அல்லாஹ் எந்த மனிதனுக்கு நலன் நாடுகிறானோ அந்த மனிதனின் பொறுமையை சோதிப்பான். அதற்காக அவனுக்குத் துன்பங்கனைக் கொடுப்பான். அப்பொழுது அவன் பொறுமை காத்திட வேண்டும். அதற்கான கூலியை அல்லாஹ்விடம் எதிர்பார்க்க வேண்டும்.

பொறுமையை மேற்கொள்ளவில்லையெனில் எந்த நன்மையும் இல்லை. மனித வாழ்வில் எத்தனையோ துன்பங்கள் வருகின்றன. அவற்றைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால்தான் அல்லாஹ் அந்த மனிதனுக்கு நலன் நாடியுள்ளான் என்று பொருள்!

இறைவன் மீது விசுவாசம் கொள்ளாத – அவனை நிராகரிக்கும் மனிதர்களுக்குப் பல்வேறு துன்பங்கள் கொடுக்கப்படுகின்றன. அதன் பிறகும் நிராகரிப்புக் கொள்கையில்தான் அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிலிருந்து விலகுவதில்லை. அதிலேயே மரணம் அடைகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் நாடவில்லை என்பதில் ஐயமில்லை!

ஆனால் ஒரு முஸ்லிம் உடைய வாழ்க்கையில் துன்பந்துயரங்கள் வரும்பொழுது இறைவிசுவாசத்தின் அடிப்படையில் அவற்றை அவன் பொறுத்துக் கொள்கிறான். பொறுமை காக்கிறான். அதனால் துன்பங்கள் யாவும் அந்த இறைவிசுவாசிக்கு நன்மையாகின்றன! அதாவது அவனுடைய பாவங்களுக்கும் தவறுகளுக்கும் அவை பரிகாரமாகின்றன. (இதன் விவரம் முன்பு சென்றுள்ளது.)

மட்டுமல்ல இத்துன்பங்கள் உலக ரீதியானவைதான். அவை நீடிக்கக் கூடியவை அல்ல. நாட்கள் செல்லச் செல்ல துன்பத்தின் கடுமை குறைந்து இறுதியில் அது இல்லாமலாகி அதன் பிறகு இன்பம் வருவதைக் காணலாம்! ஆனால் மறுவுலகத்தின் துன்பம் – தண்டனை என்பது நீடித்தது. நிரந்தரமானது! (அல்லாஹ் அனைவரையும் அதிலிருந்து பாதுகாப்பானாக) இந்நிலையில் உலக ரீதியான துன்பங்களை உங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி மறுவுலகத்தின் அத்தகைய நீடித்த தண்டனையை அல்லாஹ் அகற்றுகிறான் என்றால் அது உங்களுக்குக் கிடைத்த பெரும் நன்மையே அன்றி வேறென்ன?

இரண்டாவது நபிமொழியின் கருத்து இதுதான்: தனக்கு ஏற்பட்ட துன்பத்தினால் மரணத்தை எவரும் விரும்பக்கூடாது. அப்படி விரும்புவதை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். துன்பத்திற்குள்ளாகும் மனிதன் அதைச் சகித்துக்கொள்ள இயலாமல் அதனைப்பெரும் கஷ்டமாகக் கருதி – மரணம் வர வேண்டுமே, மரணம் வர வேண்டுமே என்றோ இறைவா! என்னை மரணம் அடையச் செய்துவிடு என்றோ பிரார்த்தனை செய்யக் கூடாது! மனிதரில் சிலர் வாய்திறந்து இவ்வாறு சொல்லி அழுவார்கள். அல்லது அவர்களது மனம் அவ்வாறு விரும்பும்! இரண்டுமே கூடாது! ஏனெனில் அவனுக்கு வந்த அந்தத் துன்பம் சிலபொழுது நன்மையாக அமையலாம்!

ஆனால் துன்பத்தின்பொழுது யா அல்லாஹ்! எனக்குப் பொறுமை கொடுத்து உதவிசெய் என்று பிராத்தனை செய்யலாம். அப்பொழுது பொறுமையை மேற்கொள்ள அல்லாஹ் உதவி செய்வான். அது நன்மையாக அமையும்.

மாறாக மரணமே! வா, வா என்று அழைத்தால் அந்த மரணம் தீமை விளைவிக்கக் கூடியதாக ஆகிவிடலாம்! ஏனெனில் மரணத்ததைத் தேடிச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் -மரணம் அடையும் ஒவ்வொரு ஆத்மாவும் நிம்மதி அடைந்து விடுவதில்லை! மரணத்திற்குப் பிறகு மனிதன் மண்ணறையைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது. அங்கு- உலகில் அவன் செய்த தீமைகளுக்குக்குரிய தண்டனையைச் சுவைக்க நேரிடலாம்!

ஒரு மனிதன் மரணத்தை விரும்புவதில் – யா அல்லாஹ்! எனது வாழ்க்கையை சீக்கிரம் முடித்துவிடு என்று அவசரப்படும் நிலை உள்ளது. அப்படி மரணத்திற்கு அவசரப்படுவதால் நிறைய நன்மைகள் அவனுக்குக் கிடைக்காமல் போய்விடுகின்றன! உலகில் இன்னும் சில காலம் அவன் உயிர் வாழ்ந்தால் சிலபொழுது பாவங்கள் குறித்து மனம் வருந்தி- பட்சாதாபப்பட்டு மன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளலாம்! அல்லாஹ் அவனுக்கு மன்னிப்பு வழங்கலாம்! உலகில் இன்னும் அதிக நல்லமல்கள் செய்யும் பாக்கியம் கிடைக்கும்.

ஆக, உங்களுக்கு ஒரு துன்பம் வந்துவிட்டால் உடனே மரணமே! வா! என்று அழைக்காதீர்கள்! அது கூடாது!

இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மரணத்தை அழைப்பதையோ அதற்கு ஆசைப்படுவதையோ நபியவர்கள் தடை செய்திருக்கும்பொழுது தற்கொலை செய்து கொள்கிறானே, துர்ப்பாக்கியவான் அதனை என்னவென்று சொல்வது!!

மதியீனர்கள்; சிலர் தற்கொலை செய்துகொண்டு விலைமதிப்பற்ற தமது உயிரை மாய்த்துக் கொள்வதைக் காண்கிறோம். இன்று மேலைக் கலாச்சாரத்தின் பிடியில் சிக்கியுள்ள பல நாடுகளில் – பல பகுதிகளில் தற்கொலைகள் பரவலாக நிகழ்கின்றன! ஏதேனும் நோயோ குடும்பத்தில் தீர்க்கமுடியாத சிக்கலோ வந்துவிட்டால் – எடுத்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டால் – விரும்பியவளைத் திருமணம் செய்யப் பெற்றோர் தடைசெய்தால்- அதனால் அவமானத்திற்குள்ளானல் உடனே குறுக்குவழியில் நிம்மதி அடைந்து விடலாமென மரணத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள்! தூக்கில் தொங்குவோர் பலர். கத்தி போன்றவற்றால் தம்மைத்தாமே குத்திக்கொண்டு மரணப் படுகுழியில் வீழ்வோர் சிலர்! இன்னும் எத்தனையோ பேர் உயரமான இடங்களில் இருந்து கீழே விழுந்தும், விஷம் அருந்தியும் மடிகிறார்கள்!

துன்பம் தாளாமல் மரணத்தை விரும்பி வரவழைத்துக் கொள்ளும் இவர்களுக்கு நிம்மதி கிடைக்கிறதா என்றால் அதுதான் இல்லை. இந்தத் துன்பத்தை விடவும் வேறொரு கொடுமையான வேதனையை நோக்கித்தான் அவர்களின் பயணம் அமைகிது!

ஆம்! தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு நரகத்தில் கடும் வேதனை காத்திருக்கிறது. இது குறித்த எச்சரிக்கை வேறுசில நபிமொழி அறிவிப்புகளில் காணலாம். அதாவது, எதனைப் பயன்படுத்தித் தற்கொலை செய்து கொண்டார்களோ அதனைக் கொண்டே நரக நெருப்பில் அவர்களுக்கு வேதனை கொடுக்கப்படும். அது நிரந்தரமாகவும் இருக்கும்.

கத்தி அல்லது வாளைக் கொண்டு அவன் தற்கொலை செய்திருந்தால் அதே ஆயுதத்தைக் கொண்டு நரகத்தில் அவன் குத்தப்படுவான்! நஞ்சை அருந்தி தற்கொலை செய்திருந்தால் அதனை அருந்திய வண்ணம் நரகத்தில் தொடர் வேதனையை அவன் அனுபவித்துக் கொண்டிருப்பான்! மலையிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்திருந்தால் நரகத்தில் ஒரு மலை அவனுக்கென நாட்டப்படும். அதிலிருந்து அவன் கீழே விழுந்து துன்பப்பட்டுக் கொண்டே இருப்பான்!

ஒரு துன்பம் அல்லது ஒரு கஷ்டம் வந்ததெனில் அதிலிருந்து விடுபடும் நோக்கில் மரணத்தை அழைக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் எனும்பொழுது ஒருமனிதன் மரணத்தை விரைவாக அழைத்துக் கொள்வதற்கென்று தற்கொலை செய்து கொள்வதும் அதனால் சகித்துக் கொள்ளமுடியாத நரக வேதனைக்கு ஆளாவதென்பது கொடுமையினும் பெரிய கொடுமையன்றோ!

இங்கு இன்னொன்றும் நமது கவனத்திற்குரியது. நபி(ஸல்)அவர்கள் ஒருவிஷயத்தைத் தடை செய்தார்களெனில் அதற்கு மாற்று ஏற்பாடு ஏதேனும் இருந்தால் அதனை விளக்கிக் கொடுப்பது அவர்களது வழக்கம்! அதில் குர்ஆனின் வழிகாட்டலைப் பின்பற்றுதலும் உள்ளது. ஆம்! அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

‘இறைவிசுவாசம் கொண்டவர்களே! (எங்கள் பக்கம் கவனம் செலுத்துங்கள் என்று உணர்த்துவதற்காக) ராஇனா என்று சொல்லாதீர்கள். உன்ளுர்னா என்று சொல்லுங்கள்’ (2:104)

ஏனெனில் ராஇனா என்பது எங்கள் இடையரே என்பது போன்ற சில தவறான அர்த்தங்களையும் கொடுக்கக்கூடிய வார்த்தையாகும். இத்தகைய தவறான அர்த்தத்தில் யூதர்கள் நபியவர்களை அழைத்துப் பரிகாசம் செய்பவர்களாய் இருந்தனர்! இதனை முன்னிட்டே இந்த வசனம் இறக்கியருளப் பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மரணத்தை விரும்பக் கூடாது என்று தடுத்த நபி(ஸல்) அவர்கள் அதற்கான மாற்று ஏற்பாட்டை விளக்கித்தருகிறார்கள். அதுதான் இந்நபி மொழியில் கூறப்பட்டுள்ள பிரார்த்தனை!

ஒரு பாதையை -மாற்று ஏற்பாட்டை நபி(ஸல்)அவர்கள் உங்களுக்குத் திறந்து வைக்கிறார்கள். அது ஆபத்தில்லாத பாதை! துன்பம் தாளாமல் மரணத்தை விரும்புவதென்பது பொறுமையின்மையினால் தானே! அல்லாஹ் நிர்ணயித்த விதியை அவன் பொருந்திக் கொள்ளாமல் பதறிப் பரிதவிப்பதைத் தான் அது காட்டுகிறது! ஆனால் நபி(ஸல்) அவர்கள் காண்பித்துத் தந்த பிரார்த்தனையில் அது இல்லை. அதில் – மனிதன் தன்னுடைய அனைத்து விவகாரங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து நன்மை எதுவோ அதைச் செய்யும்படி கேட்கிறான்! எனெனில் எதிர்காலம் பற்றி மனிதனுக்கு எதுவும் தெரியாது. எல்லாம் அறிந்தவன் இறைவன் ஒருவனே! குர்ஆன் பல இடங்களில் இதனைக் குறிப்பிடுகிறது:

‘(நபியே! இவர்களிடம்) கூறும்: அல்லாஹ்வைத் தவிர வானங்கள் மற்றும் பூமியில் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார்
(27:65)

‘மேலும் எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை. தான் எந்தப் பூமியில் மரணம் அடைவோம் என்பதும் எந்த மனிதனுக்கும் தெரியாது’ (31:34) எனவே வாழ்வானாலும் மரணமானாலும் – எல்லாவற்றையும் பேரறிவாளனாகிய அந்த இறைவனிடம் ஒப்படைத்து விடுவதே மிகவும் சாலச் சிறந்தது!

இந்த அடிப்படையில் உங்கள் நண்பர் ஒருவரின் நீண்ட ஆயுளுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்ய விரும்பினால் – அல்லாஹ், உமது ஆயுளை அவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும் நிலையுடன் நீட்டிப்பானாக! எனும் வார்த்தையைச் சேர்த்துக் கொள்வது அவசியம். அப்பொழுதுதான் அவர் நீண்ட நாட்கள் வாழ்வதில் நன்மைகள் இருக்க முடியும்.

ஒருவர் கேள்வி கேட்கலாம்: ஈசா நபியின் தாயார் மர்யம் (அலை) அவர்கள் மரணத்தை விரும்பி பிரார்த்தனை செய்ததாக குர்ஆனில் வந்துள்ளதே. அது ஏன்? குர்ஆனின் அந்த வசனம் இதுதான்:

‘அப்பொழுது அவர் (மர்யம்), அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருக்கக்கூடாதா! என்று கூறலானார்’ (19 :23)

இதற்கான பதில்: முதலில் ஓர் அடிப்படையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முந்தைய சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட ஷரீஅத்தை எப்பொழுது ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாமெனில் நம்முடைய ஷரீஅத் அதனை அங்கீகரித்தால்தான்! ஏனெனில் முந்தைய நபிமார்களுடைய ஷரீஅத் சட்டங்களை நம்முடைய ஷரீஅத் மாற்றிவிட்டது!

இரண்டாவதாக, மர்யம் (அலை)அவர்கள் மரணத்தை விரும்பவில்லை. அவர்களுக்கு வந்துற்ற சோதனைக்கு முன்னரே மரணம் அடைந்திருக்கக் கூடாதா என்றுதான் அப்படி ஆதங்கத்துடன் கூறினார்கள். இனி அவர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் சரியே! எனவே மரணத்தை அவர்கள் அவசரப்பட்டு அழைக்கவில்லை!

ஆக, எந்த ஒரு முஸ்லிமும் தீன் – இறைமார்க்கம் தொடர்பாக எவ்விதக் குழப்பத்திற்கும் உள்ளாகாமல் – இறைவனின் உவப்பைப் பெறும் வகையில் மரணம் அடைந்திட வேண்டும் என்பதே கருத்து! இதோ நபி யூசுப் (அலை)அவர்களது பிராத்தனையைக் கவனியுங்கள்:

‘(இறைவா!) நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். என்னை இஸ்லாத்தின் மீது மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்க சீலர்களுடன் சேர்த்து வைப்பாயாக’ (12 : 101)

இது, துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக மரணத்தைக் கேட்டுச் செய்த பிரார்த்தனை அல்ல. மாறாக இஸ்லாத்தின்மீது மரணிக்கச் செய்யும்படியாகக் கேட்கிறார்கள்! இறுதி முடிவு நல்ல விதமாக அமையும்படியாகக் கேட்கிறார்கள்!

நீங்களும் இவ்வாறு பிரார்த்தனை செய்யலாம். யா அல்லாஹ்! என்னை இஸ்லாத்தின் மீதும் ஈமான் மீதும் ஏகத்துவத்தின் மீதும் இக்லாஸ் – வாய்மையின் மீதும் மரணிக்கச் செய்வாயாக! என்றோ, யா அல்லாஹ்! நீ என்னைப் பொருந்திய நிலையில் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்றோ பிரார்த்தனை செய்யுங்கள்! அது ஆகுமானதே!

ஆக! ஒருமனிதன், கஷ்டத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாகி அதனால் பொறுமை இழந்து மரணத்தை விரும்புவது வேறு. அல்லாஹ் நம்மைப் பொருந்தி ஏற்றுக்கொள்கிற ஒருகுறிப்பிட்ட தன்மையுடன் மரணத்தை விரும்புவது வேறு! இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளதைப் புரிந்துகொள்ள வேண்டும். முந்தியதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இரண்டாவது ஆகுமானதே!

கேள்விகள்

1) இந்நபிமொழியில் செய்வினையாகவும் செயப்பாட்டு வினையாகவும் பயன்படுத்தலாம் என்றுள்ள வார்த்தை எது? இருவகை உபயோகத்தின் படி அதன் கருத்தை விளக்கவும்.

2) துன்பங்களின் மூலம் இறைவிசுவாசி எவ்வாறு நன்மை அடைகிறான் என்பதை விளக்கவும்.

3) தற்கொலை செய்பவர்களுக்கு மறுமையில் கொடுக்கப்படும் தண்டனையை விவரிக்கவும்.

4) மரணத்தை விரும்பக்கூடாது எனத் தடுத்த நபியவர்கள் ஒரு பிரார்த்தனையைக் கற்றுத் தந்தார்கள்., அதனை எழுதி அதிலுள்ள தத்துவத்தையும் விளக்கவும்.

5) மர்யம் (அலை) அவர்கள் ஏன் மரணத்தை விரும்பி துஆ செய்தார்கள்? எனும் கேள்விக்கு என்ன பதில்?

6) யூசுப் நபி செய்த பிரார்த்தனை என்ன? அதைத் தொடர்ந்து ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்ட பிரார்த்தனை என்ன?

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.