ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-36)

36.  இதனினும் மேலான பொறுமை உண்டா?

ஹதீஸ் 36. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத் தூதர்(ஸல்) அவர்கள், நபிமார்களில் ஒரு நபியின் நிலையை (அவர்களின் மீது அல்லாஹ்வின் நல்வாழ்த்துக்களும் சாந்தியும் பொழியட்டுமாக) எடுத்துரைத்தது, இப்பொழுதும் என் கண்முன் உள்ளது போன்று இருக்கிறது: அந்நபியை அவருடைய சமூகத்தார் அடித்தார்கள். இரத்தம் வடியும் அளவு அவரைக் காயப்படுத்தினார்கள். அவர் தமது முகத்தில் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே பிராத்தனை செய்தார்: யா அல்லாஹ்! என் சமூகத்தாருக்கு நீ மன்னிப்பு வழங்குவாயாக! நிச்சயமாக இவர்கள் அறியாதவர்களாய் இருக்கிறார்கள்’ நூல்: புகாரி, முஸ்லிம்

தெளிவுரை

முற்காலத்து நபிமார்களில் ஒருவரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை இங்கு இறுதி நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

நபிமார்கள் என்றால் யார்? அல்லாஹ்வின் திருத்தூதர்கள். இறைவனின் தூதுச் செய்தியை இவ்வுலக மக்களிடம் சேர்ப்பிக்கும் பணி அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்தது! அந்தப் பணிக்கு அவர்கள்தாம் மிகவும் பொருத்தமானவர்கள் என்பதால் அல்லாஹ் அவர்களைத் தூதர்களாகத் தேர்வு செய்தான்! அல்லாஹ் குர்ஆனில் சுட்டிக்காட்டுகிறான்:

‘தனது தூதுத்துவப் பொறுப்பை யார் மீது சுமத்த வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்’ (6: 124)

ஆம்! அந்தப் பொறுப்பை ஏற்று இறைமார்க்கத்தைத் தொய்வின்றிப் பிரச்சாரம் செய்திட, அதன் பக்கம் உலக மாந்தர்களை அழைத்துக் கொண்டு வந்திட, நன்மை புரியும்படி ஏவித் தீமைகளைத் தடுத்திட, அவ்வழியில் எதிர்படும் இன்னல்களைப் பொறுமையுடன் சகித்திட அந்நபிமார்களே தகுதியும் ஆற்றலும் மிக்கோராய்த் திகழ்ந்தார்கள்! கற்களாலும் சொற்களாலும் தாக்கப்பட்டபோதும் கொண்ட கொள்கையிலிருந்து எள்ளளவும் அவர்கள் பின்வாங்கிடவில்லை. கடமையை கண்ணும் கருத்துமாய் நிறை வேற்றினார்கள்! அவ்வழியில் எதிர்பட்ட துன்பங்களையெல்லாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்! ஆனாலும் எதிரிகளின் எதிர்ப்பு எந்த அளவுக்கு கடுமையாக இருந்ததெனில், அந்நபிமார்களைக் கொலை செய்யவும் அக்கொடியவர்கள் துணிந்தார்கள்!

குர்ஆன் ஓரிடத்தில் இதனை இவ்வாறு வர்ணிக்கிறது:

‘(நபியே) உமக்கு முன்னரும் மக்கள், இறைத்தூதர்கள் பலரை பொய்யர் என்று தூற்றியுள்ளனர். ஆனால் அவ்வாறு பொய்யர்களென்று தாங்கள் தூற்றப்பட்டதையும் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களையும் – நமது உதவி அவர்களிடம் வரும்வரை பொறுமையுடன் அவர்கள் சகித்துக் கொண்டிருந்தார்கள்! அல்லாஹ்வின் வாக்குகளை மாற்றுவதற்கான வல்லமை உடையவர் யாருமில்லை! மேலும் முந்தைய நபிமார்(களுக்கு ஏற்பட்ட துன்பங்)களின் செய்திகள் உமக்குக் கிடைத்தே உள்ளன. இருப்பினும் (உம்மை) இம்மக்கள் புறக்கணிப்பதை சகித்துக் கொள்வது உமக்குக் கடினமாக இருந்தால் – பூமியில் சுரங்கப் பாதையைத் தேடியோ வானில் ஏணி வைத்து ஏறியோ ஏதேனும் சான்றினைக் கொண்டுவர உம்மால் முடிந்தால் முயற்சி செய்து பாரும்! உண்மையாதெனில் அல்லாஹ் நாடியிருந்தால் இவர்கள் எல்லோரையும் நிச்சயமாக நேர்வழியில் ஒன்று திரட்டியிருப்பான்! எனவே அறியாதோரில் நீரும் ஒருவராகி விடாதீர்’ (6:34-35)

கருத்து இதுதான்: சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் போராட்டம் நடைபெற்று, வாக்குவாதம் நிகழ்ந்து அதன் மூலம் சத்தியம் தெளிவாக வேண்டும் எனும் தூதுவப் பணியின் நோக்கத்தின் அடிப்படையிலேயே நபியே! உமக்கு இந்தச் சோதனைகள் ஏற்பட்டுள்ளன! உம்மை இம்மக்கள் பகைப்பதும் நீர் சொல்வதை எதிரிகள் நிராகரிப்பதும் பகைவர்களால் நீர் தூற்றப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் இதனால்தான்! எனவே நீர் இவற்றைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு ஆறுதல் மொழி பகர்கிறான்!

இந்த ரீதியில்தான் முந்தைய காலத்தில் அனுப்பப்பட்ட ஒரு நபியுடன் அக்காலத்து மக்கள் நடந்துகொண்ட முறையையும் அதற்குப் பதிலாக அந்தநபி மேற்கொண்ட பொறுமையையும் நமக்கு எடுத்துச் சொல்கிறார்கள், பொறுமைக் கடலான பூமான் நபி(ஸல்) அவர்கள்!

அந்தோ! அந்த மக்கள் நேருக்குநேர் தாக்குதல் தொடுத்து விட்டார்கள், அவர்களுக்கு இறைமார்க்கம் போதிக்க வந்த அந்த நபியுடன்! அதோ! அந்நபியின் முகத்தில் ரத்தம் வடிகிறது! ஆனால் பதிலுக்கு என்ன செய்கிறார், அவர்?

இன்று உலகில் நடை பெறுவதென்ன?. ஏதேனும் ஒரு சூழ்நிலையில் ஒருமனிதன் தாக்கப்பட்டால் உடனே அவன் கோபத்தால் கொதித்தெழுவதைப் பார்க்கிறோம்! தன்னைத் தாக்கியவனைப் பழிவாங்கிடத் துடிப்பதைக் காண்கிறோம்!

ஆனால் அந்த நபி அல்லாஹ்வின் தூதராக வந்தவர்! மக்களுக்கு நீதிநெறிகளைப் போதிக்கும் போதகர்! இறைமார்க்கம் காண்பிக்க வந்த மாபெரும் வழிகாட்டி! இத்தகைய இறைப்பணி செய்வதற்காக – மக்கள் சேவை ஆற்றுவதற்காக அவர்களிடம் கூலியோ பணம் காசுகளோ அவர் கேட்டாரா? இல்லை! ஆனாலும் அந்த மக்கள் அவரை எதிர்க்கிறார்கள். நேருக்குநேர் தாக்குதல் தொடுக்கிறார்கள். அவரது முகத்தில் உதிரம் வழிகிறது! அதற்கு அந்நபி என்ன செய்கிறார்?

தமது முகத்தில் வழியும் ரத்தத்தை துடைத்துக் கொண்டே ‘யா அல்லாஹ்! என் சமூகத்தாருக்கு நீ மன்னிப்பு வழங்குவாயாக!’ என்றுதான் பிரார்த்தனை செய்கிறார்! அந்த மக்களின் மன்னிப்புக்காகத்தான் அல்லாஹ்விடம் மன்றாடுகிறார்! இத்தகைய பொறுமைக்கு வேறோர் உவமை இவ்வுலகில் உண்டா?

இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துச் சொல்வது வேடிக்கைக்காக அல்ல. கதைகள் சொல்லி நேரத்தை வீணாகக் கடத்துவதற்காக அல்ல! இவற்றிலிருந்து நாம் தக்க படிப்பினை பெற வேண்டும். அதன்படியே நமது வாழ்க்கையை அமைத்துகொண்டு இறைவழியில் பாடுபட வேண்டும். அவ்வழியில் எதிர்படும் இன்னல்களையும் ஏச்சுப் பேச்சுக்களையும் நாம் பொறுமையுடன் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே எடுத்துரைக்கிறார்கள்! அல்லாஹ் குர்ஆனில் கூறுவது போன்று:

‘அவர்களுடைய இந்தச் சரிதைகளில் அறிவுடைய மக்களுக்கு அரிய படிப்பினை உள்ளது’ (12 : 11)

ஒரு யுத்தத்தில் நபி(ஸல்) அவர்களது விரல் ஒன்று காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந்தது. அப்பொழுது நபியவர்கள் என்ன கூறினார்களோ அதேபோன்று நாமும் – இறைவழியில் எதிர்படும் துன்பங்களைச் சகித்துக் கொண்டு – அவ்வாறு கூறிட வேண்டும். நபியவர்கள் கூறினார்கள்: (அந்த விரலை நோக்கி):

நீ இரத்தம் வழியும் ஓர் விரல்தான்!

நீ அல்லாஹ்வின் வழியில் சந்தித்தது இதுதான்!

இந்நபிமொழியின் மூலம் நாம் பெறவேண்டிய நற்சிந்தனை ஒன்றுள்ளது. அழைப்புப் பணியில் நாம் ஈடுபடும்பொழுது தீய மனிதர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் நாம் உள்ளாக நேரிடும். அசத்தியவாத அரசும் அதிகார வர்க்கமும்கூட நம்மைத் தொல்லைக்குள்ளாக்கலாம். தொலைத்துக் கட்டவும் துணியலாம்! எல்லாவற்றையும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். சகித்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல இதுபோன்ற துன்பங்களையும் கஷ்டங்களையும் நாம் எவ்வாறு கருதவேண்டுமெனில், இவை நம்முடைய பாவங்களை மாய்க்கக் கூடியவை. நமக்கு உயர் அந்தஸ்துகளை அல்லாஹ்விடம் பெற்றுத்தரக் கூடியவை என்றே கருத வேண்டும்.

மட்டுமல்ல இஸ்லாமிய அழைப்புப் பணியை நிறைவேற்றுவதில் நம்மிடம் பல குறைபாடுகள் உள்ளன என்பதே உண்மை! நமது வாய்மையில் குறைபாடு! நாம் மேற்கொள்ளும் நோக்கிலும் போக்கிலும் குறைபாடு! இதனாலேயே இத்தகைய தொல்லைகள் நம்மைச் சூழ்கின்றன! எனவே முதலில் அல்லாஹ்விடம் நாம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு நமது சிந்தனையையும் செயலையும் சீராக்கிக்கொள்ள வேண்டும். அழைப்புப் பணியில் நமது அணுகு முறையைத் திருத்திக் கொள்ள வேண்டும்!

மாறாக கஷ்டங்களைக் கண்டவுடன் நாம் கலக்கம் அடைந்து பொறுமை இழந்து விடக்கூடாது! நமக்கு எதற்கு இந்த வம்பு என்று சொல்லி நழுவிச் செல்லக்கூடாது. பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது! நல்லவர்கள் களத்திலிருந்து ஒதுங்கிவிட்டால் தீயவர்களின் கைதான் ஓங்கும். தீமைகள்தான் பெருகும்! நன்மைகள் அருகிவிடும்! அந்நிலை ஏற்படலாகாது! உலக வாழ்க்கை என்பது சிலநாட்கள்தாம்! அழியும் அற்ப ஆயுசு கொண்டதுதான்! எனவே களத்தை விட்டும் நல்லோர்கள் விலகிச் சென்றுவிடக்கூடாது. சீர்திருத்தப் பணியில் இருந்து நின்று விடக்கூடாது.

நபிகளார்(ஸல்) அவர்கள் முந்தைய நபிமார்களில் ஒருநபியின் நிலையை அன்றொரு நாள் எடுத்துரைத்தது இன்றும் என் கண் முன்னால் உள்ளது போன்றுள்ளது என்று இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள், சொல்லியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும், நபியவர்களைப் பற்றி தோழர்கள் அறிவிக்கும் செய்தி ஆதாரப்பூர்வமானது என்று வலுப்படுத்தும் பாணியுமாகும் இது. மேலும் அந்த அளவுக்கு அந்நிகழ்ச்சி அவர்களது மனத்தில் ஆழமான பாதிப்பை ஏறப்படுத்தியுள்ளது என்பதையும் காட்டுகிறது!

அறிவிப்பாளர் அறிமுகம் – இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள்

நபியவர்களின் தோழரும் பணியாளரருமான அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றவர்கள். பத்று யுத்தத்தில் கலந்துகொண்ட முக்கிய தோழர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். நபி(ஸல்) அவர்களிடம் நேரடியாக எழுபது அத்தியாயங்களைக் கற்று மனப்பாடம் செய்திருந்தார்கள். ஒருதடவை நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘எவர், குர்ஆனைப் புத்தம் புதிதாக- இறக்கியருளப்பட்டது போன்று ஓத விரும்புகிறாரோ அவர் இப்னு உம்மி அப்து (இப்னு மஸ்வூத்) அவர்கள் ஓதும் முறைப்படி ஓதட்டும்’ இத்தகைய பல எண்ணற்ற சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தங்களின் 60 வது வயதில் ஹிஜ்ரி 32 ம் ஆண்டில் மதீனாவில் மரணம் அடைந்தார்கள்.

கேள்விகள்

1) நபிமார்கள் என்போர் யார்? அவர்களின் பணிகள் என்ன?

2) ஒரு நபியின் வாழ்வில் நடைபெற்றதாக நபி(ஸல்) அவர்கள் விவரித்த நிகழ்ச்சி என்ன?

3) இதன் மூலம் நாம் பெறும் படிப்பினை என்ன?

4) அறிவிப்பாளர் பற்றி நீ அறிந்திருப்பதென்ன?

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.